Tuesday, May 4, 2010

இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு, அந்த ஊழியர் இதுவரை செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை ஆகியவற்றைக
சென்னை, மே 4: புதிதாக அரசுப் பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு இனி பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பணப் பலன்கள் கிடைக்காது என்பதை தமிழக அரசு உணர்த்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு,  ஓய்வு பெறும்போது பணிக்கொடை, சேம நல நிதி ஆகியவை வழங்கப்படும். தொடர்ந்து ஓய்வூதியமும் கிடைக்கும்.
ஊழியர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், இந்தப் பணப் பலன்கள் முழுவதும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படுவதுடன், பணிக்கொடையும், தொடர்ந்து குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறும் தகுதிக் காலத்துக்கு முன்பே ஊழியர் இறந்து விட்டால், பணிக்கொடையும், குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.3,050-ம்,அதற்கான அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்ப்டும்.
ஆனால்,1.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பலன்கள் கிடைக்காது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டமே இதற்குக் காரணம்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும் மொத்தத் தொகையும் அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிதி மேலாளர்களிடம் வழங்கப்படும்.
அந்த நிதி மேலாளர்கள், இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். ஊழியர் ஓய்வு பெறும் நாளில், பங்குச் சந்தையில் ஊழியரின் பங்கு மதிப்பு எவ்வளவோ, அதன் அடிப்படையில் மட்டுமே ஊழியருக்கு தொகை வழங்கப்படும். மாத ஓய்வூதியம் கிடையாது.
இந்த சட்ட முன்வடிவு 2003-ல் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று வரை இது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.
எனினும், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர பிற மாநிலங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்து விட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே சட்டம் நிறைவேற்றப்படாத நிலையில், திட்டத்தில் இணைந்து, பின்னர் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பது பெரும் பிரச்னையாக உருவானது.
எனவே, கடந்த மே 2009-ல் மத்திய  அரசு  ஒரு நிர்வாக ஆணையைப் பிறப்பித்தது.  அதன்படி, சட்டம் நிறைவேறும் வரை, ஏற்கெனவே உள்ள  திட்டத்தின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த ஊழியர்களுக்கும் வழங்கும்படி  உத்தரவிட்டது.  எனவே, 1.1.2004-க்குப் பின் மத்திய அரசுப் பணியில் சேர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, பணி செய்த காலத்துக்கான பணிக் கொடை வழங்கப்பட்டதுடன், குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியமும்  வழங்கப்பட்டு  வருகிறது.
ஆனால், தமிழக அரசு  ஊழியர்களுக்கு இந்தச் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த 25.8.2009 அன்று தமிழக அரசு, கணக்கு தணிக்கை துறைக்கு ஒரு கடிதம் (எண்: 29593ஏ)  அனுப்பியுள்ளது. அதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, உயிரிழந்த  அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு, அந்த  ஊழியர் இதுவரை செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, 8 சதவீத வட்டியோடு வழங்கினால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளது.
இதனால், புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், பணியில் சேர்ந்த  ஊழியர்கள், பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை கிடைக்காது என்பதை தமிழக அரசின் இந்தக் கடிதம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு  அரசு  ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் கூறியதாவது: பல ஆண்டுகள் அரசுப் பணியில் உழைத்து ஓய்வு பெறும் காலத்தில் அல்லது ஊழியர் பணிக் காலத்தில் உயிரிழந்தால் கூட, அவரின் குடும்பத்துக்கு இதுநாள் வரை இருந்து  வந்த பொருளாதார பாதுகாப்பை இந்தப்  புதிய ஓய்வூதியத் திட்டம் அடியோடு சீர்குலைக்கிறது என்றார்.
மத்திய அரசு  ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைபாண்டியன் கூறும்போது,   மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் சேம நல நிதி இப்போது ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் அரசிடம் உள்ளது. இந்த மொத்தப் பணத்தையும், இனி புதிதாக பணியில் சேரும் ஊழியர்களின் சேமிப்புத் தொகையையும், பங்குச் சந்தை சூதாட்ட களத்துக்கு கொண்டு போவதற்காகவே இந்தத் திட்டம் வந்துள்ளது என்றார்.