-
Thursday, December 2, 2010
கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் சிங்கிள் டீயும், 2 வடையும் தான்-ஜெயலலிதா சொல்கிறார்
சென்னை: உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.
இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.
இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.
கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.
கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,
மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.
டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.
செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.
உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.
அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.
இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.
பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.
தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Wednesday, December 1, 2010
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை
1957-ல் சட்டப் பேரவையில் நுழைந்தவுடன் தி.மு.க. வைத்த முதல் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு "பத்து லட்சம் பக்தவத்சலம்' என்பதுதான். காமராஜ் ஆட்சியில் அவர்களால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியவில்லை. பக்தவத்சலம் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு அவர்களது மேடைப் பேச்சுக்கு உதவியதே தவிர, அதைப் பொறுப்போடு நிரூபிக்க முடியவில்லை.
1967-ல் தி.மு.க. வின் ஊழல் தொடங்கியது. சட்டப்பேரவையில் நானே பல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தேன். அதைத் தொடர்ந்து புயல் வெள்ள நிவாரணப் பணிகள் தொடங்கி தி.மு.க.வின் உச்சகட்ட ஊழல் வெளிவந்தது. சென்னை மாநகராட்சியில் கருணாநிதியின் நெருங்கிய தோழர் மேயர் மோசஸ் தலைமையில் நடந்த மஸ்டர்ரோல் குற்றச்சாட்டு, அதற்குப் பிறகு மருத்துவக் கல்லூரி நடத்த இடம் பெற்றுத் தருவது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சென்னை நகரில் வீடு வாங்கிய ஊழலால் கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சரவை சகாக்கள் சிலர் பதவிவிலக நேர்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியோடு வீராணம் ஊழல், லஞ்ச ஊழலில் ஒரு வீரப் பரம்பரையை உருவாக்கியது. இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசு, சர்க்காரியா கமிஷனை அமைத்து விசாரித்தது. சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் இந்திரா காந்தி, ""விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை'' என்று கூறியது இன்றுவரை உண்மையாகவே தொடர்கிறது.
இந்தியாவிலேயே அரசு மின்சார உற்பத்தி நிலையத்தை விற்றது தி.மு.க. அரசுதான். இது சமயநல்லூரில் அரங்கேறியது. இங்கே அங்கே என சில லட்சங்களில் ஊழல் செய்து அடித்தளம் அமைத்தவர்கள் மத்திய அரசில் கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஊழலுக்கே இலக்கணம் வகுக்க முற்பட்டு விட்டனர்.
கடந்த காலகட்டத்தில் நிலக்கரி ஊழல், இந்தோனேஷியா போன்ற அயல்நாடுகளில் நிலக்கரிச் சுரங்கம் வாங்குவதில் தொடங்கியது. மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மாநில அரசை நடத்தியவர்கள் லட்சங்கள் என்பதிலிருந்து கோடிகோடியாக ஊழலில் ஈடுபடும் நிலை உருவானது.
சொற்ப நிலத்தை வைத்துக் கொண்டு, மிகுதியாக அரசு நிலத்தை வளைத்துப் போட்டு, கல்லூரி கட்ட அனுமதியும் வழங்கினார்கள். கட்டடமும் கட்டினார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கிரானைட் குவாரிகள் அதிகப் பணம் சம்பாதிக்க ஏற்ற இடம் என தி.மு.க.வினர் கண்டுபிடித்தனர். கிரானைட் குவாரி கொள்ளை, மணல் கொள்ளை எனப் பெருகி தி.மு.க.வில் பெரும் பணக்காரர்கள் உருவானார்கள்.
மணல் கொள்ளையோடு இரண்டறக் கலந்து, கல்விக் கொள்ளையும் தொடங்கியது. பணம் இல்லாதவர்களெல்லாம் கல்லூரி நடத்தி "கல்வித் தந்தை' ஆனார்கள். அமைச்சர்கள் தங்கள் இலாகா பணத்தைக் குறிப்பிட்ட வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து, அந்த வங்கிகளில் அமைச்சர்களின் சிபாரிசுடன் தனிநபர் கடன்களைத் தாராளமாகப் பெற்றனர். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாவதற்கு இந்த ஊழல் பலருக்கு உதவியது.
தொழிற்கல்வி வியாபாரம், மருத்துவத் துறைக்கு விரிவு அடைந்தது. மத்திய அரசின் பலவீனம் தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா என்று கணக்கிட முடியவில்லை. எந்த நேரத்திலும் மத்திய அரசை மிரட்டும் அரசாக தி.மு.க. அரசு உருவெடுத்தது.
"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்பதற்குப் பதிலாக "தெற்கு வாழ்கிறது, வடக்கு வேடிக்கை பார்க்கிறது' என்ற நிலை உருவானது.
முதலாளிகள் கட்டிவரும் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு, அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்கிற தாரக மந்திரத்தைக் கற்றார்கள். மேலே சொன்ன ஊழல்களுக்கெல்லாம் முன்மாதிரியாக - உலகம் வியக்கும் கின்னஸ் சாதனையாக 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு தி.மு.க. சாதனை படைத்தது. இந்த ஊழல் இந்திய ஜனநாயகத்தை நகைப்புக்குள்ளாக்கி உள்ளது. 13 நாள்களாக நாடாளுமன்றம் நடைபெறாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் கல்வித் தொழில் எங்களிடம், சினிமாத் தொழில் எங்களிடம், கட்டுமானத் தொழில் எங்களிடம், தொலைபேசித் தொழில் எங்களிடம், கப்பல் துறை எங்களிடம், ஆகாய விமானம் வாங்கிப் பறக்க விடுகிறோம். இனி எஞ்சியுள்ளது ரயில்வே மட்டும்தான். அதையும் நாங்கள் விரையில் வாங்கிவிடுவோம் என மார்தட்டுகின்றனர்.
விவரம் தெரியாத ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச டி.வி. கொடுத்துத் தங்கள் ஊழல்களைப் பார்த்து ரசிக்க வைத்திருக்கின்றனர். மின்சாரம் இல்லாத நிலையிலேயே மின் மோட்டார் தருகிறோம் என்று சொல்லி வாய்ப்பந்தல் இட்டு மக்களை ஏமாற்றி திசை திருப்புகிறார்கள்.
மாமன்னர் குடும்பமும் அவரைச் சுற்றி இருக்கிற குட்டி மன்னர்களும் தலைதூக்கி நிற்க, தமிழகத்தின் நடுத்தர, ஏழை மக்களோ கைகட்டி அடிமைகளாக நிற்கிறார்கள். திராவிட நாட்டின் பெயரைச் சொல்லி, போர்க் கொடி உயர்த்தி இந்தியாவில் ஆள்பவர்கள் மன்னர்கள். இல்லாதவர்கள் அடிமைகள் என்ற தத்துவத்தை தமிழகத்தில் உருவாக்கிக் காட்டி இருக்கிறது தி.மு.க.
"என்று தணியும் இந்த அடிமையின் மோகம்' என்று கவிபாடி ஆள்வதற்கு இன்னொரு பாரதி எப்பொழுது பிறப்பான் என தமிழகம் ஏங்கித் தவிக்கிறது.
Thanks
Dinamani
Tuesday, November 30, 2010
யாகாவாராயினும் நா காக்க..
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.
முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.
கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.
காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா?
கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?
போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!
இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?
1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?
ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.
பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.
ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.
இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன?
ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்?
ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே!
பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.
தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்?
ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா?
ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!
மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.
தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.
இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.
வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.
என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே!
Monday, November 29, 2010
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை:மடியில் கனம், வழியில் பயம்!
பன்னிரண்டு நாள்களாக நாடாளுமன்றம் செயலற்று முடங்கிக் கிடக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி அதற்கு மட்டும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் முடியாது என்று சொல்வது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை.
இத்தனை நாளும் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற சிறு எண்ணம் கூட இல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சி இப்படியாகத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவதன் காரணம் என்ன? அல்லது யாருடைய நட்பை இழக்க விருப்பமின்றி இவ்வாறு பிடிவாதமாக இருந்துவருகிறது என்பதும் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது.
பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரத்தை உள்நோக்கிப் பார்ப்பதற்கும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான ஜோஷி இருந்தாலும்கூட, இந்தக் குழுவின் அதிகார வரம்புகள் ஒரு கட்டுக்குள் இருப்பவை.
தலைமைக் கணக்குத் தணிக்கைக் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இந்தக் குழு முழுமையாகப் படித்துப் பார்த்து ஆமாம் என்று சொல்ல முடியுமே தவிர, அதற்குமேலாக அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பிரதமர் உள்பட இதில் தொடர்புடைய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விசாரணைக்கு அழைக்கவும், இந்தத் தவறு எந்த இடத்தில் தொடங்கியது என்று வேரிலிருந்து விசாரணையை நடத்தவும்கூட முடியும். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை மாற்றும்படி பரிந்துரைக்கும் அதிகாரமும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவிய தொலைத்தொடர்புக் கொள்கை என்ன? அப்போதைய அமைச்சர் மகாஜன் காலத்திலிருந்து, தொலைபேசி தனியார்மயமாவதில் ஏற்பட்ட குளறுபடிகள் என்ன என்று ஆழமாகவும், விரிவாகவும் விசாரணை நடத்த இடமுண்டு.
இருப்பினும்கூட, இந்த விசாரணையை விரிவாக நடத்தினால் அதில் காங்கிரஸ் ஆட்சியின் இரு காலகட்டத்திலும் நடந்த அனைத்தையும் பேச வேண்டியிருக்கும், வேறுசில பூதங்களும் கிளம்பக்கூடும் என்று காங்கிரஸ் அஞ்சுவதாலேயே இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று சந்தேகிக்க இடம் ஏற்படுகிறது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை மிகத் தெளிவாக இந்த முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றமோ, இதுவரை விசாரணை நடத்தாமல் காலம்கடத்திவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவைக் கண்டித்திருக்கிறது. இவ்வளவையும் நாட்டு மக்கள் அனைவரும், ஏன் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் பார்க்க மறுக்கிறது. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்?
தெஹல்கா ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க பாஜக மறுத்ததை காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டுகிறது. முந்திரா ஊழலில் நாடாளுமன்றம் முடக்கப்படாமல் வெறுமனே டி.டி. கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமாவோடு முடிந்து போனதற்கு அவர் பிராமணர் என்று ஜாதிச் சாயத்தை கையில் எடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி. காங்கிரஸ், திமுக இருவருடைய வாதங்களும், தவறை நியாயப்படுத்தவே பார்க்கின்றன. தவறை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. மக்கள் இதை எத்தகைய கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக்கூட கருதியதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், இத்தகைய வாதங்களை காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் முன்வைக்காது.
நடைபெற்றிருக்கும் முறைகேடு உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட ஊழல். ரூ.1.76 லட்சம் கோடி இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சாதகமான பேரங்களை நடத்திய பெண்மணி நீரா ராடியா ரூ. 60 கோடியைச் சேவைக் கட்டணமாகப் பெற்றுள்ளார் என்பதைப் பார்க்கும்போது, இந்தச் சேவைக் கட்டணம் ஒரு மாட்டுத் தரகர் அல்லது வீட்டுத் தரகர் போல இருதரப்பிலும் 2.5 சதவீத கமிஷன் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, ரூ.1,200 கோடிக்கான ஊழல் நிச்சயம் என்பதை, இந்தக் கமிஷன் தொகை அம்பலப்படுத்திவிட்டது.
இந்த ரூ. 1,200 கோடியும் ஒரேயடியாகக் கொடுக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடர்கள் அல்லர். அவர்கள் இதனைப் படிப்படியாக, ஒவ்வொரு கட்டத்தில் எந்த விதமாக, எந்தெந்த நாட்டில் டெபாசிட் செய்வது என்று காலக் கிரமத்தில் பட்டியலிட்டுத்தான் இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இப்போது இந்திய அரசின் நியாயமான கடமை, இந்த முறைகேடு நடந்துள்ள முறையை விரிவாக ஆராய்வதன் மூலம்தான், ஊழலின் அளவும் பட்டுவாடா புள்ளிவிவரமும் தெரியவரும். மேலும், இதில் தொடர்புடைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்துசெய்ய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. (அதாவது அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலகிய அடுத்த நாளே இந்தப் பரிந்துரையை வீரத்துடன், தைரியத்துடன் செய்திருக்கிறார்கள்) அந்தப் பரிந்துரையும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவை எல்லாவற்றையும் முழுமையாக விசாரித்து, அனைத்துப் புள்ளிவிவரங்களையும் அம்பலப்படுத்துவது மட்டுமே, காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்குச் சேர்க்கும் பெருமையாக இருக்கும். இல்லையெனில், உலக வரலாற்றின் மிகப்பெரும் ஊழலை, கூட்டணி எண்ணிக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஏதோ ஓர் அதிகார மையத்தைக் காப்பாற்றவும் போய், தன் சொந்தப் பெருமைகளை இழந்த கட்சியாக காங்கிரஸ் தாழ்ந்து போகும்!
இந்திய அரசாங்கம் யாருக்காக?
உலக மீனவர் நாள்' நவம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்கள் அப்படி ஒருநாள் இருப்பதைக்கூட நினைத்துப் பார்க்க நேரம் இல்லாமல் கவலைக்கடலில் கிடந்து தத்தளிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் தென்பகுதி மீனவர்கள் நாள்தோறும் சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவு காணும்படி தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கைகளைக் கொடுத்து காத்திருந்து பார்த்துவிட்டனர். இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மத்திய அரசு தம் குடிமக்கள் நலனைவிட இலங்கை அரசின் நலனையே பெரிதாக நினைக்கிறது.
இதற்கொரு முடிவு காணாத நிலையில் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையையும் ஏவி, மிச்சம் மீதியிருக்கும் அவர்களது வாழ்வாதாரங்களைப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது.
இந்த ஆணை கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அது வெளியான 60 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் கருத்துகளை யார் மதிக்கின்றனர். அது ஒரு நாடகம்; அவ்வளவுதான்.
இந்த அறிவிப்பாணைக்கு மீனவ மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
மேலும், கடலோரச் சுற்றுச்சூழலும், கடல்சார் வளமும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த அறிவிப்பாணையில் சில புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கடலோர மேலாண்மைத் திட்டங்களில் மாற்றம் செய்வது என்பதுபோன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஒருசில தரப்பினரின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.
கடலோர மேலாண்மை விஷயத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்யப்படுமானால் அது மீனவ மக்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக்கும். இதைப் பயன்படுத்திச் சிலர் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு ஏற்படும்.
எனவே, மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில்கொண்டு அறிவிப்பாணையைத் தள்ளிவைக்க வேண்டும். மீனவ மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே இந்த மசோதா பற்றி எழுந்துள்ள ஐயங்களை நீக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து மக்களுக்கான தொழிலாக இருந்து வருவன உழவுத்தொழிலும், மீன்பிடித் தொழிலும்தான். பசித்த வயிற்றுக்குச் சோறும், மீனும் இயற்கை கொடுத்த இனிய உணவுகள். ஆனால், இந்த இரண்டு பழங்குடி மக்களும் இன்று கடுமையான சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
இவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு, புதிய சட்டங்களைப் போட்டு, உள்நாட்டிலேயே அவர்களை அகதிகளாக மாற்றத் துடிக்கிறது. இப்போது வந்துள்ள கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை - 2010 மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்தும், மரபுவழித் தொழிலிலிருந்தும் துரத்துகிறது.
கடற்கரையையும், கடற்கரையின் உயர் அலை தொடும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்கள் வசிப்பதற்கு இதுவரை பாதுகாப்பு வழங்கிவந்த கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை நீக்கிவிட்டு அவ்விடத்தில் புதிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த அறிவிப்பாணையைப் பரிசீலித்து பலப்படுத்துவதற்காக எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த அறிவிப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவ மக்கள் கடலோரமாக வாழ்வதற்கும், தொடர்ந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக கடலோரப் பகுதிகளில் பல்வேறு தொழில்திட்டங்கள் கொண்டு வரப்படும்.
பெரிய தொழிற்சாலைகளால் கடல் மிகுந்த மாசுபாடு அடையும்; கடல் அரிப்பு ஏற்படும். கடல்வளங்களும், கடல்வாழ் அரியவகை உயிரினங்களும் அழிந்துவிடும்; இப்போதுள்ள மீன்பிடித் தளங்களும் அழிக்கப்படும்.
கடந்த 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிவிப்பாணை பற்றி மக்களின் கருத்துரை பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், முறையாக அவை பின்பற்றப்படவில்லை. மீனவ மக்களின் மையங்களாகச் செயல்படும் பஞ்சாயத்துகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. அத்துடன் மீனவ மக்களிடம் எவ்விதப் பொதுக் கருத்துக்கணிப்பும், விவாதங்களும் நடைபெறவில்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மீனவ அமைப்புகள் கொடுத்த திருத்தங்களும் பரிசீலிக்கப்படவில்லை.
இதன் விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரும் தண்டனைகளும் கடுமையானவை. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால் படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். படகிலிருந்த மீனவர்க்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சோதிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம்வரை அபராதம்.
இதுதவிர, 12 கடல் மைல் தாண்டினால் ரூ. 9 லட்சம் அபராதம்; படகின் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உண்டு; மீன்களும் பறிமுதல் செய்யப்படும். கரையோரப் பகுதியில் மீன்வளம் குறைந்துவருவதால் 12 கடல்மைல் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் தரப்பு வாதமாக இருக்கிறது.
விதிமுறைகளை மீறும் மீனவர்களைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றுக்கு இழப்பீடும் கோர முடியாது. ஐயப்பாட்டின் காரணமாக தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றுக்காக கடலோரக் காவல்படையைக் குற்றம்சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக் காவல்படைக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.
இதற்கு இந்திய அரசு என்ன காரணம் கூறுகிறது தெரியுமா? ""ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிறநாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும், மீன்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டும் என்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கு இணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை'' என்று கூறுகிறது.
ஆனால், இந்திய வேளாண்மைத்துறை கூறுவதோ வேறு. ""பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள்போல இனிமேல் நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல்பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம்'' என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறுகிறது.
இந்தியா மூன்றுபக்கமும் கடல்சூழ்ந்த தீபகற்ப நாடாகும். இந்தியக் கடற்கரையின் நீளம் 5,560 கி.மீ. ஆகும். தீவுகளையும் சேர்த்தால் சுமார் 8,500 கி.மீ. நீளமாகும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்குச் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இன்னும் நாம் வளரவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.
இந்தியாவின் நீண்ட கடற்கரையில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இங்கு வாழும் 600 மீனவக் கிராமங்களில் சுமார் 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைதான் இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
1984 முதல் 2010 வரை கச்சத்தீவு மீதான நமது உரிமை ஒப்பந்தம் இலங்கையால் மீறப்பட்டே வந்திருக்கிறது. ராமேஸ்வரம், பாம்பன், ஜெகதாப்பட்டினம், நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அடித்து விரட்டியதோடு அல்லாமல் பெட்ரோல் குண்டுகளையும் வீசி படகோடு எரித்துக் கொல்லவும் முயற்சி நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர், காயம்பட்டவர், படகுகளை இழந்தவர், உறுப்புகளை இழந்தவர் தொகை நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றித் தமிழக அரசு கடிதம் எழுதும்; எனினும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீனவர்களின் வாழ்வுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்துக்கு இல்லையா?
""இலங்கைக் கடற்பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது...'' என்று மத்திய வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். இப்படி கூறுவதற்கு ஓர் அமைச்சர் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், "இந்திய அரசாங்கம் யாருக்காக?' என்ற கேள்வியும் எழுகிறது.
Thanks
Dinamani
Subscribe to:
Posts (Atom)