-
Thursday, May 20, 2010
பயணம் எங்கே...?
'தென்னையில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா' என்று கேட்பார்கள். கட்டும் என்று நிரூபித்திருக்கின்றன சமீபகாலத்திய பல உலக நிகழ்வுகள். கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோலாலம்பூரில் மட்டுமா? உலகமெங்கும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் எல்லாம் ஒரே குழப்பம். பயணிகளின் எதிர்பார்ப்பும் கவலையும் தேங்கிய முகங்கள். காரணம் - ஐஸ்லாந்திலுள்ள ''அயயா பியா லா எர்குல்'' எரிமலை வெடித்துச் சிதறியதால் எழுந்த சாம்பல் மேகங்கள், மேற்கு ஐரோப்பா கண்டத்தின்மீது படர்ந்து காணப்படும் ஆபத்து.
மார்ச் 20-ம் தேதி சிறிய அளவில் வெடித்த இந்த எரிமலை, ஏப்ரல் 14-ம் தேதி மீண்டும் நெருப்பைக் கக்கியது. விட்டுவிட்டு வெடித்துச் சிதறும் இந்த எரிமலையிலிருந்து கிளம்பும் சாம்பல் மேகங்கள் கடந்த மூன்று நாள்களாக ஐரோப்பிய விமானப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கின்றன. எரிமலை வெடிப்பதால் வெளிவரும் சாம்பல் சிறிய கண்ணாடித் துகள்களைப் போன்றவை என்பதுடன் பாறைகள் துகள்களாக வெளிப்படுபவை என்பதால் விமானங்களின் இயந்திரங்களைப் பாழாக்கி, செயலிழக்கச் செய்யும் அபாயமும், விமானங்களின் இறக்கைகளைப் பழுதாக்கும் அளவுக்குப் பலமானவை என்பதும்தான் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்திருப்பதன் காரணம்.
இப்போது வெடித்திருப்பது சின்ன எரிமலைதான். அதற்கே இத்துணை பாடு. பிரச்னைகள். ஐஸ்லாந்தில் கட்லா என்கிற மிகப்பெரிய எரிமலை எந்த நேரமும் வெடித்துச் சிதறக் காத்திருக்கிறது. சாதாரணமாக 40 முதல் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடித்துச் சிதறும் இந்தக் கட்லா எரிமலை கடந்த முறை 1918-ல் வெடித்தது. அதுமட்டுமல்ல,''அயயா பியா லா எர்குல்''எரிமலை வெடிக்கும்போது, அருகிலுள்ள கட்லாவையும் வெடிக்கத் தூண்டுவது வழக்கம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
விமானப் போக்குவரத்து ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. மனிதர்களை இணைத்தது என்பது மட்டுமல்லாமல், பூகம்பம், பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள் என்று ஏற்படும்போது உடனடியாக உலகிலுள்ள எந்தவொரு நாட்டுக்கும் உதவிகளை அனுப்பி உயிர்களைக் காப்பாற்ற விமானப் போக்குவரத்து மிகவும் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. இன்று உலகமயமாக்கல், உலகப் பொருளாதாரம் என்றெல்லாம் நாம் பேசுவதற்கு அடிப்படைக் காரணமே விமானப் போக்குவரத்தும், தகவல் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியும்தான்.
விஞ்ஞானம் வளர்ச்சியையும், வளர்ச்சி வசதியான வாழ்க்கைத் தரத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த வளர்ச்சி என்பது நிரந்தரமான வளர்ச்சியாக இல்லாமல் போவதற்கான காரணங்களை நாம் சிந்திக்கலாகாது என்று இருந்தால் எப்படி? போக்குவரத்துத் துறை மற்றும் தகவல் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியால், தொலைதூரத்தில் உள்ள உற்பத்தியையும், வணிகத்தையும் நம்பி அமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைத்தரம், இவை துண்டிக்கப்பட்டாலோ, ஸ்தம்பித்தாலோ சொல்லொணா துயரத்துக்கு ஆளாகாதா?
எங்கேயோ அமெரிக்க நாட்டில் பல ஆயிரம் பேர் வீட்டுக் கடன் தவணையைக் கட்டாமல் போனதன் விளைவை உலகம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவை உலகளாவிய பயணிகள் எதிர்கொள்கிறார்கள். இதைவிடக் கடுமையான பேராபத்துகள் காத்திருக்கின்றனவே, நாம் என்னதான் செய்யப் போகிறோம்?
சூரியமண்டலப் புயல் எந்த நொடியும் ஏற்படக்கூடியது என்கிறார்கள் வானவியல் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து அளப்பரிய மின்சாரம் உருவாகி எல்லா கிரகங்களையும் தாக்கும்போது, நமது டிரான்ஸ்ஃபார்மர்களில் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள எல்லா மின் இணைப்புகளும் வெடித்துச் சிதறிவிடும். இதன் விளைவிலிருந்து மீள பல ஆண்டுகள் ஆகும். சிலவேளை மீள முடியாமலே உலகம் இருண்டு போகவும் வாய்ப்புண்டு.
பிராண வாயுவைப்போல, இல்லாமல் போகும்போதுதான் மின்சாரத்தின் இன்றியமையாமையும் நமக்குப் புரியப் போகிறது. மின்சாரம் இல்லாவிட்டால், எண்ணெய்க் கிணறுகளிலிருந்து பெட்ரோல்கூட எடுக்க முடியாது. விவசாயம், உற்பத்தி, வணிகம் என்று ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து விடும். ஏற்கெனவே, எண்ணெய்க் கிணறுகள் வற்றினால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் உலகம், எரிசக்திக்கு நம்பி இருக்கும் மின்சாரமும் இல்லாத நிலைமை ஏற்பட்டால் என்ன செய்யும்?
மரபுசாரா எரிசக்தியின் உற்பத்திச் செலவு அதிகம். உற்பத்தி அளவும் குறைவு. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்டோம். குறைந்த செலவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் வாழப்படித்த மனிதனால் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைப் பயன்படுத்தி இதே வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்த முடியுமா என்பது இன்னொரு கேள்விக்குறி.
வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொண்டு கற்பனைக்கு எட்டாத தூரத்தை மனிதன் விஞ்ஞானத்தின் உதவியுடன் எட்டிப்பிடித்து விட்டது நிஜம். ஆனால் கட்டிய கட்டடம் பலமான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்பட்டதல்ல என்பதை சாம்பல் மேகங்கள் 'கோடி' காட்டிவிட்டன. இனி ஏர்பிடித்து உழுவது, மாட்டுவண்டிப் பயணம் போன்றவைகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தூரத்துக்குப் போய் விட்டிருக்கிறோம். இந்தப் பயணம் எங்கே போய் முடியப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
ஆரம்பப் பள்ளியில், ஒரு நீதிக் கதையைப் போதிப்பார்கள். ஒரு குளம், அதில் மூன்று மீன்கள். அவை, வருமுன் காப்போன்; வந்ததும் காப்போன்; வந்தபின் காப்போன். இதில் நாம் யாராக இருக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி