Wednesday, December 15, 2010

ஏழைகள் வயிற்றில் அடித்து 2 லட்சம் கோடி ஏப்பம்

அப்பாவிகளை பட்டினி போட்டு அவ்ளோவும் சுருட்டிய கொடுமை    ஒரு ரூபாய்ல ஒரு பைசா எடுத்தா தப்பா...?    ஒரு ரூபாய்ல ஒரு பைசாவை ஒரு லட்சம் தடவை எடுத்தா தப்பா...?
    ஒரு ரூபாய்ல ஒரு பைசாவை, ஒரு லட்சம் பேர், ஒரு லட்சம் முறை எடுத்தா...?

பார்த்து, கேட்டு, ரசிக்க வேண்டுமானால், சினிமா வசனமாக இருக்கலாம். அப்படி தான் இத்தனை ஆண்டு காலம் சினிமா காமெடியாகவே நாம் பார்த்து, அட, சூப்பர் டயலாக்...ப்பா...என்று சொல்லி  டிக்கட் வாங்கி படத்தையும் பார்த்து விட்டு திரும்பி விடுகிறோம். வீட்டிற்கு வந்த பின் தான் சமூக அக்கறையே வருகிறது; பத்திரிக்கைகளை படித்து விட்டு, ‘பாருங்க, எப்படி இருந்தாரு, இப்படி கோடிகளை குவித்திருக்காரு...’ என்று புலம்புகிறோம். ஆனால், அப்பாவிகளை தாண்டி ஒரு தனி உலகம், சுரண்டல் உலகம் நம்மை பின்னிப்பிணைந்து இருப்பது பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் பணம் 64 கோடி தான். அதன் விசாரணைக்காக பல ஆண்டுகள் பல புலனாய்வு ஏஜன்சிகளுக்கு, சட்ட செலவோ பத்து மடங்கு. அந்த ஊழலில் கடைசியில் எதுவுமே கண்டுபிடிக்க முடியாதது தான் ‘ஜனநாயகத்தின்’ மிகப்பெரும் தமாஷ்.
அது முதல் எல்லா ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஓசைப்படாமல் ஒரு மெகா ஊழல் நடந்துள்ளது, இந்தியாவின் நெம்பர் 1 பெரிய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில். இங்குள்ள 71 மாவட்டங்களில், பாதிக்கும் மேற்பட்டதில் நடந்த பகல் கொள்ளை இது. ஒரு நாளில் நடந்ததல்ல;

   * ஐந்தாண்டு முழுக்க பிளான் போட்டு நடந்துள்ளது;   ரேஷன் கோதுமை, தானியங்கள் அப்படியே  ‘லபக்’கப்பட்டுள்ளது.
    * 35 மாவட்டங்களில் ரேஷன் உட்பட எந்த திட்டங்களிலும் ஏழைகளுக்கு கோதுமை உட்பட தானியங்கள் வினியோகிக்கப் படவில்லை.
    * பல ஆயிரம் வியாபாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது.
    * ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இதற்கு உடந்தை.
    * வேற்று மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் என்று வெளிநாடுகளுக்கும் கூட நம் ஏழைகளுக்கு போய்ச்சேர வேண்டிய கோதுமை கடத்தப்பட்டுள்ளது.
    ரயில்களில் வந்திறங்கிய மத்திய அரசின் ஒதுக்கீட்டு கோதுமை, அரிசி மூட்டைகள், பைக் முதல் பஸ், லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு போவதற்கு பதில், தனியார்  குடோன்களுக்கு போயுள்ளது.

    ரேஷன் கார்டுகளுக்கு ‘விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்று கூசாமல், பல ஆயிரம் கார்டுகளில், பல மாவட்ட  அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.
இப்படி ஒரு கூட்டுக்கொள்ளையின் ஊழல் சைஸ் என்ன தெரியுமா? இப்போதைக்கு ஐந்து மாவட்டங்களில் மட்டும்  35 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், முதல் கட்ட  விசாரணையில் மட்டுமே இது.  35 மாவட்டங்களில் விசாரணை முடிந்தால் 2,00,00, 00,000,000 ரூபாய் அளவுக்கு அதிகரிக்குமாம். உங்களால் பூஜ்யத்தை தான் எண்ண முடியும். சேர்த்து படியுங்கள், மயக்கம் வரும்.

மக்களுக்கு ஒரே பாதுகாப்பு சபாஷ் நீதித்துறை

நம் ஜனநாயகத்தின் மகத்துவம் சிறப்பானது;  எந்த துறையில் தவறு நடந்தாலும் இன்னொரு துறை காட்டிக்கொடுக்கும் என்பதால் தான் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிகள் டி.பி.சிங், சவுராஸ்யா ஆகிய இருவரும் தங்கள் முன் வந்த வழக்கு விவரத்தை படித்ததும் அதிர்ச்சி  அடைந்தனர். விசாரணை முடிவில் விக்கித்துப் போய் விட்டனர். அவர்கள் சொன்னது: அப்பாவி ஏழை மக்களின் பட்டினிச்சாவை தடுக்க அரசு ஒதுக்கிய பல லட்சம் டன் தானியங்களை உயர் அதிகாரிகளே பகல் கொள்ளை அடித்துள்ளனர். பல மட்டங்களில் திட்டமிட்டு இந்த மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது. கோர்ட் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. யாரையும் சும்மா விடக்கூடாது. கேஸ் போட்டு முழுமையாக விசாரியுங்கள்.

பாகிஸ்தானுக்கும் தாராளம்

‘நாட்டுப்பற்று’ மிக்க இந்த பட்டப்பகல் கொள்ளை அதிகாரிகள், தனியார் கூட்டணியில் பணம் தானே முக்கியம்.  பாகிஸ்தான், நேபாளம், பூடான் என்று பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றுக்கும் கூட, இந்த கொள்ளை ரேஷன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒருவரை கூட விடக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து,  சி.பி.ஐ. முழுவீச்சில் இறங்கி விட்டது. பல ஆயிரம் பேர் சிக்கலாம்; பல ஆயிரம் எப்.ஐ.ஆர்.கள் போடப்படலாம். இந்தியாவில் உணவுப்பொருள் கடத்தல்களில் இப்படி ஒன்று உலகிலேயே எந்த நாட்டிலும் நடந்ததில்லை என்ற அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கத்தான் போகிறது.

யார் அந்த சதுர்வேதி?

விஸ்வநாத் சதுர்வேதி & காங்கிரஸ் கோட்டையான ரே பரேலி தொகுதியை சேர்ந்தவர். காங்., அனுதாபி, உள்ளூர் போலீசில் புகார் தந்தது முதல், நூற்றுக்கணக்கான மனுக்களை அரசுக்கு போட்டுள்ளார்; கோர்ட்டிலும் பல முறை வழக்கு போட்டார். சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்த பின் தான், அலகாபாத் ஐகோர்ட் விழித்துக்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவே சதுர்வேதியின் வெற்றி.

சரக்கு ரயில்களில் ‘ஏற்றுமதி’

ஒரு தனியார் வியாபாரி 122 ரேக்குகள் புக்கிங் செய்துள்ளார். ஒரு ரேக் என்பது ஒரு சரக்கு ரயில் தொடர். இதில், 220 டன் கோதுமை , தானியங்கள் அனுப்ப முடியும். பல மாதங்களுக்கு முன்பே 122 ரேக்குகளை புக் செய்து விட்டார் இவர். ரேஷன் தானியங்கள், மத்திய அரசின் ‘ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன்’ குடோன்களில் இருந்து லாரிகளில் தனியாருக்கு அனுப்பட்டட்டுள்ளது.  ஐந்தாண்டாக இப்படி நடந்துள்ள இத்தனைக்கும் ‘செல்ப்’ என்று போட்டு இவற்றை ரயில்களில் புக்கிங் செய்துள்ளது தான் வேதனை. தன் சொந்த பயன்பாட்டுக்கு என்பதே இதன்  பொருள். இதைக்கூட ரயில்வே அதிகாரிகள் சந்தேகப்படாதது தான் கொடுமை.

5,000  எப்.ஐ.ஆர். போடணும்

சிதாபூர் மாவட்டத்தில்  முதன் முதல் 2005 ல் இந்த விவகாரத்தில் புகை கிளம்பியது. ஊழல் நடந்த மாவட்டங்களில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் என்று கேஸ் போட்டால், 5,000 எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று போலீஸ் கணக்கிட்டுள்ளது.

இப்படித்தான் நடந்தது

ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கவும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு அளிக்கவும் பல லட்சம் டன் கோதுமை, அரிசி தானியங்கள்  மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றை வாங்கி , மாநில அரசு தன் உணவு வழங்கல் துறை மூலம், ரேஷன் கடைகளில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். உ.பி. மாநிலத்தில் பாதிக்கு மேற்பட்ட மாவட்டங்களில் இந்த தானியங்கள், ரேஷன் கார்டுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்களில் ஏழைகளுக்கும் தரப்படவில்லை. ஆனால், விநியோகிக்கப்பட்டதாக ரேஷன் கார்டுகளில், ஏழைகளின் அரசு திட்ட பதிவேட்டில் குறித்து விட்டு, அப்படியே தனியாருக்கு திருப்பப்பட்டுள்ளது. 2001 ல் இருந்து 2005 வரை ஐந்தாண்டுகள், முலாயம் சிங் யாதவ் ஆட்சிக்காலத்தில் தான் இப்படி நடந்துள்ளது. பல லட்சம் டன் கோதுமை, அரிசி, தானியங்கள் வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் முதல் கடைசி பணியாட்கள் வரை சம்பந்தப்பட்டுள்ளதால் வெளியே தெரிய இத்தனை நாளாயிற்று.

எதில் எதில் ‘பகல்கொள்ளை’

கடந்த 2001 முதல் 2005 வரை 71 மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் ஐந்தாண்டாக  அப்படியே தனியாருக்கு டன் கணக்கில்  தாரை வார்க்கப்பட்டுள்ளது.

சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா: வேலைக்கு உணவு வழங்கும் கிராம நல திட்டம் இது. ஏழைகளை  கூலியாக தர வேண்டிய கோதுமை, தானியங்கள் பல லட்சம் டன்கள் கடத்தப்பட்டுள்ளது.

அந்தியோத்ய அன்ன யோஜனா: ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ கோதுமை, அரிசியை முறையே 3, 2 ரூபாய்க்கு வழங்கும் மத்திய அரசின் திட்டம். இதுவும் ஏழைகளுக்கு ஐந்தாண்டாக வழங்கப்படவே இல்லை.

மதிய உணவு திட்டம்: பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு தர மத்திய அரசு , தானியங்களை ஒதுக்குகிறது. இதுவும் ஐந்தாண்டில் எந்த பள்ளிக்கும் போகவில்லை.

ஒரு மாவட்டத்திலேயே 500 கோடி

சிதாபூர் மாவட்டத்தில் 2007ல் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஊழல். ஆறாயிரம் பேர் தொடர்புள்ளதாக 63 எப்.ஐ.ஆர் போடப்பட்டது. இதுவரை 24 மாவட்டங்களில் எவ்வளவு கோடிகள் சுருட்டப்பட்டுள்ளது  என்பதை சி.பி.ஐ.  கண்டுபிடித்துள்ளது.

இன்னும் பத்து மாவட்டங்களில் விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மொத்தமுள்ள 71 மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது

Monday, December 13, 2010

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்