Thursday, June 17, 2010

அருகி வரும் உறவுகள்...


நம் நாட்டில் பெரும்பாலான குடும்பத்தினர் ஓரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதன் காரணமாகவும், உறவினர்களிடமிருந்து விலகிப் போகும் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் உறவுகள் அருகி வருகின்றன.

குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, மைத்துனன் போன்ற உறவுகள் பல உண்டு. காதணி விழாவில் இருந்து, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா என எந்த விசேஷம் என்றாலும்கூட, தாய்மாமன் சீர்வரிசை கொண்டுவந்து தனது உறவின் பலத்தை நிரூபிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது.

ஆனால், இன்று ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பிறப்பதாக எடுத்துக்கொண்டால், அந்தக் குழந்தைக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவு இல்லாமல் ஆகிவிடுகிறது. அது வளர்ந்து பெரியவளாகி, அதற்குத் திருமணமாகி குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு தாய்மாமன், பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா போன்ற உறவுகளும் இல்லாமலே போய்விடுகிறது.

வருங்காலங்களில் இதே நிலை நீடித்தால் தாய்மாமன் உள்ளிட்ட முக்கிய உறவுகள் எல்லாம் பல சந்ததியினருக்குத் தெரியாமலே போய்விடும்.

அண்ணன், தம்பிகளிடையே திருமணமான சில ஆண்டுக்குள்ளே சொத்துகள் பிரிக்கப்படும்போது உறவுகளும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டால், இரு வீட்டிலும் உள்ள சிறு குழந்தைகளுக்கு சித்தப்பா, பெரியப்பா உறவு முறைகளுடன் பழகும் வாய்ப்புகள் இல்லாமலே போய்விடுகிறது.
முன்பெல்லாம் ஓர் இல்லத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அதற்கு முந்தைய நாளே உறவுகள் எல்லாம் கூடி, அந்த வீடே களைகட்டிவிடும். ஆனால், இப்போது உறவுக்குள் உள்ள இடைவெளியாலும், உறவுகளின் குறைபாட்டாலும், நண்பர்களும், உடன் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களும் மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் வருங்காலச் சந்ததியினரிடம் பணம் இருக்கும். பாசம் இருக்காது; பண்பாடு தெரியாது. உறவினர்கள் யாரேனும் அருகிலே இருந்தாலும்கூட அவர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். உறவுமுறைகளும் மறைந்து போய்விடும். நம் கலாசாரம், பண்பாட்டின் அடையாளங்கள் மறைந்து போய்விடும்.

இன்று பழைய அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் காட்சிப் பொருளாகவும், நினைவுச் சின்னங்களாகவும்தான் உள்ளன. அதன் மறுசுழற்சி மிக்சியாகவும், கிரைண்டராகவும் மாறிவிட்டதால், அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் புதிய சந்ததியினருக்குத் தெரியாமலே ஆகிக் கொண்டிருக்கிறது. இதே நிலைதான் உறவுகளுக்கும் ஏற்படும்.

முன்பெல்லாம் பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகளுக்கு, கோயில் திருவிழா அழைப்புக்கு என வெளியூரில் இருக்கும் உறவுகளுக்கு கைப்பட கடிதம் எழுதுவர். அதில் ஓர் உயிரோட்டம் இருக்கும். ஆனால், இன்று இ-மெயில், குறுந்தகவல் என எத்தனை வந்தாலும் அடுத்த விநாடியே சிந்தையில் இருந்து மறைந்து விடுகிறது.
கடிதத்தில் தனது உறவு முறைகள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என நலம் விசாரிப்பதால் உறவுகள் பலப்பட்டு வந்தன. அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஊரில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்து சேர்வர். திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் உறவினர்களுக்கு விருந்து அளிப்பர். இதன்மூலம் உறவுகள் பலம் பொருந்தியதாகக் காணப்படும். இதெல்லாம் இன்றும் கிராமத்து அளவில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், படித்தவர்கள் மத்தியில்தான் இந்த உறவில் விரிசலே ஏற்படுகிறது. அவசர யுகத்தில், கணவன் மனைவியேகூட, முழுமனதோடு நேரம் ஒதுக்கித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எந்த உறவினர் வீட்டுக்குச் சென்றாலும்கூட, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் சென்றுவிட்டு, உடன் அவசர அவசரமாகச் சென்றுவிடுவதால், அங்கு வந்திருக்கும் உறவினர்கள் பலருக்கு யார் இவர் என்ற விவரங்கள்கூட தெரியாமலே போய்விடுகிறது. குழந்தைகளுக்கும் உறவுகளைப் பற்றி தெரியாமலே போய்விடுகிறது.
உறவுகள் சிறக்க வழிதான் என்ன? நம் நாட்டில் உள்ள மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதேசமயத்தில், இருக்கும் உறவு முறைகளை எப்படிப் புதுப்பிக்கலாம் என்று நமது சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

மூடநம்பிக்கையாகத் தோன்றும் சில விஷயங்களுக்குகூட (சிவப்பு சேலை எடுத்துக் கொடுத்தல்) சுமார் ரூ. 200 செலவழித்து, சகோதரியின் இல்லத்தில் கொண்டுபோய் சேலை கொடுப்பதன் மூலம், அந்த இல்லத்தில் எவ்வளவு சந்தோஷம் பெருகும். பொங்கல் சீர்வரிசை கொடுத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதன்மூலம் உறவுகள் மேம்படும்.

அதிக பாடச்சுமையைக் காரணம் காட்டி குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டுமே செல்ல வலியுறுத்தாமல், உறவினர்கள் வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோடு, உறவினர்களை உறவு முறை சொல்லி அறிமுகம் செய்ய வேண்டும்.
முன்பெல்லாம் தலைமுறை தாண்டினாலும் வரப்புகள் பிரிக்கப்படாமல் இருந்தது. அந்த அளவுக்குப் பெருந்தன்மை ஓங்கியிருந்தது. காரணம், பணம் பின்னால் நின்றது. உறவுகள் முன்னால் நின்றன. அதே நிலை நீடிக்கக்கூடிய மனப்பக்குவம் வளர வேண்டும்.
முக்கிய விழாக்காலங்களில் இருந்து, பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, தேர்வில் வெற்றி பெற்றால் வாழ்த்து என அனைத்து விஷயங்களுக்கும், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுங்கள். அதில் உயிரோட்டம் இருக்கும்.

Thanks to Dinamani