Thursday, April 15, 2010

ஆட்சியாளர்கள் உணரத்தவறிய அவமானம்

உலகுக்கு உணவளிக்கும் உன்னதத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வறுமையிலும், வறட்சியிலும் வாழ வழியில்லாமல் தத்தளிக்கும் நிலை உருவாவது, தங்களின் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

நமது நாட்டில் கடந்த 2001-2006-ம் ஆண்டுவரை ஏறத்தாழ 11,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகள் தீவிரவாதிகள் செய்யும் கொலைகளுக்கு இணையாக எண்ணிக்கையில் உள்ளது என்று தற்கொலைகள் அதிக அளவில் நிகழ்ந்த  மகாராஷ்டிரம், ஆந்திரம், கேரள மாநிலங்களின் பத்திரிகைகள் அப்போது குறிப்பிட்டிருந்தன.இத்தகைய வேதனை, அவமான நிகழ்வுகள் எந்த மாநிலத்திலும் இனி ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் விவசாயத்தின் மீது அக்கறை கொண்டுள்ளவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. வறுமை, வறட்சி, தீராத மின்வெட்டு போன்றவற்றால் தமிழகத்தில் ஏறத்தாழ 80 சதவீத விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் கிணற்றில் ஊறும் சொற்ப நீரை நிலத்தில் பாய்ச்சுவதற்குக் கூட மின்சாரம் கிடைப்பதில்லை.இப்போது  விவசாயிகளின் நலன்காக்க பல ஆயிரம் கோடிகளில் பயிர்க்கடன் என்பது மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் அறிவிப்புகள். இந்த அறிவிப்புகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.விவசாயிகள் என்ற போர்வைக்குள் புகுந்திருக்கும் இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். 

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் கடன் தள்ளுபடி இவர்களுக்குத் தானே போய்சேரப் போகிறது.  பெரிய நிலச்சுவான்தார்களுக்குக் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வம்பில் மாட்டிக்கொள்ள வங்கிகள் விரும்புவதில்லை. ஆனால் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வங்கிகள் நிர்பந்திக்கின்றன. பொதுவாக விவசாயம்தான் தங்களுக்கு உணவும் உடையும் அளிக்கிறது என்ற மன நிலையில் உள்ள விவசாயிகள் யாரும் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிவிடலாம் என்று நினைப்பதில்லை. 

இடுபொருள்களின் விலை விவசாயிகளின் கைமீறிப்போய் விட்டன.விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கவில்லையே என்று உணவு தானியங்களிருந்து வணிகப் பயிர்களுக்கு மாறிய பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விற்றுக் கடனை அடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

 தேவையான தருணத்தில் வழங்கப்படாத கடனுதவிகள், தண்ணீருக்காகச் செலவிட்ட அபரிமிதமான தொகை, தொடர்ந்து விவசாய நலிவு, இதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு,  அதற்கான மருத்துவச் செலவுகள் என அடி மேல் அடியென மீளாக் கடன்களில் மாட்டி, சந்தை விலைக்குக் குறைவாக உடைமைகளை விற்கும் நிலைமைக்குத் தள்ளப்படும்போதுதான் விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். வறட்சியும், விளைச்சலின்மையும் மட்டுமே விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கை திசைமாறிப்போகக் காரணமல்ல. 

மீளாக்கடன்சுமையே பிரதான காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவசாயிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்பட மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள நேரடித்தொடர்பை உணர்வு பூர்வமாக மேம்படுத்துதல்; சமுதாய, பொருளாதார மற்றும் மனரீதியான பிரச்னைகளைக் கண்காணித்து அதைத் தீர்க்க ஆலோசனை வழங்குதல்; 

குறைந்தபட்ச ஊதியச்  சட்டம்,  கடன் சட்டங்கள் போன்றவற்றைத் தீவிரமாக அமல்படுத்தி, மீறியவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குதல்; விவசாயத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளை இன்னும் அதிக அளவில் அறியப்படுத்துதல்; ஆரம்ப சுகாதார வசதிகள், கல்வியறிவு, தொழிற் கல்வியறிவு போன்றவற்றை அதிகரித்தல்; மானிய பலன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைய ரேஷன் கடைகள் போன்ற அமைப்பைக் கிராமங்களில் ஏற்படுத்துதல்; வறட்சியால் உண்மையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நிவாரணம் மற்றும் வறட்சியைச் சமாளிக்க நீண்டகாலத் திட்டத்தையும் ஏற்படுத்துதல் அவசியம்.

ஏழை மக்களின் உயிர் காக்க உருவாக்கப்பட்ட திட்டம் போன்று விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பதற்குப் புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆள்பவர்கள் நினைத்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு.  விவசாயிகளும், தொழிலாளர்களும் ஏழைகளாய் இருக்கும்வரைதான், அவர்களின் வாக்கை விலை கொடுத்து வாங்க முடியும் என்று ஆள்பவர்களும், ஆளப்போகிறவர்களும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

உலகுக்கு உணவளிக்கும் உன்னதத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வாழ வழியில்லாமல் தத்தளிப்பது,  நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம் என்பதை இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் உணரத் தவறிவிட்டனர்.  இந்த அவமானம் தங்கள் காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட வேண்டும்.