-
Sunday, October 3, 2010
உலகமயம் என்கிற பெயரில் விபரீதம் அரங்கேறுகிறது !!!
உலகமயம் சரியா, தவறா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். உலகமயம் என்கிற பெயரில் நாம் இந்தியாவுக்குள் எல்லாவற்றையும் அனுமதிப்பதுபோல, ஏனைய நாடுகளும் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறதா என்றால் இல்லை. சாதாரண நுழைவு அனுமதி (விசா) விஷயத்தில் தொடங்கி, நமது தயாரிப்புகளை ஏனைய நாடுகளில் விற்பது வரை, சமநீதி பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.
அதுகூடப் பரவாயில்லை. உலகமயம், தாராளமயம் என்கிற பெயரில் நாம் நமக்குத் தேவையே இல்லாத, இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கும், கலாசார நல்வாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கும் பல விஷயங்களையும், பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம் என்பதுதான் வேதனையளிக்கிறது. உலகமயத்தின் காரணமாக நம்மால் மற்றவர்களும், மற்றவர்களால் நாமும் இதன்மூலம் மனித இனமும் வளம் பெறும் என்றால் அதற்காக நாம் சிலவற்றை இழந்தால் பரவாயில்லை. இது என்னவோ, "நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டுவா, இரண்டுபேரும் ஊதி ஊதிச் சாப்பிடுவோம்' என்பதுபோன்ற கதையாக இருக்கிறது.
தாராளமயத்தின் பயனாக நுகர்வுக் கலாசாரம் பல மாயத்தோற்றங்களை நம் முன் விரிக்கிறது. நியூயார்க்கிலும், லண்டனிலும், டோக்கியோவிலும், சிங்கப்பூரிலும் இருப்பதுபோலப் பொருள்களும், கடைத்தெருவும், மினுமினுப்பும் பளபளப்பும் நமது கண்களைக் கூச வைக்கின்றன. இதற்குப் பின்னே அரங்கேறும் பல ஆபத்துகள் நம் பார்வையில் படுவதில்லை. அப்படிப்பட்ட ஆபத்துகளில் ஒன்று இந்தியாவைப் பயன்படுத்தக் காத்திருக்கிறது.
குழந்தைகளுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி அண்மையில் வழங்கப்பட்டது.
இந்தச் சட்டம் மருந்து நிறுவனங்களுக்கு பல பிரத்யேகமான சலுகைகளை வழங்குகிறது. அரசின் நிதியுதவி, மானியங்கள், சில வரிவிலக்குகள் தவிர மருந்துகள் மீதான காப்புரிமைக்கான காலக்கெடு நீட்டிப்பையும் வழங்குகிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு அளித்துள்ள இந்த அனுமதி, மருந்து ஆராய்ச்சித் துறையில் மிக முக்கியமான ஒரு நகர்வாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு பன்னாட்டு மருந்து நிறுவனமும் ஆண்டுக்கு சுமார் | 50 ஆயிரம் கோடி வரை மருந்துப் பரிசோதனைக்காகச் செலவிடுகின்றன. ஒரு புதிய மருந்து சந்தையை வந்தடைய சராசரியாக | 3,600 கோடி செலவாகிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம் மனிதர்கள் மீதான மருந்துப் பரிசோதனையேயாகும். ஆராய்ச்சியில் பெரும் செலவு வகிப்பதும் இதுவே.
மூன்றாம் உலக நாடுகளில் அயல் பணி ஒப்படைப்பு முறையில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, இந்தச் செலவில் 60 சதம் வரை குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், ஏழை நாடுகளில் மக்களிடையே நிலவும் அறியாமை, எளிதில் வளைக்கக்கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பின்மை ஆகியவற்றின் காரணமாக நேரடியான சட்டச் சிக்கல்களையும் மருந்து நிறுவனங்கள் தவிர்க்க முடியும்.
தவிர, கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை இந்தப் பரிசோதனைகளை நடத்தும் நாடுகளில் விற்க வேண்டிய கட்டாயமும் மருந்து நிறுவனங்களுக்கு இல்லை. இந்தப் பின்னணியிலேயே மருந்து நிறுவனங்கள் நீண்ட காலமாகக் கோரிவந்த அனுமதியை அமெரிக்க அரசு அளித்தது.
அமெரிக்க அரசு அளித்துள்ள இந்த அனுமதியின் நேரடியான விளைவு என்ன? இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் மனிதர்கள் மீதான - குறிப்பாக - குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் களம் இறங்கிவிட்டன பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.
சரி, நாம் என்ன செய்யப்போகிறோம்?
ஏற்கெனவே தாராளமயமாக்கலுக்குப் பின்னர், ஒப்பந்த மருந்துப் பரிசோதனை முறை இந்தியாவில் மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிரித் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் உதவியுடன் 2001-ல் ரூ. 129 கோடி புரளும் தொழிலாக இருந்த இந்தத் தொழில், இப்போது ரூ. 7,200 கோடி புரளும் தொழிலாக உருவெடுத்துள்ளது. குறைந்தபட்சம் இந்தியாவில் இப்போது 400 பரிசோதனைகள் ஆய்வில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பரிசோதனைகள் நம் நாட்டில் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் குறைந்தபட்சம் 49 குழந்தைகள் உயிரிழந்தது 2008}ம் ஆண்டு தெரியவந்தது. எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும் ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.
இந்த மருந்துகள் குழந்தைகளுக்குத் தரப்படுவது குறித்து, பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும், இக்குழந்தைகள் இந்த மருந்து ஆய்வு (கிளீனிக்கல் டிரையல்) முடியும் வரை மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதும் இத்தகைய ஆய்வுகளை அயல்பணியாக ஒப்படைக்கும்போது நிபந்தனையாக சொல்லப்படுகிறது.
ஆனால், நம் இந்திய ஆய்வுக் கூடங்களோ அமெரிக்காவின் நிதியுதவிக்குத் தரும் ஆர்வத்தை இந்த நிபந்தனையை கடைப்பிடிப்பதில் காட்டுவதில்லை.
அண்மையில், பெண்களுக்கான கருவாய் புற்றுநோய்க்கான பரிசோதனை ஆய்வுகளிலும் இதேபோல் சில பிரச்னைகள் ஏற்பட்டன. இப்போது இந்தியக் குழந்தைகளிடம் புதிய மருந்துக்கான சோதனைகள்! இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
Subscribe to:
Posts (Atom)