-
Friday, July 23, 2010
விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
Thursday, July 22, 2010
செவ்வாய்க்குச் செல்ல கூண்டுக்குள் 520 நாள்
ஜூன் மாத முதல் வாரத்தில் ஆறு பேர் செவ்வாய் கிரகத்துக்குப் பயணம் கிளம்பினர். ஆனால், ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அவர்கள் இன்னும் தரையில்தான் இருக்கிறார்கள். அதுவும் ஒரு கூண்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். ஏன் என்ன ஆயிற்று?
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த ஆறு பேரும் மேற்கொண்டுள்ள பயணம் பாவனையான ஒரு பயணமே. இது ஒருவகையான ஒத்திகை. அதாவது, இவர்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கூண்டுக்குள் புகுந்துள்ளனர். இந்தக் கூண்டுக்குள் அவர்கள் 520 நாள்கள் தங்கியிருப்பர். அதென்ன 520 நாள்கள் கணக்கு?
செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வருவதற்குக் குறைந்தது அவ்வளவு நாள்கள் ஆகும். ஆகவே, அவர்கள் ஆறு பேரும் அவ்வளவு நாள்கள் கூண்டுக்குள் இருப்பார்கள். அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு உண்மையில் செல்வதானால் எவ்விதமான பணிகளைச் செய்ய வேண்டுமோ அவ்விதமான பணிகளைச் செய்வர். அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்? எவ்விதம் ஒருவருடன் ஒருவர் பழகுகிறார்கள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். அந்த நோக்கில்தான் இந்த ஏற்பாடு.
ரஷியாவில் மாஸ்கோ நகருக்கு அருகே புறநகர்ப் பகுதியில் விசேஷ ஆராய்ச்சிக் கூடம் உள்ளது. அங்கு தான் இந்த செவ்வாய் பயணக் கூண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சாப்பாடு, தூக்கம், பணி, ஆராய்ச்சி என எல்லாமே இந்தக் கூண்டுக்குள்தான். ஜூன் 4-ம் தேதி இந்த ஆறு பேரும் உள்ளே நுழைந்த பின் சாத்தப்பட்ட கதவு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம்தான் திறக்கப்படும்.
மனிதன் சந்திரனுக்குச் சென்றபோது இப்படியெல்லாம் ஒத்திகை நடந்ததா? செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கு மட்டும் ஏன் இப்படி விசேஷ ஒத்திகை என்று கேட்கலாம். சந்திரன் ஒரு பங்களாவின் காம்பவுண்டுக்குள் இருக்கிற அவுட் ஹவுஸ் மாதிரி. பூமியிலிருந்து சந்திரன் சராசரியாக 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தூரம் எப்போதுமே பெரிதாக வித்தியாசப்படுவதில்லை. பூமியிலிருந்து ராக்கெட் மூலம் கிளம்பினால் நான்கு நாள்களில் சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால், செவ்வாய் கிரகம் அப்படியானது அல்ல.
1969-ம் ஆண்டில் மனிதன் சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் செவ்வாய்க்கு மனிதன் செல்வது என்பது இன்னும் ஏட்டளவில்தான் உள்ளது. நிதிப் பிரச்னை உள்பட அதற்குப் பல காரணங்கள் உண்டு.
செவ்வாய் கிரகத்தை நமது பக்கத்து வீடு என்றும் வர்ணிக்கலாம். சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகம் பூமிக்கு அடுத்த வட்டத்தில் அமைந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. பக்கத்துக் கிரகம் என்றாலும் பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் குறைந்தது 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் மூலம் போய்ச் சேர குறைந்தது 8 மாதங்கள் ஆகும். செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேர்ந்த பின் சில காரணங்களால் அங்கு கட்டாயம் சில மாதம் தங்கியாக வேண்டும். அங்கு 4 மாதங்கள் தங்குவதாக வைத்துக் கொள்வோம். பிறகு அங்கிருந்து பூமிக்குத் திரும்ப மேலும் 8 மாத காலப் பயணம். ஆக, செவ்வாய்க்குப் போய்விட்டுத் திரும்ப மொத்தம் 20 மாதங்கள் ஆகிவிடலாம்.
சந்திரனுக்குக் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போய்விட்டு வந்து விடலாம். ஆனால், செவ்வாய்க்குப் போவதானால் உணவு, காற்று, தண்ணீர் ஆகியவற்றைக் குறைந்தது எட்டு மாதகாலம் தாக்குப் பிடிக்கிற அளவுக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். எனினும், அங்கு போய் இறங்கிய பின்னர் அங்கு தங்குவதற்கான 4 மாத காலத்துக்கும், திரும்பி வருவதற்கான எட்டு மாதக் காலத்துக்கும் தேவைப்படுகிற உணவையும் இதர பொருள்களையும் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பி வைப்பதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியலாம்.
ஆனால், செவ்வாய்க்குப் போய்ச் சேருவதற்கான நான்கு மாதப் பயணத்தின் போது முக்கியமாக மூன்று பிரச்னைகளைச் சமாளித்தாக வேண்டும். முதல் பிரச்னை விண்வெளியில் உள்ள எடையற்ற நிலைமை. அதாவது, விண்வெளியில் ஈர்ப்பு சக்தி அவ்வளவாக இல்லாத நிலைமை.
செவ்வாய்க்குச் செல்லும் விண்கலத்தில் 6 பேர் செல்வதாக வைத்துக் கொண்டால் இந்த 6 பேரும் பல மாத காலம் எடையற்ற நிலைக்கு ஆளாவர். அதாவது, விண்கலத்துக்குள்ளாக அந்தரத்தில் மிதப்பர். கால்களுக்கு வேலையே இராது. இதனால் கால்கள் சூம்பிவிடும். செவ்வாயில் அவர்கள் போய் இறங்கும்போது அவர்களால் காலை ஊன்றி நிற்க முடியாது.
பூமியைச் சுற்றுகிற விண்கலத்தில் பல நாள்கள் தங்கிவிட்டு பூமிக்குத் திரும்புகிற விண்வெளி வீரர்களில் பலரை ஸ்ட்ரெட்சரில் தூக்கி வரவேண்டிய நிலைமை கடந்த காலத்தில் பல தடவை ஏற்பட்டுள்ளது. ஆனால், செவ்வாய்க்குச் செல்லும் விண்கலம் தனது பயணத்தின்போது நிமிஷத்துக்கு சில தடவை தனது அச்சில் சுழலும்படி செய்தால் ஓரளவுக்குச் செயற்கையான ஈர்ப்பு சக்தி உண்டாக்கப்படும். இதன் மூலம் இப் பிரச்னை சமாளிக்கப்படலாம்.
இரண்டாவது பிரச்னை - சூரியனிலிருந்தும் மற்றும் நட்சத்திரங்களிலிருந்தும் வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு. விண்கலத்துக்குள் இருக்கிற விண்வெளி வீரர்களை இக் கதிர்வீச்சு பாதிக்காதபடி தக்க ஏற்பாடுகளைச் செய்ய இயலும்.
மூன்றாவது பிரச்னை - மனோ நிலைமை. செவ்வாய்க்குச் செல்கிற விண்கலத்தில் 6 விண்வெளி வீரர்கள் சுமார் எட்டு மாத காலம் ஒரே இடத்தில் அடைந்து கிடக்கும்போது மன நிலைமை பாதிக்கப்படலாம்.
சந்திரனுக்குச் செல்ல சுமார் நான்கு நாள்களே ஆகியதால் சந்திரனுக்கான பயணத்தின்போது விண்வெளி வீரர்களின் மனோ நிலை பாதிக்கப்படுகிற பிரச்னை ஏற்படவில்லை. தவிர, சந்திரனுக்குச் செல்லும்போது விண்கலத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் எந்த நேரத்திலும் பூமி பெரிய உருண்டையாகத் தெரிந்தது. ஆனால், செவ்வாய்க்குப் பயணம் கிளம்பிய பின்னர் ஒரு கட்டத்தில் பூமியானது வெறும் புள்ளியாகத்தான் தெரியும்.
இரவில் வாய்ப்பான சமயத்தில் நீங்கள் செவ்வாய் கிரகத்தைப் பார்த்தால் அது சிறிய சிவந்த ஒளிப்புள்ளியாகத் தெரியும்.
அதேபோல செவ்வாயிலிருந்து பார்த்தால் பூமி வெறும் நீலநிறப் புள்ளியாகத்தான் தெரியும். இது விண்வெளி வீரர்களின் மனதில் தனிமை உணர்வையும் கிலேசத்தையும் உண்டாக்கலாம். திடீரென்று விண்கலத்தில் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டால் பூமிக்குத் திரும்ப முடியாமல் போய் விடுமோ என்ற பய உணர்வு எப்போதும் மனதில் மேலோங்கி நிற்கும்.
செவ்வாய்க்கு விண்கலத்தில் செல்லும் விண்வெளி வீரர்களின் மனோ நிலைமை எவ்விதமாக இருக்கும்? அவர்களால் ஒன்றுபட்டு பணியாற்ற இயலுமா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காணவே கூண்டுக்குள் ஆறு பேரை அடைத்து வைத்துச் சோதனை நடத்தப்படுகிறது. இவர்கள் ஆறு பேரும் தாங்களாகத்தான் இப் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளனர்.
சுமார் 6,000 பேர் விண்ணப்பித்ததில் இந்த 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனினும், இவர்களில் யாரேனும் ஒருவருக்கு உள்ளே இருக்கப் பிடிக்கவில்லை என்றால், எந்த நேரத்திலும் வெளியே வந்து விடலாம். வெற்றிகரமாக உள்ளே 520 நாள்கள் தங்கிப் பணியாற்றிவிட்டு வெளியே வந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 40 லட்சம் பணம் கிடைக்கும்.
இக் கூண்டுக்குள்ளாக ஒன்றரை ஆண்டுக்குத் தேவையான உணவு, மருந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து அவசியமானால் தண்ணீர், ஓரளவு காற்று, மின்சாரம் ஆகியவை மட்டுமே சப்ளை செய்யப்படும். கூண்டுக்குள் டிவி வசதி கிடையாது. ஆனால், உள்ளே இருப்பவர்கள் யாருடன் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பேசலாம், ஆனால், இதில் வேண்டுமென்றே ஒரு விசித்திர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளே இருப்பவரில் ஒருவர் தொலைபேசியை எடுத்து ஹலோ என்று சொன்னால் வெளியே இருப்பவர்களின் தொலைபேசியில் 20 நிமிஷம் கழித்துத்தான் மணி அடிக்கும். ஹலோ சத்தம் கேட்கும். வெளியே தொலைபேசியை எடுப்பவர் ஏதாவது பதில் கூறினால் அது உள்ளே இருப்பவருக்குப் போய்ச் சேர அதேபோல 20 நிமிஷம் ஆகும். செவ்வாய் கிரகம் பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் செவ்வாய்க்குச் செல்பவர் அங்கிருந்து பேசினால் சிக்னல்கள் வடிவில் அவரது குரல் பூமிக்கு வந்து சேர 20 நிமிஷம் ஆகும். ஆகவே தான் கூண்டுக்குள் இப்படி ஓர் ஏற்பாடு. .
இப்போது கூண்டுக்குள் இருப்பவர்கள் பின்னர் செவ்வாய்க்குச் செல்ல வாய்ப்பில்லை. எனினும், இந்த ஆறு பேரின் அனுபவம் பின்னர் செவ்வாய்க்கான விண்வெளி வீரர்களைத் தயார்படுத்த உதவும். அவ்வளவுதான். இந்த ஒத்திகையை வைத்து ஏதோ இப்போது செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப ஏற்பாடு நடப்பதாக நினைத்தால் தவறு. செவ்வாய்க்கு அமெரிக்கா ஆளில்லா விண்கலங்கள் பலவற்றை அனுப்பியுள்ளது என்றாலும், மனிதனை அனுப்ப இன்னும் நிறைய ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டியுள்ளது.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவிட்டு வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகளில் மனிதனை அனுப்ப முடியலாம் என்று கடந்த ஏப்ரலில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். அதற்கு சில ஆண்டுகள் கழித்து மனிதன் செவ்வாயில் இறங்க முடியலாம் என்றும் அவர் சொன்னார். ஆகவே, செவ்வாய்க்கு மனிதன் செல்வதற்கு இன்னும் இரண்டு மகாமகம் (24 ஆண்டுகள் )ஆகலாம்.
Tuesday, July 20, 2010
இவர்கள் அவர்கள் அல்லவே..!
லால்பகதூர் சாஸ்திரி என்றொரு மாமனிதர் இந்திய அரசியலில் பல்வேறு தியாகங்களைப் புரிந்து தனக்கென இடம் பிடித்தவர். முன்னாள் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1951 முதல் 1956 வரை பணியாற்றியவர்.
1956-ல் மகபூப் நகர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பெரிய ரயில் விபத்து இதுதான். விபத்தைத் தொடர்ந்து, அந்தத் தவறுக்கும் உயிரிழப்புக்கும் தார்மிகப் பொறுப்பு ஏற்றுத் தனது பதவியைத் துறக்க முன்வந்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
அடுத்த மூன்றாவது மாதமே, 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இன்னொரு பயங்கரமான ரயில் விபத்தை இந்தியா சந்திக்க நேர்ந்தது. அரியலூர் பாலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 129 பேர் இறந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த முறை, இனியும் அமைச்சராகத் தான் தொடர்வது சரியல்ல என்று லால்பகதூர் சாஸ்திரி தீர்மானமாகச் சொன்னபோது, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சொன்ன வார்த்தைகள், இன்றைய ஆட்சியாளர்கள் அனைவருக்குமே பாடமாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
""எங்கேயோ நடந்த தவறுக்கு, அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஏன் ராஜிநாமா செய்து பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தார்மிகப் பொறுப்பேற்கும்போதுதான், அவரது தலைமையில் இயங்கும் அத்தனை பேருமே பொறுப்புடன் செயல்படுவார்கள். நாம் குடிமக்களின் நலனுக்காகப் பதவி வகிப்பவர்கள். அவர்களது நலனைப் பாதுகாக்க அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். இதை மனதில் கொண்டு, தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்கும் லால்பகதூர் சாஸ்திரியின் முடிவு, வருங்கால சுதந்திர இந்தியாவில் பதவிக்கு வரும் மக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமையும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு தந்த விளக்கத்தை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை அடைவதில் அர்த்தம் இல்லை. காரணம்,இவர்கள் அவர்கள் அல்லவே!
கடந்த மே மாதம் 28-ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் 146 உயிர்கள் பலியானபோது, அது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதிச் செயல் என்பது ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகத் தெரிந்தது. இதோ, திங்கள்கிழமை மீண்டும் கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. தூரத்திலுள்ள சைந்தியா ரயில் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்து நிச்சயமாக எந்தத் தீவிரவாதப் பின்னணியும் இல்லாதது என்பதும் தெள்ளத் தெளிவு.
சைந்தியா ரயில் நிலையத்திலிருந்து வனாஞ்சல் விரைவு ரயில் அப்போதுதான் புறப்படுகிறது. அந்தநேரத்தில், சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் அதே தண்டவாளத்தில் விரைந்து வந்து, வனாஞ்சல் விரைவு ரயிலில் மோதுகிறது.
இரவு நேரம். எல்லோரும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். நமது இந்திய அரசின் பார்வையில், வசதி இல்லாத, முன்பதிவு செய்யாத, செய்ய வழியில்லாத பராரி ஏழைகள் மனிதர்களே அல்லவே. அவர்களை நாம் இந்தியக் குடிமக்களாகக் கருதுவதே கிடையாதே. அதனால்தானே, ரயில் எஞ்சினுக்கு அருகே உள்ள முதல் மூன்று பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளாக இணைக்கப்படுகின்றன. எந்த விபத்து ஏற்பட்டாலும் முதல் பலி, இவர்களாகத்தான் இருக்கும்.
தூங்கி வழிந்து கொண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடைந்து கிடந்த சாதாரண இந்தியக் குடிமக்களை மரணம் எதிர்பாராதவிதமாகத் தாக்கியதன் பின்னணியில் இருந்தது சதியல்ல. பொறுப்பற்ற தனம்.
ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில்தான் பயணிக்க முடியும். அப்படியானால், தூக்கக் கலக்கத்தில் உத்தர் பங்கா விரைவு ரயில் வருவதை எதிர்பார்த்து முறையாக சிக்னலைப் போடாமல் விட்டு விட்டார்களா? இல்லை, சிக்னல் இருப்பதைக் கவனிக்காமல் உத்தர் பங்கா விரைவு ரயிலின் ஓட்டுநர் அதே தண்டவாளத்தில் வந்துவிட்டாரா? சிக்னல் போடப்பட்டிருந்தால் தண்டவாளம் தானாகவே இன்னொரு நடைமேடைக்கு உத்தர் பங்கா ரயிலைத் திருப்பிவிட்டிருக்க வேண்டுமே, ஏன் அப்படிச் செய்யவில்லை?
அதெல்லாம் போகட்டும். சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் மெதுவாகத்தானே நுழைந்திருக்க வேண்டும். விரைவாக வந்ததன் காரணம் ரயிலில் ஓட்டுநர் தூங்கி விட்டதாலா? இதற்குப் பதில் சொல்ல அந்த ஓட்டுநர் இப்போது உயிருடன் இல்லை.
ரயில்வே லாபத்தில் ஓடுகிறது என்று பெருமை தட்டிக் கொள்ளும் ரயில்வே நிர்வாகம், மிக அதிகமான அளவில் எல்லா ரயில்களிலும் பெட்டிகளை அதிகரித்திருக்கிறது. எல்லா தடங்களிலும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, தண்டவாளங்களின் தரமும் (க்வாலிடி), பலமும் (ஸ்ட்ரென்க்த்), சக்தியும் (பவர்) அதிகரித்திருக்கிறதா என்பது சந்தேகமே.
பழைய தண்டவாளங்களில், பழைய தொழில்நுட்பங்களுடன் கணக்கு வழக்கில்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து லாபம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதன் விளைவுதான் இத்தனை விபத்துகள் என்று ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எச்சரிப்பது கேட்கிறது.
கடந்த பத்து மாதங்களில் இதுவரை 14 ரயில் விபத்துகள் நடந்தேறிவிட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி விட்டன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேரமில்லை. அவருக்கு மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, முதல்வர் பதவியில் அமர்வது மட்டும்தான் ஒரே குறிக்கோள். இந்த ரயில் விபத்தைக்கூட மேற்குவங்க அரசின் கையாலாகாத்தனம் என்று அவர் வர்ணிக்க முற்படலாம்.
மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய இன்னொரு லால்பகதூர் சாஸ்திரியும் அல்ல; மன்மோகன் சிங் அதை ஏற்றுக்கொள்ள பண்டித ஜவாஹர்லால் நேருவும் அல்ல. இன்றைய இந்தியா, அன்றைய தலைவர்கள் கண்ட கனவும் அல்ல!
Monday, July 19, 2010
நீண்டநேர விளையாட்டு: கின்னஸ்க்காக சிறுவன் சாதனை
வத்திராயிருப்பு : கின்னஸ் சாதனைக்காக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா உலகின் நீண்ட நேரம் இயங்கும் "கம்ப்யூட்டர் கேம்' உருவாக்கியுள்ளான்.
வத்திராயிருப்பில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன். தாயார் ஆக்னெலின் இடைநிலை ஆசிரியை. இவர்கள், மகனின் ஆர்வத்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட்டனர். தனது திறமையால் சி ப்ளஸ், விசுவல் பேசிக், லாங்வேஜ் வரை விரைவில் கற்றான். 2010 பிப்ரவரியில் கின்னஸ் சாதனைக்காக புதிய சாப்ட்வேர்களையும், அதில் எட்டு "கேம்'களை வடிவமைத்தான். இவை கின்னஸ் அமைப்பின் முதல்கட்ட தேர்வில் தேர்வாகி அடுத்தகட்ட பரிசீலனையில் உள்ளது. அடுத்த சாதனையாக உலகிலேயே மிக நீண்ட நேரம் இயங்கக்கூடிய "பவர் மைண்ட்' என்ற கேம் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளான். இதுகுறித்து நேற்று வத்திராயிருப்பில் பலர் முன்னிலையில் விவரித்தான்.
டெனித் ஆதித்யா கூறியதாவது: இது ஞாபக சக்தியை வளர்க்கும் "நியூமெரிக்கல் கேம் சாப்ட்வேர்'. பொழுதுபோக்கு "கேம்'களில் அதிகபட்சம் "10 ஸ்டேஜ்' வரை இருக்கும். நான் வடிவமைத்தது 570 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாடக்கூடியது. இதன் மொத்த அளவு "52 கேபி' மட்டுமே, என்றான்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம் - தீரஜ் கமலேஷ்வர்-அறிவியல் கட்டுரை
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது, அவை பல ஆயிரம் கி.மீ., தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து, இலக்கை அடைகின்றன.
"பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது...' என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள், சக்தி பெற, "பெர்ரி' பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன...' என்று, ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.
பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது, இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது, பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:
மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட, ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான், பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால், எந்த அளவு சக்தி கிடைக்குமோ, அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன.
இவ்வாறு நவீன்டிராசீரம் கூறி யுள்ளார்.
பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன
Subscribe to:
Posts (Atom)