-
Thursday, June 10, 2010
போபால் விஷவாயு தீர்ப்பில் வியப்பென்ன? ஆர்.ரங்கராஜ் பாண்டே
ஒன்றல்ல... ரெண்டல்ல... 15 ஆயிரம் பேரை பலி கொண்ட போபால் விஷ வாயு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மத்திய அரசு முதல், சாமானிய மனிதர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உணர்ச்சிவசப் படாமல், பிரச்னையை கூர்ந்து நோக்கினால், தீர்ப்பில் வியப்பதற்கு எதுவும் இல்லை என தெரியவரும்.
கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஒரு கறுப்பு ஞாயிறு நள்ளிரவில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. போபாலில் உள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கசிந்த மித்தேல் ஐசோசயனைடு விஷவாயு, 20 ஆயிரம் உயிர்களை பலி கொண்டது. தாய்ப்பாலைக் கூட விஷமாக்கிய அந்த விபரீதத்துக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது. புலனாய்வு செய்தது சி.பி.ஐ., நிறுவனம். வழக்கை விசாரித்தது, போபால் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் மோகன் பி.திவாரி. அன்றைய தினம், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேசுப் மகிந்திரா மற்றும் அதிகாரிகள் என, எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசுத்தரப்பு சாட்சிகளாக 178 பேர் விசாரிக்கப்பட்டனர். 3,008 ஆவணங்களை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எட்டு பேர் சாட்சியம் அளித்தனர். 1987ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொசுறு தொகையாக ஏதோ அபராதமும் விதிக்கப்பட்டது. சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அங்கேயே ஜாமீனில் விடப்பட்டனர். சம்பவத்தின் கொடூரத்தை நினைத்துப் பார்க்கும் யாருக்கும், தண்டனையின் அளவைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால், சட்டத்தின்படி தான் ஒரு மாஜிஸ்திரேட்டால் தீர்ப்பளிக்க முடியும். உணர்ச்சிவசப்பட்டு எதுவும் செய்ய முடியாது. அந்த வகையில், தவறு தீர்ப்பில் இல்லை; பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளில் தான் இருக்கிறது. குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ, 336, 337, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், பிரிவு 304 ஏ என்பது, கவனக் குறைவு காரணமாக, அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றியது. இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டு சேர்த்து என்பது தான். அடுத்து சேர்க்கப்பட்ட 336வது பிரிவு, அலட்சியம் காரணமாக அடுத்தவரின் உயிருக்கு, பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பவர்களுக்கான தண்டனை பற்றியது. இதில் அதிகபட்ச தண்டனையே மூன்று மாதங்கள் சிறை, 250 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து. இந்திய தண்டனைச் சட்டம் 337வது பிரிவு, கவனக் குறைவான செயலால் அடுத்தவருக்கு காயம் ஏற்படுத்துவோர் மீதான தண்டனை பற்றியது. இதற்கு அதிகபட்ச தண்டனை ஆறு மாதங்கள் சிறை, 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து என்பது தான். அடுத்தது 338வது பிரிவு. இது, அலட்சியத்தால் அடுத்தவர்களுக்கு கொடுங்காயம் ஏற்படுத்துபவர்களுக்கான தண்டனையை விளக்குகிறது. இந்தப் பிரிவின்படி அதிகபட்ச தண்டனை இரண்டாண்டுகள் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.
இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால், மாஜிஸ்திரேட்டால் வேறு எப்படி தண்டனை வழங்கியிருக்க முடியும்? அதிகபட்சமாக அவர் என்ன செய்திருக்கலாம் என்றால், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடாமல், தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கலாம். அப்படி உத்தரவிட்டிருந்தால் 57 மாதங்கள் (நாலே முக்கால் ஆண்டு) தண்டனை அனுபவித்திருக்க முடியும். இந்த வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ மட்டுமின்றி, நேரடியாக 304வது பிரிவிலேயே குற்றம் சாட்டலாம் என்பது சி.பி.ஐ.,யின் முயற்சி. 304வது பிரிவின் தண்டனை பகுதி 2, "சாவு நேரலாம் எனத் தெரிந்தும், ஆனால், உள்நோக்கம் இல்லாமல் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு' அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கலாம் என வரையறுக்கிறது. ஆனால், "இந்த வழக்கில் 304வது பிரிவைப் பயன்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை' என, 1996ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, தலைமை நீதிபதி அஹ்மதி, மஜும்தார் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தள்ளுபடி செய்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டே நீர்த்துப்போகச் செய்த ஒரு வழக்கை, பாவம், மாஜிஸ்திரேட் கோர்ட்டால் என்ன செய்துவிட முடியும்?
- ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிக்கையாளர்