Wednesday, April 21, 2010

'டாஸ்மாக்' வாசமில்லா கிராமம் இது




தெருவுக்கு ஒரு மதுக்கடை... 'பார்' ல் மொய்க்கும் இளைஞர் கூட்டம்... என காலம் மாறிவிட்ட நிலையில், ஒரு கிராமத்தில் யாருமே குடிப்பதில்லைஎன்றால், ஆச்சரியம்தானே. சிவகங்கை அருகே கல்லல் - மதகுபட்டி சாலையில் இருக்கிறது அந்த கிராமம். பெயர் ஆலவிளாம்பட்டி. ஒருத்தர் கூட மது குடிப்பதில்லை. காரணம் செய்து கொடுத்த சத்தியம்.இதற்கான பின்னணி சுவாரஸ்யமானது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் போர் நடந்த போது, காவிரி ஆற்றோர கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள் ளத்தை கடக்க முடியாமல் தவித்தனர்.அங்கு தோன்றிய பொன்னழகி அம்மன் என்ற தேவதை, ஆற்றின் குறுக்கே வன்னி மரத்தை பாலமாக உருவாக்கி காப்பாற்றியது. முன்னதாக, 'இனி யாரும் மது குடிக்க கூடாது' என, சத்தியம் வாங்கியது. ஆபத்தில் இருந்து மீண்ட அந்த மக்கள், ஆலவிளாம்பட்டியில் தஞ்சம் அடைந்தனர்.'மது குடிக்கக் கூடாது' என்ற சத்தியத்தை, செப்பு பட்டயத்தில் பதிவு செய்தனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன், பட்டயத்தில் உள்ள வாசங்களை, கல்வெட்டில் பதிவு செய்து, கிராமத்தின் நடுவே வைத்தனர். உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்ல, வெளியூரில் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பின்பற்றுகின்றனர். ''வெளியூர்க்காரர்களும் குடித்து விட்டு இங்கு வரக்கூடாது. வெளியூரில் வசிப்பவர்கள் குடித்ததாக தெரிந்தால், அபராதம் விதித்து, கோயிலில் சத்தியம் வாங்குவோம். அதேபோல் இங்கு யாரும் வரதட்சணை கேட்பதில்லை. விரும்பிக் கொடுத்தால் மறுப்பதும் இல்லை'' என்கிறார் ஊர் பெரியவர் ராமசாமி.