Wednesday, May 5, 2010

புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம்


மதுரை :உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என மதுரையில் சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர். முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது, பாலில் தண்ணீரை கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

அவற்றின் பட்டியல் இதோ:
* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர். இப்போது கெட்டியான பால் ரெடி.
* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.
* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.
*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.
* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.
* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.
* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.
* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.
* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.
* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி. 
* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

கலப்படத்தை கண்டறிய  : மதுரை கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில், 1978 முதல் உணவுப் பொருட்கள் தர பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு அனைத்து வகை உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர். மத்திய சிறை மற்றும் ரயில்வே கேட்டரிங்கிற்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களை இங்கு ஆய்வு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வு முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். குறைந்த அளவாக 50 முதல் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என இதன் சங்க கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-232 2188ல் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, May 4, 2010

இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு, அந்த ஊழியர் இதுவரை செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை ஆகியவற்றைக
சென்னை, மே 4: புதிதாக அரசுப் பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு இனி பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பணப் பலன்கள் கிடைக்காது என்பதை தமிழக அரசு உணர்த்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு,  ஓய்வு பெறும்போது பணிக்கொடை, சேம நல நிதி ஆகியவை வழங்கப்படும். தொடர்ந்து ஓய்வூதியமும் கிடைக்கும்.
ஊழியர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், இந்தப் பணப் பலன்கள் முழுவதும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படுவதுடன், பணிக்கொடையும், தொடர்ந்து குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறும் தகுதிக் காலத்துக்கு முன்பே ஊழியர் இறந்து விட்டால், பணிக்கொடையும், குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.3,050-ம்,அதற்கான அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்ப்டும்.
ஆனால்,1.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பலன்கள் கிடைக்காது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டமே இதற்குக் காரணம்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும் மொத்தத் தொகையும் அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிதி மேலாளர்களிடம் வழங்கப்படும்.
அந்த நிதி மேலாளர்கள், இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். ஊழியர் ஓய்வு பெறும் நாளில், பங்குச் சந்தையில் ஊழியரின் பங்கு மதிப்பு எவ்வளவோ, அதன் அடிப்படையில் மட்டுமே ஊழியருக்கு தொகை வழங்கப்படும். மாத ஓய்வூதியம் கிடையாது.
இந்த சட்ட முன்வடிவு 2003-ல் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று வரை இது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.
எனினும், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர பிற மாநிலங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்து விட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே சட்டம் நிறைவேற்றப்படாத நிலையில், திட்டத்தில் இணைந்து, பின்னர் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பது பெரும் பிரச்னையாக உருவானது.
எனவே, கடந்த மே 2009-ல் மத்திய  அரசு  ஒரு நிர்வாக ஆணையைப் பிறப்பித்தது.  அதன்படி, சட்டம் நிறைவேறும் வரை, ஏற்கெனவே உள்ள  திட்டத்தின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த ஊழியர்களுக்கும் வழங்கும்படி  உத்தரவிட்டது.  எனவே, 1.1.2004-க்குப் பின் மத்திய அரசுப் பணியில் சேர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, பணி செய்த காலத்துக்கான பணிக் கொடை வழங்கப்பட்டதுடன், குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியமும்  வழங்கப்பட்டு  வருகிறது.
ஆனால், தமிழக அரசு  ஊழியர்களுக்கு இந்தச் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த 25.8.2009 அன்று தமிழக அரசு, கணக்கு தணிக்கை துறைக்கு ஒரு கடிதம் (எண்: 29593ஏ)  அனுப்பியுள்ளது. அதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, உயிரிழந்த  அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு, அந்த  ஊழியர் இதுவரை செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, 8 சதவீத வட்டியோடு வழங்கினால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளது.
இதனால், புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், பணியில் சேர்ந்த  ஊழியர்கள், பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை கிடைக்காது என்பதை தமிழக அரசின் இந்தக் கடிதம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு  அரசு  ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் கூறியதாவது: பல ஆண்டுகள் அரசுப் பணியில் உழைத்து ஓய்வு பெறும் காலத்தில் அல்லது ஊழியர் பணிக் காலத்தில் உயிரிழந்தால் கூட, அவரின் குடும்பத்துக்கு இதுநாள் வரை இருந்து  வந்த பொருளாதார பாதுகாப்பை இந்தப்  புதிய ஓய்வூதியத் திட்டம் அடியோடு சீர்குலைக்கிறது என்றார்.
மத்திய அரசு  ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைபாண்டியன் கூறும்போது,   மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் சேம நல நிதி இப்போது ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் அரசிடம் உள்ளது. இந்த மொத்தப் பணத்தையும், இனி புதிதாக பணியில் சேரும் ஊழியர்களின் சேமிப்புத் தொகையையும், பங்குச் சந்தை சூதாட்ட களத்துக்கு கொண்டு போவதற்காகவே இந்தத் திட்டம் வந்துள்ளது என்றார்.