-
Wednesday, January 27, 2010
உற்பத்திக்கு உதவாது
செயல்படுத்துகிறார்களோ இல்லையோ நமது ஆட்சியாளர்கள் நிறையப் பேசுகிறார்கள். அக்கறையுடனும், ஆதங்கத்துடனும் பதவியில் இருப்பவர்கள் கருத்துகளைக் கூறும்போது ஏதோ இதுபற்றிய நினைப்பாவது இவர்களுக்கு இருக்கிறதே என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளத் தோன்றுகிறது.குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிகழ்த்திய குடியரசு தின உரையில், இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு வித்திட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். "உலகளாவிய உணவுப் பற்றாக்குறையும், அதன் விளைவாக உணவுப் பொருள்களின் விலை உயர்வும் கவலை அளிக்கிறது.நாம் உணவுப் பொருள் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, பணப்பயிருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிக அளவில் நமது விவசாயிகளை உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்' என்பது அவரது குடியரசு தின உரையின் முக்கியமான அம்சம்.புதிய தொழில்நுட்பம், தரமான விதைகள், மேம்பட்ட சாகுபடி முறைகள், கடனுதவி போன்றவை விவசாயிகளுக்கு எளிதில் கிடைப்பதற்கான வழிமுறைகளை அரசு போர்க்கால நடவடிக்கையில் செய்து தர வேண்டும் என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் மட்டுமல்ல, பொறுப்புள்ள பதவியில் இருக்கும் பலரும் இதே கருத்துகளை அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால், இதற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டியது யார்? இப்படிப் பேசுபவர்கள்தானே என்பதை நினைக்கும்போது சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.மத்திய வேளாண்துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் சரத் பவார், விலைவாசி உயர்வுக்குக் காரணம் தான் மட்டுமல்ல என்றும், மத்திய அமைச்சரவைக்கும், மாநில அரசுகளுக்கும் இதில் பங்கு உண்டு என்றும் பேசியிருக்கிறார். மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்களுக்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தமே கிடையாது என்று, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு, உணவுப் பொருள்களின் விலை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.விவசாயம் நலிந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு பிழைப்பைத் தேடி அருகிலுள்ள பட்டணங்களுக்குக் குடிபெயர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.விவசாயம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் விவசாயிகளுக்குக் கூலி வேலை செய்ய ஆள்கள் கிடைப்பதில்லை. உடல்நோகாமல் நூறு நாள் வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது, சகதியில் இறங்கி கஷ்டப்பட்டு வேலை பார்த்து அதிக வருமானம் சம்பாதிக்க பலருக்கும் மனமில்லை. வேளாண்மை இல்லாத வறட்சியான பகுதிகளில் மட்டும்தான் கட்டாய வேலைவாய்ப்புத் திட்டம் என்று திட்டவட்டமாக முடிவெடுக்க வாக்கு வங்கி அரசியல் நமது ஆட்சியாளர்களைத் தடுக்கிறது.தேசியக் குற்றப்புள்ளிவிவரத்துறை இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2008-ம் ஆண்டு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவித்த பிறகும் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது அந்தக் குறிப்பு. முந்தைய ஆண்டைவிட 436 பேர் குறைவாகத் தற்கொலை செய்துகொண்டனர், அவ்வளவே!1991-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்புக்கும் இடையில் சுமார் 80 லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்தியிருக்கிறார்கள். 2011-ல் கணக்கெடுக்கும்போது கடந்த 10 ஆண்டுகளில் அதைவிட இரண்டு மடங்கு அதிகம் விவசாயிகள் ஒன்று நிலத்தை விற்றிருப்பார்கள் அல்லது விவசாயம் செய்வதை விட்டிருப்பார்கள்.ஒட்டுமொத்த மக்கள்தொகையில் விவசாயிகள் தற்கொலையின் விழுக்காடு எவ்வளவு என்று கணக்கெடுப்பது தவறு. மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், விவசாயிகளின் எண்ணிக்கையோ குறைந்து வருகிறது. குறைந்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலைகள் எவ்வளவு என்றல்லவா புள்ளிவிவரம் எடுக்கப்பட வேண்டும்.பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிவாரணம் என்ற பெயரில் அரசு வழங்கியதே என்று கேட்கலாம். அரசு வழங்கியது அனைத்துமே வங்கிகளைக் கொழிக்க வைத்தனவேதவிர ஏழை விவசாயிகளை வாழ வைக்கவில்லை. வலது கை கொடுத்ததை இடது கை வாங்கிக் கொண்டது அவ்வளவே.வங்கியில் விவசாயி வாங்கியிருந்த கடனை ரத்து செய்து அந்தப் பணத்தை அரசு வங்கிகளுக்கு அரசே அளித்தது. விவசாயி தனியாரிடம் கந்து வட்டிக்கு வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாமல் தனது நிலத்தை இழந்தான். அடுத்த சாகுபடிக்குப் பணம் இல்லாமல் ஏனைய பல விவசாயிகள், விவசாயம் செய்வதை மறந்தனர். இதுதான் நடந்தது.குடியரசுத் தலைவர் நல்லதொரு எச்சரிக்கையையும் ஆலோசனையையும் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதுபோல போர்க்கால நடவடிக்கையில் விவசாயம் காப்பாற்றப்பட்டே தீர வேண்டும். அதற்கு, முதலில் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தேசிய அளவில் எந்தவித விலக்கும் அனுமதிக்கப்படாமல் தடை செய்யப்பட வேண்டும். கட்டாய வேலைவாய்ப்புத் திட்டம் என்பது தரிசுநிலப் பகுதிகளிலும், வறட்சியான மாவட்டங்களிலும் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.உதட்டளவு அனுதாபம் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க உதவாது!
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.
நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட்டும் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் பாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால்,சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல்.இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும். பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும். அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன. பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது.ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா?சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.
வெறும் சோற்றுக்கோ வந்தது இப்பஞ்சம்
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளே கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வழியறியாது திணறி வருகின்றன. ஆனால் நம் நாட்டின்ஆட்சியாளர்களும், அவர்களுக்கு அனுசரணையான பொருளாதார நிபுணர்களும், இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நடந்தவை எல்லாமே நன்றாகவே நடக்கின்றன; தற்போது நடப்பதும் நல்லதாகவே நடக்கின்றன; இனியும் நல்லதே நடக்கும் என்று கீதோபதேசத்தின் முன்னுரையைப் போலச் சேர்ந்திசை படிக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதத்தை எட்டிப்பிடிக்கும் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை அடைவது எப்படி என்பது கேள்வி என்றும் ஆய்வறிக்கைகளிலும், விவாத அரங்குகளிலும், நாளேடுகளின் பக்கங்களிலும் ஆருடங்களும், கணிப்புகளும் இடம்பெற்று வருகின்றன.÷இவை எல்லாவற்றுக்கும் இடையிலேயே மொத்த விலைவாசிக் குறியீட்டெண்ணை வைத்துக் கணக்கிடப்படுகிற பணவீக்கமே 7 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது என்பதும், உணவுப்பொருள்களின் பணவீக்க விகிதம் 20 சதவிகிதத்தைச் சுற்றியே வட்டமிடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாக முன் நிற்கின்றன.÷பணவீக்கம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக ஏன் பூஜ்யத்துக்கும் கீழாகவே சரிந்து விட்டது என்று சில மாதங்கள் முன்பு வரை பேசப்பட்டதும் உண்டு. அப்போதே மொத்த விலைவாசி, உபயோகிப்போர் விலைவாசி ஆகிய இரண்டு குறியீட்டெண் கணக்கீட்டில் பளிச்செனத் தென்பட்ட வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி, இந்திய ரிசர்வ் வங்கியே நிதியமைச்சகத்தின் பணவீக்க அளவீட்டு முறையில் பாரதூரமான மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தியது. உணவுப்பொருள்கள் உள்ளிட்ட சாதாரண மக்களின் அன்றாட உபயோகத்துக்காக அத்தியாவசியத் தேவைப்பொருள்களின் விலை உயர்வு இன்று மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்பதை, சற்றுக் காலங்கடந்தேனும், நாட்டின் பிரதமரும், உணவுத்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரும் வலியுறுத்தியுள்ளார்.÷நிதி அமைச்சகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையொன்று கடந்த டிசம்பர் மாதத்தில் மக்களவையில் வைக்கப்பட்டது. விலைவாசி உயர்வு குறித்து கண்டுகொள்ளாமலே இருக்கும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை அந்த அறிக்கை சாடியிருக்கிறது. பாஜகவின் முரளி மனோகர் ஜோஷிதான் அந்தக்குழுவின் தலைவர் என்பதால் இந்தச் சாடல் இயல்பானதுதானே என்று தட்டிக் கழித்துவிட முடியாது. ஆளும் கூட்டணியின் எம்.பி.க்கள் பெரும்பான்மையாக இடம்பெற்ற அந்தக்குழுவின் ஏகமனதான சாடல்தான் அது. அந்த அறிக்கை இரண்டு முக்கிய பரிந்துரைகளையும் செய்திருந்தது. ஒன்று, பதுக்கலையும், வர்த்தகச் சூதாட்டத்தையும் தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பது. இரண்டு, அன்றாட உபயோகப் பண்டங்களின் விலைவாசியைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் உணவு விலைக்குறியீட்டெண் என்று தனியாகக் கணக்கெடுத்து வெளியிட வேண்டும் என்பது. இந்த இரண்டு பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு வழக்கம் போலவே மௌனம் சாதித்து வருகிறது.÷பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறி வகைகள், சர்க்கரை என்று வரிசையாக மக்களின் அன்றாட உணவுக்குத் தேவைப்படும் பொருள்களின் விலை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குச் செங்குத்தாக உயர்ந்து கொண்டே போவது சமீபத்திய கசப்பான அனுபவம். இதுவரை இந்த விலைவாசி உயர்வை உடனடியாகத் தடுத்து நிறுத்துவது சாத்தியமல்ல என்று ஈனசுரத்தில் முனகி வந்த உணவு அமைச்சர் சரத் பவார், அடுத்த சில நாள்களுக்குள்ளாகவே விலைவாசி குறையத் தொடங்கும் என்று அருள்வாக்கு நல்கிய பின்னரும், சந்தை நிலவரத்தில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ. 13,000-ஐ தாண்டி வருகிறது என்பது அன்றாட வாழ்க்கைப் பிரச்னை அல்ல என்றாலும், விலைவாசி உயர்வு எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதைக் கண்ணாடி போலக் காட்டுகிற நிகழ்வு.÷இந்த விலைவாசிக் கொடுமையை எதிர்கொள்ள முடியாமல் சாதாரண மக்கள் கையைப் பிசைந்து கவலையோடு நிற்பது சகஜம்தான். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் பொறுப்புமிக்க ஆட்சியாளர்களும் அதேபோலக் கையறுநிலையை வெளிப்படுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையே.÷கடந்த 2009 ஆகஸ்ட் கடைசியில் வெளியான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை நாட்டின் விவசாயத்துறை சந்தித்து வரும் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டியது. 2009-ல் தென்மேற்குப் பருவமழை பெருமளவுக்குப் பொய்த்து விட்டதால், 2008-ம் ஆண்டோடு ஒப்புநோக்குகையில், 2009-ல் நெல் சாகுபடிக்கான விதைப்பே ஐந்தில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய (கோதுமை,நெல்) உற்பத்தியில் 36 சதவிகிதமும், அரிசி உற்பத்தியில் 86 சதவிகிதமும் குறுவை சாகுபடியின் மூலமே பெறப்படுகிறது. இந்தக் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சமாளிக்கத் தொலைநோக்குடனான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை வலியுறுத்தியது மட்டுமன்றி,அவற்றைப் பட்டியலிட்டும் கொடுத்திருந்தது. ஆனால், மத்திய அரசோ அந்த அறிக்கையை நாடாளுமன்ற நூலகத்தில் வைத்துப் பத்திரப்படுத்தியதோடு நின்றுவிட்டது.÷2009 கடைசியில் கோதுமை சாகுபடி விஷயத்தில் என்ன நிலைமை என்று இப்போது சில விவரங்கள் தெரிய வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோதுமை சாகுபடி நடைபெற்று வந்துள்ள நாட்டின் பயிர் நிலங்களின் பரப்பளவு சராசரியாக 2 கோடியே 70 லட்சம் ஹெக்டேர்கள். ஆனால் இந்தப் பரப்பளவில் 2008-ல் 5 லட்சம் ஹெக்டேரும், 2009-ல் 10 லட்சம் ஹெக்டேரும் குறைந்து போயுள்ளது. 10 லட்சம் ஹெக்டேர் பயிரிடுவது குறைந்து போனால், 25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விளைச்சல் பாதிக்கும்÷இது, இந்த ஆண்டு கோதுமை கொள்முதலையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துகள் சாகுபடியிலும் இத்தகைய சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இவை திட்டக்குழுவின் பார்வைக்குக் கூட எடுத்துச் செல்லப்பட்டதாக அறியக்கூடவில்லை. இந்த நிலையில்,கோதுமை வர்த்தகத்தில் ஊக பேரத்தைத் தொடர்ந்து அனுமதித்து வருகிறது மத்திய அரசு. 2009 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான பதினோரு மாதங்களில் மட்டும் விவசாய விளைபொருள்கள் உள்ளிட்ட சரக்கு வர்த்தகத்தில் முன்பேர ஊக வாணிகம் 35 சதவிகிதம் உயர்ந்து சுமார் 63 லட்சம் கோடி ரூபாயாகப் பெருகி நடைபெற்றுள்ளது.÷சர்க்கரை விலை உயர்வுக்கு என்ன காரணம்? நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் அவற்றின் மொத்த உற்பத்தியில் 40 சதவிகிதத்தைப் பொது விநியோகமுறையின் கீழ் வழங்குவதற்காக அரசாங்கத்துக்குக் கட்டாயமாக விற்க வேண்டும் என்று முன்பு இருந்தது. இதை வெறும் 10 சதவிகிதமாகக் குறைத்து விட்ட மத்திய அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகள் 90 சதவிகித உற்பத்தியை வெளிச்சந்தையில் விற்று லாபம் ஈட்ட வசதி செய்து கொடுத்துள்ளது. ஆனால் மத்திய மந்திரி சரத் பவாரோ, இறக்குமதி செய்யப்பட்டுள்ள பழுப்புச் சர்க்கரையைச் சுத்திகரிக்க உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதிக்காததுதான் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார். உ.பி.க்கு வெளியே சர்க்கரை சுத்திகரிப்புக்கு வழியே இல்லாதது போலச் சித்திரிப்பது நேர்மையற்ற நடைமுறை.÷மத்திய அரசின் கையில் கோதுமையும், அரிசியும் சுமார் நாலரைக்கோடி டன்கள் இருப்பாக உள்ளன. இதைப் பொது விநியோக முறையின் கீழ் விற்பனைக்கு விடுவித்தாலே, விலைவாசி உயர்வின் கடுமையைச் சற்றே தணிக்க முடியும். நாங்கள் விடுவிக்கிறோம். ஆனால் மாநில அரசுகள் எடுப்பதில்லை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வருத்தத்தோடு குறைபட்டுக் கொள்கிறார். இதுவும் பாதி உண்மைதான். மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்கிற அரிசியும்,கோதுமையும் பொது விநியோக முறையின்கீழ், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள குடும்பத்துக்கான விலையில் கூட அல்ல, வெளிச்சந்தை விற்பனை விலைக்குத் தருகிறேன் என்கிறது. அதேநேரத்தில் பொது விநியோக முறை விற்பனைக்கான ஒதுக்கீட்டு அளவை வெட்டிச் சுருக்குகிறது.÷உதாரணமாகச் சுட்டிக்காட்ட வேண்டுமானால், கேரள மாநிலத்துக்கு, வறுமைக்கோட்டுக்கு மேலாக உள்ள குடும்பங்களுக்கு கிலோவுக்கு ரூ. 8.90 விலையில் ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரிசியின் அளவை 1,13,000 டன்களிலிருந்து வெறும் 17,000 டன்களாகக் குறைத்துவிட்டு, வெளிச்சந்தை விற்பனை விலையான கிலோ ரூ.17க்கு வாங்கிக்கொள் என்கிறது. இதே அணுகுமுறைதான் மற்ற மாநிலங்களைப் பொறுத்தும்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும் பொது விநியோக விற்பனைக்கான ஒதுக்கீடு அவ்வளவு அதீதமாக வெட்டப்படவில்லை. உணவுப் பொருள்களைப் பதுக்கல்காரர்களிடம் இருந்து கையகப்படுத்தி சந்தை விற்பனைக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. அதை மாநில அரசுகள் செய்வதில்லை என்பதும், இன்றைய மத்திய ஆட்சி சொல்லுகிற குற்றச்சாட்டு. இந்தியாவில் ஒரு தனி நபரோ, நிறுவனமோ எந்த உணவு தானியத்தையும் 50,000 டன் வரை கையிருப்பு வைத்துக் கொண்டால், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அதை அரசுக்குத் தெரிவிக்கக்கூட அவசியமில்லை என்பது ஏற்கெனவே பா.ஜ.க ஆட்சிக்காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கிறபோது, அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், மாநில அரசுகள் பதுக்கலை வெளிக்கொணரவில்லை என்று சொல்வது வெறும் பசப்பே.÷பசி-பட்டினியில் உழல்வோர், ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகள்- கர்ப்பிணிப் பெண்கள், சராசரி உணவு உட்கொள்ளும் அளவு, புரதச்சத்து சேர்க்கை என்று மனித வளர்ச்சிக் குறியீடு சம்பந்தப்பட்ட அனைத்து அளவீடுகளிலும், உலக நாடுகள் வரிசையில் பரிதாபத்துக்குரிய அடிமட்ட நிலையில் இடம்பெற்றுள்ள நாடு இந்தியா.இந்த அவலத்தில் விலைவாசி உயர்வு தறிகெட்டுத் தொடர்கையில் ஆட்சியாளர்கள் சும்மா இருப்பதே சுகம் என்றிருந்தால் என்ன ஆவது? சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப்பஞ்சம் என்று அரற்றி அழ வேண்டியதுதான் நாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள கதி.
Subscribe to:
Posts (Atom)