-
Wednesday, July 7, 2010
இந்த நூற்றாண்டின் முதல் நட்சத்திர கிரகணம்!
இந்த நூற்றாண்டில் இதுவரை நடந்திராத ஒரு வானியல் அதிசயம் நாளை இரவு நடக்கவுள்ளது.
டெல்டா ஒபிஹூயுச்சி என்ற நட்சத்திரத்தை ரோமா என்ற 50 கி.மீ. விட்டம் கொண்ட ஒரு எரிகல் கடக்கவுள்ளதை பூமியிலிருந்து பார்க்க முடியும். அப்போது நடசத்திரத்தை அந்த எரிகல் மறைக்கவுள்ளதால், நட்சத்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
இந்த நூற்றாண்டில் இதுவரை பூமியிலிருந்து பார்க்கும் வகையிலான நட்சத்திர கிரகணம் நடந்ததேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் சில நொடிகளே நீடிக்கப் போகும் இந்த வானியல் சம்பவத்தை மத்திய ஐரோப்பா, ஸ்பெயின், கனாரி தீவுகள் உள்ளிட்ட பூமியின் சில பகுதிகளில் இருப்பவர்கள் மட்டும் நாளை இரவு (ஜூலை 8) காண முடியும்.
எரிகற்கள் மிக பயங்கர வேகத்தில் பயணிப்பவை என்பதால் இந்த நிகழ்வு 5 நொடிகள் மட்டுமே நீடிக்கும்.
Tuesday, July 6, 2010
பாலையாகும் செம்மொழி நிலம்
தமிழுக்குச் செம்மொழி எனும் தகுதிப்பாடு உருவாக முழுமுதற் காரணமாக இருப்பது சங்க இலக்கியம்தான். அந்தச் சங்க இலக்கியங்கள் திணைக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.
தமிழ் நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இந்த ஐவகைத் திணைகளுக்கும் நிலம் என்பது பொதுக் கூறாக உள்ளது. அவற்றோடு நீர் சேருகிற அளவைப் பொறுத்தே திணை வேறுபாடு உணரப்படுகிறது.
நீரே இல்லாத வறண்ட நிலம் பாலையாகவும், நீர் வளம் நிரம்பிய வயல் சூழ்ந்த நிலம் மருதமாகவும், அலைமேவும் கடற்கரை நிலம் நெய்தலாகவும், மழைப்பொழிவு மிகுந்த வனப்பகுதி முல்லையாகவும், மழைப்பொழிவும் பனியும் கொண்ட மலை நிலம் குறிஞ்சியாகவும் கொள்ளப்படுகிறது. இங்கு திணையைத் தீர்மானிக்கும் சிறப்புக்கூறாக இருப்பது நீர்தான்.
தமிழைச் செம்மொழியாகக் கொண்டாடுகிற அரசு, தமிழ் நிலத்தையும் அதன் நீர்வள ஆதாரங்களையும் பாதுகாக்க என்ன செய்திருக்கிறது என்பது விடையற்ற கேள்வியாக நம்முன் விரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நீர்வள மேலாண்மைத் திறனை வியந்து போற்றிய தமிழக முதல்வர், தமது ஆட்சியில் நிகழ்த்தப்படும் நீர்வள ஆதாரங்களின் மீதான வன்முறை எத்தகைய வரலாற்று எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார். இப்பொழுது அரசு மேற்கொண்டுவரும் நீர்வள ஆதாரப் பராமரிப்புத் திட்டங்களெல்லாம் கைப்புண்ணுக்கு மருந்து போடும் தாற்காலிக வேலையே தவிர, புரையோடிப்போன புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடியதல்ல.
தமிழகத்தின் முக்கியமான நீர்வள ஆதாரங்களான நதிகள் அனைத்தும் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நதிகளை மீட்டெடுக்கக்கூடிய தொலை நோக்குத்திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
தொழிற்சாலைக் கழிவுகளால் நதிகள் நஞ்சாக்கப்படுவது ஒருபுறமென்றால் மறுபுறம் மணற்கொள்ளை தொடருவதால் நதிகள் தமது அடையாளத்தை இழந்து நிற்கின்றன.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துவிட்டதாகக் கூறிவரும் தமிழக முதல்வர் மட்டும் என்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவா செய்கிறார்? கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் நொய்யலாற்றில் திருப்பூர் சாயக்கழிவை வெளியேற்றாவண்ணம் தடுக்க (ழங்ழ்ர் ஈண்ள்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) முறையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தது. அந்தத் தீர்ப்பு சாக்கடையில் கரைத்த சந்தனமாக மாறிவிட்டது. இன்றளவும் நொய்யலாற்றில் திருப்பூர் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்துகிற மாநில அரசின் மெüன சம்மதத்தோடுதான் என்றால் அது மிகையாகாது.அண்மையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். நதிகளை இணைப்பதற்கு முன்னர் நதிகளில் கலக்கப்பட்டுவரும் தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்க வேண்டியது அவசியம் என்பதனை தயாநிதி புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய சூழலில் தமிழகத்தின் எந்த நதியும் இணைப்புக்கு ஏற்றதாக இல்லை. அந்த அளவுக்கு நதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பவானி-நொய்யல் இணைப்பு தோல்வியடைந்ததன் பின்னணி இதற்குத் தக்க சான்றாக உள்ளது.
1953-ம் ஆண்டு கட்டப்பட்ட கீழ்பவானி அணையின் நீர், பாசனத்துக்குப் பயன்படுத்தியது போக உபரியாக உள்ள நீர் நொய்யலாற்றுக்குத் திருப்பிவிடப்பட்டது. இவ்வாறு நொய்யலாற்றில் திருப்பிவிடப்பட்ட நீரின் அளவு 2.76 டிஎம்சி ஆகும். இந்த 2.76 டிஎம்சி நீரையும் சின்னமுத்தூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தடுத்து ஒன்பது கி.மீ. நீளமுள்ள இணைப்புக் கால்வாயின் மூலமாக ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு, கரூர் மாவட்டத்திலுள்ள அஞ்சூர், துக்காட்சி, அத்திப்பாளையம், தென்னிலை, மண்மங்களம், புஞ்சைப்புகழூர், மின்னம்பள்ளி, குப்பச்சிபாளையம் முதலிய இருபதுக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களிலுள்ள 19,406 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன.
ஆனால் திருப்பூர் சாயக்கழிவு நீர் தொடர்ந்து நொய்யலாற்றில் வெளியேற்றப்படுவதனால் கீழ்பவானியின் உபரி நீர் நொய்யலாற்றில் திருப்பிவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தின் பயனாளிகளான விவசாயிகளே கழிவு நீர் கலந்துள்ள நொய்யலாற்று நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு வருவதைத் தடுத்து வைத்திருக்கிற அவலம் நிகழ்ந்துள்ளது. ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் எந்த நோக்கத்துக்காகக் கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே சீமைக் கருவேலன் புதர்கள் மண்டிப்போயுள்ளன.
புவி அமைப்பியல்படி பூமியின் மேற்பரப்பில் ஒரு செ.மீ. மணல் உருவாவதற்கு 100 முதல் 200 ஆண்டுகளாகும். இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான மணற்பரப்பு தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அள்ளி முடிக்கப்பட்டுவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேட்டூர் அணையிலிருந்து கல்லணை வரை காவிரியின் நீர்வழித்தடம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்பொழுது சராசரியாக 12 அடி பள்ளமாகிவிட்டது. இதன்காரணமாக காவிரியாற்றின் இருகரைகளிலுமுள்ள பல்வேறு பாசனக் கால்வாய்களுக்கு நதியின் நீர் செல்வது தடைபட்டுள்ளது.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்த கட்டளைத் தென்கரை கால்வாயைக் காட்டிலும் காவிரி ஆறு இப்பொழுது பள்ளமாகிவிட்டது. இப்பிரச்னையைச் சமாளிக்க தமிழக அரசு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே 180 கோடி ரூபாய் செலவில் கதவணை அமைத்து வருகிறது.
"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்' என்று ஆற்று மணலின் நீர் பிடிப்புத்தன்மையைப் போற்றுகிறது செம்மொழித் தமிழ் இலக்கியமான மூதுரை. இத்தகைய அருமை வாய்ந்த ஆற்று மணல் தொடர்ந்து அள்ளப்படுவதனால் காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் முதலிய பல்வேறு மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் காவிரியின் கரையிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மணல் அள்ளப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படாவிட்டால் பல நூறு கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்களெல்லாம் பயனற்றுப் போகும்.
பல்வேறு மாநிலங்களில் மணலுக்கு மாற்றான கட்டுமானப் பொருளாக பாறைத் துகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மணல் விற்பனையைத் தொடரும் அரசின் கொள்கை நிலைப்பாடு நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றிய தொலை நோக்கின்மையையே காட்டுகிறது. நாகரிகம் வளர்த்த நம் நதிகளையெல்லாம் வெறும் மணற் குவாரிகளாக மாற்றிய பெருமை திராவிட ஆட்சியாளர்களையே சாரும்.
அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது மதுபானத் தொழிற்சாலைகள் தயாரித்தளிக்கும் மதுபானங்கள் போதாமல் பத்தாவதாகத் தஞ்சை வடசேரியில் மதுபானத் தொழிற்சாலை அமைக்கத் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள வடசேரி கிராமத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் அதற்கு அரசு நிர்வாகம் அனுமதியளித்திருப்பதன் பின்னணி மக்கள் நலமா? சுய நலமா?
உள்ளூர் மக்களை காவல்துறையை ஏவி விரட்டியடித்துவிட்டு வெளியூர் மக்களைக் கொண்டு ஆலை வளாகத்துக்குள்ளேயே தமக்கு ஆதரவான ஒரு கருத்துக்கேட்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முப்போகம் நெல் விளைகிற வடசேரி கிராமத்தின் சிறப்பே ஐந்தடி ஆழத்தில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பதுதான். சராசரியாக இரண்டு ஏக்கருக்கு ஓர் ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மதுபானத் தொழிற்சாலைக்கு மூன்று ஆழ்துளைக்கிணறுகள் மட்டுமே அமைத்து நாளொன்றுக்கு 17 லட்சம் லிட்டர் நீரைப் பயன்படுத்துவதாகக் கூறும் ஆலை நிர்வாகமும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழ்நாடு நிலத்தடி நீர் வாரியமும் ஓர் உண்மையை மறைத்துவிட்டன.
விவசாயிகள் எவ்வளவு நீரைப் பாசனத்துக்காக நிலத்தின் அடியிலிருந்து எடுத்தாலும் பயிருக்குத் தேவையானது போக மீதமுள்ள நீர் மீண்டும் நிலத்துக்கடியில் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவுபடாமல் பாதுகாக்கப்படும். இது சாதாரண அறிவுக்கும் எட்டக்கூடிய அறிவியல் உண்மை. ஆனால், மதுபானத் தொழிற்சாலை உறிஞ்சி எடுக்கும் 17 லட்சம் லிட்டர் நீரும் மதுபானமாக மாற்றப்பட்டு, பாட்டில்களில் அடைக்கப்பட்டு செந்தமிழர் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படும். இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் ஒருசில ஆண்டுகளில் பல நூறு அடி கீழே சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
விலகிச்செல்கிறது விவசாயத் தலைமுறை!
விவசாயத்துக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அரிசியை என்னவோ அண்டை மாநிலங்களில் வாங்கிச் சாப்பிட வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது. வடமாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் உணவுத் தேவைக்கான அரிசியை ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்துதான் வாங்க வேண்டியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழகத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பு, படிப்படியாகக் குறைந்து இப்போது 48 லட்சம் ஹெக்டேர் மட்டுமே உள்ளது. நகர்ப்புற விரிவாக்கம், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் என வளர்ச்சிப் பாதையில் செல்வதாகக் கூறிக்கொண்டு, விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பு மட்டுமல்லாது, விவசாயத்துக்கான கூலி வேலைக்கு ஆள்களும் குறைந்துவிட்டனர். ஆள் கிடைத்தாலும், ஊதியத்தைக் கொடுக்க இயலவில்லை. வேலைக்காக, கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். இதனால், காவிரி டெல்டா பகுதிகளில் கூட, விவசாயம் நமது தொழில் என்ற நிலை மாறி, இன்றைய தலைமுறைக்கு அன்னியமாகிவிட்டது.
டெல்டா பாசன விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில், தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உரிய காலத்தில் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால், நான்கு லட்சம் ஏக்கரில் செய்யப்பட வேண்டிய குறுவைச் சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக 2 லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே செய்யப்படுகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஒவ்வோராண்டும் ரூ. 500 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை. ஒவ்வோராண்டும் சுமார் 60 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டாலும், அரசின் மூலமாக 10 லட்சம் டன் வரையே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், இடைத்தரகர்களிடம், அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு, நெல்லைக் கொடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு எத்தனை சலுகைகளை அளித்தாலும் விவசாயம் ஓரளவுக்குக்கூட முன்னேற்றம் அடையவில்லை. மூன்று ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகள் அனைவரும் ஏரி, கால்வாய் மற்றும் ஆற்றுப் பாசனங்களையே நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலில், அதிக அளவில் உள்ள இவர்களுக்கு உதவும் விதமாக, அடிப்படைத் தேவையான நீர் வளத்தைக் பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 38 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் முறையாகத் தூர்வாரப்பட வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல் மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடியைத் தொட்டுவிட்டது. பாசனத்துக்கு உத்தரவாதம், நீர்வளத்தைப் பெருக்குவது போன்றவற்றை அரசு முறைப்படுத்தும் பட்சத்தில் கடனை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்படாது.
வீட்டுமனைகள் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 20 சத விளைநிலங்கள் விவசாயிகளின் கையைவிட்டுப் போய்விட்ட நிலையில், மேலும் பல லட்சம் ஏக்கர்களைத் தரிசு நிலமாக்கும் இந்தப் புதிய கலாசாரம் முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆறுகளில் கழிவுநீர் கலப்பதால், விவசாயம் பாதிக்கப்பட்டு, உற்பத்திக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயம் மீதுள்ள ஆர்வம் விவசாயிகளிடம் குறைந்து வருகிறது. இவ்வாறு தரிசு நிலங்களாக விடப்பட்ட நிலங்கள் தொழிற்சாலைகளாகவும், வீட்டுமனைகளாகவும் மாறி வருகின்றன. ஒவ்வோராண்டும் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ற வகையில் உணவு உற்பத்தியையும் அதிகரித்துக்கொள்வது மிகவும் அவசியம். அண்டை மாநிலங்கள் கைவிரித்துவிட்டால் ஏற்படப்போகும் நிலையை உணர்ந்து, தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு மேலும் குறையாமல் பாதுக்காக்க வேண்டும்.
விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுமனை தேவைக்கு விற்பனை செய்ய கேரள அரசு தடைவிதித்துள்ளது. இதுபோன்ற தடை உத்தரவை தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் இப்போது எஞ்சியுள்ள விவசாய நிலங்களை முழுமையாகப் பாதுகாக்க முடியும். உணவுத்தேவைக்கு வெளிமாநிலங்களை நம்பியிருக்கும் நிலை உருவாகிவிட்ட நிலையில், இன்றைய தலைமுறை விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விலகிச்செல்லாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)