Friday, February 19, 2010

Tamil Kavithai

Tamil Kavithai

Vairamuthu Kavithaigal

Tamil - Vairamuthu Kavithaigal

கவிதை

தற்பெருமை எங்கு முடிகிறதோ
அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது

வெற்றி என்பது பெற்று கொள்வது,
தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.
ஆனால்,
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..

வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை.
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால்,
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்

புதுக் கவிதை - காதல் - புதுக் கவிதை
--------------------------------------


காதலுக்கு கண் இல்லை !!!!
காதல் மொழி பேசும் - கண்ணை
நாம் என்ன சொல்லுவது?

====================

ஹைகூ கவிதை
ஓர் நொடி பார்வையில்
ஓர் ஜென்மம் கடந்து விட்டேன் .......
நீயும் நானும்
தாத்தா பாட்டியாக !!!!!

=============================

புரிந்துகொண்டேன் .......
ஓர் நொடி பார்வையில்
கண்கள் கூட
கவி பேசும் என்று !!!!

என்ன செய்தாய் என்னை..!!
நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

என் கனவுகளில்..

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

உனக்கு எழுதும்...
'காதல் கடிதங்களின்' எடை
அதிகரிக்க அதிகரிக்க....
உன் பதில் கிடைக்காத உயிர் வலியால்..
என்னுடைய எடை
குறைந்து கொண்டே போகிறது....!!


Thursday, February 18, 2010

ஆயிரமாவது ஆண்டில் தஞ்சைப் பெரிய கோயில்

உலகப்பாரம்பரியச் சின்னமாகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இச்சுற்றுலா தலத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான அயல்நாட்டினர் வருவதால் நம் நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கிறது. நம் நாட்டினரும் அயல்நாட்டினரும் இக்கோயிலின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள தொல்லியல்துறை தகுந்த ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.

பெரியகோயில் வளாகத்துக்குள் சுமார் 200 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரை அரங்கம் ஏற்படுத்தலாம். இவ்வரங்கு குளிர்சாதன வசதியுடையதாக இருந்தால் மிகவும் நன்று.
இக்கோயிலைப்பற்றிய செய்திகளையும் கதைகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும், குறுந்தகடுகள் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். குறுந்தகடுகள் 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் காணக்கூடியதாக இருத்தல் நன்று.

இதில் முக்கியமாகப் பலமொழிகளில் இக்குறுந்தகடுகள் இருத்தல் மிகமிக அவசியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, இந்தி, ஒரியா, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகீசு போன்ற மொழிகளில் இருக்கலாம்.

÷இக்கோயிலைக் காண ஏழைகளும், செல்வந்தர்களும், படித்தவர்களும், படிக்காதவர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் வருகின்றனர்.
÷இந்திய மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும், வருபவர்கள் பலருக்குத் தமிழோ, ஆங்கிலமோ தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதிவைத்துள்ள செய்திகளைப் படித்து அறிந்து கொள்ள முடியாது. எனவே, இக்கோயிலைப் பற்றிய செய்திகளையும், கதைகளையும் தங்கள் தாய்மொழியில் கேட்டும், கோயிலின் அழகையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் வெண்திரையில் பார்த்தும் மகிழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரையில் ஒரு மொழியில் செய்திகளைச் சொல்லும்போது அத்திரையின் அடிப்பகுதியில், அடிக்குறிப்பின் மூலம் வேறு ஒரு மொழியில் அதாவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ செய்திகளைத் தெரியப்படுத்தலாம்.

குறுந்தகடுகளின் நேரத்துக்கேற்றபடியும், அரங்கின் பராமரிப்புக்கேற்றபடியும் பார்வைக்கட்டணம் நிர்ணயிக்கலாம். குளிர்சாதன வசதியுடன் காட்டப்படும் காட்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம். பொதுவாக லாப நோக்கமில்லாமலும், பராமரிக்கும் செலவுக்கேற்றவாரும் கட்டணம் வசூலித்தல் நன்று. சுற்றுலா பயணிகள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்றவாரும், காலநிலைக்கேற்றவாரும் குறுந்தகடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல்நாட்டினரும், சுற்றுலா ஆர்வமுடையவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் ஒரு மணிநேர குறுந்தகட்டினைக் காண வாய்ப்புள்ளது. தனிப்பேருந்துகள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கலாம். பள்ளி, கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் இவ்வரங்கில் காட்சிகளைக் காண்பிக்கலாம்.

குறுந்தகடுகளில் கூறப்படும் முக்கிய செய்திகளையும், காட்டப்படுகின்ற ஒளிப்பதிவுகளையும், வல்லுநர்களைக் கொண்டு இறுதிசெய்யலாம். காட்சிகளைக் காண்பிக்கும்போது, வாத்தியங்களின் இசையைப் பயன்படுத்துதல் நலமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட செய்திகளைப் பதிவுசெய்தல் நன்று.

சோழப்பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரில் ஒரு பெரிய கோயிலை அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜசோழன் கட்டினான். இக்கோயில் வியத்தகு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால் அவனுடைய புகழ் உலகெங்கும் இன்றும் பரவியிருக்கிறது.

பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில், 793 அடி நீளம், 397 அடி அகலம் கொண்டது. நடுவிமானம் 216 அடி உயரத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கருங்கல்லின் எடை 80 டன் ஆகும். இவ்வாலயக் கட்டுமானப்பணி முடிய 4 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. கி.பி. 1010 -ம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதால் கி.பி. 2010 -ம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டுவிழா காண்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் மலைகளைக் காண முடியாது. ஆதலால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தே கருங்கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இக்காலத்தில் உள்ளதுபோல் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகையால் மிகவும் இன்னலுற்றே இக்கோயில் திருப்பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் நுழைந்தவுடன் நம் கண்முன்னே காணும் மிகப்பெரிய நந்தி காண்போரைக் கவரும் வகையில் உள்ளது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் இந்நந்தி, ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது 19 1/2 அடி நீளமும், 8 1/4 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கல்லைக்கொண்டு செதுக்கப்பட்ட பெரிய நந்தி இதுவேயாகும்.

அக்காலத்தில் ராஜராஜன் இலங்கைமீது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியை தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்துள்ளான். தன் ஆட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை தஞ்சைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். இச்செய்தி அங்குள்ள ஒரு கோயில் கல்வெட்டுமூலம் தெரியவருகிறது.

தஞ்சைக் கோயில் கல்வெட்டுகள் மூலம் ராஜராஜனின் மேலைச்சாளுக்கிய படையெடுப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாலயத்திற்கு ராஜராஜன், அவனைப் பின்தொடர்ந்த அரசர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் அளித்த அறக்கட்டளைகள் பற்றியும், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.

மற்றொரு கல்வெட்டின் மூலம் ""ராஜராஜேச்சுவர நாடகம்'' இருந்ததாகத் தெரியவருகிறது. விழாக்காலங்களில் இந்நாடகம் தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நாடகம் நடத்துவதற்கு 120 கலம் நெல் ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டுள்ளது. இந்நாடகம் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆலயங்களின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் எவ்வாறு சோழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையை விவரிக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தலாம்.

பெரியகோயிலில் உள்ள கருவறையைச் சுற்றிக் காணப்படும் ஓவியங்களையும், ஓவியங்களில் காணப்படும் கதைகளையும் கூறலாம். காலத்தால் அழியாத ஓவியங்களை அக்காலத்தில் மூலிகைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள், முட்டை, வச்சிரம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் சிறப்புற்று விளங்கும் நடனக்கலை பற்றிய விளக்கங்கள் சிற்பவடிவில் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுமார் 400 நடன மங்கையர்களுக்குமேல் பணிபுரிந்துள்ளனர் என்ற செய்தி வியக்கத்தக்க ஒன்றாகும்.

தஞ்சை கோயிலில் 13 அடி உயரமுள்ள லிங்கமும், நந்தியும் மிகப்பெரிய உருவில் காட்சியளிப்பதால் இக்கோயிலை "பெருவுடையார்கோயில்' என்று அழைக்கின்றனர். இப்பெரிய சிவன்கோயிலைக் கட்டியதால் ராஜராஜன் சிவபாதசேகரன் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். இந்தச் சிவன்கோயிலில் ஒரு சிறிய புத்தர்சிலை செதுக்கப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மேலும் நாகப்பட்டினத்தில் அயல்நாட்டு அரசனால் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை செப்பேட்டில் செதுக்கியுள்ளான். மேலும் திருமாலுக்கு மணலூரில் ஒரு வைணவத் திருக்கோயிலும் எடுத்துள்ளான். இதிலிருந்து இவ்வரசனின் சமயப்பொறை தெளிவாகத் தெரிகிறது.

ராஜராஜனுக்குப்பின் அரசாண்ட அவனது மைந்தன் ராஜேந்திரன் தஞ்சைக்கோயிலைப் போலவே ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன்கோயிலைக் கட்டியுள்ளான். இத்தலமும் தமிழகத்தில் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளும், சிற்பங்களும், கலைக்கூடங்களும், கட்டடங்களும், ஓவியங்களும், செப்புப்படிமங்களும் சோழர்களின் இயல், இசை, நாடகம், கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றின் பெருமைகளையும், பழமையையும் பறைசாற்றுகின்றன. ஓராயிரமாண்டு பழமையான தஞ்சை பெரியகோயிலின் புகழை இத்தரணி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமையாகும்.

என்னதான் முடிவு?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வுப் பிரச்னையில் மத்திய அரசு, மாநில அரசுகளையும் மாநில அரசுகள், மத்திய அரசையும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை.

கடந்த 2004}ல் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை - ஒரு குவிண்டால் நெல் விலையை ரூ. 580-ல் இருந்து ரூ. 1,030 ஆகவும், கோதுமை விலையை ரூ. 620-ல் இருந்து ரூ. 1,100 ஆகவும் உயர்த்தியது மத்திய அரசு. பொருளாதார நிபுணர்கள் இப்போதைய பிரச்னைக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடுவது இதைத்தான்.

ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து. இந்திய விவசாயிகளுக்கு விவசாயத்தின் மீது இருந்த விரக்தி கொஞ்சமேனும் குறைய மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக இருந்தது என்பதுதான் உண்மை. இதன் விளைவாகத்தான் 2008}ல் சாதனை அளவாக நாட்டின் உணவு தானிய உற்பத்தி 23 கோடி டன்களாக உயர்ந்தது.

அரிசி}கோதுமை விலை 200 சதம் அளவுக்கு உயர்ந்திருந்தாலும், இப்போதைய விலைவாசி உயர்வுக்கான முக்கிய காரணி அதுவல்ல. ஏனெனில், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் மாதச் செலவில் அரிசி}கோதுமைக்கான செலவு என்பது 10 சதவீதத்துக்கும் குறைவுதான். தவிர, ரேஷன் விநியோகமும் அரிசி}கோதுமை செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துகிறது.
பிரச்னை அரிசி-கோதுமையின் விலை உயர்வு மட்டுமல்ல; எல்லா தானியங்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; எல்லா மளிகைப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; சலவைப் பொருள்களில் தொடங்கி மருந்துகள் வரை எல்லா ரசாயனப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; எவ்வித நியாயமுமின்றி வீட்டு வாடகைகூட 25-லிருந்து 100 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது அரிசி, கோதுமை அல்லது உணவுதானிய விலைகளுக்கு மட்டும் ஏற்பட்ட ஒன்றல்ல. குறிப்பாக மூன்று முக்கியமான விஷயங்களில் நம் அரசு தொடர்ந்து தவறிழைக்கிறது. அதன் தொடர் விளைவுதான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

1. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பெட்ரோலிய நுகர்வோர் இந்தியா. ஆனால், உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் நாட்டின் தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதம் அளவுக்கு நாட்டின் பெட்ரோலியத் தேவை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,பெட்ரோலிய நுகர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏறத்தாழ 50 சதம் வரை வரி விதித்து வருமானம் பார்க்கிறது. சர்வதேசச் சந்தையில் விலை உயரும்போதெல்லாம் இங்கும் விலையை உயர்த்தி உயர்த்தி சரக்குப் போக்குவரத்தை அரசே அதிகச் செலவுமிக்கதாக மாற்றிவிட்டது.

2. அறுவடைக்குப் பிந்தைய ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருளை நாம் வீணடிக்கிறோம். இந்தியாவில் ஆண்டுக்கு 17.5 கோடி டன் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றில் பதப்படுத்தப்படுவது 2.2 சதம்தான். முறையான பதப்படுத்தல் கட்டமைப்பு இல்லாததே இதற்குக் காரணம். அரசு இந்தத் தவறை ஒப்புக்கொள்கிறது. ஆனால், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதிலோ, உணவுப் பொருள்கள் வீணாகாமல் தடுப்பதிலோ தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறதா என்றால் இல்லை.

3. பதுக்கலையும் கடத்தலையும் அநியாய விலை நிர்ணயத்தையும் வேடிக்கை பார்க்கிறோம். இது ஏதோ பெரிய அளவில் மட்டும் நடக்கும் சங்கதியல்ல; டீக்கடை, பெட்டிக்கடை வரை தொடர்கிறது. நம் தெருமுனையில் கடை வைத்திருக்கும் டீக்கடைக்காரும் பெட்டிக்கடைக்காரரும்கூட விலைவாசியைத் தீர்மானிக்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழகத்தில் 2008}ல் ஒரு டீயின் விலை ரூ. 2} 3. இப்போது ரூ. 4}6. இத்தனைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பசும்பால், எருமைப்பால் விலையை லிட்டருக்கு முறையே ரூ. 2, ரூ. 5 மட்டுமே உயர்த்தியிருக்கிறது அரசு. பால் விலையும் சர்க்கரை விலையும் உயர்ந்திருக்கின்றன. ஆனால், டீ விலையை 200 சதமாக உயர்த்தும் அளவுக்கு நிச்சயம் அவற்றின் விலை உயரவில்லை. ஒரு லிட்டர் பால் அதிகபட்சம் ரூ. 24}க்கு விற்கப்படும் சூழலில், 50 மி.லி. பால்கூட சேர்க்கப்படாத 100 மி.லி. டீயின் விலை ரூ. 5 என்பது நிச்சயம் கொள்ளைதான்.

ஆனால், அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. இது "சிங்கிள் டீ பிரச்னை' என்று நினைக்கிறது. ஆனால், டீ விலை உயர்வோ ஒரு பெரிய சமூக விளைவாக மாறுகிறது. எங்கெல்லாம் பொருள்கள் அநியாய விலை விற்கப்படுவதாக நினைத்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களோ அங்கெல்லாம் இந்தப் பதிலை எதிர்நோக்க வேண்டியிருக்கும்: ""எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்? டீ விலை ரூ. 5; தெரியுமா?''
அதேசமயம் டீக்கடைக்காரரிடம் டீ விலை உயர்வு குறித்துக் கேளுங்கள், அவருடைய பதில் இப்படி இருக்கும்: ""வேறென்ன செய்ய முடியும்? எல்லாப் பொருள்கள் விலைகளும் உயர்ந்துவிட்டன.''

சந்தையில் ஒரு கிலோ ரூ. 15-க்கு விற்கும் வெங்காயத்தை சந்தையிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும் ஒரு கடையில் ரூ. 28-க்கு விற்க இந்திய வியாபாரிகளால் மட்டுமே முடியும். யார் கேட்பது? அவர்களிடம்தான் பதில் இருக்கிறதே?
இப்படியாக, இந்தியாவில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயரால் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதில், அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு என்னவென்றால், இதையெல்லாம் அனுமதிப்பது; வேடிக்கை பார்ப்பது; செயல்படாமல் இருப்பது.

மக்கள்தொகைப் பெருக்கத்தையும் எதிர்கால உணவுத் தேவையையும் எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோலியப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ரேஷன் முறையைக் கொண்டுவர வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கையாள்வதற்கென்று பிரத்யேகமான - மலிவான சரக்குப் போக்குவரத்து அமைப்பை உருவாக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கும், பதுக்கலைத் தடுக்கும் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். உணவு மானியமாகச் செலவிடப்படும் ரூ. 1 லட்சம் கோடி முறையாகச் சென்றடைய பொது விநியோக அமைப்பைக் கட்டுக்கோப்பானதாக மாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது கானல் நீரைத் தேடி நெடும்பயணம் போகும் வீண் முயற்சியாகத்தான் இருக்கும். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். ஒரு சிங்கிள் டீ ஆறு ரூபாய். கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது ஆட்சியின் லட்சணம்?

Tuesday, February 16, 2010

அதிகபட்ச விலையா, அநியாய விலையா?

இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் யார் அந்தக் கோடீஸ்வரர் (கோன் பனேகா கரோர்பதி) நிகழ்ச்சி இப்போது நடந்துகொண்டிருந்தால், அதில் கடைசியாகக் கேட்கப்படும் கோடி ரூபாய்க்கான கேள்வி விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்பதாக இருந்திருக்கலாம். நான் இல்லை என்பதுதான் சரியான பதில் என்றுகூட முடிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் பரிசுத் தொகையான ஒரு கோடி ரூபாய் பொதுமக்களில் யாருக்கும் கிடைத்திருக்காது. மத்திய ஆட்சியாளர்களில் ஒருவருக்குத்தான் கிடைத்திருக்கும்.

விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ன என்பதை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அதற்கு நான் காரணம் இல்லை என்று பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் மத்திய அமைச்சரவையில் கடும் போட்டி நிலவுகிறது. மக்களாட்சியை மலையாய் நம்பி மீண்டும் மீண்டும் வாக்களித்து வாழ்க்கையே போராட்டமாகிப்போன திருவாளர் பொதுஜனம் எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று முனகுவது இப்போதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

ஏறுமுகத்திலேயே இருக்கின்ற விலைவாசியை எதிர்கொள்வதோடு மக்களின் பிரச்னைதீர்ந்துவிடுவதில்லை. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலை என்று ஒரு விலை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிற வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை ஒவ்வொன்றை வாங்கும்போதும் பொதுமக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

சிறுகச்சிறுகச் சேமித்த பணத்தில் மிக்ஸி ஒன்று வாங்குவதற்காக ஒரு தொழிலாளி கடைக்குச் செல்கிறார். அதிகபட்ச விலையான ஆயிரம் ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாயைக் கடைக்காரர் தள்ளுபடி செய்தவுடன், தொழிலாளி ஆனந்தமடைந்து பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கிக்கொண்டு கடைக்காரரைக் கைகூப்பி வணங்கிச் செல்கிறார். அதே பொருளை வேறொரு கடையில் வாங்கச் செல்லும் மகளிர் ஒருவருக்கு இந்தக் கொடுப்பினைகூட இல்லை. அந்தக் கடைக்காரர், அதில் குறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலையான ஆயிரம் ரூபாய்க்கே லாபமின்றித் தருகிறேன் என்று கூறவும், அப்பெண்மணியும் சலுகையை எண்ணி மகிழ்ந்தவராய் அதை வாங்கிச் செல்கிறார். இருவருமே ஏமாற்றப்படுகிறோம் என்பது அந்தப் பாமரர்களுக்குத் தெரிவதில்லை.

1990-ம் ஆண்டுவரை பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள்மீது அதிகபட்ச சில்லறை விலையுடன் உள்ளூர் வரிகள் தனி என்றுதான் குறிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் வரிகள் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு என்பது பாமரர்களுக்குத் தெரியாத நிலையில், சில்லறை வியாபாரிகள் வரி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைச் சரிசெய்யும் நல்ல நோக்கத்தோடு எடைகள் மற்றும் அளவைகள் நிர்ணயச் சட்டத்தின்கீழ் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களுக்கான விதியைத் திருத்தி, வரிகள் உள்ளிட்ட அதிகபட்ச விலையைக் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. எந்தக் காரணம் கொண்டும் அதிகபட்ச விலையைவிடக் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இப்போதும் அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்குப் பொருள்கள் பெரும்பாலும் விற்கப்படுவதில்லை. எனினும் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள் மீது குறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லறை விலை என்பது அநியாயமான விலை என்பதுதான் உண்மை. அரசாங்க விதிமுறையின்கீழ் அச்சிடப்பட்டிருக்கும் அதிகபட்ச விலையை நம்பி பொருள்களை வாங்குகிற மக்கள் மூன்று நிலைகளில் ஏமாற்றப்படுகிறார்கள்.

எந்த ஒரு பொருளுக்கும் உற்பத்தி விலை அல்லது அடக்க விலை என்பதுதான் அடிப்படையானது. இந்த அடக்க விலையோடு நிறுவனங்கள் விரும்புகிற லாபத்தையும் சேர்த்தால் வருவதுதான் விற்பனை விலை.

இந்த விற்பனை விலையோடு மதிப்புக்கூட்டு வரி, விற்பனை வரி, சொகுசு வரி என்ற பல்வேறு வரிகளில் பொருந்தும் வரிகள் அனைத்தையும் சேர்த்தால் வருவதுதான் அதிகபட்ச சில்லறை விலை.

ஒரு பொருளின் அடக்க விலை என்ன என்பது சிதம்பர ரகசியமாகத்தான் இருக்கிறது. செல்போன் ஒன்றின் விற்பனை விலை இரண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டால், அதன் அடக்க விலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது கூவத்தில் முத்தெடுக்க மூழ்குவதைப் போன்றதுதான்.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண செல்போன்கள் பன்னாட்டு நிறுவனங்களால் மூவாயிரம் ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டன. அதே நிறுவனங்கள் இப்போது பல வசதிகள் உடைய நவீன செல்போன்களை சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன. அப்படியானால் இதைவிடப் பயன்பாடு குறைந்த செல்போன்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அதிக விலைக்கு விற்கப்பட்டபோது அந்த நிறுவனங்கள் கொள்ளை லாபமல்லவா ஈட்டியிருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தி செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கின்ற அரசாங்கத்தால் அவர்கள் தயாரிக்கும் பொருள்களின் அடக்க விலை என்ன என்று கேட்க முடியாதா? ஒரு வல்லுநர் குழு அமைத்து பொருள்களின் அடக்க விலையைச் சரிபார்த்து அதற்கேற்ப விற்பனை விலையை நிர்ணயிக்கச் சொல்வது அரசாங்கத்தால் இயலாத காரியம் அல்ல. ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தபோது பொதுமக்கள் தெரிந்தே சுரண்டப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவில் சுரண்டப்படுகிறோம் என்பது தெரியாமலேயே சுரண்டப்படுகிறார்கள்.

இவ்வாறு அதிக லாபம் வைக்கப்பட்டு விற்பனை விலை முடிவாகும்போதே மக்கள் ஏமாற்றப்படும் படலம் தொடங்கிவிடுகிறது. பிறகு விற்பனை விலையோடு அப்பொருளுக்குப் பொருந்துகின்ற அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்டு அதிகபட்ச விலை அச்சிடப்படுகிறது.

மாநிலங்கள் விதிக்கின்ற வரிகளில் மிகுந்தவேறுபாடு இருப்பதால், அதிகபட்ச வரி எந்த மாநிலத்தில் இருக்கிறதோ அந்த வரியையும் சேர்த்து அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் குறைந்த வரிவிதிப்பு செய்யப்படும் மாநில மக்களும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதை மக்கள் ஏமாற்றப்படும் இரண்டாம் நிலை என்று கொள்ளலாம்.

சில பொருள்கள் மாத்திரம் ஒரு குறிப்பிட்ட மாநில விற்பனைக்கு மட்டும் என்று அச்சிடப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

மொத்த வியாபாரிகள் பொருள்களை நிறுவனங்களிடமிருந்து வாங்கி மாநிலத்திற்கேற்ப வரியையும் ஓரளவு லாபத்தையும் சேர்த்து சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறார்கள்.

90 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட், சில்லறை வியாபாரியிடம் வந்து சேரும்போது, அது அவருக்கு 80 ரூபாய்க்குக் கிடைத்ததா அல்லது இன்னும் குறைந்த விலைக்குக் கிடைத்ததா என்பது பொருள் வாங்குபவருக்குத் தெரிவதில்லை. அவரும் 90 ரூபாய்க்கே அதை விற்கிறபோது மக்கள் கடைசி நிலையிலும் ஏமாற்றப்படுகின்றனர்.

ஒரு பொருளின் அடக்க விலை என்ன என்பதை அரசு தெரிந்து கொள்வதில்லை. அதன் விற்பனை விலை மற்றும் லாபம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வதிலும் அரசுக்கு ஆவல் இல்லை. விற்கப்படும் மாநிலத்துக்கு உரிய வரிகள் மாத்திரம்தான் அதிகபட்ச விலையில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றியும் அரசுக்குக் கவலை இல்லை. அரசுக்குச் சேரவேண்டிய வரிகளை நிறுவனங்கள் செலுத்திவிட்டால் போதும் "என் கடன் வரிவசூல் செய்வதே' என்பதுதான் அரசின் நிலைப்பாடா என்ற ஐயம் எழுகிறது.

ஒரு பொருளின் அதிகபட்ச சில்லறை விலை உண்மையான விலையைவிட பத்து முதல் முப்பது சதவீதம் வரை அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, மக்கள் தொடர்ந்து ஆளாக்கப்பட்டுவரும் இந்த மோசடியின் தாக்கம் சற்றும் குறைந்ததல்ல. அதிகபட்ச விலையால் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க உடனடித் தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் காரணத்தால் மட்டும் ஓர் ஆட்சி மக்களாட்சி ஆகிவிடாது. மக்களைச் சுரண்டாமல் பிறரையும சுரண்டவிடாமல் கண்மணியின் பாவைபோல் மக்களைக் காக்கும் ஆட்சியே மக்களாட்சி என்று வரலாறு வழிமொழியும்.

Monday, February 15, 2010

ஆமை வேகத்தில் பள்ளி கட்டண நிர்ணயிப்பு குழு: கட்டண வசூலில் பள்ளிகள் தீவிரம்

பள்ளிகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவது, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 75 சதவீத பள்ளிகள் ஏற்கனவே கட்டணங்களை வசூலித்து முடித்த நிலையில், மீதியுள்ள 25 சதவீத பள்ளிகளும் கட்டண வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பள்ளிகளின் வேகத்தைக் கண்டு, என்ன செய்வதென புரியாமல் பெற்றோர் திகைப்படைந்துள்ளனர்.


தனியார் பள்ளிகள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தி, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும், தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், கல்வித் துறை அதிகாரிகள் பலர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். குழுவின் செயல்பாடுகள் குறித்து, சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளைக் கண்டு, பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். "குழு தீர்மானிக்கும் கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்; கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். குழுவின் விதிமுறைகளை மீறும் பள்ளி நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்' என்றெல்லாம் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்தச் சட்டம், தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான அதிகார செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, குழுவின் அதிரடி நடவடிக்கையால் பெற்றோருக்கு நிம்மதி கிடைக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், குழு அமைக்கப்பட்டதில் இருந்து, அதன் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் இருந்து வருகின்றன. வரும் கல்வியாண்டுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு துவங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளிடம், கட்டண வசூலிப்பு புள்ளி விவரங்களை பிப்ரவரி 5ம் தேதிக்குள், குழு முன் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. தனியார் பள்ளிகளின் அமைவிடம், மொத்த பரப்பளவு, உள்கட்டமைப்பு வசதிகள், கட்டண வகைகள் உட்பட 41 விவரங்கள் கேட்கப்பட்டன. இந்த விவரங்களை அனைத்து பள்ளிகளும் தந்துள்ளதாக, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் சமர்ப்பித்த கட்டணங்கள் மீது, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.


குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை எதிர்பார்த்து காத்திருக்காமல், 75 சதவீத பள்ளிகள் ஏற்கனவே கட்டணத்தை வசூலித்து முடித்துள்ளன; மீதமுள்ள 25 சதவீத பள்ளிகளும், தற்போது கட்டண வசூலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பெற்றோர் என்ன செய்வதென புரியாமல், திகைப்படைந்துள்ளனர். "மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை இப்போது மேற்கொள்ளக்கூடாது; மே முதல் வாரத்தில் தான் இந்தப் பணிகளை துவக்க வேண்டும்' என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் தெரிவித்தது. ஆனால், இதை யாருமே காதில் வாங்காமல், கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.


புதிய கட்டணம் எப்போது அமலுக்கு வரும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "தனியார் பள்ளிகளிடம் இருந்து பெற்ற ஆவணங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும், பள்ளி வாரியாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின், தனியார் பள்ளிகளின் இட அமைப்பு, உள்கட்டமைப்பு, நிர்வாகத்திற்கு ஏற்படக்கூடிய அடிப்படைச் செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்' என்றார். இந்தப் பணிகள் முடிய இரண்டு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. அதன் பின், மே மாதத்தில் புதிய கட்டண அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் இல்லாமல், அதிரடியாகச் செயல்பட்டு, நியாயமான கட்டணத்தை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்

'பத்ம' விருதை புறக்கணித்த பெண் எழுத்தாளர் : இவர், இப்படி..


அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும், "பத்ம' விருதுகளை பெற, தகுதி இல்லாதவர்களும் முயற்சிக்கின்றனர். இதனால், அந்த விருதுகளின் புகழ் மங்கத் தொடங்கி உள்ளது. தானே திவாலானதாக ஒப்புக் கொண்ட தொழிலதிபர் சந்த் சிங் சத்வால் என்பவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது, இதற்கான சிறந்த உதாரணம்.


ஆனால், இவ்விருதை பெற தகுதியுடையவர்களாக இருந்தும், அவற்றை மறுத்தவர்களும் உள்ளனர். பிரபல எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி மற்றும் புகழ்பெற்ற கதாசிரியர் பாதல் சிர்கார் ஆகியோர் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த 1971ம் ஆண்டு, சொந்த காரணங்களுக்காக, தனக்கு வழங்கப்பட இருந்த பத்மஸ்ரீ விருதை மறுத்தவர் பாதல் சிர்கார். அதே போன்று, உள்துறை அமைச்சகம் இரண்டு முறை தொடர்பு கொண்டு, பத்மபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தும், அதை மறுத்தவர் கிருஷ்ணா சோப்தி. தற்போது பாகிஸ்தானாக அமைந்துள்ள குஜராத்தில் பிறந்தவர் கிருஷ்ணா சோப்தி(85). இவர், இந்தி மொழி கட்டுரையாளராகவும், எழுத்தாளராகவும் தன் முத்திரையை பதித்தவர். 1966ம் ஆண்டு வெளியான இவரது, "மித்ரோ மாராஜனி' என்ற நாவல் மிகவும் பிரபலம். வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்படும், "கதா சூடாமணி விருது' 1999ம் ஆண்டு முதன் முதலில் இவருக்கு தான் வழங்கப்பட்டது. இதைத் தவிர, 1982ம் ஆண்டு, "சிரோமணி' விருது மற்றும் 2008ம் ஆண்டு, "ஷாலகா விருது' ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணா சோப்தி எழுதிய, "சிந்தாகிநாமா' என்ற நாவலுக்காக, அகடமி விருதுகளில் உயர்ந்த, "சாகித்ய அகடமி' விருது வழங்கப்பட்டது. இவரது பல படைப்புகள் தற்போது ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் கிடைக்கிறது. ஒரு கருப்பொருளின் உண்மை, ஆழத்தை உணர வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் அவரின் நேர்மை, அவரது படைப்புகளில் பிரதிபலிக்கும். கிருஷ்ணா சோப்தியின் எழுத்து, பிரிவினை, புரட்சி, சமுதாய கொந்தளிப்பு, ஆண் - பெண் உறவு முறைகள் மற்றும் மனித மதிப்புகள் மாசுபாடு ஆகியவற்றை சுற்றியே அமையும். மண்டல மொழிகள் மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளர்கள் இடையேயான வேறுபாடு குறித்து கிருஷ்ணா சோப்தி கூறுகையில், "மண்டல மொழி எழுத்தாளர்கள், இன்று தேசத்தை மிகவும் இயல்பாக மற்றும் துல்லியமாக பார்க்கின்றனர். ஆங்கில மொழி எழுத்தாளர்களை விட மண்டல மொழி எழுத்தாளர்கள் தற்போது ஜனநாயகத்திற்கு மிகவும் நெருங்கியவர்களாக உள்ளனர். அதற்காக ஆங்கிலத்தில் எழுதுவது சரியில்லை என்று கூறவில்லை. அவையும் நன்றாக உள்ளன' என்றார்.

இனவெறியா? இனப்பற்றா?

ஆஸ்திரேலியாவின்இனவெறிக் கொள்கை உலகம் அறிந்ததுதான். 1973 வரை அந்நாட்டில் "வெள்ளை ஆஸ்திரேலியா' நிறஒதுக்கல் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர். வெள்ளையர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை மறுத்து வந்தனர். அந்நாட்டின் உண்மையான குடிமக்களான பழங்குடி மக்களை நீண்டகாலம் அந்நாட்டு "மக்கள்தொகை'க் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர்.

÷அறிவியல் முன்னேற்றமும், நாகரிக வளர்ச்சியும் கூட அவர்களைத் திருத்தவில்லை; அண்மைக்காலமாக இவர்களின் கோபம் இந்தியர்களின் மீது திரும்பியிருக்கிறது. இன்னும் தாக்குதல் தொடர்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்திய இளைஞர்களும், மாணவர்களுமே இலக்காகியுள்ளனர்.

÷ஆஸ்திரேலிய அரசு முதலில் இத்தகைய செயல்கள் நடைபெறவே இல்லை என்று மறுத்து வந்தது; தொடர்ந்து தாக்குதல் நடக்கவே இவை தனிப்பட்ட தாக்குதலே தவிர, இனவெறியால் நடந்ததில்லை என்று புதிய விளக்கம் அளித்தது. இதற்குப் பிறகு இப்படிப்பட்ட செயல்கள் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என்று கூறியது.

÷லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தியர்கள் மீதான தாக்குதல் பற்றி ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அப்போது கிருஷ்ணாவிடம் ஸ்மித் உறுதியளித்துள்ளார். அவ்வாறே குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் சுஜாதா சிங்குடன் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனையின்போது வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராயும் உடன் இருந்துள்ளார்.

÷இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், ஏற்கெனவே தாக்குதல் நடத்தியவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரவும் அந்நாட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் இந்தியத் தூதர் விவரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நாலரை லட்சம் இந்தியர்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பி விட்டனர். இன்னும் பலர் நாடு திரும்பத் தயாராக உள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

÷இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் இருநாட்டு அரசுகளும் நடந்து கொள்வது இந்திய மக்களின் தன்மானத்தை விலை பேசுவதுபோல இருக்கிறது. நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, "ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறுநாடுகளில் உள்ள பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்' என்று அறிவுரை கூறியுள்ளார்.

÷இப்படி கூறுவதற்கு ஒரு மத்திய அரசும், அதற்கொரு வெளியுறவுத் துறையும் தேவையா, என்ன? இது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல இருக்கிறது. அடிபட்டவன் புகார் அளித்தால், "இனிமேல் அடிக்கிறவனிடம் போக வேண்டாம்' என்று காவல்துறை கூறுவதுபோல இல்லையா?

ஆஸ்திரேலிய அரசு இன்னும் ஒருபடி மேலே போய்விட்டது. அந்நாட்டு விக்டோரியன் மாகாணத் தலைமை காவல்துறை அதிகாரி, மெல்போர்ன் நகரில் சர்வதேச மாணவர்கள் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு "அரிய' ஆலோசனை வழங்கியுள்ளார். எப்படி தெரியுமா? ""ஏழைபோல் நடியுங்கள்; பணக்காரர்களைப்போல காட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி நடந்து கொண்டாலே உங்கள் மீது யாரும் கைவைக்க மாட்டார்கள்...'' என்பதுதான் அந்த யோசனை.

÷இந்த யோசனையை விக்டோரியன் பிரதமர் ஜான் பிரம்பி வரவேற்றுள்ளார். "இப்படி யோசனை கூறப்படுவதால் வெளிநாட்டு மாணவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்று நினைக்கக் கூடாது. இனவெறித் தாக்குதலில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்' என்றும் அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

÷இப்படி இருநாட்டு அரசுகளும் "கண்ணாமூச்சி' ஆடுவதற்குக் காரணம் என்ன? இவர்களுடைய இயலாமை என்று கூறலாமா? அந்தந்த நாட்டு மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்; வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது. அதாவது, "பாம்பையும் அடிக்க வேண்டும்; கொம்புக்கும் நோகக் கூடாது'. எப்படியும் கொம்புக்கு நோகாது அல்லவா!

÷அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலிய கல்வித்துறை வரலாறு காணாத அளவில் அயல்நாட்டு மாணவர்களை ஈர்த்து வருகிறது. கல்வித்துறை மூலம் ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி வருவாய் அந்நாட்டு அரசுக்குக் கிடைக்கிறது. அந்நாட்டு அரசில் அதிக வருவாய் ஈட்டும் துறைகளில் மூன்றாவது இடத்தைக் கல்வித்துறை பெற்றுள்ளது.

÷ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 19 விழுக்காடு இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் 1,17,000 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

÷இந்நிலையில் இனவெறித் தாக்குதலால் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது 21 விழுக்காடு குறையும் எனவும், இதனால் அந்நாட்டு அரசுக்கு ரூ. 350 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் ஆஸ்திரேலிய சுற்றுலா கணிப்புக் குழுவின் தலைவர் பெர்னார்ட் சால்ட் கூறியுள்ளார்.

÷இந்தியா எவ்வளவு மழுப்பினாலும், கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆதிக்கம் செய்ததுபோல ஆஸ்திரேலியாவிலும் இனவெறி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்நாட்டின் கடந்தகால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும். இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படும்போது இதற்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

÷இதுபோலவே இனவெறி கொண்ட இலங்கை அரசு முன்னின்று நடத்திய தமிழினப் படுகொலையை இந்திய அரசு ஆதரித்தது; ஆயுதமும், ஆலோசனையும் வழங்கி உதவி செய்தது. ஐ.நா.வும், ஐரோப்பிய நாடுகளும், உலக மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசை எதிர்த்தபோதும் இந்தியா ஆதரித்து நின்றது. அப்போதே காந்தியம் இரண்டாம் முறையாகப் படுகொலை செய்யப்பட்டது.

÷1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படியும், 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின்படியும் இப்பிரச்னையில் தலையிடும் கடமை ஐ.நா.வுக்கு இருக்கிறது. எனினும் ஏதோ ஒரு நிர்பந்தத்தினால் அது தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து ஒப்பமிட்ட இந்தியாவும், இலங்கையும் அதற்கு எதிராகவே செயல்படுகிறது.

÷ஆஸ்திரேலியாவில் இனவெறியால் தாக்கப்படும்போது இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கும் இந்திய அரசு, அன்று தமிழினம் அழிக்கப்படும்போது, இலங்கையை ஆதரித்து நின்றது எந்த வகையில் நியாயம்? இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களின் தொப்புள்கொடி உறவுதானே ஈழத்திலும்.

÷வெறி யாருக்கு வந்தாலும் நல்லதல்ல; அவர்களையும், அடுத்து இருப்பவர்களையும் ஆட்டிப் படைக்கும்; அழிக்கும். அது மொழி வெறியாக இருந்தாலும், நிறவெறியாக இருந்தாலும், இனவெறியாக இருந்தாலும் அப்படியே! இது தனிமனிதராக இல்லாமல் கூட்டமாக இருந்தால் கேட்க வேண்டுமா?

பொதுவாக, பற்றுக்கும், வெறிக்கும் நூலளவு வேறுபாடுதான். இங்கே பற்றுக்கும், வெறிக்கும் வேறுபாடு தெரியாமல் பேசப்படுகிறது. மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும், இனப்பற்றும் எல்லோருக்கும் தேவையானது என்பதே மானிடவியலாளரின் கருத்தாகும்.

தமக்கென வரும்போது பற்றாகவும், அடுத்தவர்க்கு வரும்போது வெறியாகவும் பரப்புரை செய்யப்படுகிறது. மும்பை இந்தியர்களுக்குச் சொந்தம் என்பதும், மும்பை மராத்தியர்களுக்குச் சொந்தம் என்பதும் இப்படித்தான்.

இன்று உலக வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களின் வரலாறாக இருக்கிறது; எப்படியும் வெற்றி பெற்றுவிட்டால் அவன் செய்த தவறுகளும் நியாயமாகிவிடும். இன்று இனவெறியனாகச் சுட்டப்படும் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றிருந்தால் இன்று உலகம் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும். வேறு வழி?

இனப்படுகொலை புரிந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார்; அவர் செய்த அரச பயங்கரவாதம் அவரைத் தியாகியாக்கிவிட்டது. அவருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் படைத்தலைவர் சரத் பொன்சேகா தோல்வியடைந்ததால் துரோகியாகிவிட்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகனான வால்டேரை, "தேசப் பற்றற்ற நாடோடி' என்று தூற்றியபோது அவர் கூறினார்: ""தேசப்பற்று என்பது மற்றொரு தேசத்தை வெறுக்கும் குறுகிய மனப்பான்மையல்ல. நான் முதலில் மனிதன்; உலகத்தின் குடிமகன்; பிறகே பிரெஞ்சுக்காரன்...'' என்று ஒரே உலகக் கொள்கைக்கு அன்றே அடித்தளமிட்டார் வால்டேர்.

ஆனால் அது பிரெஞ்சுப் புரட்சியோடு போய்விட்டது. இப்போது இனவெறிக் கொள்கை ஆஸ்திரேலியாவையும், இலங்கையையும் பிடித்து ஆட்டுகிறது. "இது இன வெறியா? இனப்பற்றா?' என்று பட்டிமன்றம் நடத்தப்படுவதுதான் பரிதாபம்.

அன்னிய முதலீடு வரமா?​ சாபமா?

இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அன்னிய சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.​ கள்ளநோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.​ அமைப்பு முயன்று வருவது உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.​

கள்ளநோட்டுகளால் பொருளாதாரம் சீர்குலையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும்,​​ இந்தியப் பொருளாதாரத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து ஒன்றும் உள்ளது.​ இந்த ஆபத்து எவர் கண்ணுக்கும் தெரியாமல் பூதாகரமாக வளர்ந்தும் வருகிறது.

அன்னிய முதலீடு என்பதுதான் அந்த வளர்ந்து வரும் ஆபத்து.​ அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இதுவரை செய்துள்ள முதலீட்டின் அளவு சுமார் 85 பில்லியன் டாலர்கள் ​(ரூ.​ 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி)​ அந்த முதலீட்டின் சந்தை மதிப்பு சுமார் 154 பில்லியன் டாலர்கள் ​( ரூ.​ 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி).​

இந்திய ரிசர்வ் வங்கி கடைசியாக அளித்த தகவலின்படி இந்தியாவின் மொத்த அன்னியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 285 பில்லியன் டாலர்கள் ​( ரூ.​ 14 லட்சத்து 25 ஆயிரம் கோடி).​ இந்தக் கையிருப்பில் அன்னியப் பங்கு முதலீடுகள் மட்டுமல்லாமல் ஏற்றுமதி வருவாய்,​​ அன்னிய நாடுகளிடம் கடனாகப் பெற்ற தொகை,​​ வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நமது நாட்டுக்கு அனுப்பிய பணம் அனைத்தும் அடங்கும்.மிக எளிதில் வெளியேறக்கூடிய பங்கு முதலீட்டுப் பணம் மொத்த அன்னியச் செலாவணிக் கையிருப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இருப்பது பொருளாதார ரீதியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.​

ஒருவேளை அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டுத் திடீரென வெளியேற முற்பட்டால்,​​ பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை இது ஏற்படுத்தும்.​ இல்லை என்றால் அவர்கள் உடனடியாக வெளியேறாமல் தடுப்பதற்காக அரசாங்கம் அவர்களுக்குத் தேவையற்ற ​(நீண்ட கால முதலீட்டு வரி விலக்கு)​ சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும்.​ இதுபோன்ற நடவடிக்கைகள் முதலீடு செய்துள்ள நாடுகள் நம்மைச் சுரண்டவே வழிவகுக்கும்.இதுதவிர இந்தியாவில் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்தான் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நம்நாட்டில் வைத்திருப்பார்கள்.​

இந்தியப் பொருளாதாரத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும் அறிகுறி தென்பட்டாலும் உடனடியாகத் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.​ அதனை நாம் எவ்விதத்திலும் தடுக்க முடியாது.அன்னிய முதலீடு இந்தியாவுக்கு வருவதில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்கள் இதனை நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.​

சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்தியப் பொருளாதாரம் சிறிது தொய்வடைந்த கடந்த ஆண்டில்,​​ அதற்கு முந்தைய ஆண்டை விட அன்னிய முதலீடு கணிசமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.அன்னிய முதலீட்டைக் கவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதலீட்டுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு;​ உங்கள் முதலீட்டுக்கு சட்ட ரீதியாகவும் பாதுகாப்பு உண்டு என்ற வாக்குறுதிகளை அள்ளிவீசும் அமைச்சர்கள்,​​ அந்த முதலீடுகளால் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைச் சிந்திக்க மறந்துவிட்டனர்.​ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதற்கு அன்னிய முதலீடுகள் மிகச் சிறந்த உதாரணம்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மாறி தற்போதுதான் தொழில்துறை சிறிது முன்னேற்றமடைந்து வருகிறது.​ இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற வெளிநாட்டு முதலீடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.​ ஆனால் பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டு வரம்பை சமீபத்தில் ரூ.​ 600 கோடியிலிருந்து ரூ.​ 1,200 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.​

அன்னிய முதலீடு நாட்டுக்கு நலன் தரும் என்ற எண்ணத்தில் வரம்பை உயர்த்திக் கொண்டே செல்வது,​​ தெரிந்தே புதைகுழியில் விழுவதற்குச் சமம்.​ உள்நாட்டில் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்.​ ​​ ​ குறிப்பாக ஊழல் மலிந்த அரசு,​​ உள்கட்டமைப்புக் குறைபாடுகள்,​​ வருமான ஏற்றத்தாழ்வு,​​ விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவையே இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளாக உள்ளன.​ இந்தத் தடைகளை அகற்றினாலே இந்தியா நிச்சயமாக வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்.​

இது தவிர தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இளைய சமுதாயமும் உள்ளது.​ எனவே அன்னிய முதலீடுகளை மட்டுமே நம்பி ஆபத்தில் சிக்காமல்,​​ பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் மாற்றுப் பாதைகளிலும் கவனம் செலுத்தினால் ஏற்றம் நிச்சயம்.