-
Tuesday, October 12, 2010
உயரும் ரூபாய் மதிப்பும், அதன் பாதிப்பும்!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஓராண்டுக்கு மேலாக அதிகரித்தவண்ணம் உள்ளது. அக்டோபர் முதல்வாரத்தில் டாலருக்கு ரூ. 44/60 என்ற நிலை உள்ளது. அந்த அளவு டாலரின் மதிப்புச் சரிந்துள்ளது.
இது இந்திய ஏற்றுமதியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய லாபம் குறைகிறது. எப்படி என்றால், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை வெளிநாடுகளிலிருந்து நமக்கு டாலரில் வருகிறது. டாலர் மதிப்புக் குறைந்துள்ளதால், நமக்குக் குறைந்த அளவில்தானே ரூபாய் கிடைக்கும்? மாறாக, டாலர் மதிப்பு அதிகரித்தால், நமக்கு ரூபாய் சரியான அளவில் கிடைக்கும்.
மற்றொரு வகையிலும் ஏற்றுமதியாளர்களை இது பாதிக்கிறது. சீனா போன்ற சில நாடுகள், தங்கள் நாணய மதிப்பு உயராமல் பார்த்துக் கொள்கின்றன. அந்த நாடுகள் இதை ஒரு வியாபார உத்தியாகவே கடைப்பிடிக்கின்றன. இந்தியாவைவிட குறைந்தவிலையில் ஏற்றுமதி செய்வதாகக்கூறி, இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய ஆர்டர்களை அந்த நாடுகள் தட்டிச் செல்கின்றன.
பொதுவாக, இதுபோன்ற தருணங்களில் பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதாவது பணச் சந்தையிலிருந்து ரிசர்வ் வங்கி கணிசமான அளவு டாலரைக் கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப் பிடிக்கும். இது காலங்காலமாக ரிசர்வ் வங்கி வழக்கமாகச் செய்து வந்த ஏற்பாடுதான். ஆனால், கடந்த ஓராண்டாக பாரத ரிசர்வ் வங்கி அப்படிச் செய்யவில்லை.
இது கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைக்கு மாறுபட்ட நிலைப்பாடு மட்டுமல்ல; சீனா உள்ளிட்ட பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் அணுகுமுறையிலிருந்தும் மாறுபடுகிறது. இந்த மாற்றத்துக்கான காரணத்தையும் பாரத ரிசர்வ் வங்கி இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால், அன்னியச் செலாவணி தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கையைத் தெள்ளத் தெளிவாக வெளியிடுவதுதான் நல்லது.
ஏனெனில், இது ஏற்றுமதியாளர்களை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. பாரத ரிசர்வ் வங்கியே இப்போது ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளது. அது, இந்தியப் பங்குச் சந்தைக்குப் பெரிய அளவில் இப்போது வந்து குவியும் அன்னிய முதலீடுகளை எப்படிக் கையாள்வது என்பதாகும்.
கடந்த பட்ஜெட்டுக்குப் பிறகு - அதாவது கடந்த ஏழு மாதங்களில் ரூ. 1,19,600 கோடி இந்திய மூலதனச் சந்தைக்கு வந்துள்ளது. இதில் பெரும்பகுதி பங்குச்சந்தைக்கு வந்துள்ளது என்று சொல்லத் தேவையில்லை.
பிரேசில் போன்ற சில நாடுகள் அன்னிய முதலீடுகள் தேவைக்கு அதிகமாக வராமல் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியா அவ்விதம் செய்வதற்கில்லை. காரணம், ஒருபக்கம் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இன்னொருபக்கம் உள்நாட்டுத் தொழில்துறை உற்பத்தி முன்எப்போதையும்விட அதிகரித்துள்ளது. இந்த இரண்டு இனங்களிலும் நமது இறக்குமதி மேலும் அதிகரிக்கும். அதற்கான செலவும் கணிசமாக அதிகரிக்கும்.
இந்நிலையில், அன்னியச் செலாவணி வரத்து ஒருவகையில் வரவேற்கப்பட வேண்டியதே. அதேநேரம், டாலர் மதிப்பு சரிவதற்கும், ரூபாய் மதிப்பு உயர்வதற்கும் அன்னியச் செலாவணி வரத்துத்தான் காரணம்.
ஆக, அவ்வப்போது பங்குச்சந்தைக்கு வந்துவிட்டு, பிறகு வெளியேறும் அன்னிய நிறுவன முதலீடுகளை (எஃப்.ஐ.ஐ.) ஊக்குவிப்பதைவிட, இந்திய தொழில்துறை மேம்பாட்டுக்கும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய, நிலையான, அன்னிய நேரடி முதலீடுகளை (எஃப்.டி.ஐ.) ஊக்குவிப்பதற்கான உத்திகளை உருவாக்குவதுதான் மத்திய அரசின் முன் இப்போதுள்ள தலையாய பணியாகும்.
இங்கு ஒரு செய்தியைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். 2011-2012-ம் ஆண்டில், இந்தியாவுக்கு வரக்கூடிய அன்னிய நேரடி முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும், அத்தகைய முதலீடுகளைப் பெறுவதில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கும் என்றும், ஐக்கிய நாடுகள் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (யு.என்.சி.டி.ஏ.) தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் அறிவித்துள்ளது. இது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவியது. இப்போது அந்த நாடுகளில் பொருளாதாரம் ஓரளவு மீட்சி அடைந்துள்ளது. எனினும் சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்.) அண்மையில் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார நிலவரம் - அக்டோபர் 2010 மற்றும் உலக நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை என்னும் இரு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவெனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றாலும் நிலையற்ற நிதிநிலைமை நீடிக்கவே செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், டாலர் மதிப்புச் சரிவால் ஏற்றுமதி செய்பவர்களுக்கு லாபம் குறைந்துவிட்டது.
பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்கும் வகையில், மத்திய அரசு முன்னதாக பல புத்துயிர்த் திட்டங்களைச் செயல்படுத்தியது. அவற்றில் சில காலாவதியாகும் நிலையை எட்டியது. நல்லவேளையாக அவை மேலும் சில காலத்துக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். உதாரணமாக, ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும், இறக்குமதிப் பொருள்களுக்காகச் செலுத்திய சுங்கத் தீர்வை தொகையைத் திருப்பி வழங்கும் திட்டம் (டூட்டி என்டெயில்மெண்ட் பாஸ் புக் திட்டம்) அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சில குறிப்பிட்ட பொருள்களின் ஏற்றுமதிக்கு 2 சதவீத போனஸ் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், சில குறிப்பிட்ட துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிற செயல்திட்டங்களும் தொடர வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். உதாரணமாக, ஜவுளித்துறையில் செயல்படுத்தப்படும், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தைக் குறிப்பிடலாம். இது நல்ல பலனை அளிப்பதால் மத்திய அரசு இத்திட்டத்தை நிச்சயமாகத் தொடர்ந்து செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. இவற்றின் பங்களிப்பு 40 சதவீதம் என்பதை நினைவூட்டத் தேவையில்லை. எனினும் இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றை நீக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்ட வேண்டும்.
ஏற்கெனவே, துறைவாரியாக முப்பதுக்கும் அதிகமான ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில்கள் நாடு முழுவதிலும் செயல்படுகின்றன. இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகள் மற்றும் சிறிய, பெரிய ஏற்றுமதியாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும். அதன் மூலம் அரசின் நோக்கம் மற்றும் இலக்கு, ஏற்றுமதியாளர்களின் விடாமுயற்சி, கடும் உழைப்பு ஆகியவை வெற்றி பெறும் வகையில், திறம்பட, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சாதனை புரிய வேண்டும் என்பதே சம்பந்தப்பட்ட அனைவரது விருப்பமும் ஆகும்.
புதிய ஏற்றுமதியாளர்கள், இந்தக் கவுன்சில்களில் உறுப்பினர்கள் ஆகி தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இறக்குமதியாளர்களின் முகவரிகள் அடங்கிய, புதுப்பிக்கப்பட்ட டைரக்டரிகளை இந்த வாரியங்களிலிருந்து பெற்றுப் பயன் அடையலாம். அதேபோல் புதிய ஏற்றுமதியாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை இதுபோன்ற டைரக்டரிகளில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உலகம் முழுவதிலும் இயங்குகிற வர்த்தக சபைகள், அரசுத் தூதரகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வளர்ச்சிக் கழகங்கள், நூலகங்கள் ஆகிய அமைப்புகளின் வாயிலாக அந்தந்த நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். இதன்மூலம் வெளிநாட்டு ஆர்டர்கள் புதிய ஏற்றுமதியாளர்களைத் தேடி வரும்.
உலகில் யார் யார் எந்தப் பொருள்களை இறக்குமதி செய்கின்றனர் என்ற தகவலை புதிய இளம் ஏற்றுமதியாளர்கள், ""தேடுதல்'' இணையதளங்களின் மூலமும் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவிலிருந்து ஜவுளி, தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், கைவினைப் பொருள்கள், கலைப்பொருள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களையும், இந்தியாவின் பெருமைக்கு வழிவகுத்த, தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களையும், ரூபாய் மதிப்பு உயர்வால் ஏற்படக்கூடிய இழப்பிலிருந்து காப்பது அரசின் கடமையாகும். இந்தத் தொழில்களில் பணிபுரியும் லட்சோப லட்சம் ஊழியர்களின் எதிர்காலமும் இதில் அடங்கியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஏற்றுமதி அதிகரிக்கும் இத்தருணத்தில் ரூபாயின் மதிப்பு உயர்வால் , ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றமும் சோர்வும் அடைவதில் வியப்பில்லை.
பாரத ரிசர்வ் வங்கி, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேநேரம், ரூபாய் மதிப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கையை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்
Subscribe to:
Posts (Atom)