-
Wednesday, September 22, 2010
பசிநோய் தீர்க்காத பசுமைப் புரட்சி
1950களில் அமெரிக்க உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிந்தன. நாட்டின் தேவையைவிட இரண்டு மடங்கு அதிக அளவு கோதுமை கையிருப்பு இருந்தது. அந்த உபரி கோதுமையை என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரின் மூளையில் ஒரு யோசனை பட்டுத்தெறித்தது.
÷அதன் விளைவாக 1954-ம் ஆண்டு அவர் பி.எல்.-480 என்னும் சட்டத்தை அறிமுகப்படுத்தி, உணவு தேவைப்படும் நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்து அமெரிக்க விவசாயிகளுக்குப் பாதுகாப்புத் தேடிக்கொடுத்தார்.
÷1956-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டுவரை இந்தியா பி.எல்.-480 சட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி டன் அளவு கோதுமையை இறக்குமதி செய்தது. அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் பலவற்றில் உடன்பாடு இல்லையென்றாலும், தன் நாட்டு மக்களின் பசியைத் தீர்க்க அவர் அமெரிக்க கோதுமையை இறக்குமதி செய்து விநியோகித்தார்.
÷இன்று, இந்திய அரசின் கிடங்குகள் தானியங்களால் நிரம்பி வழிகின்றன. உழவன் உயிரைப் பிசைந்தூட்டி விளைவித்த தானிய வகைகள் வைப்பதற்கு இடமின்றி தினம் பாழாகிக் கொண்டிருக்கின்றன. அன்றைய அமெரிக்கர்களின் வயிறுநிறைந்த பிறகுதான் அந்நாட்டின் கிடங்குகள் நிரம்பின. நம் நாட்டில் பலகோடி மக்கள் பசியால் முறுக்கப்படுகின்ற வயிறோடு உறக்கத்தைத் தொலைத்தவர்களாக இருக்கிறபோது, இங்கே கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதற்காகவா பதினோரு ஐந்தாண்டுத் திட்டங்களும் பசுமைப் புரட்சியும்.
÷37 சதவீத இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. பாழாகிப் போனாலும் பரவாயில்லை; அதை வறுமையால் வாடுபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க இயலாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கைவிரிக்கிறார்.
வாங்கும் சக்தி இருந்தால் பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடு, இல்லையெனில் பட்டினிகிட என்பதுதானே இதன் அர்த்தம். பாதாம் பாலை சுவைத்துக் கொண்டிருக்கிற இனிப்புக் கடைக்காரர், அடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகளை வெறித்துப் பார்க்கும் ஏழைச் சிறார்களுக்கு உதிர்ந்த இனிப்புத் துகள்களை இலவசமாக அள்ளித் தருகிறபோது நம் மனதில் உயர்ந்து நிற்கிறாரே. காசேதான் கடவுளடா என்ற கொள்கையோடு ஒன்றிப்போன அந்தக் கடைக்காரருக்கு இருக்கிற மனிதாபிமானம்கூட, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
÷ஆட்சியாளர்கள் கடமை தவறுகிறபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக இருக்கிற உச்ச நீதிமன்றம் தவறைச் சுட்டிக்காட்டவில்லையென்றால், அதன் பணிதான் என்ன? லட்சக்கணக்கான டன் தானியங்கள் நாடு முழுதும் கிடங்குகளில் வீணடிக்கப்படுவது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பாக சேமிக்கமுடிவதை மாத்திரம் கொள்முதல் செய்யுங்கள், கொள்முதல் செய்ததை வீணடிக்காதீர்கள், மலிவு விலைக்கோ அல்லது இலவசமாகவோ வறுமையில் உழல்பவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்றது.
÷இதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், உச்ச நீதிமன்றம் அரசின் கொள்கைமுடிவுகளில் தலையிடுவது சரியல்ல என்று கூறினார். எதிலும் நிதானத்தோடு பதிலளிக்கக்கூடிய பிரதமரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து அனுமன் வாலில் பற்றிய தீயாகிப்போனதை உணர்ந்த மத்திய அரசு, 25 லட்சம் டன் தானியத்தை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு விநியோகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
÷நாட்டு மக்கள் குறைந்தபட்சம் பசியின்றி இருக்க வேண்டும் என்பது ஒரு அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது என்ற கருத்து, மூளையை சம்மட்டி கொண்டு அடிப்பதாகவே இருக்கிறது.
÷ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பிரகடனத்தின் கீழ் 145 நாடுகள் கையொப்பமிட்ட பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளின் சர்வதேச ஒப்பந்தத்தின்படி, உணவுப் பாதுகாப்பு மனித உரிமை ஆக்கப்பட்டது. 1966-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தில், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் ஒப்புதலோடு இந்தியாவும் கையெழுத்திட்டது என்பது மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமகனுக்கு வழங்குகிற உயிருக்கான பாதுகாப்பு என்பதில் உணவுப் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.
÷எனவே, உச்ச நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவில்லை, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு என்னும் அடிப்படை மனித உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆணையைத்தான் பிறப்பித்தது. ஒரு வேளை உணவைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதுதான் உணவுப் பாதுகாப்பு என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. ஒரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதர்களால் ஆளப்பட வேண்டும் என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில், இந்தியாவுக்காகவே சொல்லி வைத்தார் போலும்.
÷1951-ம் ஆண்டு முதலாவது ஐந்தாண்டு திட்டத்தைத் துவக்கிவைத்துப் பேசிய நேரு, காத்திருக்க நேரமில்லை, உணவில் தன்னிறைவு அடைந்தே ஆகவேண்டும் என்றார்.
அவருக்குப்பின் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தோடு புசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் அடித்தளம் அமைத்தார். அடுத்துவந்த இந்திராகாந்தி, 1970 களில் வறுமையை ஒழிப்போம், உணவு, உடை, உறைவிடம் என்னும் முழக்கங்களோடு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினார். அவரைப்போலவே வறுமை ஒழிப்புத்திட்டங்களில் ராஜீவ் காந்தியும் மிகுந்த அக்கறை காட்டினார்.
÷கார்கால மாங்காய்போல் பிரதமராக வந்த நரசிம்ம ராவ் ஆட்சியில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு அதுவரை இல்லாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி காங்கிரஸýக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த பா.ஜ.க. வின் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் சென்றது. இப்படி பல்வேறு பிரதமர்கள் தொடர் ஓட்டம் சென்று, கையில் சிரத்தையோடு எடுத்துவந்த உணவில் தன்னிறைவு என்னும் குறுந்தடி இப்போது மன்மோகன்சிங் கையில் இருக்கிறது. அவர் சொல்கிறார், ""பண்டித நேரு தொடங்கிய இடத்திலேயே நான் இதைக் கொண்டுபோய் வைத்துவிடுகிறேன்'' என்று. காலச் சக்கரம் ஒரு முழுச்சுற்று வந்து நிற்கிறது. ஆனால், பசி என்னும் வயிற்றுத் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. உலகில் உருவான புரட்சிகள் பெரும்பாலும் வயிற்றின் வெற்றிடத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டவை என்பதைத் தெரிந்துகொள்ள ஹாவார்டு பல்கலைக் கழகத்திற்கு செல்லத் தேவையில்லை.
÷நடப்பு ஆண்டில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கும் மத்திய அரசு, இருக்கும் தானியத்தை விநியோகிக்க இயலாது என்று உரக்கச் சொல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 49 மெகா கோடீஸ்வரர்களையும் ஒரு லட்சம் கோடீஸ்வரர்களையும் உருவாக்கத்தான் இந்த வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டதா? வன்முறையின் மிகக்கொடிய வடிவம் வறுமைதான் என்று கூறிய மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பும் இணைப்பும் கொடுக்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த அடுப்பின்மீது வைக்கப் பாத்திரமும் அதில்போட்டு சமைத்திட தானியமும் அவர்களிடம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எந்தப் பொருளாதார நிபுணரும் சொல்லவில்லை என்றே தெரிகிறது.
÷வாக்கு வங்கிகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகளுக்கிடையே நடக்கின்ற தேர்தல் யுத்தத்தில் பயன்படுத்தப்படும் கணைகளில் ஒன்றாக செல்ஃபோன் உருவெடுத்திருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச செல்ஃபோன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க இப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டிய ஒரே நாடு உலக அளவில் இந்தியாவாகத்தான் இருக்கும்.
÷1994-ம் ஆண்டு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. பஞ்சத்தின் கோரக் காட்சிகளைப் பதிவு செய்த கெவின் கார்ட்டர் என்னும் நிழற்படக் கலைஞர் எடுத்த நிழற்படம் ஒன்றுக்கு மிக உயரிய விருதான புலிட்ஸர் விருது கிடைத்தது.
அந்த நிழற்படத்தில், பட்டினியின் உச்சத்தில் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடாக, நிற்கக்கூட தெம்பில்லாத நான்கு வயதுக் குழந்தை முழங்கால் பதித்துக் குப்புறக் கிடக்கிறது. அந்தக் குழந்தையைக் கொத்தித் தின்பதற்குத் தயாராக பிணந்தின்னிக் கழுகு ஒன்று அருகில் அமர்ந்திருக்கிறது.
இந்தியா சூடானைவிட பெரிய, பரந்துவிரிந்த ஒரு துணைக் கண்டம். இங்கு ஒன்றல்ல, ஆயிரமாயிரம் பணந்தின்னிக் கழுகுகள் காத்துக்கிடக்கின்றன.
Sunday, September 19, 2010
சிறுநீர்ப் பாதையில் தொற்று
உடலில் சேரும் திரவ வடிவக் கழிவுகளை (அதாவது தேவையற்றப் பொருள்களை) சிறுநீரகம் வடிகட்டுகிறது. அவற்றை வெளியேற்ற சிறுநீர்ப்பாதை உதவுகிறது. இந்தப் பாதையில் தொற்ற நோய்கள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு. இவற்றால் உயிருக்கு ஆபத்து என்கிற அளவுக்குப் பெரும் பாதிப்புகள் பொதுவாக உண்டாவதில்லைதான். ஆனால் இந்தத்தொற்றுகள், கடும் வலியை ஏற்படுத்தக்கூடும்.
சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றுக்கான அறிகுறிகள் எளிதாகவே விளங்கிவிடும். திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதுவும் அப்போதே உடனடியாகக் கழித்துவிடவேண்டும் என்கிற உணர்வு. அப்படிச் சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் இறக்குக்குழாயில் (uக்ஷீமீtலீக்ஷீணீ) குத்துவது போன்ற வலியோ எரிச்சலோ ஏற்படும். பெரும்பாலும் சிறதளவு சிறுநீர்தான் வெளிப்படும். அப்படி வெளிப்படும் சிறுநீரில், ரத்தமும் கலந்திருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வோடு, கீழ்வயிற்றுப் பகுதியில் ஒருவித வலியும் ஏற்படக்கூடும்.
சிலர் அவர்களது வழக்கத்துகு மாறாக, பகலிலேயே ஆறுமுறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அவர்களது சிறுநீர்ப் பையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவ ஆலோசனையின் மூலம் தெரிந்துகொள்வது நல்லது.
சிறுநீர் இறக்குக் குழாய் வழியாக பாக்டீரியா உள்ளே புகுந்து, அவை சிறுநீரகங்களையும் அடைந்தால் அப்போது காய்ச்சல், குமட்டல், முதுகுவலி, வாந்தி போன்ற அறிகுறிகளும் கூடுதலாக ஏற்படும்.
சிறுநீர்ப் பாதையில் எப்படித் தொற்றுநோய்கள் உண்டாகக் கூடும்? எல்லாம் பாக்டீரியாவின் கைங்கர்யம்தான். அவை வெளியிலிருந்து நம் உடலுக்குள் செல்வதால்தான் இந்தப் பிரச்னை.
பலவிதங்களில் பாக்டீரியா உள்ளே செல்லமுடியும். என்றாலும் சிறுநீர்ப்பாதை பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாக்டீரியா, உடலின் கீழ்ப்புறமாகத்தான் உள்ளே செல்கிறது. அதுவும் பெண்களுக்கு, அவர்களது பிறப்புறுப்பின் (ஸ்ணீரீவீஸீணீ) வழியாக இவை உள்ளே செல்ல வாய்ப்பு உண்டு. அல்லது ஆசனவாய் வழியாகவும் உள்ளே செல்லக்கூடும். இப்படி நுழையும் பாக்டீரியா, சிறுநிர் இறக்குக்குழாயை அடைகிறது. பிறகு மேல்பக்கமாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து சிறுநீர்ப் பையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. போகிறபோக்கில் சிறுநீர்ப் பாதையின் மீதிப் பகுதிகளையும் இந்த பாக்டீரிய 'ஆசிர்வதித்து' பாதிப்புகளை உண்டாக்கலாம்.
'புயலுக்குப்பின் அமைதி, இன்பத்துக்குப் பின் துன்பம்' என்றெல்லாம் பழமொழிகளை உண்டாக்கியவர்கள், சிறுநீர்ப் பாதை குறித்தும் யோசித்திருப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இதற்கும் ஒரு விதத்தில் அது பொருந்துகிறது. உடலுறவு என்ற மகிழ்வூட்டும் செயலின் போதே உடலுக்குச் சில வேண்டாத தொந்தரவுகளும் ஏற்படலாம். முக்கியமாகப் பெண்களுக்கு. சில பாக்டீரியா எப்படியோ பெண்ணுறுப்பில் வந்து தங்கிவிடும். உடலுக்குள் மேலும் நுழையவேண்டும் என்கிற தீர்மானம் அதற்கு இருந்திருக்காது. ஆனால் உடலுறவின் போது ஆண் உறுப்பு அந்தப் பாக்டீரியாவை மேலும் மேலும் என்றபடி உள்ளே செல்கின்றன. பிறகு மேலே கூறிய வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஒழுக்கநெறி, எய்ட்ஸ் போன்ற கோணங்களில் மட்டுமல்ல, சிறுநீர்ப் பாதையில் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கவும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணுடன் உடலுறவு கொள்ளாதிருப்பது நல்லது. காரணம், இப்படிப்பட்ட பெண்களின் சிறுநீர்ப்பை, அதிக அளவில் தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நம் ஊர் பொதுக்கழிப்பறைகளைப் பற்றி நமக்குத் தெரியும். நீண்ட தூரப் பேருந்துப் பயணம் செல்பவர்கள் நடுவில் ஏதாவது நிறுத்தத்தில் வண்டி நிற்கும்போது, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளத்தான் முயற்சிப்பார்கள். பொதுக் கழிப்பிடம் என்னும் நரகத்துக்குச் சில நிமிடங்கள் விசிட் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை.
ஆண்களாவது பரவாயில்லை. எப்படியோ சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களின் பாடுதான் திண்ணடாட்டம். கழிவறைக்குச் செல்லவும் பிடிக்காமல், மறைவிடம் ஓடி ஒதுங்கவும் முடியாமல் சிறுநீரை அடக்கிக் கொள்கிறார்கள்.
ஆனால் இது எவ்வளவு தப்பு தெரியுமா?
சிறுநீர்ப்பை என்பது ஒரு எலாஸ்டிக் தன்மை கொண்ட தசை, அதில் சிறுநீர் அதிகளவில் தங்கும்போது, அந்தத் தசை விரிகிறது. சிறுநீர் வெளியேற்றப்பட்டவுடன் அந்தத் தசை சுருங்கிவிடும்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட பிறகும் வெகுநேரம் சிறுநீர் கழிக்கவில்லை என்றால் சிறுநீர்ப்பைக்குத்தான் மிகுந்த சிரமம். எவ்வளவு நேரம்தான் பாரத்தைச் சுமப்பது? தவிர, அந்தப் பாரம் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. இப்படிச் சுமையால் தள்ளாடும் சிறுநீர்ப் பையின் தசை, நாளடைவில் பலவீனமடையும். அதாவது அதன் எலாஸ்டிக் தன்மை குறையும். 'அப்பாடி, வீடு வந்துவிட்டது' என்றபடி வெகுநேரம் கழித்து டாய்லெட்டிற்குள் நுழையும்போது, சிறுநீர்ப்பை தன்னிடமுள்ள மொத்தச் சிறுநீரையும் வெளியேற்றாமல் கொஞ்சம் சிறுநீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொள்கிறது. இதற்குக் காரணம், அதன் தளர்ந்துபோன தன்மைதான்.
வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கினால் கொசு வரும் என்பது நமக்குத் தெரியும். வீட்டுக்கு வெளியில்தான் என்றில்லை. எந்த இடத்திலுமே தேங்குவது என்பது வேண்டாத விளைவுகளைத்தான் கொண்டு வரும். மொத்த சேமிப்பையும் வெளியேற்றாமல் இருப்பதால், தொடர்ந்து சிறுநீர்ப்பையில் தங்கும் சிறுநீர் காரணமாகவே சிறுநீர்ப் பாதையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.
தவிர, பெண்களுக்கென்றே இறைவன் அளித்த வரங்கள் அல்லது அவஸ்தைகள் என்று சில உண்டே! கருத்தரித்தல், மாதவிலக்கு போன்றவை. இவற்றின் காரணமாகவும் சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்படலாம்.
சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கிருமிகள் பரவியதை எப்படிக் கண்டுபிடிப்பது? சம்பந்தப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரை, நுண்ணோக்கியில் வைத்து பரிசோதிப்பதன் மூலம் அல்லது 'கல்ச்சர்' சோதனை மூலம் கண்டறியலாம். அதாவது பாக்டீரியா நன்கு செழித்து வளரக்கூடிய ஒரு பொருளைச் சிறுநீரில் கலப்பார்கள்.
அவை வேகமாகச் செழித்து வளர்ந்தால் (இந்த நிலையில் அவற்றைக் கண்டுபிடிப்பது எளிது) பாக்டீரியா இருப்பதைக் கண்டுணர்ந்து அவையே சிறுநீரகப் பாதிப்புகளுக்குக் காரணம் என்பதையும் அறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.
என்ன மாதிரி சிகிச்சையளிப்பார்கள் என்தையும் ஓரளவு அறிந்துகொள்வதில் தப்பில்லை. ஆன்டிபயாடிக்குகள்தான் பொதுவாக அளிக்கப்படும். சுமார் பத்து நாட்களில் இவை பாக்டீரியாவுடன் போரிட்டு அவற்றை விரட்டியடிக்கும். ஆனால் இந்தச் சமயத்தில் நோயாளி அதிகப் பிரசங்கித் தனத்தில் ஈடுபடக்கூடாது. ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கென்று டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்திருப்பார். அதை உட்கொள்ளத் தொடங்கிய 2 நாட்களிலேயே குணமாகி விட்டதுபோல் நோயாளி உணர்வார்.
அதாவது சிறுநீர்ப் பாதையில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அடங்கிவிடும். முழுமையாகச் சிறுநீர் வெளியாகலாம். உடனே, எதற்காக இனிமேலும் இந்த மாத்திரைகள் என்று தானாக முடிவெடுத்து அநாவசியச் சிக்கன நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அது பாக்டீரியா பதுங்கும் நேரம். மேலும் சில நாட்கள் போரிட்டு அவை இறந்தபிறகுதான், சிறுநீர்ப் பாதை முழுமையாக நலமடையும்.
இப்படி நலமாக உணர்ந்த ஒருவாரத்துக்குப் பிறகு இன்னும் ஒருமுறை சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கலாம். வேறென்ன, பாக்டீரியாக்களின் கொட்டம் முழுதும் அடங்கிவிட்டதை உறுதி செய்து கொள்ளத்தான்.
எதற்கு இந்த அவஸ்தைகள் எல்லாம்? இதெல்லாம் வருவதற்கு முன்பே தடை செய்துவிடலாமே என்கிறீர்களா? சபாஷ். இது சரியான சிந்தனை.
பெரும்பாலும் உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள துவாரங்கள் வழியாகத்தான் பாக்டீரியா உள்ளே சென்று சிறுநீர்ப் பாதையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு இப்போது தெரியும். ஆனால் அதற்காக அங்கெல்லாம் கதவுகளா போட்டுப் பூட்டமுடியும்? என்றாலும் வேறு சில நடைமுறைக்கேற்ற வழிகள் உண்டு.
அதுவும் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியமானது. ஒன் அல்லது டூ பாத்ரூம் போனவுடன் அந்தப் பகுதிகளை நன்கு சுத்தம் செய்யுங்கள். அப்படிச் சுத்தம் செய்யும்போது, உங்கள் கை முன்புறத்திலிருந்து பின்புறம் மட்டுமே இயங்க வேண்டும். அதாவது மலம் மற்றும் சிறுநீரிலுள்ள பாக்டீரியா பிறப்புறப்பில் நுழைவதையோ தங்குவதையோ தவிர்க்கும் வழிமுறை இது. உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் பெண்ணுறுப்புப் பகுதியை நன்கு சுத்தம் செய்து கொள்வதன் மூலம் சிறுநீர்த் தொற்றுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். தினமும் நிறைய குடியுங்கள். தண்ணீரைத்தான். வாஷ் பேஸினில் அழுக்குக் காணப்பட்டால் என்ன செய்வோம்? தண்ணீரை வேகமாக அங்கு பாய்ச்சுவோம். உடனே அந்த அழுக்கு அடித்துக்கொண்டு வெளியேறும் இல்லையா? அது போல தண்ணீர் உள்ளிட்ட திரவங்களை நிறைய அருந்தினால் அவை சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியாவைத் தன்னுடன் இழுத்துக்கொண்டு வெளியேறும்.
வைட்டமின் சி என்பது சிறுநீரின் கொஞ்சமான அமிலத் தன்மையை அதிகமாக்கும். இதன் காரணமாக உடலில் உள்ள பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவின் எண்ணிக்கை குறையும். வைட்டமின் சி என்பது சிட்ரிக் அமிலம் கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் உள்ளது.
பருத்தியினாலான உள்ளாடைகளை அணியுங்கள். மிகவும் இறுக்கமானதாக அது இருக்க வேண்டாம். அப்படி இறுக்கமாக இருந்தால் பாக்டீரியா பல்கிப் பெருகுவதற்கு அந்த ஈரப்பதம் வாய்ந்த சூழலே காரணமாக அமைந்துவிடக்கூடும்.
உடலுறவுக்கு முன்னும் பின்னும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) சிறுநீர் கழிப்பது நல்லது. நுழையத் தொடங்கியிருக்கும் பாக்டீரியா இதன்மூலம் வெளியேற வாய்ப்புண்டு.
உடலைச் சுத்தமாக வைத்திருங்கள். குளிக்கும்போது இடுப்புக்குக் கீழேயுள்ள பகுதிகளையும் நன்கு சுத்தம் செய்யுங்கள். இந்த இடத்தில் பெண்களுக்கு ஒரு கூடுதல் எச்சரிக்கை. பெண்ணுறுப்பை நீரால் நன்கு சுத்தம் செய்து கொள்வது நல்லது. ஆனால் சோப்பு, பெண்ணுறுப்புக்குள் சென்று விடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் சோப்பில் உள்ள ரசாயனப் பொருள்கள் அங்கு சென்று எரிச்சலை ஏற்படுத்தலாம். அது வேறுமாதிரி பிரச்னைகளுக்கு வழி வகுக்கலாம்.
சில குளித்துவிட்டு வந்ததும் ஈரத்துணியோடு வெகுநேரம் இருப்பார்கள். வேண்டாமே.
Subscribe to:
Posts (Atom)