-
Sunday, January 9, 2011
இலவச பம்புசெட்டுகளின் இன்னொருமுகம்
நான்கு ஆண்டுகளுக்கு முன் மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது ஐஎஸ்ஐ முத்திரை பெறாத பம்புசெட் நிறுவனங்கள் 8 சதவீத கலால் வரி செலுத்த வேண்டும் எனச் சட்டம் கொண்டுவந்தார். இது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் சந்தையை ஒரு சில பெரிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது. ஆகவே, கலால் வரியை ரத்து செய்யக் கோரி "கோப்மா' (Kovai Power Driven Pumps and Spares Manufacturers Association) தலைமையில் மாபெரும் போராட்டங்கள் நடந்தன.
அந்தப் போராட்டத்தின் எதிரொலியாக ப. சிதம்பரம் "கோப்மா' சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி "ஐஎஸ்ஐ' முத்திரை பெறுவதற்கு 5 மாத கால அவகாசம் கொடுத்தார்.
அதற்குப் பின்னால் சிரமப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி "ஐஎஸ்ஐ' முத்திரை பெற்று, பலர் தொழில் நடத்தி வருகிறார்கள். "ஐஎஸ்ஐ' முத்திரை பெற்றதால் 1 சதவீதம்கூட சந்தை வாய்ப்புப் பெருகவில்லை. மாறாக உற்பத்திச்செலவு உயர்ந்ததால் இருக்கிற சந்தை வாய்ப்பும் பறிபோய் கொண்டிருக்கிற சூழலில் வாங்கிய கடன்களைக்கூட அடைக்க முடியாமல் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்கள் சிரமத்தில் உள்ளன.
இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் 14 லட்சம் விவசாயிகளுக்கு இலவச பம்புசெட் தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒருபுறம் புரட்சியாகவும் மறுபுறம் மிரட்சியாகவும் இருந்தது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்தில் போனதற்கு விவசாயி மட்டும் காரணமல்ல. நாம் ஒவ்வொருவரும்தான். எனவே, அவ்வளவு ஆழத்தில் இருந்து நீர் இரைத்து விவசாயம் செய்வதே சிரமமான வேலைதான். ஆகவே, விவசாயிகளின் சுமைகளைக் குறைக்கும் விதமாக அரசு அவர்களுக்கு இலவச மின்சாரமும் தர வேண்டும். பம்புசெட்டையும் இலவசமாகத் தருவது கொள்கை அளவில் சரியானது என்பதால் திட்டத்தை உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றார்கள்.
ஆனால், கொள்முதல் யாரிடத்தில் செய்யப்போகிறார்கள் என்பதில் குழப்பமும் தயக்கமும் இருந்தது. இந்நிலையில் நூறு சதவிகிதம் தமிழகத்தில் கொள்முதல் செய்ய வேண்டும். அதில் ஐம்பது சதவிகிதம் குறுந்தொழில் கூடங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பொதுவாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் 31-8-2010 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கப் பிரதிநிதிகள் தயக்கத்தையும், கோரிக்கையையும், மின்சிக்கனத்துக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் தெரிவித்தனர். அரசுக்குப் பரிந்துரைப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
ஒருமாதம் கழித்து மின்வாரிய இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி ஷரத்து வெளியானது. பார்த்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரக் குறியீடு நிபந்தனையாக்கப்பட்டிருந்தது.
பொதுவாக சிறிய நிறுவனங்களின் சந்தையைக் கைப்பற்ற பெரிய நிறுவனங்கள் சதா முயற்சித்துக் கொண்டிருக்கும்.
இந்தப் போட்டியில் சிறுதொழில் நிறுவனங்கள் காணாமல் போய்விட்டால் தொழிலில் ஏகபோகம் உருவாகி விலை பன்மடங்கு உயர்ந்துவிடும் என்கிற காரணத்தினாலும் சிறு தொழிலை நம்பியுள்ள பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்பை மனதில் கொண்டும் அரசு அவ்வப்போது மானியத்துடன் கடனும் சந்தைப்படுத்துவதற்கான உதவியும் குறிப்பாக அரசு கொள்முதலில் சிறுதொழிலுக்கு முன்னுரிமையும் கொடுத்து ஊக்கப்படுத்துவதையும் அரசு தன் கொள்கையாக வகுத்து வைத்துள்ளது.
அந்தக் கொள்கையின் காரணமாகத்தான் மின் வாரியம் தனக்குத் தேவையான பொருள்களில் எதைஎதை குறுந்தொழில்கள் செய்கின்றன என்பதைத் தேடிப்பிடித்து இருபது சதவீதம் அளவுக்குக் கட்டாயமாகக் கொள்முதல் செய்கிறது. பம்புசெட் விஷயத்தில் இந்தக் கொள்கை ஏன் கைவிடப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.
பெரிய, சிறிய பம்புசெட் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான சந்தைப் போட்டியில் குறுந்தொழில்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு, வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தன்னுடைய கொள்முதலில் பெரிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது. இவ்வளவு அநியாயங்களும் மின் சிக்கனம் என்கிற பெயரில் நடந்தேறியுள்ளது. 415 வோல்டேஜ் திறனுக்கு வடிவமைக்கப்பட்ட மூன்று நட்சத்திரக் குறியீடுள்ள மோட்டார்களை தமிழகமெங்கும் பொருத்திவிட்டு பத்து சதவீதம் மின் சிக்கனத்தை உறுதிப்படுத்துகிற அளவுக்கு கட்டுமான வசதி உள்ளதா என மின் வாரியத்திடம் கேட்டால் தரமான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
அரசு இலவசமாகக் கொடுப்பது ஒருபுறமிருக்கட்டும்; இலவச மின் இணைப்பு பெறும் ஒவ்வொரு விவசாயியும் குறிப்பிட்ட நிறுவன மோட்டாரைத்தான் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்களே இது எந்த விதத்தில் நியாயம்? இலவச மின் இணைப்பு கேட்டு பத்து ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயி, "மவராசன் இலவச இணைப்பு கொடுக்கிறார் மோட்டார் விலை பத்தாயிரம் உயர்ந்திருந்தாலும் பரவாயில்லை' எனக் கொள்முதல் செய்வார்.
நட்சத்திரக் குறியீடு சான்று என்பது இந்திய அரசின் மின் சிக்கன அமைவகத்தால் (ஃபிரோ அஃப் எலக்ட்ரிகல் எபிசன்ஸி பிஇஇ) வழங்கப்படுவதாகும். இந்த நட்சத்திரக் குறியீடு சான்று பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே ஐஎஸ்ஐ முத்திரையும் ஐஎஸ்ஓ சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. பிஇஇ சான்று வழங்கும் நிறுவனம் நேரடியாக நிறுவனத்தையோ, உற்பத்தி செய்த பொருள்களையோ சோதித்துப் பார்ப்பதில்லை. மாறாக உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பம்புசெட் "மாதிரிகளை' தனியார் நிறுவனமான சிட்டார்க், மத்திய அரசின் நிறுவனமான எம்எஸ்எம்இ ஆகிய சோதனைக் கூடங்களில் ஏதாவது ஒன்றில் சோதனை செய்து அறிக்கை பெற்று அந்த அறிக்கையை "பிஐஎஸ்' நிறுவனத்தில் கொடுத்து சரிபார்த்து சான்றிதழ் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்து தில்லியிலுள்ள மத்திய அரசின் பிஇஇ நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பெறுவதே நட்சத்திரக் குறியீடு சான்றிதழ் ஆகும்.
"ஐஎஸ்ஐ' முத்திரை பெறும் பம்புசெட்டுகள் "மாடலுக்கு'த் தகுந்தபடி அதிகபட்சம் குறிப்பிட்ட அளவுதான் மின்சக்தியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் நட்சத்திரக் குறியீட்டு எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. அதாவது ஐஎஸ்ஐ முத்திரை பெற அனுமதித்துள்ள அதிகபட்ச மின்சக்திக்கு 1 நட்சத்திர அந்தஸ்தும், அதிலிருந்து 5 சதவிகிதம் மின்சக்தி குறைந்தால் இரண்டு நட்சத்திர அந்தஸ்தும், 10 சதவீதத்துக்கு 3 நட்சத்திரம், 15 சதவீதத்துக்கு 4 நட்சத்திரம், 20 சதவீதம் குறைந்தால் 5 நட்சத்திரக் குறியீட்டு அந்தஸ்தும் கிடைக்கும்.
தமிழ்நாடு மின்வாரியம் 3 நட்சத்திரக் குறியீடு உள்ள மோட்டார்களை இலவசத் திட்டத்துக்கு அனுமதித்திருப்பதன் மூலம் 10 சதவீத மின் சிக்கனத்தை அளிக்கும் மோட்டார்களை ஏற்றுக்கொள்கிறது. மின்வாரிய அதிகாரிகளால் பிஐஎஸ் கொடுக்கும் தரச்சான்றுகளை வைத்தே 10 சதவீதத்துக்கு மேல் மின் சிக்கனத்தை அளிக்கக்கூடிய மோட்டார்களை இனம் கண்டு அனுமதிக்க முடியும்.
இந்நிலையில், 5-10-10 அன்று மின் வாரிய ஒப்பந்தத்தின் அறிவிப்பு இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பதினைந்து கோடி இருக்க வேண்டும். ஆண்டு விற்பனை முப்பது கோடி இருக்க வேண்டும். குறைந்தது நூறு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி இருக்க வேண்டும். பத்து லட்சம் பிணையத்தொகை செலுத்த வேண்டும். ஐம்பது லட்சம் வங்கி பிணையம் கொடுக்க வேண்டும். இவை யாவும் குறுந்தொழில் உற்பத்தியாளர்களால் கொடுக்க முடியாது என்பதைத் தெரிந்தே செய்துள்ளார்கள். இவ்வளவுக்கும் மேல் சப்ளை செய்த பொருள்களுக்குப் பணப்பட்டுவாடாவைப் பொறுத்தவரை புதிய பம்புசெட் மாற்றியதால் எவ்வளவு யூனிட் மின்சாரம் மிச்சப்படுகிறதோ அதில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3.65 வீதம் கணக்கிட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த விதிகளை ஏற்றுக்கொண்டு பெரிய உற்பத்தியாளர்கள் உள்பட யாரும் டெண்டர்களில் பங்கேற்கவில்லை. இதைத்தான் மின்சார வாரியம் எதிர்பார்த்துள்ளது. இதில் உண்மையான உற்பத்தியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
மின்சிக்கனம் இருப்பதை வாதத்துக்கு ஒப்புக்கொள்ளலாம். ஆனால், எவ்வளவு மின் சிக்கனத்தை இவர்கள் கொண்டுவரப் போகிறார்கள்? அதனால் எவ்வளவு ரூபாய் அரசுக்கோ அல்லது மின்வாரியத்துக்கோ மிச்சப்படும்? இலவச பம்புசெட் திட்டத்தில் 14 லட்சத்து 67 ஆயிரம் மோட்டார்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். 5 குதிரை திறன் உள்ள ஒரு மோட்டார் 1 மணி நேரம் இயங்குவதற்கு 5 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஓடினால் 50 யூனிட். ஆண்டுக்கு 300 நாள்களுக்கு இயங்குவதாகக் கொண்டால் 15,000. இதைப் பணமாகக் கணக்கிட்டால் (1 யூனிட் மின்சாரத்துக்கான உற்பத்திச் செலவு ரூ. 3) 45,000 ஆக 10 அல்லது 15 சதவீதம் மின்சாரம் சேமிக்கப்படுவதால் ஒவ்வொரு விவசாய பம்புசெட்டும் ஆண்டுக்கு ரூ. 5,000 மிச்சப்படுத்துகிறது. ஆக மொத்தம் எழுநூற்று முப்பத்து மூன்று கோடியே ஐம்பது லட்சம். ஆக ஐந்தாண்டுகளில் ரூ. 3,667,5000000 மிச்சப்படுத்துவதற்காக அரசு செலவழிக்கும் தொகையோ ஐந்தாயிரம் கோடி.
இந்தக் கோடிகளை அரசு கையிருப்பில் இருந்து கொடுப்பதாக இல்லை. மூன்றாம் நபரிடம் வட்டிக்கு வாங்குகிறார்கள். இந்த வட்டி 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் 40 சதவீதம் ஆகுமல்லவா? ஆக, ரூ. 3,500 கோடியை மிச்சப்படுத்த ரூ. 7,000 கோடி செலவு செய்யப்போகிறார்கள். அப்போதும் 10 சதவீதம் மின் சேமிப்புக்கு உத்தரவாதமில்லை.
இந்தத் திட்டத்தில் ரூ. 1,500 கோடி அளவுக்கு ஊழல் நடக்க வாய்ப்புள்ளதால் அந்த ஒப்பந்தப்புள்ளியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அரசு வழக்கைச் சந்தித்து மின் வாரிய தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லாமல் ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டதுதான் இரண்டு லட்ச மின் இணைப்புத் திட்டம்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 4 நட்சத்திர முத்திரை உள்ள பம்பு செட்டுகளை வாங்கினால்தான் இலவச மின்சாரம் என அறிவித்து 1 மாதத் தவணைக்குள் செய்யவேண்டும் என நிர்பந்திப்பதன்மூலம் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி 50 சதவீதம் விலையை உயர்த்தி விற்கத் துணைபுரிந்துள்ளார்கள். இது தமிழக விவசாயிகளுக்கும், சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கும் செய்கிற துரோகமாகும்.
இலவச இணைப்புப் பெறும் ஒவ்வொரு விவசாயிகளும் இந்த நட்சத்திர அந்தஸ்து உள்ள மோட்டார் பம்புசெட்டுகளை வாங்குவதால் ரூ. 5 ஆயிரத்திலிருந்து 15,000 வரை இழக்க வேண்டியுள்ளது. இந்த நிறுவனம் மோட்டார்களைத்தான் வாங்க வேண்டும் என விவசாயிகளை நிர்பந்திப்பதே உரிமை மீறலாகும்.
இவ்வளவு சிரமம் மேற்கொண்டு நம்முடைய ஆட்சியாளர்கள் இந்தத் திட்டங்களை மேற்கொள்வது விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் திட்டத்தை உறுதிப்படுத்தவா? அல்லது இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற உலக வங்கி மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைகளைப் படிப்படியாக நிறைவேற்றவா?
Subscribe to:
Posts (Atom)