skip to main |
skip to sidebar
கோமளங் கூடு மருந்து & நலங்கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து நாமள வாத மருந்து & நம்மை
நாமறியும்படி நண்ணு மருந்து வள்ளலார்
மனம் எவருடனும் இணைவதைப் போல் நீரும் எதனுடனும் இணையும் கரையும். அவைகளின் தன்மைகளைப் பெறும் கலரைப் பெறும். நம் உடலில் முக்கால் பங்கு நீரே உள்ளது. உலகின் அளவும் அதுவே. நீர் நமது தினசரி தேவைகளில் ஒன்று. குறைந்தது 3 முதல் 3,5000 லிட்டர் குடிநீர் நமது நாட்டில் ஒரு நபருக்கு தேவை.
1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீ¢ர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.
2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணயால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.
3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.
4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.
5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம்.
இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.
6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.
7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம்.
குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை.
நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.
8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது.
அச்சமயம்.
1. காலையில் குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.
2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.
4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.
5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.
6. இவை ஐந்தும் செய்ய இயலாமல் செய்தும் பலன் இல்லாதவர்கள் மட்டும் அஹிம்சை எனிமா எனப்படும் கருவி மூலம் 200 முதல் 300 மி.லிவரை நல்ல சுத்த நீரை மலவாய், குடல் மூலம் ஏற்றினால் இரு நிமிடங்களில் திரும்ப நீருடன் கெட்டி மலம் இளகி வெளியேறும். தேவைப்படும் சமயம் மட்டும் எனிமாக் கருவியை பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.
அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது.
உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே.
நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம்.
அதேபோல் உணவிற்கு முன் பிரார்த்தனை அவசியம் அரக்கப் பரக்க ஐந்து நிமிடத்தில் சாப்பிடக்கூடாது. உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும்.
உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.
"வாய் பிடியாத மருந்து மத
வாதமும் பித்தமும் மாய்க்கு மருந்து
நோய் பொடியாக்கு மருந்து & அன்பர்.
நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து
வள்ளலார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம், நீதிமன்றம், அரசுப் பணித்துறை ஆகிய மூன்றின் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்த வல்லுநர் குழு அதிகபட்சம் நம்மை அரசாட்சி செய்த பிரிட்டிஷ் அரசியலமைப்பை அதிகமாகப் பின்பற்றி, இம்மூன்றில் நாடாளுமன்ற அதிகாரமே மேலோங்கும்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டு விட்டதால், இந்தியாவில் பிரதம மந்திரியே சர்வ வல்லமை படைத்தவர்.
அதேசமயம், ஆளும் கட்சித் தலைவராயுள்ள சோனியா காந்தியிடம் பாசக்கயிறு உள்ளதால், நமது பிரதமர் உண்மையில் ஒரு ஆட்டுவிக்கும் பொம்மையாகிவிட்டார். கட்சித் தலைமையும் பிரதமர் பதவியும் ஒரே நபரிடம் இருந்தால் பிரதமரின் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தைவிட உச்சமாயிருக்க்கும். ஆட்டுவித்தால் ஆடிப்போகும் அதிகாரத்தை உடைய பிரதமர், உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி கேட்டுள்ளார்.
÷""உன் அதிகார வரம்பை மீறாதே, நாங்கள் வகுத்துள்ள உணவுக்கொள்கையில் கொள்முதல் செய்த உணவை மனிதனுக்குப் போடுவோம். மாட்டுக்குப் போடுவோம், அதையெல்லாம் கேட்காதே. நாடாளுமன்றம் வகுத்துள்ள கொள்கையில் மூக்கை நுழைக்காதே. நீ சொன்னால் நாங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கமுடியாது'' என்ற பொருளில் கூறியுள்ளார்.
÷அதற்கு முதல் நாள் நிதியமைச்சர் பரவாயில்லை, "தேங்கியுள்ள உணவு இருப்பை உச்ச நீதிமன்ற ஆணையை ஒட்டி பொது விநியோகத்துக்கு அனுப்புவதாக' வாக்களித்தார்.
÷நாளுக்கு நாள் உணவு விலை உயர்ந்து வருகிறது. வெளி அங்காடியில் 1 கிலோ அரிசி ரூ. 40. பருப்புகள் எல்லாம் ரூ. 80 முதல் ரூ. 100 வரை. விலைவாசி உயர்வால் நடுத்தரவர்க்கம் திண்டாடிவரும் சூழ்நிலையில், உணவு விநியோகத்தில் தேவைக்குமேல் இருப்பு வைக்கும் போக்கு வளர்ந்துவிட்டது. பொது விநியோகத்துக்கு இவ்வளவுதான் கொள்முதல் செய்ய வேண்டும்; இவ்வளவுதான் இருப்பு வைக்க வேண்டும் என்ற திறன்மிகு உணவு நிர்வாகம் இல்லாததால், இந்த விலை உயர்வால் விவசாயிக்கும் லாபமில்லை; உண்பவனுக்கும் லாபமில்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
÷2010 - ஜூலை மாதம் மொத்த அரிசி - கோதுமை இருப்பு 5.8 கோடி டன்களாகும். உண்மையில் இவ்வளவு இருப்பு வைத்துக்கொண்டு உணவை வீணாக்குவது சரியல்ல. உணவு மூட்டைகளை அடுக்கிப் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாமல் திறந்த வெளியில் அடுக்கி, கரிய தார்ப்பாலின் போட்டு மூடிவைப்பது நன்றா? மழை, வெப்பம் மிகுதி காரணத்தால் ஈரக்காற்று வெளியேறாமல் அமுக்கம் காரணமாக உணவுதானியம் கெட்டுவிடும். நியாயமாகப் பார்த்தால் 2.5 கோடி டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது உணவு இருப்பு ஒரு மடங்கு அதிகமே. அதாவது 30 மில்லியன் அல்லது 3 கோடி டன்கள் "ஓவர் ப்ரக்யூர்மெண்ட்' ஆகியுள்ளது.
÷இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓர் அரசாங்கமே தேவைக்குமேல் "அரசுக்கொள்முதல்', "பொது விநியோகம்' என்ற போர்வையில் உணவைப் பதுக்கிவைத்து, அதைக் காப்பாற்றவும் தெரியாமல் கெட்டுப்போய் நிஜப் பெருச்சாளிகளும், கெட்டுப்போனதாக முலாம் பூசி மனிதப் பெருச்சாளிகளும் உண்பது நியாயந்தானா? இப்படி வீணாக்குவதற்கு பதிலாக ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிவிடலாமே என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள பின்னணியையும் உண்மையையும் ஒரு பொறுப்புள்ள அரசு உணர்ந்து செயல்பட வேண்டுமே தவிர, உச்ச நீதிமன்ற ஆணையைக் கொச்சைப்படுத்திப் பேசக்கூடாது. "சத்யமேவ ஜயதே' என்ற தாரக மந்திரத்தை மறக்கலாமா?
÷பொது விநியோகத் தேவைக்கு மேல் இந்த ஆண்டு உணவுக் கொள்முதல் செய்ததன் மர்மம் என்ன? கூடவே ஏராளமான சந்தேகத்தையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. உணவு மற்றும் விவசாய அமைச்சரகத்தில் பல்லாண்டு பணி செய்து ஓய்வு பெற்றவன் என்ற முறையில் கொள்முதல், இருப்பு பற்றி முன்பே பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.
÷மையத்தில் ஒரு உணவுக் கார்ப்பரேஷன் உள்ளது. மாநில அளவிலும் பல மாநிலங்களில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன்கள் உள்ளன. இந்தக் கார்ப்பரேஷன்களின் ஆண்டுக் கணக்கு தணிக்கை அறிக்கை, வரவு - செலவு அறிக்கை, பாலன்ஸ் ஷீட் முதலியவற்றைப் பெற்று நுட்பமாக ஆராய்ந்தால் எவ்வளவோ உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும். உணவை ஏற்றுமதி செய்யும் லட்சணமும் புரியும்.
÷உணவை இறக்குமதி செய்யும்போது உலக அங்காடியில் கோதுமை, அரிசி விலை உயர்ந்து இருக்கும். உணவை ஏற்றுமதி செய்யும்போது உலக அங்காடி விலை மிகவும் குறைவாயிருக்கும். தனியார் ஏற்றுமதி செய்யும் பாசுமதி அரிசி, மசூரி, வெள்ளைப்பொன்னி போன்ற சன்னரகங்கள் முறையாக வணிகரீதியில் ஏற்றுமதியாகும். ஆனால், அரிசி ஏஜன்டுகளின் ஏற்றுமதியில் தரம் சரியாக இருக்காது. திருப்பி அனுப்பப்பட்டு கால்நடைகளுக்குரிய அடர் தீவன உணவாகப் பயனாகும். இறக்குமதியாகும் கோதுமை, அரிசி கப்பலிலிருந்து இறக்கியவுடன் திறந்த வெளியில் கேட்பாரற்று பல நாள்கள், வாரங்கள், மாதங்கள் இருப்பதை எவ்வளவோ பத்திரிகைகள் படம்பிடித்து வெளியிட்டபோது ஏற்படாத சொரணை, இப்போது உச்ச நீதிமன்றம் தட்டிக்கேட்டபோது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கெட்டுப்போன கோதுமை, அரிசியைக் கார்ப்பரேஷன் விடுவிப்பிலிருந்தோ ஏலத்தின் மூலமோ பெற்று சுத்தம் செய்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவை திரும்பி வந்து இந்தியாவில் உள்ள கலப்பின சீமைப் பசுக்களுக்கு அடர் தீவனமாகவோ, குச்சித்தீவனமாகவோ வழங்கிய கதைகளும் உண்டு.
÷உண்மையில், மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாட்சி செய்யும் பொறுப்புள்ள அமைச்சர்கள், இந்த நாட்டுக்கு இவ்வளவு மோசமாக உணவுக்கொள்கையை வகுத்து, உணவிருந்தும் ஒரு பக்கம் ஏழைகளைப் பட்டினியால் வாடவிட்டும், மறுபக்கம் லட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளவும் காரணமான அரசாங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு சவுக்கடிக்குப் பின் உண்மை நிலையை உணர்ந்து அரசு உருப்படியான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தேவைக்குமேல் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது வெளி அங்காடி விலை உயர்கிறது. தனிப்பட்ட வியாபாரி அளவுக்கு மீறி உணவுப் பொருள்களை இருப்பு வைத்திருந்தால் "பதுக்கல்' என்று கூறி அதைக் கையகப்படுத்தச் சட்டம் உள்ளது. அதே தவறை அரசு செய்வது சரியாகுமா? தேவைக்கு மேல் இருப்பு அரசு வைத்தாலும் வெளி அங்காடியில் அரிசி, கோதுமை விலை ஏறாதா?
நமது கனிமவளங்கள் சூழ்ந்துள்ள கர்நாடகம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ம.பி. போன்ற மாநிலங்களில் எங்கெல்லாம் மாவோயிஸ்ட் வன்முறை நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கனிமவளச் சுரண்டல் கொடிகட்டிப் பறக்கிறது. இது குறித்து ஊடகங்களில் அடிபடும் பெயர்கள் சிறு உதாரணங்களே! வரும் ஆண்டுகளில் கனிமவளம் சூழ்ந்துள்ள இடங்களின் அகழ்வுகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சமமாக உள்ளூர் தொழில் நிறுவனங்கள் - டாட்டா பூட்டாக்களும், பிர்லா குர்லாக்களும் வேதத்தைப் பொய்யாக்கும் வேதாந்தா போன்ற அயல்நாட்டு இந்திய நிறுவனங்களும் கைகோத்துக்கொண்டு ஒன்றுக்குப் பிறகு கோடிக்கணக்கான பூஜ்ஜிய டாலர்கள் முதல் போட்டு நிகழ்த்தவிருக்கும் சுரங்கத் தொழில்களால் இதுவரை 2 கோடி வனவாசிகள் வாழ்விழந்துள்ளனர். நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன, பல லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாழாகி வருகிறது.
÷வனவாசிகள் - விவசாயிகள் மீது சுரங்க அதிபர்களின் கூலிப்படை குண்டர்களும் மாநில அரசின் போலீஸ் படைகளும் போர் தொடுப்பதால் வறுமையும் வன்முறையும் தலைதூக்கியுள்ள இத்தகைய இடங்களில் வீணாகி வரும் உணவை இலவசமாக வழங்கக் கூடாதா? ஒருக்கால் உச்ச நீதிமன்றம் இத்தகைய மக்களை மனதில் வைத்துக் கேள்வி எழுப்பியிருக்கலாம். இப்படிப்பட்ட கனிமவளச் சுரண்டலினால், விவசாயம், சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றிய கவலை மக்களின் பிரதிநிதிகளாயுள்ள அமைச்சர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு மரத்தை வெட்டினால் பல மரங்களை நடவேண்டும் என்ற உணர்வுபோல், 1 ஏக்கர் நிலம் மாசுபட்டால் 1 ஏக்கர் நிலத்தைப் பசுமையாக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து மில்லியன் பில்லியனில் இயற்கை வளத்தைச் சுரண்டுவோர், அதில் பாதிப்பங்கை உணவு உற்பத்திக்குரிய விவசாயத்தில் ஈடுபடும் பழங்குடி விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும். பாரம்பரியமாக விவசாயம் செய்யும் மக்களுக்கு மீண்டும் அவர்களை விவசாயத்துக்குத் தூண்டும் வழியில் உணவு உற்பத்தி நிகழ வேண்டும். அதற்காகவும் பணம் சில மில்லியன்கள் செலவழித்தால் என்ன?
÷ஒரு பக்கம் உணவுக்குவியல். மறுபக்கம் உணவின் விலையேற்றம். நடுவே இயற்கை வளச்சுரண்டல். உபரி உணவு குறைகிறது. குறைந்த உபரியை அரசே ஏகபோகமாகக் கொள்முதல் செய்துவிட்டு, அதுவும் குறைந்தவிலை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிப் பிடுங்குவது போன்ற ஆதரவே இல்லாத ஆதரவு விலையை வழங்கிவிட்டு, அங்காடியில் விலை ஏறியதும் அந்த விலையேற்றத்தின் மூலம் விவசாயிகள் லாபம் பெறும் வழியையும் அடைத்துவிட்டது.
÷பதுக்கலைத் தடுக்கவேண்டிய அரசாங்கம், "உணவுக்கொள்கை', "உணவுப் பாதுகாப்பு' என்கிற பெயர்களில் பதுக்குவது ஒரு குற்றம். அப்படிப் பதுக்கியதை வீணாக்குவது அதைவிடப் பெரிய குற்றம். இக்குற்றங்களைப் புரிந்துகொள்ள அரசை, உச்ச நீதிமன்றம் தட்டிக்கேட்டுள்ளதே தவிர, தண்டனையையா வழங்கியது? ""இப்படி வீணாகும் உணவை இலவசமாக ஏழைகளுக்கு வழங்கலாமே'' என்று நியாயம் வழங்கியுள்ள நீதிமன்றத்தை அவமதிப்பது அழகல்ல. உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும். நீதிமன்றமும் நாடாளுமன்றமும் ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்!
தமிழகத்தில் நாளை முதல் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்திலுள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் பணி ரூ.5.02 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்டு புதிய இணையதளம் www.tnvelaivaaippu.gov.in மூலம் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். பதிவு செய்த தினத்திலிருந்து ஏழு நாட்களுக்குள் வேலைவாய்ப்பக அடையாள அட்டையை கம்ப்யூட்டர் பிரின்டர் மூலமாக அச்சுப்பிரதி எடுத்துக் கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு' என்பது முயற்சி குறித்த அன்றையத் தமிழனின் அனுபவ மொழி. இன்றோ அது தலைகீழ். அதனால்தானோ என்னவோ, உழுது கொண்டிருக்கும் விவசாயிகள் அழுது கொண்டிருக்க வேண்டியதாகியுள்ளது.
ஊருக்குச் சோறிடுவதுடன் பிறரிடம் கைகட்டிப் பணியாற்ற வேண்டிய அவசியமின்றி காலந்தள்ள விவசாயமே சிறந்த தொழில் என்றிருந்த நிலைமை இன்று இல்லை. சில நேரங்களில் உழைத்த விவசாயிக்கே ஒரு வாய் சோறு கிடைக்காத நிலை. நாட்டின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த, நிகழும் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களே இதற்குச் சாட்சி!
பருவநிலை மாற்றத்தால் மழையின்மை, அல்லும்பகலும் நடக்கும் மணல் கொள்ளையால் ஒட்டகங்கள் உலா போகும்படி மாறிவிட்ட ஆறுகள், தூர்வாரப்படாத குளம், பராமரிக்கப்படாத கால்வாய், ஓசைப்படாமல் உயர்ந்துவிட்ட உர விலை, கண்கட்டு வித்தைபோல அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு எனப் பல்வேறு காரணங்களால், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்தும் பயனில்லாததால், முப்போகம் விளைந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இனி எப்போதும் விளையாத துயர நிலை.
விவசாயம் வீழ்ச்சி அடைவதற்கு விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்படுவதும் ஒரு காரணம். செங்கல் சூளைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவை அமைக்கப்படுவதாலும் கணிசமான பரப்பிலான விளைநிலங்கள் அழிந்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, சில பகுதிகளில் சாயப்பட்டறைகள், காகித ஆலைகள் போன்றவற்றிலிருந்து திறந்துவிடப்படும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் நாளடைவில் பயனற்றுப் போகின்றன. ஒன்றுக்குப் பத்தாய் பலன் தந்த நிலங்கள் ஒன்றுக்குமற்றதாய் மாறிவிடுகின்றன.
விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்வதில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு முக்கியப் பங்குண்டு. இதனால் விவசாயிகள், விவசாயக் கூலிகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
சமுதாயத்துக்குச் சிறிதும் பயனில்லாத பொழுதுபோக்கு அம்சமான திரைப்படங்களைத் தயாரிப்போர் தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு கோடிக்கணக்கில் விலை நிர்ணயிக்க முடிகிறது. அவற்றை வாங்கித் திரையிடும் திரையரங்குகளின் உரிமையாளர்களும் இஷ்டம்போல கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால், உயிர்வாழ அடிப்படையான விவசாயப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிக்கு நியாயமான விலையைக்கூட அவர்களே நிர்ணயிக்க முடியாத நிலை. இதில் ஒரு கொடுமை, அந்த விளைபொருள்களை வாங்கி விற்போர் பல மடங்கு லாபம் பார்த்து வசதி படைத்தோராக மாறிவிடுகின்றனர்.
அவற்றை விளைவிக்கும் விவசாயிகளோ பெருமூச்சு வாங்கி, ஏங்கி நிற்போராகவே வாழ்க்கையை சிரமத்துடன் நகர்த்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
நிலத்தடி நீரை இடைவிடாமல் உறிஞ்சி உற்பத்தி செய்யப்படும் குளிர்பானங்களை 200 மி.லி. ரூ.20 கொடுத்துக்கூட அடிக்கடி வாங்கிப்பருகும் மக்கள், காய்கறிகள் கிலோ ரூ.20-ஐ தாண்டினாலே கொள்ளை விலை எனக் கூப்பாடு போடுவதுண்டு.
ஆனால், அந்த 20 ரூபாயிலும் நாலில் ஒரு பங்கு தொகைகூட விளைவிக்கும் விவசாயிக்குக் கிடைப்பதில்லை என்பதே சோகம் கலந்த உண்மை!
விவசாயம் வீழ்வதற்கு மற்றொரு முக்கியக் காரணம், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பது.
மருத்துவரின் மகன் மருத்துவராகலாம். பொறியாளரின் மகன் பொறியாளராகலாம். அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகலாம்.
அந்த வரிசையில், விவசாயியின் மகன் விவசாயி ஆவதைத்தான் மற்றவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதை விவசாயி விரும்புவதில்லை.
விவசாயம் என்னாகுமோ, எதிர்காலச் சந்ததி சோற்றுக்கே திண்டாடும் நிலை வருமோ என்றெல்லாம் மிகுந்த கவலைப்படுவதாகக் கூறுவோர், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடக் கூடாது என்று அறிவுறுத்தி மேடைதோறும் முழங்குவோர் யாரும் தனது மகனோ, மகளோ விவசாயி ஆவதை விரும்புவதில்லை.
அவர்கள் சந்ததி மட்டும் மெட்ரிக் பள்ளியில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசி வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போய் கணினியும் கையுமாய் இருக்க விரும்புகையில், தங்கள் சந்ததி மட்டும் கண்ணீரும் கையில் பிடித்த கலப்பையுமாய் இருக்க விரும்புவது எந்தவகை நியாயம் என விவசாயிகள் கேட்பதில் தவறில்லையோ எனத் தோன்றுகிறது.
கடந்த காலங்களில் காலநேரமின்றி அயர்வை நினையாமல் வியர்வை சிந்திப் பாடுபட்டும், கடன் மட்டுமே தான் கண்ட பலன் என்பதால், மற்றவர்களைப்போல தனது வருங்காலத் தலைமுறையும் ஏசி அறையில், எட்டு மணி நேர உழைப்பில் வியர்க்காமல் முன்னேற வேண்டும் என்றே விவசாயிகள் மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
சற்று வசதிபடைத்த அல்லது அதிக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளாக இருந்தால், தனது நிலத்தின் ஒருபகுதியை விற்று மீதி நிலத்தில் கோழிப்பண்ணையோ, செங்கல்சூளையோ தொடங்கி தங்கள் பரம்பரையின் விவசாயத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.
அந்தக் காலத்தில் செயற்கை உரங்களில்லை, இலவச மின்சாரமுமில்லை, பம்ப் செட்டும் இல்லை. கடன் தள்ளுபடியுமில்லை.
ஆனால், விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் இருந்தது. இன்றைக்கோ எல்லாம் இருக்கிறது, ஏற்றம் தான் இல்லை.
ஒருபுறம் குறைந்துவரும் விவசாய நிலங்களின் பரப்பளவு, மறுபுறம் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்கும் விவசாயிகள். விளைவு...வெளுக்கத் தொடங்குகிறது விவ"சாயம்'. விழித்துக் கொள்ள வேண்டிய வேளை இது!
இந்த ஆண்டின் தொடக்கம் முதலாகவே, கார், இரு சக்கர வாகனங்கள் விற்பனை சென்ற ஆண்டைக் காட்டிலும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இப்போது ஆகஸ்ட் 2010-க்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இதன்படி, 1,60,794 கார்கள், 9,57,304 இரு சக்கர வாகனங்கள், 52,030 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம்.
இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் வாகனக் கட்டணம் உயர்வதுதான். ஆனால், இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை மிகக் குறைவாக இருக்கிறது. கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக அதிகமாக இருக்கிறது. சரக்கு வாகனங்களால் செலவாகும் பெட்ரோலியப் பொருள்களைவிட, மிக அதிகமாக பெட்ரோல் டீசல் கார்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும்தான் பெட்ரோலியப் பொருள்கள் செலவாகின்றன. இந்தியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகரச் சாலைகளின் 41 விழுக்காட்டை கார், பைக் நிறுத்துமிடம் ஆக்கிரமித்துக் கொள்கிறது எனத் தெரியவந்துள்ளது.
நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த வீட்டுக்குள் இடமில்லாததால் தெருவை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. பெருநகரங்களில் வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது வீணாகும் பெட்ரோல் அளவு, தில்லியில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒருசேர இழப்புதான்.
சீனாவில், ஷாங்காய் நகரில் ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கார் உரிமம் (லைசென்ஸ் பிளேட்) ஏலம் விடப்படுகிறது. ஒரு கார் லைசென்ஸ்பெற குறைந்தது ரூ.2.75 லட்சம் ஆகிறது. அதாவது, ஒரு காரின் விலை! ஆகவே, கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து, சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஷாங்காய் நகரில் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு அரசே சில நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் சைக்கிள்கள் நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கான அடையாள அட்டையைக் கணினியில் தேய்த்துவிட்டு சைக்கிள்களை எடுத்துச்சென்று, தங்கள் பணிமுடிந்தவுடன், வேறு ரயில்நிலையமாக இருந்தாலும்கூட, அங்கே நிறுத்திவிட்டுச் சென்றுவிடலாம். இப்போது இந்தியாவில் புனே நகரம் (ஒரு காலத்தில் சைக்கிள் நகரம் என்ற பெயர் பெற்ற ஊர்) தற்போதைய வாகன நெரிசலைத் தாங்கமுடியாமல், மீண்டும் தனது பழம்பெருமையை நிலைநாட்டும் நடவடிக்கையாக, 20,000 சைக்கிள்களை சாலைகளில் இறக்கிவிட்டு, குறைந்த வாடகையில் மக்கள் பயன்படுத்தும்படி ஏற்பாடுகள் செய்து வருகிறது.
சிங்கப்பூரிலும் சீனாவில் இருப்பது போல கார் உரிமம் பெறக் கட்டணம் உண்டு. அந்த நகரின் முக்கிய வீதிகளில் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய மிக அதிகமான சுங்கக் கட்டணம் வீதிக்கு வீதி வசூலிக்கப்படுகிறது. மிகக் குறைந்த பயணக் கட்டணத்தில் எல்லா வசதிகளுடனும் கூடிய பொதுப் போக்குவரத்து உலகின் பல நாடுகளிலும் இயக்கப்படுவது தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத்தான்.ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் கூட கோட்டும் சூட்டும் அணிந்து சைக்கிளில் பயணிப்பவர்கள் பலர். அதை ஒருவரும் கெüரவக் குறைவாகக் கருதுவதில்லை. அதற்குச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையில் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்கிற பொறுப்பும்தான் காரணம்.
பல நாடுகள் பெட்ரோலிய சிக்கனத்தைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மக்களின் மோட்டார் வாகன மோகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அரசு சார்பில் போதுமான அளவு பொதுப் போக்குவரத்தை குறைந்த கட்டணத்தில் இயக்குகிறார்கள். நாமோ அதைப் பின்பற்றாமல் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.தரமான பேருந்துகள் கிடையாது. முறையாக எல்லா பகுதிகளையும் இணைக்கும் "மெட்ரோ' வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் அதிகமான கட்டணம். சொகுசுப் பேருந்து, விரைவுப் பேருந்து என்று காரணம் கூறி கட்டணங்களை உயர்த்தி, போக்குவரத்துத் துறை மக்களின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறதே தவிர பொதுமக்களின் நலனுக்காக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.
தொலைதூரப் பயணத்துக்கான விரைவுப் பேருந்துகளும் தரமற்றவையாக இயக்கப்பட்டு மறைமுகமாக தனியார் "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கு உதவி செய்வதில்தான் கருத்தாய் இருக்கின்றன.முறையான பொதுப் போக்குவரத்து இல்லாமை ஒரு குறை என்றால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறோம் என்ற பெயரில், வங்கிக் கடன்களை வாரி வழங்கி தனியார் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்குத் துணைபோவது அரசின் இன்னொரு மாபெரும் மோசடி.
நடுத்தர வர்க்கத்தினரைக் கடன்காரர்களாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்திருப்பதுதான் மிச்சம். மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதால் யாருக்கு லாபம்? கடன் கொடுத்த தனியார் வங்கிகளுக்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தானே தவிர, பெட்ரோலியப் பொருள்களுக்கு அந்நிய செலாவணியை விரயமாக்கும் அரசுக்கோ, வாங்கும் சம்பளத்தில் கணிசமான பகுதியை வட்டியாகவும் தவணையாகவும் பெட்ரோலுக்காகவும் செலவிடும் பொதுமக்களுக்கோ என்ன லாபம்?
இனியும்கூட, கார்கள், இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டாமா? கார்கள் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களுக்கு நிபந்தனைகளையும், அவர்களுக்கான பெட்ரோல் விலையையும் கூடுதலாக நிர்ணயிக்க வேண்டாமா? வரம்பில்லாமல் வாகனங்களுக்குக் கடன் வழங்குவது தடுக்கப்பட வேண்டாமா? எல்லாவற்றுக்கும் மேலாக, நஷ்டமானாலும் பரவாயில்லை என்று பொதுப் போக்குவரத்துத் துறையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் வாகனங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட வேண்டாமா?
தமிழகத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மனதை மயக்கும் இலவசத் திட்டங்கள் பெருகிவிட்டன. பட்டனைத் தட்டிவிட்டால் தட்டில் இட்லி என கலைவாணர் பாடியதுபோல இன்று உழைக்காமலேயே கையில் உணவு கிடைக்க ஆரம்பித்து விட்டது.
காரணம் இன்று தமிழகத்தில் வழங்கப்படும் பல்வேறு இலவச நலத்திட்டங்கள்தான்.
இதை தவறென்று யாரும் கூறவில்லை. மக்களை அரசு சுபிட்சமாக வாழவைக்கிறது
என்பது பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும் என்ற மொழி இன்று மாறிவிட்டது.
இன்றைக்கு இலவச மின்சாரம், டிவி, எரிவாயு அடுப்பு, வீடு என இலவசங்களாக குவிகிறது. மேலும், சலுகை விலையில் அரிசி, முதியோர் உதவித் தொகை, பேருந்தில் இலவச பயணம், கர்ப்பிணிகளுக்கு உதவி, இலவச கல்வி, சத்துணவு, காப்பீட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் என பட்டியல் நீளுகிறது. இத்தனையும் அரசின் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
உண்மையிலேயே இத்தனை வசதிகளும் கிடைக்கும்போது அதை வாழ்த்தாமல் வசைபாடுவது ஏன் என்பது ஆட்சியாளர்களின் கேள்வி. அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், எதற்கும் கவலையில்லை. ஏன் உழைக்க வேண்டும் என்ற கேள்வி இன்று பலரிடமும் எழுகிறது.
உழைப்பது எதற்காக என்பதை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. உழைத்தால்தான் உடலும்,உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
வேளாவேளைக்கு உண்டுவிட்டு, மூலையில் முடங்கிகிடப்பதால் மனிதனின் ரத்தஓட்டம் பாதிக்கப்படுகிறது. நடைபயிற்சி மறந்துபோய் தளர்ந்துவிடுகிறான். வெயில், மழை என மாறி மாறி உடல் உழைப்பு மேற்கொள்வதால் நோய் நொடிக்கு வாய்ப்பில்லை. வயலிலும், ஆலைகளிலும் உழைப்பவர்கள் ஒய்யாரமாகப் படுத்தால் விளைவு என்னவாகும்.
விரைவிலேயே நடைதளர்ந்து, மனம் புழுங்கி, வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலை வந்துவிடுகிறது. ஆயுள்காலமும் குறுகிவிடுகிறது.
அன்று காடு, கரை என்ற சென்றவர்கள் இன்று கிராமப்புறங்களின் டீக்கடை பெஞ்சுகளிலும், ஆலமரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் பொழுதைக் கழிக்கின்றனர். எங்கிருந்தோ அரிசி கிடைக்கிறது! நமக்கென்ன என்ற அலட்சியம். போதாக்குறைக்கு நூறுநாள் வேலை என்ற பெயரில் அன்றன்று கையில் கிடைக்கும் ஊதியம். இது உழைக்காமல் கிடைக்கும் வருமானம்.
இப்படி கிடைக்கும் பணத்தை மதுக்கடைகளில் சென்று செலவழிப்பது வாடிக்கையாகிவிட்டது. விளைவு மதுக்கடை வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது.
இதனால் கிடைக்கும் அபரிமிதமான வருவாயால் மேலும் பல இலவசத் திட்டங்களை அரசு வழங்கிவருகிறது. இப்படி உழைப்பவர்களை சோம்பேறிகளாக்குவதன் மூலம் சம்பாதிக்கத் தேவையில்லை என்ற மனோபாவம் ஏற்படுகிறது.
வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிடுகிறது. எதற்காக குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்? அவர்கள் காலத்துக்கும் இதே இலவசத் திட்டங்கள்தான் தொடருமே என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இன்று விவசாயம் செய்வதை பார்க்க முடியுமா என்ற பதைபதைப்பு எழுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அரிசி பெரும் அளவில் இறக்குமதியாகிறதே இனி நாம் ஏன் சாகுபடி செய்ய வேண்டும் என்ற அளவுக்கு விவசாயிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை இப்படியே வளரவிட்டால் நெல் என்ற தானியம், காய்கறிகள் போன்றவற்றை வெறும் புகைப்படங்களில் மட்டும்தான் பார்க்க வேண்டிவரும் என வேளாண்மை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ரெடிமேட் மிக்ஸ் போன்றே இனி அரிசிக்குப் பதில் உணவும் வந்துவிடும் என்ற நிலை வந்துவிட்டது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளையாட வருங்காலச் சந்ததியினருக்கு போதிய உடல் வலு கிடைக்குமா என்பது தெரியவில்லை. விஞ்ஞானம்தான் வளர்ந்துவிட்டதே, இனி நாம் எதற்கு உழைக்க வேண்டும் என்ற கேள்வி இளையதலைமுறையினர் மத்தியில் நிலவுகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மனதில் நிறுத்தி இலவசத்தால் மக்களை வசப்படுத்தவதை நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக கிஸôன் விகாஸ், இந்திரவிகாஸ் போன்ற பத்திரங்களைத் தரலாம்.
மேலும், காப்பீட்டுத் தொகையும் வழங்கலாம். அப்படித் தந்தால் அது வாழ்நாள் முழுக்க மக்களுக்குப் பயனளிக்கும் திட்டமாகத் திகழும். அதை விடுத்து இலவசங்கள் தொடர்ந்தால் மக்களின் மனதை மழுங்கடிக்கச் செய்யும். யானைகட்டிப் போரடித்த காலம் மறந்துபோனதைப்போல விளைநிலங்கள் காட்சிப்பொருளாக மாறும் என்பதே உண்மை.