skip to main |
skip to sidebar
வாஷிங்டன்: இந்தியா சுதந்திர அடைந்த பின்னர், 1948ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை ஊழல், வரி ஏய்ப்பு, லஞ்சம் உள்ளிட்ட செயல்களால் ரூ.23 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல குளோபல் பைனான்ஸ் இன்டெகெரிட்டி என்று அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இதனை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய வெளிநாட்டு கடன் (ரூ. 11லட்சத்து 50ஆயிரம் கோடியை விட இரண்டு மடங்கு ஆகும். மேலும் இந்தியாவின் மொத்த கருப்பு பணத்தில் சுமார் 72 சதவீதம் வெளிநாடுகளில் கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான, மத்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை நேற்று அமளியின் நடுவே பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 77 பக்கங்களை கொண்டிருந்த இந்த அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, விதிமுறைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பது புட்டுபுட்டு வைக்கப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்திய மத்திய ஆடிட்டர் ஜெனரல் (கேக்), தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடம் சமீபத்தில் அளித்து இருந்தார்.
இது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் ராஜாவும் மக்களுக்கு சேவை செய்த பெருமையைக் கூறி ராஜினாமா செய்ய நேரிட்டது.
இந்நிலையில், சி.ஏ.ஜி., அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது.லோக்சபாவில் இந்த அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேற்று தாக்கல் செய்தார். ராஜ்யசபாவில், நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவால் தாக்கல் செய்தார்.
மொத்தம் 77 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தரப்பட்ட விதம், விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு தீவிர கண்காணிப்பு தேவை. அதற்கான பணியைத்தான் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சி.ஏ.ஜி., அறிக்கையில் முழு விவரங்களை குறிப்பிட்டு, பின்குறிப்பாக ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு போல், வேறு எந்த அமைச்சகத்திலோ, அரசின் வேறு துறையிலோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அறிக்கையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி வளைத்துள்ளார். பிரதமரின் ஆலோசனையையும் பொருட்படுத்தவில்லை, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை கேட்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான்,
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன.
* இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.
*"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை. மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன. இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.
* வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையும் ராஜா பொருட்படுத்தவில்லை.
* தகவல் தொடர்புத்துறை ஆணையத்தின்(டிராய்)வழிகாட்டு நெறிமுறையின் படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில்,"டிராய்' கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது. அவ்வாறு கேபினட் முடிவை மீறும் போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும் இங்கே பின்பற்றப்படவில்லை.
* எவ்வித அனுபவமும் இல்லாத, "ஸ்வான்' நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.
* இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.
* வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.
*கடந்த 2001ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் "3ஜி' ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி முதல் 37 ஆயிரம் கோடி வரை கொடுத்துள்ளனர்.
* தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்) தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப லைசென்ஸ் 35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.
* ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை பெற 1,661 கோடி ரூபாய் மட்டுமே "யூனிடெக்' கட்டியிருந்தது. லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம்: ஒரு பார்வை*"2ஜி' லைசென்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அக்கறையின்றி அள்ளிவீசப்பட்டுள்ளது.
*விதிமுறைகள் வளைக்கப்பட்டுள்ளன; எவ்வித நடைமுறையோ, ஒழுங்குமுறையே பின்பற்றப்படவில்லை
* வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக, கடைசி தேதி முன்தேதியிடப்பட்டுள்ளது.
*மொத்தத்தில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட அமைச்சர் ராஜாவின் வெளிப்படையில்லாத அணுகுமுறை காரணமாயிருக்கிறது. மேலும், அவர் அள்ளி வழங்கிய சலுகையில், டேடா காம் ( தற்போது வீடியோகான்). எஸ்-டெல், ஸ்வான் அண்ட் லூப் டெலிகாம் ஆகிய தொழிலமைப்புகளுக்கு 2008ல் லைசென்ஸ் தரப்பட்டிருக்கிறது,
* பிரதமர் ஆலோசனையை அவர் மீறி இதை வழங்கியிருக்கிறார். சட்டங்களை மீறி, நடைமுறைகளை மீறி "2ஜி' லைசென்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
*ஸ்வான் டெலிகாம் லைசென்ஸ்: ரூ.1,537 கோடிஇந்நிறுவனம் தனது 45 சதவீத பங்கை விற்றதன் மூலம் ரூ.4,200 கோடி பெற்றுள்ளது.
*மொபைல் சந்தாதாரர் நிலவரம்
2001 : 40 லட்சம்
2008 : 35 கோடி
* வருவாய் இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி.
* சில நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது 2008ம் ஆண்டில், விலை நிர்ணயமோ 2001ம் ஆண்டின்படி செய்யப்பட்டது.
* யூனிடெக் ஒயர்லெஸ் லைசென்ஸ்:ரூ.1,661 கோடி.இந்நிறுவனம் 60 சதவீத பங்கை விற்றதன் மூலம் திரட்டிய தொகை: ரூ.6,200 கோடி.
*அரசுக்கு கிடைத்த வருவாய்: "2ஜி': ரூ.10,772 கோடி.
"3ஜி':ரூ. ஒரு லட்சம் கோடி.
Thanks
Dinamalar.