Friday, March 19, 2010

தமிழக பட்ஜெட்:

சென்னை, மார்ச் 19: புதிய கட்டடத்தில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப் பேரவைக் கட்டடத்தை கட்டுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட அனைவருக்கும் பேரவைத் தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.அதன் பிறகு நிதியமைச்சர் க. அன்பழகன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.உரையின் முக்கிய அம்சங்கள்:
  • தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
  • வட்டியில்லாப் பயிர்க்கடன் தொடரும்
  • கரும்பு கொள்முதல் விலை கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550-லிருந்து ரூ. 1650 ஆக உயர்த்தப்படும்
  • நெல் கொள்முதல் விலை உயர்வு: சாதாரண ரக நெல்லுக்கு ரூ.1050, சன்னரக நெல்லுக்கு ரூ.1100
  • சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்
  • இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு ரூ.295 மானியம் கோடி ஒதுக்கீடு
  • இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசுகள்.
  • விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • சோற்றுக்கற்றாழையில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு.
  • பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
  • வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
  • பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் சீரமைக்க ரூ.127.5 கோடி ஒதுக்கீடு.
  • தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு
  • காவிரி ஆற்றில் கதவணை அமைக்க ரூ.103 கோடி ஒதுக்கீடு
  • தமிழக ஆறுகளில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி.
  • நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • ஏரிகளைப் சீரமைக்க ரூ.439 கோடி
  • முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை
  • வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
  • சேது சமுத்திர திட்டப் பணிகளை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு
  • உணவு மானியத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு
  • இலங்கை அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
  • காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2962 கோடி ஒதுக்கீடு.
  • ரூ. 120 கோடி நிதியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்
  • 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
  • பள்ளிக்கல்விக்கு ரூ.10 ஆயிரத்து 148 கோடி ஒதுக்கீடு.
  • 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச அகராதிகள் வழங்கப்படும்
  • 1 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
  • மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
  • அரசுக் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து.
  • வர்த்தகச் சின்னம் இடப்படாத காபித்தூளுக்கு வரிக் குறைப்பு
  • பெயிண்ட் பிரஷுக்கு வரிக் குறைப்பு
  • சென்னை வெளிவட்டச் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
  • கோவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கு வெளிவட்டச் சாலை ரூ. 284 கோடி செலவில் 4 வழிச் சாலையாக 26 கி.மீ.தூரத்துக்கு பொதுத்துறை சார்பில் அமைக்கப்படும்.
  • கோவை - மேட்டுப் பாளையம் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும்
  • கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
  • கோவை தொழில்நுட்பப் பூங்கா பணிகள் மே மாதத்தில் நிறைவடையும்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
  • மேலும் புதிதாக 36 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
  • மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து
  • மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு
  • மனநோயாளிகளைப் பராமரிக்கும் மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி.
  • புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • திருவண்ணாமலையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
  • மாற்றுத் திறனுடையோருக்கென தனித்துறை முதல்வர் கருணாநிதி தலைமையில் செயல்படும்.
  • மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.200-ல் இருந்து 450-ஆக உயர்வு.
  • சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
  • பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க உதவி செய்வதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு
  • தையல் பொருள்களுக்கு வரிக்குறைப்பு.
  • தேனியில் ரூ. 10 கோடி செலவில் சிறப்பு மனநலை மருத்துவமனை அமைக்கப்படும்.
  • கர்ப்பிணிகளுக்கு அயோடின் கலந்த உப்பு இலவசம்.
  • தியாகி வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணி மண்டபம்.
  • விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணி மண்டபம்.
  • விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நெல்லையில் மணி மண்டபம்.
  • கோவையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்
  • எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
  • அரவானிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.2010 -11 நிதிநிலை மதிப்பீடு மொத்த வருவாய் - ரூ. 63,091.74 கோடிமொத்தச் செலவு - ரூ. 66,488.19 கோடிபற்றாக்குறை - ரூ. 3,396.45 கோடி

Thursday, March 18, 2010

கள்ளோ, மதுவோ... இரண்டுமே குடிப்போரின் மூளையைச் சிறிதுசிறிதாக மழுங்கடிக்கச் செய்பவை !!

ரசாயனப் பொருள்கள் நிரம்பிய மதுவைவிட, இயற்கை பானமான கள்ளால் மனிதனுக்குக் கேடொன்றும் இல்லை என்பதால் கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும் என தமிழகத்தில் இப்போது குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், கள் விற்க அனுமதித்தால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்துவிடும் என்பதால் கள்ளை அனுமதிக்க முடியாது என கரிசனத்துடன் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள்.

அது என்ன ரகசியமோ, கள் மீது ஒட்டாத ஆட்சியாளர்களின் உள்ளம், மது மீது ஒட்டிக் கொள்கிறது. கள் என்றால் உதடுகள் ஒட்டாது; மது என்றால்தான் (ஆட்சியாளர்களின் உள்ளம் மட்டுமல்ல,) உதடுகள்கூட ஒட்டுகின்றனபோலும். ஆனால், கள்ளோ, மதுவோ... இரண்டுமே குடிப்போரின் மூளையைச் சிறிதுசிறிதாக மழுங்கடிக்கச் செய்பவை என்னும்போது அவை இரண்டுமே தேவையற்றதுதான்.

விஷத்தில் நல்ல விஷம் என்றும் தீய விஷம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது தகுமோ? விபத்தைத் தடுக்கும் நோக்கில், பஸ் ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளது அரசு. மீறி கொண்டு செல்வோருக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் விபத்துகளை ஏற்படுத்தி, சமகால சமுதாயத்தைச் சீரழித்து, ஒன்றல்ல பல தலைமுறைகளைத் தள்ளாட வைக்கும் எனத் தெரிந்தும், மதுக்கடைகளை வீதிகள்தோறும் திறந்து விற்பனையின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு யார் விதிப்பது அபராதமும், தண்டனையும்?÷கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை வலியுறுத்தினார் பேரறிஞர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் தலைவர்களால் தமிழகத்தில் மதுவிற்பனைதான் பெருகி வருகிறது. இதனால், இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றனர்.

கண்ணியத்தையும் மறக்கின்றனர்; வீட்டுக்கும் நாட்டுக்கும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையையும் கைகழுவுகின்றனர். கடந்த கால ஆட்சிகளில் தொடங்கப்பட்ட பல நல்ல திட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து வரும் அரசுகள் அந்தத் திட்டங்களை சில வேளைகளில் கண்டுகொள்வதில்லை. ஆனால் மதி விலக்கும் மதுவுக்கு மட்டும் விதிவிலக்கு.

அரசுகள் மாறினாலும், மதுவின் ஆட்சி மாறாதது. இலவசத் திட்டங்கள் வேண்டும் என அரசுகளிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுப்பதில்லை. வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே தேர்தலின்போது இலவசத் திட்டங்கள் குறித்து கவர்ச்சிகர அறிவிப்புகளை கட்சித் தலைவர்கள் வெளியிடுகின்றனர். வாக்காளர்களும் விளக்கில் விழுந்த விட்டிலாய் அந்த அறிவிப்புகளில் மயங்கி வாக்களிக்கின்றனர். விளைவு, அந்தக் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்ததும், வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை இலவசத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாக அரசுகள் கூறுகின்றன. ஆனால், இந்த இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்கள் குடிமகன்களாக மாற்றப்படுகின்றனர்.

குடும்பத் தலைவனைக் குடிக்கச் செய்து குடும்பத்துக்கு இலவசங்கள் வேண்டும் என யார் கேட்டது? மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர் உள்ளிட்ட அன்றைய தலைவர்கள் மது தீது எனக்கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்தினர். இன்றைய ஆட்சியாளர்களோ மதுபானங்களால் கஜானா நிரம்பி வழிவதைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர்.

மதி (அறிவு) என்ற வெள்ளி முளைத்து, மது என்ற சனி தொலைந்தால்தான் நிம்மதி என்ற ஞாயிறு பிறக்கும் என்பது ஆட்சியாளர்கள் அறியாததா? குடிப்பழக்கம் உள்ள குடும்பத் தலைவன் ஒருவன் தினமும் சராசரியாக மதுவால் ரூ. 70-க்கும் மேல் இழக்கிறான் என்றும், ஆண்டுக்கு 300 நாள்களுக்கு அவன் குடிப்பதாகவும் கணக்கிட்டுப் பார்த்தால் ஓராண்டுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் அவன் இழக்கிறான். ஆக, இத் தொகையை அவன், அறியாதவண்ணம் அவனது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொள்ளும் அரசு, அவன் குடும்பத்துக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்பு, வேட்டி, சேலைகளை வழங்குவதாகக் கூறுகிறது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மக்களைக் குடியிலிருந்து தடுத்தால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே, உடனடியாக இல்லையென்றாலும் காலப்போக்கிலாவது நிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மைதானே! தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையும் ஓராண்டில் உணவு, மருந்துக்காகச் செலவிடும் தொகையுடன் ஒப்பிட்டால் மது குடிக்கச் செலவிடும் தொகையே அதிகமாக உள்ளதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும்.

இலவசத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படும் நிலையும் மாற வேண்டும். மது வாங்கும் சக்தியை மக்களிடம் அதிகரிப்பதை அரசு கைவிட்டு, வாழ்வை வளப்படுத்தவும், வசப்படுத்தவும் ஏற்றவகையில் பொருள்களை வாங்கும் சக்தியை அதிகரிக்க மக்களைத் தயார்படுத்த வேண்டும். உழைத்துச் சம்பாதித்த தொகை முழுவதையும் குடித்தே அழிக்கும் தன்னால்தான், தன் குடும்பம் ஒரு ரூபாய் அரிசிக்கும், ஒரு வேட்டி, சேலைக்கும் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறது என்பதை ஏழைக் குடிமகன்களும் யோசித்துப் பார்க்க வேண்டும்.÷பொதுநலம் விரும்பும் அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்.

மது விற்கும் அரசு உள்ளவரை மக்கள் வறுமைப் பிணியிலிருந்து மீளுதல் என்பது மிகக் கடினமே. குடும்ப மானத்தைக் குடிக்கும் மதுவை இனி தான் குடிப்பதில்லை என குடிமக்களும், மதுவால் வரும் வருமானம் பாவத்தின் பலன் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியாளர்களும் தீர்மானமாய் கொண்டால் இலவசங்கள் தேவைப்படாது. மதுக்கடைகள் மற்றும் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகளைக் கண்டு மனம் வெறுத்து டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற வலியுறுத்தியும், மதுவை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் தற்போது பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுவதாக வரும் பத்திரிகைச் செய்திகள் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏனோ? பகுத்தறிவுச் சிந்தனையில் பழுத்த பழமாகி, மூட நம்பிக்கைகளை முற்றும் வெறுப்பவர் தமிழக முதல்வர்.

ஆனால், மதுவால் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளில் தேடலாம் என உறுதி கொண்டு, மதுக்கடைகளை நிரந்தரமாக மூட, நம்பிக்கை கொள்வார் எனில், அவரை பல கோடி ஏழை இதயங்கள் வாழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Sunday, March 14, 2010

உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

லண்டன்:உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க... இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், "ஸ்டிக்கர்' வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, "ஸ்கின்புட்' என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, "சிப்'பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.