-
Monday, August 30, 2010
விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது
சீனாவின் பெய்ஜிங்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 100 கிலோ மீட்டர் தூரத்தில் 10 நாள்கள் நீடித்த இந்தப் போக்குவரத்து நெரிசல்தான் "உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' என்று வருணிக்கப்படுகிறது.
வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று இதுவரை கவலை அடைந்து வந்த உலக நாடுகள், போக்குவரத்து நெரிசல் மனித சமுதாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பதையும் இப்போது சிந்திக்கத் தொடங்கிவிட்டன.
இத்தகைய மோசமான நிலைக்கு உலக நாடுகள் அனைத்துமே உள்கட்டமைப்பைப் புறக்கணித்து, வளர்ச்சி, மேம்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதுதான் முக்கியக் காரணம். இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்ல, சிறிய நகரங்கள்கூட போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடுகின்றன. விவசாயத் தொழில் நசிவடைதலும், நகர்ப்புறத்தை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைதலும் வேலைவாய்ப்பைத் தேடி கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி நகர்தலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை அசுர வேகத்தில் பெருகிவருகிறது.
ஆனால் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, நகர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்படுவதில்லை. இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாகியுள்ளது.
குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெரிசலால் பொன்னான நேரம் வீணாகிறது. மற்றொருபுறம் வாகன எரிபொருளும் விரயமாகிறது. போக்குவரத்து நெரிசலால் தில்லியில் மட்டும் தினசரி ரூ.10 கோடி மதிப்பிலான எரிபொருள் வீணடிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாமல் வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் அதிகமான உயிரிழப்புக்குப் போக்குவரத்து நெரிசலும் பிரதான காரணமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணாமல் ஆம்புலன்ஸில் அவசர எச்சரிக்கை விளக்கு பொருத்தி என்ன பயன்?
ஆட்சியாளர்கள் எங்காவது செல்வதென்றால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவர்கள் செல்லவிருக்கும் வழியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர வைக்கவும், தூக்கி எறியவும் வல்லமை படைத்த வாக்குச்சீட்டைக் கையில் வைத்துள்ள பொதுமக்களின் நிலையோ பரிதாபம்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமப்புறச் சாலை உள்பட அனைத்துச் சாலைகளின் மொத்த நீளம் 33 லட்சம் கி.மீ.
இன்னும் எத்தனையோ கிராமங்களில் சாலை வசதியே இல்லை என்பதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் சாலை விஷயத்திலும், மக்கள் நலனினும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பிற நாடுகள் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் புதுப்புது அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த விஷயத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.
பல்லாயிரம் கோடி முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். பல்லாயிரம் கோடி அன்னிய முதலீட்டைப் பெற்று தாங்கள் சாதனை (?) புரிந்துவிட்டதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துப் பெருமை தேடிக்கொள்ளவும் முயல்கின்றனர்.
ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாட்டை உற்றுநோக்கினால் உண்மை புலப்படும். அவர்களின் செயல்பாடு வெறும் மாயை என்பது அம்பலமாகும். இந்தியாவில் அளிக்கப்படும் சலுகைக்காகவும், இந்தியா மிகப் பெரிய சந்தையாக உள்ளதாலேயே அன்னிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கின்றன.
அன்னிய கார் நிறுவனங்கள் அனைத்துமே நூறு சதவீதம் சுய ஆதாயத்துக்காக மட்டுமே இந்தியாவில் தடம்பதிக்கின்றன. அன்னிய நிறுவனங்கள் என்று இந்தியாவில் தடம்பதித்ததோ அன்றே போக்குவரத்து நெரிசல் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
அதற்காக அன்னிய கார் நிறுவனங்களை இங்கு தொழில்தொடங்க அனுமதிப்பது தவறு என்று கூறவில்லை. இதில் சில ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்தியாவில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதில் எந்த நிறுவனம் பங்கேற்க சம்மதிக்கிறதோ அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கலாம். ஏன், சாலை வசதிகளை ஏற்படுத்த சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமேகூட அனுமதி வழங்கலாம்.
இந்தியாவின் அனைத்து நகரங்களிலுமே போக்குவரத்து போலீஸôர் குறைவாக உள்ளனர். போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் முதலில் போக்குவரத்துப் போலீஸôரின் எண்ணிக்கையை அதிகரித்தல் அவசியம்.
சாலைகளில் போக்குவரத்துப் போலீஸôர் நின்று பணியாற்றத் தேவையான வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியவில்லை. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
தனிநபர் வாகனம் அதிகரித்து வருவதும் போக்குவரத்துப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் மக்கள் அரசு பேருந்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். அதேசமயத்தில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் செüகரியமாகப் பயணம் செய்வதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசு வாடகை சைக்கிள் திட்டத்தை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாடகை சைக்கிள் திட்டத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தலாம்.
இதையெல்லாம்விட பழைய சாலைகளைச் சீரமைத்தல், புதிய சாலைகளை உருவாக்குதல், சந்திப்புகளில் மேம்பாலங்களை கட்டுவதில் அரசு அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.
Subscribe to:
Posts (Atom)