Thursday, September 30, 2010

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!


 லக்னோ : "அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும், நேற்று லக்னோவை நோக்கியே இருந்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் 20க்கும் மேற்பட்டோர், கோர்ட்டிலிருந்து வெளியே வந்து லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் பேட்டியளித்தனர். பரபரப்பும், பதட்டமாக இருந்த சூழ்நிலையில் வக்கீல்கள் தாங்கள் எடுத்துரைத்த வாதங்களை விளக்கி, அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை கூறும்போதே, தீர்ப்பின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.

இந்த தீர்ப்பில் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் சன்னி வக்பு போர்டும், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன. நாடு முழுவதும் அமைதி காக்க பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் அமைதி வாழ்க்கைக்கு உதவ ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளன.

20 பிரச்னைகளை அலசி ஆராய்ந்த ஐகோர்ட்

1. இடிக்கப்பட்ட கட்டடம், முஸ்லிம் அமைப்பு தெரிவித்தது போல மசூதியா?
2. அப்படியெனில், அது எப்போது, யாரால் கட்டப்பட்டது? முகலாய பேரரசர் பாபர் கட்டினாரா அல்லது அவரின் கவர்னர் மிர் பாகி தாஷ்கண்டி கட்டினாரா?
3. இந்துக் கோவில் இடிக்கப்பட்டு அதன் மீதுதான் மசூதி கட்டப்பட்டதா?
4. காலம் காலமாக பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினரா?
5. அவர்கள் பகிரங்கமாக இந்த சொத்தை கையகப்படுத்தினரா மற்றும் மசூதி கட்டப்பட்டதாக கூறப்படும் 1528ம் ஆண்டு முதல் அதைத் தொடர்ந்து வைத்திருந்தனரா?
6. கைவிடப்பட்டதாக கருதப்படும் காலமான 1949ம் ஆண்டு வரை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனரா?
7. இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதா?
8. தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அந்த இடத்தில் வழிபாடு நடத்தும் உரிமையை இந்துக்கள் பெற்றனரா?
9. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமா?
10. நினைவிற்கு எட்டாத காலம் முதல், ராமரின் பிறந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தினரா?
11. 1949ம் ஆண்டு டிசம்பர் 22 - 23ம் தேதியன்று இரவுதான் ராமர் சிலையும், மற்ற வழிபாட்டுப் பொருட்களும் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்டனவா அல்லது அதற்கு முன்னரே அவை இருந்தனவா?
12. சர்ச்சைக்குரிய இடத்தின் அருகில் இருந்த ராம்சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் போன்றவை பிரதான கட்டடத்துடன் சேர்ந்து இடிக்கப்பட்டனவா?
13. சர்ச்சைக்குரிய இடத்தின் கிழக்கிலும், வடக்கிலும், தெற்கிலும் உள்ள பகுதி அடக்க ஸ்தலம் மற்றும் மசூதியாக இருந்ததா?
14. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி கட்டடங்கள் இருந்ததா? மற்றும் இந்து வழிபாட்டுத் தலம் தவிர வேறு வழியாக அந்த இடத்திற்கு செல்ல முடியாதா?
15. இஸ்லாமிய கோட்பாடுகளின்படி, சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஒரு மசூதி வர முடியுமா?
16. மினரட் (மசூதியைச் சுற்றி இருக்கும் உயரமான கட்டடம்) இல்லாத ஒரு கட்டடம் மசூதியாக முடியுமா?
17. மூன்று பக்கங்களிலும் அடக்க ஸ்தலம் இருக்கும் போது, அங்கு மசூதி இருக்க முடியுமா?
18. இடித்த பின், அதை ஒரு மசூதி என அழைக்க முடியுமா?
19. பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், திறந்தவெளி இடத்தை தொழுகை நடத்துவதற்கான மசூதியாக முஸ்லிம்கள் பயன்படுத்த முடியுமா?
20. எந்த வகையான நிவாரணம் முஸ்லிம்களுக்கு உகந்தது?

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்ன? அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு.கான் அளித்த தீர்ப்பின் சாராம்சம்:

* சர்ச்சைக்குரிய இடத்தில் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதி கட்டப்பட்டுள்ளது.
* மசூதி இருந்த இடம் உட்பட சர்ச்சைக்குரிய இடம் பாபாருக்குரியதா அல்லது மசூதியை கட்டியவருக்கு உரியதா என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
* மசூதி கட்டுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாக, அந்த இடத்தில் இடிந்து போன கோவிலின் சிதிலங்கள் கிடந்துள்ளன. அதன் மீது பாபர் உத்தரவுப்படி மசூதி கட்டப்பட்டுள்ளது. சிதிலமான பொருட்களும் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
* சர்ச்சைக்குரிய இடத்தில் சிறிய பகுதியில்தான் ராமர் பிறந்த இடம் என நம்பி வந்துள்ளனர். வழிபாடு நடந்தது ஒருபகுதி என்றால், அதற்கடுத்த பகுதியில் தொழுகையும் நடந்திருக்கிறது.
* ராமரும், சீதாவும், இங்கு வந்து தங்கியிருந்ததாக நம்பிக்கை கொண்டிருந்த இந்துக்கள் 1855 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வழிபட்டு வந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, மசூதியின் உட்புறத்திலும், காம்பவுண்ட் சுவருக்கு உட்பட பகுதியிலும் வழிபாட்டுத்தலங்களும், சிலைகளும் இருந்ததும், அதையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்களும் வழிபட்டு வந்துள்ளனர். இது புதுமையாகவும், இதற்குமுன் நடந்திராதவகையிலும் உள்ளது.
* மேற்கூறிய அம்சத்தின்படி பார்த்தால், இந்துக்களும், முஸ்லிம்களும் சர்ச்சைக்குரிய இடத்தின் கூட்டு உரிமையாளர்களாக இருந்துவந்தது தெரியவந்துள்ளது.
* ஓட்டு மொத்த கூட்டு உரிமை உள்ள போதிலும், தங்கள் வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்டுவந்துள்ளனர். முறையான பாகப்பிரிவினை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
* கடந்த 1949 ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மசூதியின் மைய பகுதியின் கீழ் தான், ராமர் பிறந்த இடமாக கருதி ராமர் சிலையை வைத்து வழிபட துவங்கியுள்ளனர். ஆனால், அதற்கு முன் பல ஆண்டுகளாக அந்த இடத்தைதான் ராமர் பிறந்த இடமாக வழிபட்டு வந்துள்ளனர்.
* மேற்கூறிய அம்சங்களை தீர அலசி ஆராய்ந்து பார்த்ததில், சர்ச்சைக்குரிய இடம் இரு தரப்பினருக்கும் பாத்தியப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
* மசூதியின் மைய பகுதியின் கீழ், ராமர் சிலை இருந்த இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
* ராமரும், சீதாவும் தங்கியிருந்த கருதப்படும் பகுதியை, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு ஒதுக்க வேண்டும்
* மூன்று தரப்பினருக்கும் இடங்களை பிரித்து அளிக்கும் போது, சிறு சிறு மாற்றங்கள் தேவைப்படும் பட்சத்தில், அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மத்திய அரசால் கையகப்படுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து சில பகுதிகளை ஒதுக்க வேண்டும்.
* மூன்று மாதங்கள் வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பகிர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் கருத்துக்களை அளிக்கலாம். இவ்வாறு எஸ்.யு.கான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி அகர்வால் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

* சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதியின் மைய பகுதியின் கீழ் தான், இந்துக்களின் மத நம்பிக்கைப்படி ராமர் பிறந்த இடமாக வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.
* சர்ச்சைக்குரிய இடத்தில் எப்போதும் மசூதி இருந்ததாக கருதப்பட்டு, முஸ்லிம்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இருப்பினும் மசூதி 1528ம் ஆண்டு பாபரால்தான் கட்டப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் சேர்க்கப்படவில்லை.
* மசூதியின் மையப் பகுதியின் கீழ்தான், 1949ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
* மசூதி கட்டப்பட்ட பகுதியில் தான் இந்துக்களுக்குரிய சமய கட்டடம் இருந்துள்ளது. அதை தகர்த்துவிட்டு தான் மசூதி எழுப்பப்பட்டுள்ளது.

நீதிபதி சர்மா அளித்த தீர்ப்பில், "ராமர் பிறந்த ஜென்மஸ்தானம் அது. அது கடவுள் ராமர் பிறந்த இடம். ராமர், குழந்தையாக இருந்ததாகக் கருதக்கூடிய இடம். அப்படிப்பட்ட கடவுள் உருவமோ அல்லது உருவமின்றியோ எல்லா இடங்களிலும் நீக்கமற இருப்பவர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைகுரிய இடத்தில் யாருக்கு முக்கிய உரிமையுள்ளது என்பது தொடர்பாக, சன்னி மத்திய வக்பு வாரியம், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவை தொடர்ந்த மனுக்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தீர்ப்பைக் கேட்பதில் குழப்பமோ, குழப்பம்: தீர்ப்பு விவரத்தை தெரிந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர்கள் உட்பட மீடியா பிரதிநிதிகள் ஐகோர்ட்டிற்கு வரவேண்டாம். இதற்காக சிறப்பு ஏற்பாடு லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டால் நியமிக்கப்படும் பிரதிநிதி அறிவிப்பார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது நடந்த வாதபிரதிவாதங்களை விளக்குவதற்காக, ஆஜரான வக்கீல்கள், கலெக்டர் அலுவலக மீடியா சென்டருக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் 4 மணி முதல், நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் லக்னோவில் உள்ள மீடியா சென்டரை நோக்கி இருந்தது. 4.35 மணிக்கு, வக்கீல்கள் கூட்டமாக வந்தனர். சிலர், வெற்றிச் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் இரண்டு விரல்களை காட்டியபடி வந்தனர். தீர்ப்பு வெளியாகிவிட்டதோ என்று பத்திரிகையாளர்கள் குழம்பிப் போயினர். இருபதுக்கும் மேற்பட்ட வக்கீல்கள், வழக்கு விசாரணையின் போது தாங்கள் எடுத்துவைத்த வாதங்களை வாசித்தனர். ஆளாளுக்கு பலரும் பேசியதால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஒரே நேரத்தில் பலரும் பேசி குழப்பினர். தீர்ப்பு தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் 600 பத்திரிகையாளர்கள், லக்னோவில் குழுமியிருந்தனர். நேரடியாக ஒளிபரப்புவதற்காக 40க்கும் மேற்பட்ட வெளிப்புற படப்பிடிப்பு (ஓ.பி.,) வேன்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

கடைசி நாளில் நீதிபதி வழங்கிய பெரும் தீர்ப்பு: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மாவின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. நீதிபதியாக பணியாற்றிய கடைசி நாளான நேற்று அவர் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கில் நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த மூன்று நீதிபதிகளில் தரம் வீர் சர்மா, லக்னோ பெஞ்சில் மூத்த நீதிபதி. இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இவர் தனது உணவை தானே சமைத்துக் கொள்வார். அவ்வப்போது தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகளுக்கும் உணவு சமைத்துக் கொண்டு வந்து வழங்குவார். இவர் ஒரு நல்ல சமையல்காரர். நீதிபதி சர்மா, பெரும்பாலான நேரங்களில் இந்திதான் பேசுவார். சைவ உணவு மட்டுமே சாப்பிடும் இவர், ஒரு பிரம்மச்சாரி. சமூக விழாக்களில் பங்கேற்கும் போது, எப்போதும் வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்துதான் வருவார். கோர்ட்டுகளில் வழக்கு தொடரும் ஏழைகளுக்கும் இவர் பல வகையில் உதவி வருகிறார். கொடையுள்ளம் கொண்ட இவர், நெருக்கடியான பல காலகட்டங்களில் உதவியுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்த இவர், 1967ல் பட்டப்படிப்பை முடித்தார். 1970ல் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1972ல் நீதித்துறை பணியில் சேர்ந்தார். 2002ல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியானார். 2005ல் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதியானார். அயோத்தி வழக்கின் நீதிபதியாக 2007ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நியமிக்கப்பட்டார்.

தீர்ப்பு வழங்கிய மற்ற இரண்டு நீதிபதிகளில் ஒருவர் அகர்வால் (வயது 52). லக்னோ பெஞ்சில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் மிகவும் இளையவர் இவரே. நீதிபதி சர்மா போல அல்லாமல், இவர் பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார். கோர்ட்டிற்கு வெளியே கூட அப்படித்தான். அறிவுக் கூர்மையாகவும், சுருக்கமாகவும் தீர்ப்புகளை வழங்குவதில் கைதேர்ந்தவர். எப்போதும் தெளிவாகப் பேசக்கூடியவர். சிவில் சட்டங்களில் கைதேர்ந்தவர். கடந்த 1977ல் ஆக்ரா பல்கலையில் அறிவியலில் பட்டம் பெற்ற அகர்வால், மீரட் பல்கலையில் சட்டம் பயின்றார். 1980ல் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். அதே ஆண்டு அக்டோபரில் அலகாபாத் ஐகோர்ட் பார் அசோசியேஷனில் சேர்ந்தார். ஆரம்பத்தில் வரிகள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த அகர்வால், பின்னர் சேவைத் துறை தொடர்பான வழக்குகளில் ஆஜரானார். 2005 அக்டோபரில் அலகாபாத் ஐகோர்ட் பெஞ்சில் சேர்ந்தார். 2007 ஆகஸ்டில் நிரந்தர நீதிபதியானார். கடந்த 1958 ஏப்ரல் 25ம் தேதி பிறந்த அகர்வாலின் நீதிபதி பதவிக்காலம், 2020 ஏப்ரல் 23ம் தேதி முடிவடைகிறது.

மூன்றாவது நீதிபதியான சிப்காட் உல்லா கான், 1952 ஜனவரி 31ம் தேதி பிறந்தவர். 1975ல் சட்டப்படிப்பை முடித்த இவர், அதே ஆண்டில் வக்கீலாக பணியாற்றத் துவங்கினார். சிவில், வருவாய், சேவை சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகி வந்தார். 2002ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் தன்மை கொண்ட இவர், சிவில் வழக்குகளில் வழக்கு தொடுத்தவர்களை கோர்ட்டுகளுக்கு வெளியே பேசித் தீர்க்கும்படி அடிக்கடி கேட்டுக் கொள்வார். அவரின் யோசனையின் பேரில், 2000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமாக முடிந்துள்ளன. அயோத்தி வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக 2010 ஜனவரி 11ம் தேதி நியமிக்கப்பட்ட இவர், எப்போதும் தனது அணுகுமுறையில் உறுதியாக இருப்பவர். கடுமையான நபர் என, மற்றவர்களால் விமர்சிக்கப்படுவார். இவரின் பதவிக்காலம் 2014 ஜனவரி 30ம் தேதி முடிவடைகிறது. இவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், அகில இந்திய ரிப்போர்ட்டர் லா புக்கில் இடம் பெற்றுள்ளன.

தீர்ப்பு வெளியான நேரத்தில் எப்படி இருந்தது அயோத்தி: அயோத்தி நிலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உ.பி., மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று வழங்கியது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள், மதியம் 2.30 மணியில் இருந்தே தீர்ப்பை எதிர்நோக்கி, "டிவி' முன் அமர்ந்திருந்தனர். அதேநேரத்தில், பதட்டம் நிறைந்த பல மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாலைகளில் வன்முறையை தூண்டும் கோஷங்களை யாரும் எழுப்பாத வகையிலும், தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டங்கள் நடத்தாத வகையிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்ப்பை எதிர்நோக்கி மாநில அரசு பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், தீர்ப்பு எப்படி வருமோ என, மக்கள் யாரும் அஞ்சவில்லை. தீர்ப்பை எதிர்நோக்கியே நாள் முழுவதும் காத்திருந்தனர். பதட்டம் நிறைந்த பல மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் குறைவான நபர்களே வேலைக்கு வந்திருந்தனர். பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அயோத்தி மற்றும் பைசாபாத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மார்க்கெட்டுகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. எந்தவிதமான வன்முறை நிகழ்ந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், போலீசார் அனைத்து விதமான உபகரணங்களுடனும் தயார் நிலையில் இருந்தனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் வாசிகளே. பல மாவட்டங்களில் பள்ளிகளை நிர்வாகத்தினர் திறக்கவில்லை. திறந்திருந்த சில பள்ளிகளும் முன்னதாகவே மூடப்பட்டன.

வன்முறைக்கு பெயர் போன மீரட்டில் மதியம் 2.30 மணிக்கெல்லாம் சந்தைகள் மூடப்பட்டன. தீர்ப்பை "டிவி'யில் பார்க்கவும், பாதுகாப்பு காரணங்கள் கருதியும் கடைக்காரர்கள் கடைகளை மூடினர். இதேபோல், காசியாபாத், முசாபர் நகர், ராம்பூர், கோரக்பூர், கான்பூர், பரேலி, சகாரன்பூர், மொராதாபாத் போன்ற இடங்களிலும் முன்னதாகவே சந்தைகள் மூடப்பட்டன. மாநிலத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் எல்லாம் கடந்த மூன்று நாட்களாக பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். எந்தவிதமான வன்முறைகளும் நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு சமூக அமைப்புகளும், கல்வியாளர்களும், அறிஞர்களும் ஈடுபட்டிருந்தனர்.

தீர்ப்பை வெளியிடுவதற்காக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் சார்பில், சிறப்பு வெப்சைட் ஒன்றும் துவக்கப்பட்டிருந்தது. அந்த வெப்சைட்டில் மாலை 4 மணிக்கு பிறகு, தீர்ப்பு விவரத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தும், அந்த வெப்சைட் இணைப்பு எளிதில் கிடைக்கவில்லை. தீர்ப்பின் நகலை பெறும் வரை தீர்ப்பு இப்படித்தான் வரும் என, மீடியாக்கள் எந்த விதமான செய்திகளையும் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக உ.பி., போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இரண்டு லட்சம் போலீசார், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 72 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் அதிக பதட்டம் நிறைந்த மாவட்டங்களாகவும், 25 மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன. அத்துடன் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் தீர்ப்பு எப்படி வந்தாலும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.

"நிர்மோகி அகாரா': ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பாரம்பரியமான உரிமையை நிலைநாட்டும் வகையில், அங்கு தங்கி வழிபடும் சாமியார்களின் அமைப்பு தான் நிர்மோகி அகாரா. இங்குள்ள சாமியார்கள் அன்றாடம் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அயோத்தியில் உள்ள பழைமையான அமைப்பு இது. 1885ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று, இந்த அமைப்பு, பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1959ம் ஆண்டில் இந்த அமைப்பு, சர்ச்சைக்குரிய இடம் தங்களுடையது என்று கோரியது. நேற்றைய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்றில் ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு சொந்தம் என்ற தீர்ப்பால், இந்த அமைப்பின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.

ராம் லாலா: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1949ல் ராமர் சிலையை வைத்த அமைப்பு தான் ராம் லாலா விராஜ்மன். ராமர் பிறந்த இடத்தில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கூடாது என்ற தீர்ப்பால், அந்த சிலைகள் அமைந்துள்ள இடம், மசூதி குவிமாடம் இருந்த இடம் உட்பட மூன்றில் ஒரு பங்கு இடம் இந்த அமைப்புக்கு வழங்கி அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது.


Wednesday, September 29, 2010

ராம ஜென்ம பூமியில் இதுவரை...


தலைநகர் தில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். இது 7-ம் நூற்றாண்டில் பல கோயில்களை உள்ளடக்கி கோயில் நகரமாக இருந்தது என்று சீனத் துறவி யுவான் சுவாங் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். அங்கு ராமர் கோயில் இருந்ததாக 12-ம் நூற்றாண்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.


1527: மொகலாய மன்னர் பாபர் இந்தியா மீது படையெடுத்தார். அவர் பல ஹிந்து மன்னர்களை வெற்றிகண்டார். தான் வெற்றிகண்ட பகுதிகளில் ஆட்சிபுரிய ஜெனரல் மீர் பாகியை வைஸ்ராயாக நியமித்தார். மீர் பாகி அயோத்திக்கு 1528-ல் வருகை தந்தார். சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பாபரின் பெயரை அந்த மசூதிக்கு சூட்டினார்.
1853: சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த நேரத்தில் சீதா ரசோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (வேள்விக் கூடம்) கட்டப்பட்டன.


1855 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்துள்ளதாக பிரிட்டிஷ் காலனி ஆட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.


1859: ராமஜென்ம பூமியில் ஹிந்துக்கள் வழிபட தனி இடமும், முஸ்லிம்கள் வழிபட தனி இடமும் ஒதுக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்பி வலை அமைத்தனர்.


1936-ம் ஆண்டுக்குப் பின் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவில்லை
என்று ஹிந்துக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


1949 டிசம்பர் 22: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்ற படி ஏறினர். அப்போது சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு வளாகத்துக்கு பூட்டுப் போடப்பட்டது.


1950: கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ச ராமச்சந்திர தாஸ் ஆகிய இருவரும் ராமர் சிலையை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஃபைஸôபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உள்பகுதி பூட்டப்பட்டது. ஆனால் வளாகத்தில் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது.


1959: நிர்மோஹி அகடா என்ற ஹிந்து அமைப்பினர் மற்றும் மஹந்த் ரகுநாத் ஆகியோர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய தாங்கள்தான் உரிமை உள்ளவர்கள் என்று அவர்கள் கோரினர்.


1961-ல் சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதிக்கு உரிமை கொண்டாடியதோடு அதனைச் சுற்றியுள்ள இடம் சமாதி என்று கூறியது.


1986: ஃபைஸôபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹரிசங்கர் துபே என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த பிப்ரவரி 1-ல் அனுமதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூட்டுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முஸ்லிம்கள் சார்பில் பாபர் மசூதி நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.


1989: நவம்பர் 9-ம் தேதி ராமர் கோயில் கட்ட பூமி பூஜைக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதியளித்தார். இதே ஆண்டில் மசூதியை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் வழக்குத் தொடர்ந்தார்.


2002: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதா என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.


2010: இந்த பெஞ்ச் தனது விசாரணையை கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறைவு செய்து செப்டம்பர் 24-ல் தீர்ப்பு என்று அறிவித்தது. ஆனால் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.


இந்தத் தடை உத்தரவை செப்டம்பர் 28-ம் தேதி விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது.