Thursday, June 17, 2010

கொல்லி மலை


பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள்



கொல்லி மலைஇந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் வட்டத்தில்அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது

தல வரலாறு

* இன்று மக்கள் வழக்கில் "கொல்லிமலை" என்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை.

* 'வல்வில்ஓரி' என்னும் மன்னன் ஆண்ட பகுதி.

* காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

* அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.

* இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

* இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

* இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

* இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

* கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

சிறப்புக்கள்

* இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

* பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது 'அறப்பளீசுவரர்' ஆலயம் உள்ளது.

* இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன; இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

* நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயருமுண்டு.

* ஊர் - பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி - அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.

* அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும்.

* கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக - 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.

* செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.

* தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.

* மலை வாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

* உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.

* கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.

* இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாமக்கல்லிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்குத்தான மலைப்பாதை - 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hair pin bend) கொண்டது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (MINI-BUS) செல்கிறது. அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் உள. இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று.

அருகி வரும் உறவுகள்...


நம் நாட்டில் பெரும்பாலான குடும்பத்தினர் ஓரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதன் காரணமாகவும், உறவினர்களிடமிருந்து விலகிப் போகும் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் உறவுகள் அருகி வருகின்றன.

குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, மைத்துனன் போன்ற உறவுகள் பல உண்டு. காதணி விழாவில் இருந்து, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா என எந்த விசேஷம் என்றாலும்கூட, தாய்மாமன் சீர்வரிசை கொண்டுவந்து தனது உறவின் பலத்தை நிரூபிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது.

ஆனால், இன்று ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பிறப்பதாக எடுத்துக்கொண்டால், அந்தக் குழந்தைக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவு இல்லாமல் ஆகிவிடுகிறது. அது வளர்ந்து பெரியவளாகி, அதற்குத் திருமணமாகி குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு தாய்மாமன், பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா போன்ற உறவுகளும் இல்லாமலே போய்விடுகிறது.

வருங்காலங்களில் இதே நிலை நீடித்தால் தாய்மாமன் உள்ளிட்ட முக்கிய உறவுகள் எல்லாம் பல சந்ததியினருக்குத் தெரியாமலே போய்விடும்.

அண்ணன், தம்பிகளிடையே திருமணமான சில ஆண்டுக்குள்ளே சொத்துகள் பிரிக்கப்படும்போது உறவுகளும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டால், இரு வீட்டிலும் உள்ள சிறு குழந்தைகளுக்கு சித்தப்பா, பெரியப்பா உறவு முறைகளுடன் பழகும் வாய்ப்புகள் இல்லாமலே போய்விடுகிறது.
முன்பெல்லாம் ஓர் இல்லத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அதற்கு முந்தைய நாளே உறவுகள் எல்லாம் கூடி, அந்த வீடே களைகட்டிவிடும். ஆனால், இப்போது உறவுக்குள் உள்ள இடைவெளியாலும், உறவுகளின் குறைபாட்டாலும், நண்பர்களும், உடன் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களும் மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் வருங்காலச் சந்ததியினரிடம் பணம் இருக்கும். பாசம் இருக்காது; பண்பாடு தெரியாது. உறவினர்கள் யாரேனும் அருகிலே இருந்தாலும்கூட அவர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். உறவுமுறைகளும் மறைந்து போய்விடும். நம் கலாசாரம், பண்பாட்டின் அடையாளங்கள் மறைந்து போய்விடும்.

இன்று பழைய அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் காட்சிப் பொருளாகவும், நினைவுச் சின்னங்களாகவும்தான் உள்ளன. அதன் மறுசுழற்சி மிக்சியாகவும், கிரைண்டராகவும் மாறிவிட்டதால், அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் புதிய சந்ததியினருக்குத் தெரியாமலே ஆகிக் கொண்டிருக்கிறது. இதே நிலைதான் உறவுகளுக்கும் ஏற்படும்.

முன்பெல்லாம் பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகளுக்கு, கோயில் திருவிழா அழைப்புக்கு என வெளியூரில் இருக்கும் உறவுகளுக்கு கைப்பட கடிதம் எழுதுவர். அதில் ஓர் உயிரோட்டம் இருக்கும். ஆனால், இன்று இ-மெயில், குறுந்தகவல் என எத்தனை வந்தாலும் அடுத்த விநாடியே சிந்தையில் இருந்து மறைந்து விடுகிறது.
கடிதத்தில் தனது உறவு முறைகள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என நலம் விசாரிப்பதால் உறவுகள் பலப்பட்டு வந்தன. அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஊரில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்து சேர்வர். திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் உறவினர்களுக்கு விருந்து அளிப்பர். இதன்மூலம் உறவுகள் பலம் பொருந்தியதாகக் காணப்படும். இதெல்லாம் இன்றும் கிராமத்து அளவில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், படித்தவர்கள் மத்தியில்தான் இந்த உறவில் விரிசலே ஏற்படுகிறது. அவசர யுகத்தில், கணவன் மனைவியேகூட, முழுமனதோடு நேரம் ஒதுக்கித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எந்த உறவினர் வீட்டுக்குச் சென்றாலும்கூட, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் சென்றுவிட்டு, உடன் அவசர அவசரமாகச் சென்றுவிடுவதால், அங்கு வந்திருக்கும் உறவினர்கள் பலருக்கு யார் இவர் என்ற விவரங்கள்கூட தெரியாமலே போய்விடுகிறது. குழந்தைகளுக்கும் உறவுகளைப் பற்றி தெரியாமலே போய்விடுகிறது.
உறவுகள் சிறக்க வழிதான் என்ன? நம் நாட்டில் உள்ள மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதேசமயத்தில், இருக்கும் உறவு முறைகளை எப்படிப் புதுப்பிக்கலாம் என்று நமது சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

மூடநம்பிக்கையாகத் தோன்றும் சில விஷயங்களுக்குகூட (சிவப்பு சேலை எடுத்துக் கொடுத்தல்) சுமார் ரூ. 200 செலவழித்து, சகோதரியின் இல்லத்தில் கொண்டுபோய் சேலை கொடுப்பதன் மூலம், அந்த இல்லத்தில் எவ்வளவு சந்தோஷம் பெருகும். பொங்கல் சீர்வரிசை கொடுத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதன்மூலம் உறவுகள் மேம்படும்.

அதிக பாடச்சுமையைக் காரணம் காட்டி குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டுமே செல்ல வலியுறுத்தாமல், உறவினர்கள் வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோடு, உறவினர்களை உறவு முறை சொல்லி அறிமுகம் செய்ய வேண்டும்.
முன்பெல்லாம் தலைமுறை தாண்டினாலும் வரப்புகள் பிரிக்கப்படாமல் இருந்தது. அந்த அளவுக்குப் பெருந்தன்மை ஓங்கியிருந்தது. காரணம், பணம் பின்னால் நின்றது. உறவுகள் முன்னால் நின்றன. அதே நிலை நீடிக்கக்கூடிய மனப்பக்குவம் வளர வேண்டும்.
முக்கிய விழாக்காலங்களில் இருந்து, பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, தேர்வில் வெற்றி பெற்றால் வாழ்த்து என அனைத்து விஷயங்களுக்கும், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுங்கள். அதில் உயிரோட்டம் இருக்கும்.

Thanks to Dinamani

Wednesday, June 16, 2010

குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!



விட்டில் பூச்சிகள் பொட்டுப் பொட்டென்று விழுந்து சாவதைப்போல், மனிதப் பூச்சிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து மடிவதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அதற்கு என்ன காரணம் என்று அறியப் போனவனும் செத்து மடிந்தான். சில மணி நேரத்துக்குள் அந்த ஊரே பிணக்காடாகிவிட்டது.

யாரையும் அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லை. குடும்பங்குடும்பமாக அழிவு நேர்ந்த காரணத்தால், துக்கம் கொண்டாடக்கூட யாரும் எஞ்சி இருக்கவில்லை. பிணங்களை மலைபோல் அடுக்கி, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் ஒரே "மூச்சில்' கொளுத்திவிட்டார்.

மூத்தோர், இளையோர், சிறார் என்னும் வேறுபாடு சாவுக்கு இல்லைதான்; வயிற்றிலிருக்கும் பிள்ளையைக் கூடத் தாயை அலற அலற வைத்துப் பிதுக்கிக் கொண்டு போய்விடும் கொடியவன்தான் கூற்றுவன்.

ஆனால், கூற்றுவன்கூட இப்படிக் கொத்துக் கொத்தாகக் கூட்டம் கூட்டமாக அழிப்பதில்லை. ஓரிருவர் அல்லர்; இருபத்திஐயாயிரம் பேர் சாகடிக்கப்பட்டவர்கள். கண் இழந்தவர்கள்; நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஊனமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எழுபத்திநான்காயிரம்! அது நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் குழந்தைகள் குறைபாடோடுதான் பிறக்கின்றனர்!

போபாலில் எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் கட்டப்பட்டு, நம்முடைய அரசால் அனுமதிக்கப்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுவாயுதான் ஊரே பிணக்காடாக மாறக் காரணம்!

அந்த நிறுவனத்தின் முதலாளி ஆன்டர்சன் என்னும் அமெரிக்கன்! இந்தக் கயவன் தன்னுடைய நாட்டை விட்டு விட்டு, தொழில் தொடங்க இந்தியாவுக்கு வந்த காரணம், இங்கேதான் மனித உயிர்களுக்கு விலை இல்லை என்பதால்தான். பிழைகள் நேராதவாறும், ஒருவேளை நேர்ந்தால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும் இங்கேதான் எந்தக் கேள்வி கேட்பாடுகளும் இல்லை.

ஆட்சியாளர்கள் மேற்சட்டை, உள்சட்டை, காற்சட்டை என்று எல்லாச் சட்டைகளிலும் பெரிய பெரிய பையாகத் தைத்து வைத்திருப்பார்கள்; அவற்றை நிரப்பினால் போதும் என்பது ஒன்றுதான் இங்கு எழுதப்படாத அரசியல் சட்டம் என்பதை அறிந்துதான் இந்தியாவுக்கு வந்தான் ஆன்டர்சன். இங்கே தொழிலாளிகளுக்குக் கூலியும் குறைவு என்பது அவனுக்கு ஏற்பட்ட இன்னொரு கவர்ச்சி.

அமெரிக்காவில் பாதுகாப்புத் தொடர்பான கொள்கைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதால், ஏனோதானோவென்று கட்டப்படுகிற, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலான தொழிற்சாலைகளெல்லாம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் குறிப்பாக இந்தியாவுக்குத் தள்ளிவிடப்படுகின்றன. இளிச்சவாய் நாடு இந்தியாதானே!

இத்தனை உயிர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அமெரிக்க முதலாளி கொடுத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர்; ஒவ்வொரு தலைக்கும் 200 டாலர்; இந்தியனின் உயிருக்கும் ஊனத்துக்கும் விலை பத்தாயிரம் ரூபாய்; காங்கேயம் மாட்டின் விலையும், இந்தியனின் விலையும் ஒன்றுதான்!

இந்த வழக்கு சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் 26 ஆண்டுகள் நடந்திருக்கிறது. இதற்குள் பல அரசுகள் மாறிவிட்டன; பல மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்; வழக்கை விசாரித்த நீதிபதிகளில் பலர் செத்தே போய்விட்டார்கள். கடைசியில் நீதியும் செத்துப் போய்விட்டது!

முதலில் இந்த வழக்கு 304(2) என்னும் குற்றப்பிரிவின் கீழ்தான் நடந்தது. அந்தச் சட்டப்படி குற்றவாளிகளை 10 ஆண்டுகள் தண்டிக்கலாம்.

அகமதி என்னும் உச்ச நீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு விசாரித்து, அதை 2 ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய 304 ஏ என்னும் எளிய பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

கேவலம் மோட்டார் ஓட்டி யாரோ ஒருவரின் மீது ஏற்றி விடுகிற பொறுப்பின்மையும், 25,000 பேர் சாவதற்கும், 5 லட்சம் பேர் ஊனமுறுவதற்கும் காரணமான பொறுப்பின்மையும் ஒன்றுதான் என்று அரசமரத்தடியில் கட்டைப் பஞ்சாயத்துச் செய்கிறவன் கூடத் தீர்ப்புச் சொல்ல மாட்டானே! இதைச் சொல்வதற்கு ஓர் உச்ச நீதிமன்றம்!

அதைவிடக் கொடுமை அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி இதைச் சாதாரணப் பிரிவுக்கு மாற்று என்று உத்தரவிட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தாங்கிப் பிடிப்பது!

""குற்றம் செய்யும் நோக்கம் தொழிற்சாலை அதிபர்களுக்குக் கிடையாது. ஆகவே அந்தச் செயல் காரணமாக ஒருவர் இறந்தாலும் ஒன்றுதான்; ஆயிரக்கணக்கில் இறந்தாலும் ஒன்றுதான்'' என்று பதற்றமே இல்லாமல் எப்படி கே.ஜி. பாலகிருஷ்ணனால் இதை நியாயப்படுத்த முடிகிறது?

இதுதான் சட்டம் என்றால் சட்டத்தை எவன் மதிப்பான்? இந்தத் தீர்ப்பை நீதிப் பேரழிவு என்றும் நீதிப் பயங்கரவாதம் என்றும் சொல்வது நியாயம்தானே!

இப்படி ஓர் இழிந்த தீர்ப்பைக் கீழ்நீதிமன்றம் வழங்குவதற்கேற்ப அதற்குச் சாலை அமைத்துக் கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி மக்களின் வயிற்றெரிச்சலில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேந்திரா உள்பட ஏழு பேருக்கு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையை வழங்கிய கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு மனமில்லை! அவசரம் அவசரமாகப் பிணையில் விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தக் கொடிய குற்றவாளிகளைத் தண்டித்த பிறகும் ஒருநாள் ஒருபொழுதுகூட அவர்கள் சிறையில் இருக்கவில்லை. அடுத்த நீதிமன்றத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். இந்த 7 பேரும் அந்த 2 ஆண்டுத் தண்டனையையும் அனுபவிக்கப் போவதில்லை.

முன்பெல்லாம் சந்தேகக் கேஸ் என்று ஒன்று போடுவார்கள். வீதியில் சும்மா போகிறவனை ஒரு கடையின் பூட்டை இழுத்து ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஐயப்பட்டுப் பிடித்ததாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவனை உள்ளே வைத்து விடுவார்கள்.

சிறைச்சாலைகள் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கட்டப்பட்டவைதானே! அமெரிக்க ஆன்டர்சனுக்காகவா கட்டப்பட்டது?

நச்சுவாயுக் கசிவுக்கு ஆன்டர்சன் முதலில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய வைத்து மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தை அளித்து, தில்லிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தவர் அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங். தன்னுடைய சொந்த ஊர் சுடுகாடாகிவிட்டது; சாகடித்தவனைக் காப்பாற்றுவதில் அவ்வளவு அவசரம்! அர்ஜுன் சிங்கை மகனாகப் பெற்றதைவிட, அவருடைய தாய் மலடியாகவே இருந்திருக்கலாம்!

அமெரிக்க நெருக்கடி இல்லாமல், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் தூண்டுதல் இல்லாமல், ஒரு கொடிய குற்றவாளியை மாநில அரசே முன்னின்று விடுவித்துப் பாதுகாப்பாகத் தனி விமானத்தில் அனுப்பி வைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? ஒரு தனி மனிதன், மத்திய அரசின் துணை இல்லாமல் தில்லி விமான நிலையத்தை விட்டு ஒரு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றுவிட முடியுமா? முடியும் என்றால், நமக்கு ஓர் அரசுதான் எதற்கு? விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் எதற்கு? பேருந்து நிலையங்கள்போல் ஆக்கிவிட வேண்டியதுதானே!

ராஜீவ் காந்தியின் யோக்கியதையே இதுதான் என்றால் அவருடைய மனைவி என்ற பேரில் இந்தியாவில் அதிகாரம் செலுத்த முடியுமா? இதுதான் சோனியாவின் அச்சம்! ஆகவே, எல்லாவற்றையும் மூடி மறைக்கும் வேலைகள் மும்முரமாகி இருக்கின்றன!

மத்திய புலனாய்வுத் துறை செயல்பட விடாமல் வெளிவிவகாரத்துறை குறுக்கிட்டது என்று புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் லால் வெளிப்படையாகச் சொன்னபிறகும், முதல்வர் அர்ஜுன் சிங் உத்தரவின் பேரில் தனி விமானத்தில் குற்றவாளியை போபாலை விட்டு அவசரமாகக் கடத்தியதாக அந்த விமானி சொன்ன பிறகும் தானே சாக்குக்குள் இருந்த பூனைக்குட்டி வெளிவந்திருக்கிறது!

நடந்த உண்மையை வெற்றிகரமாக 28 ஆண்டுகள் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்த காங்கிரஸ் மத்திய அரசு, இப்போது அதை ஒத்துக்கொண்டு நியாயப்படுத்த முயல்கிறது.

மத்திய அரசின் இசைவில்லாமல் தில்லியிலிருந்து தனி விமானத்தில் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு குற்றவாளி தப்பிச் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கு விடை சொல்வதைத் தவிர்த்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி, ஆன்டர்சனைத் தனி விமானத்தில் முதல்வர் அர்ஜுன் சிங் போபாலுக்கு வெளியே கொண்டு போயிருக்காவிட்டால், அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அதனுடைய பொருள் என்ன? ஆன்டர்சனை போபால் சிறையில் அடைத்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சியின்போது மக்கள் கொதித்தெழுந்து பாஸ்டில் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கியதுபோல, மக்கள் போபால் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கி, ஆன்டர்சனை இழுத்து வந்து உயிரோடு புதைத்திருப்பார்கள் என்பதுதானே!

சட்டம்-ஒழுங்கு என்பது தண்டிக்க வேண்டிய ஒரு குற்றவாளியைப் பாதுகாத்துத் தப்ப வைக்கும்போது குலையுமா? அல்லது சட்டம் சண்டித்தனம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு குற்றவாளிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும்போது குலையுமா? யோசித்துப் பேச வேண்டாமா மூத்த அரசியல்வாதி!

ஒரு கொடிய குற்றத்தை நியாயப்படுத்திவிட்டால், பிரணாப்பை பிரதமராக்கி விடுவாரா சோனியா காந்தி?

ஆன்டர்சன் மீதுள்ள வழக்குத் திறந்தே இருக்கிறதாம். சொல்லுகிறார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. பிடித்த குற்றவாளியைக் காப்பாற்றிப் பூச்செண்டு கொடுத்துத் தனி விமானத்தில் அனுப்பி விட்டு, வழக்கு உயிரோடுதான் இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இருக்காதா, வீரப்ப மொய்லிக்கு?

போபால் நச்சுக்கசிவு வழக்கில்தான் என்றில்லை; பொதுவாகக் கொடுங் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் "மனப் பிறழ்ச்சி' மன்மோகன் அரசிடம் காணப்படுகிறது.

பாகிஸ்தானின் துணையோடு நாடாளுமன்றத்தின்மீது குண்டு வீசினான் அப்சல்; அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்சலின் கருணை மனுக் கோப்பு தில்லி முதலமைச்சரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, உள்துறை அமைச்சகம் அதன்மீது முடிவெடுக்கும்.

அந்தக் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போடுமாறு ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த பாட்டீல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதை அண்மையில் ஷீலா தீட்சித்தே மிகவும் வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பூனைக்குட்டியாகச் சாக்குக்குள் இருந்து வெளிவருகிறது.

ஏன் அப்சலின் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போட வேண்டும்? ஷீலா தீட்சித் காலத்தாழ்வின்றி அதை அனுப்பிவிட்டால், மத்திய அரசு உடனடியாக அதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

அப்சலைத் தூக்கிலே போடுவதை உறுதிப்படுத்தினால், ஒருவேளை இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்.

ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்த ஆ. ராசாவிடம் அமைச்சர் பதவியைப் பிடுங்கிவிட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்! அப்படிக் கருணாநிதி வேறு பயமுறுத்தி வைத்திருக்கிறார்.

ஓர் இஸ்லாமியன் வைக்கிற குண்டில் பல்லாயிரம் இஸ்லாமியர்களும் இறந்து போகிறார்கள்; ஒரு தாழ்த்தப்பட்டவன் அடிக்கிற கொள்ளையால், பல கோடித் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கான நிதி ஆதாரம் தடுக்கப்பட்டு விடுகிறது என்று மக்களுக்குப் புரியும்படியாக நெஞ்சுரத்தோடு எடுத்துச் சொல்லிவிட்டு நீதியின்படி நடக்க வேண்டியதுதானே! அது முதுகெலும்புள்ள அரசால்தான் முடியும்! மன்மோகன் அரசால் முடியாது!

இன்னொரு கொடுமை அண்மையில் சிங்கள மந்திரிசபையில் அங்கம் வகிக்கிற டக்ளஸ் தேவானந்தா, கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவோடு தில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கையைப் பிடித்துக் குலுக்கியிருப்பது!

அச்சுறுத்திப் பணம் பறித்தது; ஆளைக் கடத்தியது; ஒருவரைக் கொலை செய்தது என்று மூன்று கொடிய வழக்குகளில் சென்னை காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா, மன்மோகன் சிங் கையைப் பற்றியபோது, அப்படியே தில்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டாமா?

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை என்பதால், கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு, சிங்கள அரசுக்கு உதவி, ஈழத்தையே சுடுகாடாக்கியதே காங்கிரஸ் மத்திய அரசு!

இன்னொரு கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா மன்மோகன் சிங்கின் கைகளில் வந்து சிக்கிய பிறகும் கோட்டைவிட்டது ஏன்?

போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், வெடிகுண்டுப் பயங்கரவாதி அப்சல், கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்!

குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!

விஞ்ஞான வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறை

விஞ்ஞான வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிந்தித்துக்கூடப் பார்த்திராத சாதனைகளைப் படைத்திருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரிலும், நாகரிகம் என்கிற போர்வையிலும், 21-ம் நூற்றாண்டு மனிதன் படைத்திருக்கும் சாதனைகள் அளப்பரியது, சந்தேகம் இல்லை.

ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும், நவநாகரிக உலகின் மாற்றமும், சமீபகாலமாக இயற்கையைச் சீண்டி விளையாட முற்படுகின்றனவோ என்று தோன்றுகிறது. இயற்கையின் சீற்றங்கள் தன்னை வென்றுவிட நினைக்கும் மனிதகுலத்தின்மீது மட்டும் தாக்குதல் நடத்தினால் பரவாயில்லை. இந்த உலகில் வாழும் இதர அப்பாவி உயிரினங்களையும் அல்லவா பழிவாங்கி விடுகிறது. அதுதான் வேதனையளிக்கிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானத்தின் உதவியுடன் மேற்கொண்டு அதன் பயனையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களது முயற்சிகளுக்குச் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்தங்கிய நாடுகள் பலியாவது என்பது என்ன நியாயம்? ஆப்பிரிக்கக் கடற்கரைகள் இதுபோல அடிக்கடி எண்ணெய்க் கசிவுகளால் அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் நைஜீரிய நாட்டுக் கடற்கரைகள் 9,000 தடவைகள் இந்தப் பேராபத்தை எதிர்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்கார நாடுகளில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கறுப்பர் இனமக்களின் வாழ்வாதாரங்கள் பரிசோதனைக் களனாகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மெக்சிகோ வளைகுடாவில் பிபி (ஆட) எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய்க் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்போது, கடலுக்கு அடியில் இருந்த எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்து கச்சா எண்ணெய் பீச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.

ஏறத்தாழ 60 நாள்களாகியும் இன்னும் அந்த வெடித்துச் சிதறிய எண்ணெய்க் கிணற்றை முழுமையாக மூடி, கச்சா எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாகி விட்டிருக்கிறது பிபி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றுப் பேராசை!

நாளொன்றுக்கு பத்து லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை 1979-ல் இதே மெக்சிகோ வளைகுடாவில், எண்ணெய்க் கிணற்றைக் கண்டுபிடிக்க நடந்த ஆழ்கடல் துளையிடும் முயற்சியால் ஒரு கிணறு வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 140 மில்லியன் கேலன்கள் எண்ணெய் கடலில் கலந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வெளியேறுவதைத் தடுக்கப் பத்து மாதங்கள் பிடித்தன என்று கூறுகிறார்கள்.

இதனால் அந்த நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டம், மக்களுக்கு ஏற்படும் அவதி போன்றவை எல்லாம்கூட இரண்டாம்பட்சம். கடல்வாழ் உயிரினங்களும், கடல்சார்ந்த பறவை இனங்களும் படும் அவதி இதயத்தைப் பிழிகிறது. கடல் மட்டத்துக்கு 1,500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் கடல்மீது படர்ந்து, கரைநோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.

கடலில் வாழும் டால்பின் மீன்களின் கண்களில் எண்ணெய் படர்ந்து முதலில் அவற்றைக் குருடாக்குகிறது. மீன்களும் ஏனைய கடல்வாழ் பிராணிகளும் கண்களை மூடித்திறக்க முடியாமல் போவதுடன், இந்த எண்ணெயிலிருந்து வெளிப்படும் நெடியால் அந்த நுண்ணிய பிராணிகளின் நுரையீரல்களும் தாக்கப்பட்டு மடிகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மடிந்துபோன டால்பின்களின் எண்ணிக்கையே கணக்கிலடங்காது என்றால், இதர மீன்கள், நண்டுகள் போன்ற கடல்வாழ் பிராணிகள் எந்த அளவுக்குப் பலியாகி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

பெலிகன் என்கிற பறவை, அமெரிக்கக் கடற்கரை ஓரங்களில் மிகவும் அதிகமாகக் காணப்படுபவை. இவை கடலில் வாழும் மீன்களை உண்டு உயிர் வாழ்பவை. எண்ணெய்ப் படலம் இந்தப் பறவைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. கடற்கரை ஓரமாக இருக்கும் சதுப்பு நிலங்களில் உள்ள புல்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை இந்தப் பெலிகன் பறவைகள். அங்கே எல்லாம் கச்சா எண்ணெய் படர்ந்திருப்பது தெரியாமல் வந்து அமர்ந்துவிடும் பெலிகன் பறவைகளின் இறகுகளில் எண்ணெய் அப்பிக்கொண்டு விடுகின்றன. பிறகு பறக்கவும் முடியாமல், நகரவும் தெரியாமல் பரிதவித்து உயிரை விட்டிருக்கும் பெலிகன் பறவைகள் ஆயிரம் ஆயிரம் என்கிறது மெக்சிகோவிலிருந்து வரும் செய்திகள்.

கடற்கரையிலிருந்து ஒரு சில மைல்கள் தூரத்துக்கு எண்ணெய்ப் படலம் கடலில் காணப்படுகிறது. இதை எதிர்கொள்ள அரசு நடத்தும் முயற்சிகள் எதுவும் பலித்ததாகத் தெரியவில்லை. சில நூறு பெலிகன் பறவைகளைக் காப்பாற்றியதுதான் அதிகபட்ச சாதனை என்று சொல்ல வேண்டும். அமெரிக்கா இதுவரை சந்தித்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

எங்கேயோ நடக்கிறது, நமக்கென்ன கவலை என்று நாம் இருந்துவிட முடியாது. அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து படிப்பவன்தான் அறிவாளி. அதீத விஞ்ஞான வளர்ச்சியும், கட்டமைப்பு வசதிகளும் மேலோட்டமாகப் பார்த்தால் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தருமே தவிர, விபத்துகள், சோதனைகள் என்று ஏற்படும்போது அதன் விளைவுகள் விவரிக்க முடியாத வேதனைகளாகவும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஒருபுறம், மனித சமுதாயத்தின் வருங்காலத்தையே பூண்டோடு அழிக்கவல்ல அணுசக்தியுடன் விளையாடி, நமது பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். இன்னொருபுறம், நாளும் அதிகரித்துவரும் பெட்ரோலியத் தேவைகளுக்காக ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி விடைகாண முயல்கிறோம்.

முதலில், நமது பேராசைத் தேவைகளுக்காக அளவுக்கு அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு அலைவதை நிறுத்த வேண்டும். மனித இனம் தனது எரிசக்தித் தேவைகளை எப்படிக் குறைத்துக் கொள்வது என்பதை ஆராய்ந்து செயல்படத் துணியாவிட்டால், நாமும் டால்பின்கள் மற்றும் பெலிகன்கள் படும் அவஸ்தைக்குத் தயாராக வேண்டியிருக்கும். நாமாக இல்லையென்றால், நமது சந்ததியினர் அந்தத் துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.

விஞ்ஞானம் இதற்கும் ஒரு விடை கண்டுபிடிக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டு மேலும் மேலும் ஆபத்தின் தீவிரத்தை அதிகரிப்பதைவிட, விஞ்ஞானத்தை நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் நிறுத்திவிட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். சுகங்களை நாம் அனுபவித்துவிட்டு நாளைய சந்ததியினரை விபரீதங்களுக்கு உள்படுத்த நமக்கு உரிமையில்லை!