-
Friday, July 16, 2010
விவசாய அழிவுக்கே விரிவாக்கத் திட்டம்
இந்தியாவின் ஒட்டுமொத்த வருமான மதிப்பு உயர்கிறது. ஆனால், ஆண்டுக்காண்டு விவசாயம் வழங்கும் வருமான மதிப்பு இறங்கிக் கொண்டே போகிறது. இன்றல்ல, நேற்றல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பே விவசாய வருமான மதிப்பு இறங்கிவிட்டது.
ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பிக்கும்போது நமது நிதி அமைச்சர்கள் இதை ஒரு புதிய விஷயமாக ஓராண்டுக்கு முன் நிகழ்ந்ததாக முகமன் கூறி, இனி விவசாய வருமானத்தை உயர்த்த இந்தத் துறையில் இப்படி இப்படிப் பணம் ஒதுக்குவதாகச் சொல்வதுண்டு.
விவசாயத்தைப் பொறுத்தவரை பட்ஜெட் கூட்டம் என்பது ஒரு திதி. அப்பா சிரார்த்தத்தை மத்திய அரசு செய்யும். அம்மாக்களின் சிரார்த்தத்தை மாநில அரசுகள் செய்யும். விவசாய வளர்ச்சி என்பது இவ்வாறு விவசாய நினைவாஞ்சலிகளாக மாறிவிட்டது. 2010-2011 பட்ஜெட்டில் விவசாய உற்பத்திக்கு வழக்கம்போல் முதலிடம் உண்டு.
நிதியமைச்சரின் கூற்றுப்படி, ""பசுமைப்புரட்சி ஆழமாக வேர்விடாத ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமைப்புரட்சியை உருவாக்க ரூ. 400 கோடி ஒதுக்கப்படுகிறது. பருப்பு உற்பத்தியைப் பெருக்கவும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை உயர்த்தவும் ரூ. 300 கோடி. ரூ. 3,75,000 கோடி விவசாயக் கடன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்வள மீட்பு, மண் பாதுகாப்பு, பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பான வள மீட்புப் பண்ணை அமைப்புக்கு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு ரூ. 200 கோடி''.
2010 - 2011 -ல், இறந்துவிட்ட விவசாயத்துக்குரிய திதி நாளில் மதிப்புக்குரிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்படி வேதமந்திரங்களை மக்களவையில் ஓதியுள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் வீரபாண்டியார் தேவாரமாகவோ, திருவாசகமாகவோ பாடினார். சம்ஸ்கிருதத்தில் பாடினால் என்ன? தமிழில் பாடினால் என்ன? ஆண்டுதோறும் விவசாயத்துக்கு சங்கு ஊதும் நாடகம் தொடர்கிறது.
பசுமைப்புரட்சியின் எதிர்விளைவால் இழக்கப்பட்ட மண்வளப் பாதுகாப்பு என்ற பெயரில் பஞ்சாப், ஹரியாணாவுக்கு வழங்கப்படும் நிதி ரூ. 200 கோடி. பசுமைப்புரட்சியைப் புகுத்தி வடகிழக்குப் பகுதியில் மண்வளத்தை அழிக்க நிதி உதவி ரூ. 400 கோடி! அதாவது, ஒரிசா, பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் புதிய பசுமைப்புரட்சி என்றால் மேலும் ரசாயன உரம், பி.ட்டி விதை விநியோகம், உயிர்க்கொல்லி புகுத்தப்படும். அப்பகுதிகளில்தான் பாரம்பரியங்கள் சற்று எஞ்சியுள்ளன. குறிப்பாகப் பல்லுயிர்ப்பெருக்க வளர்ச்சிக்காக அனைத்துலக நிதியில் இயங்கும் இங்குள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் தென்கிழக்குப்பகுதி கிராமங்களிலிருந்துதான் பாரம்பரிய விதைகளை வாங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. இனி இதற்கும் ஆபத்து இருக்கிறது. மண்வளத்தைக் காப்பாற்ற ரூ. 200 கோடி. மண்வளத்தை அழிக்க ரூ. 400 கோடி. விவசாயத்துக்கு திவசம் செய்யும் கடமை அமைச்சர்களுக்கு உள்ளபோது, அவர்களிடமிருந்து இப்படித்தான் எதிர்பார்க்க முடியும்.
ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு வரை விரிந்து பரந்துள்ள பீடபூமிப்பகுதிகளில் பருப்பும் எண்ணெய் வித்தும் உற்பத்தி உயர ரூ. 300 கோடி.
இந்த ரூ. 300 கோடியை 60 ஆயிரத்தால் வகுக்க வேண்டும். ஒரு கிராமத்துக்கு 5 லட்சம் என்று வகுத்து 60,000 பயறு - பருப்பு - எண்ணெய் வித்து கிராமங்கள் உருவாகப் போகின்றன. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்? 2,000 முதல் 3,000 கிராமம் பயன் பெறலாம். எல்லாம் திட்டப்படி செயல்பட வேண்டும். செயல்திட்டம் தயாரானதாகத் தெரியவில்லை. சாதாரணமாக மத்திய அரசு வழங்கும் பணத்தை மாநிலம் வேறு செலவுக்குப் பயன்படுத்தலாம்.
விவசாயிகளுக்குக் கடன் ரூ. 3,75,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் ஒரு புதிய முதலீடு அல்ல. பெரும்பாலும் புக் அட்ஜஸ்ட்மெண்ட்தான். கடந்த ஆண்டு கடனை அடைக்கவே சரியாக இருக்கும். இது ஒரு வட்டிக்கடன். (மாதம் 1 சதவீதம்) நம் மக்கள் 5 வட்டி, 10 வட்டி என்று கடன் வாங்கியதை 1 வட்டியாக மாற்றிக்கொள்ள உதவும்.
தேச வருமானத்தில் விவசாய வருமானத்தின் பங்கு மிகவும் குறைந்துவிட்டது என்று குறைப்படும் திட்ட நிபுணர்களும், ஆட்சியாளர்களும் எந்த அளவுக்கு இத்துறைக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது என்று கணக்குப் பார்த்தால் உண்மை தெரியும். தொழில்துறை, சாலை மேம்பாடு என்று எடுத்துக்கொண்டால் ஆயிரங்கோடி, லட்சங்கோடி என்று பணம் செலவழிக்கப்படுகிறது.
விவசாயம் என்றால் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி என்ற அளவில்தான் பணம் ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பணமும் உருப்படியாக உற்பத்திக்கு உதவுவதாக இல்லை. அமைச்சர், கட்சித் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? யாரோ செலவழிப்பதற்கு யாரோ திட்டம் போடுவதால் பட்ஜெட் அறிவிப்பு பற்றி சீரியஸôக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நல்ல திட்டங்கள் விவசாயத்தில் மட்டுமல்ல; நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, நீர்வடிப்பகுதி மேம்பாடு என்ற திட்டங்களுக்கும் மாவட்டந்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.
உண்மையில், அப்படிப் புரளும் பணம் அதற்குரிய பணிகளுக்குச் செலவிடப்பட்டிருந்தால், நாடு செழித்திருக்கும். அப்பணிகளுக்கு அப்பணங்களைச் செலவு செய்ய மாவட்டங்களும் வட்டங்களும் தனிரூட் போட்டு கபளீகரம் செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவார்கள். திறந்த மனமுள்ள ஊழலுக்கு இடம் கொடுக்காத நல்ல அதிகாரிகளும் அறிவார்கள்.
அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. ஆகவே, உள்ளூரில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களை மானாவாரி பூமியில் விளைவிக்க வேண்டும் என்பது நல்ல கொள்கை. மானாவாரி பூமியில் நெல், கோதுமை, புஞ்சைத் தானியங்களையும் நன்கு திட்டமிட்டுப் பயிரிடலாம்.
மானாவாரியில் கிடைக்கும் நீரை உகந்த அளவில் பயன்படுத்த வேண்டுமே தவிர, மாபெரும் அணைக்கட்டுத் திட்டமெல்லாம் போட்டு மண்வளத்தைக் கெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஸ்ப்ரிங்க்ளர் அமைக்கலாம். ரைன்கன் அமைக்கவும் வழி செய்யலாம். முழு மானியம் வழங்கினால் ஸ்ப்ரிங்க்ளர், ரைன்கன் மூலம் உற்பத்தியை உயர்த்தலாம்.
பருப்புவகைப் பயிர்களையும் நேரடி விதைப்பாக நெல்லையும், பலவிதமான புஞ்சைத் தானியங்களையும் மானாவாரியில் பயிரிட்டு உற்பத்தியை உயர்த்தப் பல்லாயிரம் கோடி ரூபாய் விவசாயத்துக்கு ஒதுக்கிச் சரியான முறையில் செலவிட வேண்டும்.
அரிசி, கோதுமை, பருப்பு விலை உயர்ந்த அளவில் எண்ணெய் வித்துகளின் விலை உயரவில்லை. நிலக்கடலைப்பருப்பு, தேங்காய் விலைகள் மந்தமாயுள்ளன. தேங்காய் விலை 30 ஆண்டுக்கு முன் விற்ற விலைதான் இன்றும். திண்டுக்கல் அய்யம்பாளையம், சோழவந்தான் பகுதிகளில் விவசாயிகளுக்கு சராசரி ரூ. 2.50 என்ற விலைக்குத்தான் உரிக்காத தேங்காய்கள் இறக்கியவுடன் கிட்டுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் தேங்காயில் லாபம் எடுத்துத் தங்கள் குழந்தைகளை நகரங்களில் நல்ல படிப்புக்குச் செலவு செய்தார்கள். இன்று தென்னந்தோப்புகளையே விற்றுத்தான் படிப்புச் செலவும், மருத்துவச் செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பொதுவாக பருப்புகளாகட்டும் எண்ணெய்வித்துகளாகட்டும் அங்காடிகளில் அவற்றுக்குரிய லாபமான விலை கிடைத்தால் விவசாயிகளுக்கு எந்த உதவியும் தேவையில்லை. எவ்வளவுதான் அரசு திட்டங்கள் போட்டு பருப்பு - எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தி உயர்வுக்கு என்று பணம் செலவழித்தாலும்கூட உற்பத்தி உயராது. அங்காடியில் நல்ல விலைக்கு விவசாயிகளின் சரக்கு விலை போனால்தான் அந்த விவசாயி தாக்குப்பிடிப்பான்.
பணவீக்கத்தால் விலை உயர்கிறது. பணவீக்கம் என்பது நுகர்வோருக்கு மட்டும் பிரச்னை இல்லை. விவசாயிகளுக்கும் பிரச்னைதான்.
கடந்த முப்பது ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி உயரவும் சமையல் எண்ணெய்க்குரிய எண்ணெய் வித்து உற்பத்தி உயரவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏன் எந்தப் பயனும் இல்லாமல் போனது? மக்களை வாழ வைக்க வேண்டிய விவசாயம் நிலை தடுமாறிச் செல்கிறது.
மண்ணை விஷமாக்காமல் வளப்படுத்தி நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய விவசாயமே நோய்க்குறிகளுடன் காட்சியளிக்கிறது. விவசாயத்தை மேலும் நோயாக்க பசுமைப்புரட்சி கிழக்கு இந்தியாவுக்குப் புறப்படுகிறதாம். இது மேலும் அழிவுக்கு வழிகாட்டுவதாயுள்ளது.
இந்தியா முழுவதுமே மண் விஷமாகிவிட்டது. பஞ்சாப் - ஹரியாணாவில் மட்டுமே ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கும் பணி நிகழ்கிறதாம்! எல்லா இந்திய மாநிலங்களிலும் மண்வளப் பாதுகாப்புக்குரிய இயற்கை இடுபொருள் பயன்பாடுகளுக்கும், இயற்கைப் பூச்சி விரட்டி உற்பத்திப் பயன்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு மானியம் வழங்காமல் ரசாயன உரங்களுக்கும் விஷமான பூச்சி மருந்துக்கும் வழங்கப்படும் மானியங்கள் இறுதியில் விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடும் ஆபத்து உள்ளது.
யாருமே இல்லையே, ஏன்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின்போது போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்ததாக 41 பேர் பிடிபட்டுள்ளனர். மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் 10 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் இணைய தளத்தில் இருப்பதால், ஒரு மாணவரின் தேர்வு பதிவு எண்ணை அழுத்தியதும், அவர் படித்த பள்ளி, பெற்ற மதிப்பெண் அனைத்தும் தெரிந்துவிடும். பல்கலைக்கழக விண்ணப்ப பரிசீலனைக் குழுவோ அல்லது எந்தவொரு தனியார் கல்லூரியின் மாணவர் சேர்க்கையைக் கவனிக்கும் சாதாரண ஊழியரோகூட இதைக் கணினி மூலம், முதல் கட்டமாக உறுதிப்படுத்துவதில் எந்தவிதத் தடையும் கிடையாது என்கிறபோது, இதையெல்லாம் தெரியாமல்தான், ஏமாந்துவிடுவார்கள் என்று நம்பித்தான் கலந்தாய்வில் இந்த மாணவர்கள் பங்கேற்றனர் என்று சொன்னால் அதைப் பாமரன்கூட நம்ப மாட்டான்.
இந்தப் போலி மதிப்பெண் சான்றுகள் சரியானபடி, கல்வித்துறையின் கணினிப் பதிவேட்டிலும் மாற்றியமைக்கப்படும் என்றும், அவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லும் வேளையில் புதிய மதிப்பெண் பட்டியல் இடம்மாறி இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவர்கள் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கண்ணை மூடிக்கொண்டு கையூட்டாகக் கொடுத்திருக்க முடியும்.
இந்த ஆண்டு ஏதோ சில காரணங்களால் இதைக் கல்வித்துறை கருப்பு ஆடுகளால் செய்ய முடியவில்லை என்பதால்தான் இந்த மாணவர்கள் பிடிபட்டுள்ளார்கள். அல்லது சில மாணவர்களது மதிப்பெண்களை மட்டுமே கணினியிலும் திருத்த முடியாமல் போனது என்பதாகவும் கருதவும் இடம் இருக்கிறது. இதில் ஏதோ, சம்பந்தமே இல்லாத கும்பல் ஒன்று கல்வித்துறை அலுவலகத்தில் உலவியது என்று சொன்னால் காவல்துறை மட்டும்தான் அதை நம்பி ஏற்றுக்கொண்டு பதிவு செய்யும்.
இப்படியாகப் பணம் கொடுத்து, மதிப்பெண் வாங்கவும், அதனை அள்ளி வழங்கவும் ஒரு கூட்டம் கல்வித்துறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் உண்மையாகவே படித்து, நன்றாகத் தேர்வு எழுதியும் மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்று அழுதுகொண்டிருக்கும் மாணவர்களுக்கும் காரணம் இதே கல்வித்துறைதான்.
இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் 63,000 மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் 22,000 அதிகம். இதற்கு முக்கியமான காரணம், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதற்கு பொறுப்பாக இருந்தவர்கள்தான். இவர்கள் இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் பற்றியது என்ற எண்ணத்துடன் விடைகளைத் திருத்தாமல், சற்று அலட்சியமாக இருப்பது அதிகரித்து வருகிறது என்பதன் அடையாளம்தான் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்.
நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், ஒவ்வொரு மதிப்பெண்ணும் கலந்தாய்வில் 2000 மாணவர்களுக்கு முன்பாக கொண்டுநிறுத்தும் என்பதால் இவ்வாறு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. காரணம், மறுமதிப்பீடு மறுகூட்டல் செய்ய வேண்டுமானால், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தால் மட்டுமே முடியும்.
இத்தனை பேரும் விண்ணப்பித்தாலும், ஆள்பற்றாக்குறை என்கிற மழுப்பலான பதிலைச்சொல்லிவிட்டு, நகல்களை அனுப்ப வேண்டுமென்றே சில வாரங்கள் காலதாமதம் செய்தது கல்வித் துறை என்பதுதான் பெற்றோரின் ஆதங்கம். 7 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்த முடிந்தவர்களுக்கு, 63,000 பேரின் விடைத்தாள்களின் நகல்களை அனுப்ப எத்தனை நாள்கள் ஆகும்? அதில் ஏன் காலதாமதம்?
இதைக் கல்வித்துறை வேண்டுமென்றே செய்தது என்கிற எண்ணம்தான் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மறுகூட்டலில் தவறு இருந்து, மதிப்பெண் அதிகரித்தால் கல்வித்துறை அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், மறுமதிப்பீடு செய்து அதில் மதிப்பெண் உயருமானால், அதற்கு இரண்டு ஆசிரியர்கள் உறுதி அளிக்க வேண்டும், தவறாகவோ அல்லது கவனக்குறைவாகவே விடைத்தாளைத் திருத்திய ஆசிரியர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
சகஆசிரியர் மீதான "இனப்பற்று' இதைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டுவதும், முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பதும், வேறுவழியின்றி மதிப்பெண் அளித்தே ஆக வேண்டும்; இல்லையானால் நீதிமன்றம் வரை செல்லக்கூடிய நியாயங்கள் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்குவது என்பதும் கல்வித்துறையில் அவர்களுக்குள்ளாகப் பேசிவைத்துக்கொண்ட சட்டமாக இருக்கிறது.
2009-ம் ஆண்டு 1179 மதிப்பெண் பெற்ற மூன்று பேர் மாநிலத்தில் முதல் மாணவர்களாகத் தேர்வு பெற்றனர். ஆனால், ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் படித்த மாணவர் பாலமுருகன் என்பவர், விடைத்தாள் நகல்வாங்கி, சில விடைகள் திருத்தப்படாமல் விடுபட்டிருப்பதைக் கண்டு, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பின்னர், 1184 மதிப்பெண் என அறிவிக்கப்பட்டு, எல்லாப் பாராட்டு விழாக்களும் முடிந்தபிறகு தனியாக முதல்வரிடம் போய் பரிசுப்பணம் வாங்கியும் வெளியுலகுக்குத் தெரியாத நிலைமை ஏற்பட்டது. போராடும் அளவுக்கு பணவலிமை இருக்கிற பெற்றோரும், பள்ளியின் பக்கத் துணை இருப்பவர்களும் களத்தில் இறங்கி, விடுபட்ட மதிப்பெண்களைப் பெற முடிகிறது. சராசரி, வறுமைக் கோட்டுக்குக் கீழே, கீழ்மத்தியதர வகுப்பு என்றால், அவர்களது நியாயம்கூட எடுபடாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, என்ன செய்ய?
விடைத்தாள் நகலில் திருத்தப்படாத ஒரு கேள்விக்கு நீல மை பேனாவால் 2 மதிப்பெண் போட்டு அனுப்புவதும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தபோது மதிப்பெண்ணில் மாற்றமில்லை எனக் கடிதம் அனுப்புவதும், நியாயம் கேட்டால், நீங்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்புவதும் கல்வித்துறையின் கல்நெஞ்சத்துக்கு சாத்தியம் என்கிறபோது, அவர்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அழுதுவிட்டு, இடம் கிடைத்த கல்லூரியில் சேர்ந்துகொள்வதைத் தவிர, பாவம் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
இந்த ஊமை ஜனங்களுக்காகப் போராட, நியாயம் கேட்க, இவர்களது குறைகளைக் களைய யாருமே இல்லையா?
Thanks : Dinamani
கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் ஏழைகள் எண்ணிக்கை குறைவு
லண்டன்: இந்தியாவில் கேரளா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், டெல்லி, கோவா ஆகிய 5 மாநிலங்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு திட்ட (யுஎன்டிபி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த ஏழைகள் உள்ள மாநிலங்களில் முதல் 10 இடங்களில் தமிழகம், உத்தராகண்ட், மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்களும் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவின் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் 42 கோடி மிகவும் ஏழ்மையான மக்கள் உள்ளதாகவும், இது 26 ஆப்பிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் ஐ.நா. ஆய்வில் தெரியவந்தது.
அதிலும் மிக அதிக அளவிலான ஏழை மக்கள் உள்ள மாநிலமாக பிகார் கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் கேரளா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் ஏழைகள் மிக மிகக் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மிகக் குறைந்த ஏழைகள் உள்ள மாநிலங்களில் முதல் 10 இடங்களில் தமிழகம், உத்தராகண்ட், மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.
அதேபோல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களை விட சிறந்த வாழ்க்கைத் தரம் உள்ளவர்களாக இந்திய பழங்குடி மக்கள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது
Thursday, July 15, 2010
இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது
டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து உறுதியில், ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.
மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்ருக் கொண்டுள்ளது.
தேவநாகரி எழுத்தான ‘Ra’ மற்றும் ரோமன் எழுத்தான ‘R’ ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது.
பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய்க்கான சின்னத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது.
புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் ‘Rs’ என்ற எழுத்து இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது. தற்போது ரூபிஸ் என்ற இந்த எழுத்தை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகியவையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உதயக்குமார் உருவாக்கியுள்ள சின்னம் இந்தியாவின் மூவண்ணம் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்தில் உள்ள இரண்டு கிடைமட்டக் கோடுகளுக்கு இடையில் உள்ள இடம் இந்தியாவின் தேசியக் கொடியை நினைவூட்டுவதாக உள்ளது. இரண்டு பக்கவாட்டுக் கோடுகள் ‘equals to’ என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியப் பொருளாதாரம் சமமானது, எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதை குறிப்பிடுவதாக இது அமைந்துள்ளது.
தனது சின்னம் தேர்வாகியிருப்பது குறித்து உதயக்குமார் கூறுகையில், உண்மையிலேயே எனது சின்னம்தான் தேர்வாகியுள்ளதா என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என நம்புகிறேன் என்றார் உணர்ச்சிப்பெருக்குடன்.
உதயக்குமார் ஐஐடி குவஹாத்தியில் நாளை பேராசிரியராக பணியில் சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 மாதத்தில் நடைமுறைக்கு வரும்
ரூபாய்க்கான சின்னத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்னும் 6 மாதங்களில் இந்த குறியீடு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்வு: ஆய்வில் பகீர் தகவல்
சிங்கப்பூர் : இந்திய பெருங்கடலில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளும், தேசிய வானிலை மைய விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, கரியமில வாயு போன்றவை காற்றில் கலப்பதால், வளி மண்டலம் பாதிக்கப்பட்டு, சூரிய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; பூமியின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, அண்டார்டிகா பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன.இப்படி உருகுவதால், கடலிலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதாவது, ஆண்டுக்கு 3 மி.மீ., அளவுக்கு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக, இந்திய பெருங்கடலின் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் கடல் மட்டம் உயர்வதால், வங்கதேசம், இலங்கை, சுமத்ரா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.கடந்த 1960ம் ஆண்டு முதல் இந்த ஆய்வுக் குழு, கடல் நீர்மட்டம் உயர்வது தொடர்பாக நீண்ட ஆய்வை மேற்கொண்டிருந்தது. இதன் முடிவிலேயே இந்திய பெருங்கடல் உயர்வது தெரிய வந்தது. முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா, நோபல் பரிசு பெற்ற போது உரையாற்றிய அவர், பூமி வெப்பமாவது குறித்து எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.அவரின் பேச்சு எதிர்கால சந்ததியினரைப் பற்றி அக்கறைப்படுவதாக உள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
Tuesday, July 13, 2010
அதிகார மமதையை அடக்க அணி திரள்வோம்!!!
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அணிசேர முயல்வதை நான் குறை கூறவில்லை. ஆனால், கொள்கை அடிப்படையில் அல்லது குறைந்தபட்ச வேலைத் திட்ட அடிப்படையில் கூட்டணி சேர்வது என்பது போய் பதவிப் பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணிகள் அமைக்கப்படுவது என்பது மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இதற்காக யாரை யார் நொந்துகொள்வது?
தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது அல்லது தங்களது கட்சிக்கு சில இடங்களை நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றங்களில் பெறுவது என்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு பெரும்பாலான கட்சிகள் செயற்படுகின்றன. இதற்கு மேலாகக் கட்சிகள் ஆற்ற வேண்டிய பெரும் ஜனநாயகக் கடமை ஒன்று உள்ளது என்பதையே பல கட்சிகள் மறந்துவிட்டன.
கூட்டணியில் சேர்ந்துவிட்டாலே ஆளுங்கட்சி செய்கிற தவறுகளைத் தட்டிக்கேட்க தோழமைக் கட்சிகள் துணிவதில்லை. துணிந்து கேட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
நாட்டு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம், ஊழல், சட்டவிரோதமான நடவடிக்கைகள், இயற்கை வளங்கள் தங்கு தடையில்லாமலும் அனுமதியில்லாமலும் சுரண்டப்படுவது, ஆறுகளில் வரலாறு காணாத மணல் கொள்ளை, ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பு, மழை தரும் காடுகள் கண்மூடித்தனமான அழிப்பு போன்றவற்றையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?
மேலே கண்ட சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முடியாத சட்டங்கள் எதற்கு? அதிகாரிகள் எதற்கு? கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கழகங்களின் ஆட்சியில் அதிகாரிகள், முதுகெலும்பு அற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர்.
அநீதிகளைத் தட்டிக் கேட்ட எதிர்க்கட்சியினர் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு எத்தனை முறை கண்டித்தாலும் திருத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகார மமதை மிகுந்துள்ளது.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் இதழ்கள் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன.
தேர்தல்கள் கேலிக்கூத்தாக்கப்பட்டு ஜனநாயக முறைகள் துச்சமாகத் தூக்கி எறியப்பட்டு பணநாயகம் நிலைநாட்டப்பட்டுவிட்டது.
முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல்வர் கருணாநிதி டாக்டர் பட்டம் பெற வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் காவல் துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளானார்கள். உதயகுமார் என்ற மாணவர் மாண்டார். அன்றிலிருந்து இன்றுவரை இரு கழகங்களின் ஆட்சியில் நடைபெற்ற பாசிச வெறியாட்டங்களைப் பட்டியலிட்டால் கணக்கிலடங்காது, நீளும். எனினும், அண்மைக்காலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மக்களை அதிர வைத்துள்ளன.
கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த தா. கிருட்டிணன் மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகன் அழகிரி கைது செய்யப்பட்டார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு வழக்கறிஞராக தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழக்கை ஆந்திர மாநிலத்துக்கு மாற்றியது. எந்தக் கொலை வழக்கிலும் நடந்திராத அதிசயம் இந்த வழக்கில் நடந்தது. 200-க்கும் மேற்பட்ட சாட்சிகளில் ஒரே ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். கொலையாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் தரப்பில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு இதுவரை செய்யப்படவில்லை.
தினகரன் அலுவலகத்தில் அழகிரியின் ஆட்களால் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு என்ன ஆயிற்று என்பதே இன்னமும் யாருக்கும் புரியாத புதிர்.
காமராஜ் முதலமைச்சராக இருந்தபொழுது விருதுநகரில் அவரது தங்கையின் பேரன் கிரிமினல் வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்யத் தயங்கினார்கள். செய்தியறிந்த காமராஜ் மாவட்டக் கண்காணிப்பாளரை தொலைபேசியில் அழைத்துக் கண்டித்தார். குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும்படி ஆணை பிறப்பித்தார். முதல் அமைச்சரின் பேரன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பேரன் என்பதற்காகச் சட்டத்தை வளைக்கவோ, நீதியை மறைக்கவோ காமராஜ் முயலவில்லை. ஆனால், இன்றைய முதலமைச்சர், மகனுக்காகச் சட்டத்தைப் புறக்கணித்து, நீதி தேவதையின் கைகளைக் கட்டி செயல்பட்டவிதம் சரிதானா?
கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தா. பாண்டியன், இயக்குநர் சீமான், திருவாரூர் தங்கராசு போன்றவர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தைச் சூறையாடி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமான பழ. கருப்பையா வீட்டுக்குள் பட்டப்பகலில் புகுந்து அவரைத் தாக்கினார்கள். மேலே கண்டவற்றில் இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறை கண்டறியவில்லை.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் கார் சேதப்படுத்தப்பட்டது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உரியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த வழக்கில் மறுநாளே சிலரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆளுங்கட்சியின் ஆதரவாளரான வீரமணியின் காரைச் சேதப்படுத்தியவர்களை கைது செய்வதில் காட்டிய அக்கறையில் சிறிதளவைக்கூட மற்றவர்கள் விஷயத்தில் காவல் துறை காட்டாதது ஏன்? குற்றமிழைத்தவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தானா?
தமிழகக் காவல்துறை திறமைமிக்கது. பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகரானது என்ற பாராட்டைப் பெற்றது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து மதக்கலவரங்கள் மூண்டன. தில்லியில் மூண்ட கலவரங்களை மூன்று நாள்களாக யாராலும் அடக்க முடியவில்லை. காரணம் தில்லி காவல்துறையே மதக் காழ்ப்புகளால் பிளவுபட்டுக் கிடந்தது.
அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் சென்னை நகர காவல்துறை ஆணையாளராக இருந்த சஞ்சீவிப் பிள்ளை தலைமையில் தமிழகக் காவல்படையை தில்லிக்கு வரவழைத்து அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே நாளில் தமிழகக் காவல் படையினர் கலவரங்களை ஒடுக்கினார்கள். இத்தகைய திறமை வாய்ந்த தமிழகக் காவல்துறை இன்று ஆளுங்கட்சியின் குற்றேவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டது.
சென்ற தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் அன்னிய ஆட்சியின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்கப் புரிந்த தியாகம் அளவற்றது. அவர்கள் தலைமையில் ஏராளமானவர்கள் ரத்தம் சிந்தினார்கள். உயிரிழந்தார்கள். இதெல்லாம் வீண்தானா? விழலுக்கு இறைத்த நீர்தானா? வெள்ளையர்களை விரட்டிவிட்டு இந்தக் கொள்ளையர்கள் ஆட்சி ஏற்படத்தான் அவர்கள் பாடுபட்டார்களா?
பொது வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எண்ணற்ற துன்பங்களைத் தாங்கி அளவற்ற தியாகங்களைப் புரிந்த பல நேர்மையான தலைவர்களும் தொண்டர்களும் பல கட்சிகளில் இன்னமும் இருக்கிறார்கள்.
நாட்டின் சீரழிவைத் தடுக்க வேண்டிய இத்தகைய சீலர்கள் வெறும் பார்வையாளர்களாக நின்று கைகளைப் பிசைந்து கொண்டிருப்பது சரியா? நமது மனசாட்சி நம்மை உறுத்தவில்லையா? "நெட்டை மரங்கள்போல நின்று பெட்டைப் புலம்பல்' என பாரதி பாடியதற்கு நாமே எடுத்துக்காட்டுகளாக அமையலாமா?
பொது வாழ்க்கையின் உன்னதமான நெறிமுறைகள் நம் கண்முன்னாலேயே சிதைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் ஊமையராக விளங்கப்போகிறோம்?
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு எனப் பாராட்டப்பட்ட நாட்டில் - குறிப்பாகத் தமிழகத்தில் ஜனநாயகம் நம் கண்முன்னாலேயே சிறிது சிறிதாகச் சாகடிக்கப்படுவதையும் பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமை அல்லவா?
ஹிட்லரின் மாய்மாலப் பேச்சில் மயங்கிய ஜெர்மானிய மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் விளைவாக அந்த நாட்டை ரத்தக் களரியாக்கியதோடு, இரண்டாம் உலகப்போரிலும் ஈடுபடுத்தி ஐரோப்பாவையே அழித்தவர் ஹிட்லர். இந்த அழிவிலிருந்து ஜெர்மனி மீண்டு எழுவதற்கு 50 ஆண்டுகள் ஆயிற்று. இவ்வளவுக்கும் ஜெர்மனி அறிவியலில் முன்னேறிய நாடு.
ஆனால், சகல துறைகளிலும் பின்தங்கிக் கிடக்கும், தமிழ்நாடு, இந்தச் சீரழிவிலிருந்து மீண்டெழுவது எப்போது? அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?
தேர்தல் கூட்டணிகளில் கவனம் செலுத்துவதைச் சற்று நிறுத்திவிட்டு, பாசிச வன்முறைக் கொள்ளையர்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் தமிழகத்தை மீட்டெடுப்பதை உடனடிக் கடமையாகக் கொண்டு அணி திரள்வோம்!
வறுமை: ஆப்பிரிக்காவை விஞ்சிய இந்தியாவின் 8 மாநிலங்கள்
டெல்லி: ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான மக்கள் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.
2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.
ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.
இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.
உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.
5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)