-
Sunday, June 27, 2010
அரசு பஸ்களில் கட்டணம் பலவிதம் :வண்ணங்களில் மாற்றம்:பயணிகள்வாட்டம்
ஒரே தூரத்திற்கு செல்ல தமிழகத்தில் சாதாரண கட்டண பஸ்கள், எல்.எஸ்.எஸ்., பஸ்கள், டீலக்ஸ் பஸ்கள், பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரே தூரம்... ஒரே பயணி... ஆனால்... பஸ்கள் மட்டும் மாறுபடுகின்றன. பயணி ஏறும் பஸ்சுக்கேற்ப கட்டண விகிதம் மாறுபடுகிறது.
சாதாரண டவுன் பஸ்சில் ஏறினால், குறைந்தபட்ச கட்டணம் ரூ.2, எல்.எஸ்.எஸ்.,சில் ஏறினால் ரூ.2.50, தாழ்தள சொகுசு பஸ்சில் ஏறினால் ரூ.5 என கட்டண விகிதங்கள் அதிகரிக்கின்றன. கட்டணம் அதிகமாக கொடுப்பதால் பயணிகளுக்கு எவ்வித பிரயோஜனமும் இருப்பதில்லை; சாதாரண பஸ்களைப் போலவே, மற்ற பஸ்களும் அனைத்து ஸ்டாப்புகளிலும் நின்று செல்கின்றன; குறிப்பிட்ட தூரத்தை அடைய அதே நேரமாகிறது. ஆனால், கட்டணங்கள் மட்டும் அதிகம். இதன் காரணமாக, எல்.எஸ்.எஸ்., மற்றும் தாழ்தள சொகுசு பஸ்களில் பயணிக்க பொதுமக்கள் தயங்குகின்றனர். பயணிகள் இல்லாமல் காற்று வாங்குகிறது.
இதைப்பற்றிய முழு விபரம்:சாதாரண டவுன் பஸ் என்பது நகரில் இருந்து அதிகபட்சமாக 35 கி.மீ., தூரம் இயக்கப்படுகிறது. இதில், கி.மீ.,க்கு 28 காசுகள் வீதம் குறைந்தபட்சம் நான்கு கி.மீ., தூரத்தை முதல் ஸ்டேஜ்ஜாக கணக்கீடு செய்து, 2.00 ரூபாய் குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கடுத்த ஒவ்வொரு ஸ்டேக்கும் மூன்று கி.மீ., தூரத்தை ஒரு ஸ்டேஜ்ஜாக கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பஸ்கள், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன.
விதிமுறை மீறும் எல்.எஸ்.எஸ்.,: சாதாரண பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை காட்டிலும், கூடுதலாக 50 காசுகள் வசூலிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ. 2.50 காசாக எல்.எஸ்.எஸ்., பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எல்.எஸ்.எஸ்., என்பது "லிமிட்டெட் ஸ்டாப் சர்வீஸ்'. குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்ல வேண்டும். இந்த பஸ்கள் எல்லா நிறுத்தங்களிலும் நின்று சாதாரண டவுன் பஸ்களை போல செல்கின்றன.ஆனால், கட்டணம் மட்டும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு நீலம் மற்றும் பச்சை நிற வண்ணங்கள், வரி வரியாக பூசப் பட்டுள்ளன. இந்த அடையாளத்தை காட்டியும், பஸ்சில் உள்ள வண்ணத்தை காட்டியும், பஸ்சுக்கு முன் எல்.எஸ்.எஸ். என்று எழுதப்பட்டிருப்பதை காட்டியும் பயணியிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிக்கென்று எந்த வசதியும் இல்லை. சாதாரண பஸ்களில் கடைபிடிக்கப்படும் ஸ்டேஜ் மற்றும் கி.மீ., தூரமே இதில் கடைபிடிக்கப்படுகிறது.
"டீலக்ஸ்' பஸ்கள்: சாதாரண பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் "டீலக்ஸ்' பஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட வில்லை. எல்.எஸ்.எஸ்., பஸ்களின் குறைந்தபட்ச கட்டணத்தை குறிப்பிட்டு, அதிலிருந்து இரண்டு மடங்கு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, "டீலக்ஸ்' பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாய். ஆனால், சாதாரண பஸ்களில் பின்பற்றப்படும் ஸ்டேஜ்களே இதிலும் பின்பற்றப்படுகின்றன. பஸ்சின் முகப்பில் மட்டும் "டீலக்ஸ்' என்று எழுதப்பட்டிருக்கும். பயணிக்கென்று எந்தவொரு சொகுசு வசதியும் இல்லை.
தாழ்தள சொகுசு பஸ்: இவ்வகை பஸ்களில், படிக்கட்டுக்கள் தாழ்வாக உள்ளன. வயோதிகர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளன. பயணிகளுக்கு வேறெந்த வசதியும் இல்லை. குறைந்தபட்ச கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ் கட்டணத்தை விட, மூன்று ரூபாய் அதிகம்.குறிப்பிட்ட தூரத்தை அடைய, ஒரே நேரத்தை எடுத்துக் கொள்ளும் இவ்வகை பஸ்களில் வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பஸ்கள் பலவும் "டஞ்சனாகி' விட்டன; இந்நிலையில், தாழ்தள சொகுசு பஸ்களை அதிகளவில் இயக்குவதன் மூலம் கூடுதல் கட்டணங்களை பயணிகள் தலையில் சுமத்துவதாக, போக்குவரத்து துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழப்பும் கட்டணங்கள்: சாதாரண பஸ்; எல்.எஸ்.எஸ்., தாழ்தள சொகுசு பஸ்; எக்ஸ்பிரஸ் என பஸ்களின் பெயரை வெவ்வேறு விதமாக குறிப்பிட்டு, பஸ்களின் நிறத்தையும் மாற்றி, கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க, தமிழக அரசின் மோட்டார் வாகன விதிமுறையில் எந்தவொரு சிறு குறிப்பும் இல்லை. இதை எதிர்த்து பொதுநல அமைப்புகள் போட்ட வழக்குகள் அனைத்தும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.தமிழக அரசின் மோட்டார் வாகன விதிமுறையில், சாதாரண டவுன் பஸ்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் டவுன் பஸ்களை இயக்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்க மட்டுமே போக்குவரத்து துறையினர் பரிந்துரைக்க வேண்டும். அதன் பேரில், கலெக்டர் பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்; அத்தொகை, அரசு போக்குவரத்து கழகத்தால் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.எந்த பரிந்துரையோ, நிர்ணயமோ செய்யாமல் டீலக்ஸ், எல்.எஸ்.எஸ்., லக்சுரி, பாயின்ட் டூ பாயின்ட் போன்ற பெயர்களில் பல வண்ணங்களை பஸ்களுக்கு பூசி, விதவிதமான கட்டணங்களை பொதுமக்களிடம் வசூலித்து வருகிறது, அரசு போக்குவரத்து கழகங்கள்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:சாதாரண கட்டண பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. எல்.எஸ்.எஸ்., பஸ், ஒரு நிறுத்தம் விட்டு ஒரு நிறுத்தம் நின்று செல்ல வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், எல்லா நிறுத்தங்களிலுமே பயணிகள் கைகாட்டுவதால், எல்.எஸ்.எஸ்., பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதில்லை. இதனால், எல்.எஸ்.எஸ்., பஸ்கள், எல்லா நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.சாதாரண கட்டண பஸ்களை விட, எல்.எஸ்.எஸ்., பஸ்கள் புறப்பட்ட இடத்தில் இருந்து, சேருமிடத்தை 10 நிமிடங்கள் முன்னதாக அடைய நேர அட்டவணை உள்ளது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருவதால், சாதாரண கட்டண பஸ்கள், எல்.எஸ்.எஸ்., பஸ்கள் இரண்டின் போக்குவரத்து நேரங்களும் ஒரே மாதிரியாக அமைகின்றன.
தாழ்தள சொகுசு பஸ்களை பொறுத்தவரை, சாதாரண பஸ்களை விட பல்வேறு வசதிகள் உள்ளன. இப்பஸ்களில் பயணிக்கும்போது பயணிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். குண்டும், குழியுமான ரோடுகளில் செல்லும்போது, இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இருக்கை வசதி உள்ளது. படிக்கட்டுகள், அரை அடி உயரத்தில் ஏறி, இறங்க வசதியாக உள்ளது.சாதாரண கட்டண பஸ்கள் மற்றும் எல்.எஸ்.எஸ்., பஸ்களில் உள்ள உயரமான படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாத முதியவர்களுக்கு சொகுசு பஸ் அதிகளவில் உதவும். மாசு கட்டுப்பாடு அடிப்படையில், "யூரோ த்ரீ' என்ற முறையில் புகையில்லாத இயக்கமாக தாழ்தள சொகுசு பஸ் ஓடுகிறது; "யூரோ த்ரீ' முறையில் டீசல் செலவு 27 காசுகள் கூடுதலாக உள்ளது. மற்ற டீசலை சொகுசு பஸ்சில் பயன்படுத்த முடியாது. இத்துடன், சில உயர் ரக தொழில்நுட்பங்கள், எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் இப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, பயண கட்டணம் இரட்டிப்பாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒரு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.எக்ஸ்பிரஸ் பஸ்கள், சில நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை. இதற்காக, கி.மீ.,க்கு 28 காசு வீதம் கூடுதலாக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாய் 50 காசில் இருந்து 5.00 ரூபாயாக உள்ளது, என்றனர்.
பயணிகள் குமுறல்: சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இயக்கப்படும் தாழ்தள சொகுசு பஸ்கள் செல்லும் ரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பதில்லை. தவிர, இப்பஸ்களில் முதியவர்கள் ஏறும் வசதிக்காக அரையடி உயரத்தில் படிக்கட்டுகள் உள்ளது என்றாலும், இப்பஸ்களில் பயணிப்பவர்கள் எல்லாருமே முதியவர்கள் அல்ல.சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், "யூரோ த்ரீ' முறையில் இயக்குவது மட்டுமே ஏற்றுக்கொள்வதாக உள்ளது. இருப்பினும், அது அரசின் பொறுப்பு. அதற்காக, அக்கட்டணத் தை பயணிகளில் தலையில் சுமத்துவது நியாயமற்றது.
அரசு, என்ன செய்யலாம்! மக்களிடம் இருந்து பணத்தை வலுக்கட்டாயமாக "பறித்து', பணம் சம்பாதிப்பது அரசின் வேலையல்ல. மக்களுக்கு சேவையாற்றும் சேவகனாகவே, அரசு நிர்வாகம் இருக்க வேண்டும். மதுக்கடை நடத்துவதில் லாபம் பார்க்கலாம். போக்குவரத்து துறையில் லாபம் பார்ப்பதில், மக்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கக் கூடாது; அது, அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், அவசரத் தேவைக்கு அடித்தட்டு மக்கள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல பயணிப்பது அரசு பஸ்சில் தான். மக்களுக்கு சொந்தமாக கார் களோ வேறு வாகனங்களோ இருப் பதில்லை. மக்கள், அரசு மீது அதிருப்தி அடைந்தால், நிர்வாகத் துக்கு அழகல்ல. அதேநேரத்தில், சொகுசு பஸ் என்ற பெயரில், பயணிகள் இல்லாமல்... கண்டக்டரும், டிரைவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தால், போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டமே மிஞ்சும். அதற்கு பதிலாக, சாதாரண பஸ் கட்டணத்தையே, நிறம் மாற்றப்பட்ட, பெயர் மாற்றப்பட்ட மற்ற பஸ்களுக்கும் நிர்ணயித்து இயக்கினால், பயணிகளும் பயணிப்பர்; அப்பயணம் சொகுசான, சுகமான பயணமாக அமையும்.தமிழக முதல்வர், உத்தரவிடுவாரா?
அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு!"தமிழகத்தில் உள்ள பஸ்கள் நல்ல தரத்துடனும், சொகுசாகவும் இருப்பதால் மட்டுமே, பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என, போக்குவரத்து துறை அமைச்சர் நேரு கூறி வருகிறார். இதற்கு, "மக்கள், தங்களது அவசர தேவையை நிறைவு செய்வதற்காகவும், அன்றாட பயன்பாட்டுக்கும் மட்டுமே பஸ்களில் பயணிக்கின்றனர்' என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் செயலாளர் லோகு கூறியதாவது:கோவையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் நேரு பேசியபோது, "தமிழகத்தில் மூன்றாண்டுக்கு முன் 10 ஆயிரத்து 352 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இந்தாண்டு 3,000 பஸ்கள் வாங்கப்பட்டன. மேலும் 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும். பஸ்கள் வாங்க, தமிழக முதல்வர் சிறப்பு நிதியாக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்."அ.தி.மு.க., ஆட்சியில் அரசு பஸ்சில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு கோடியே 64 லட்சத்து 59 ஆயிரமாக இருந்தது. தற்போது, பஸ்சின் தரம் உயர்ந்துள்ளதால், மக்கள் விரும்பி பயணிக்கும் வகையில் பஸ்கள் அமைந்துள்ளன. அரசு பஸ்சில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே ஐந்து லட்சமாக உயர்ந்துள்ளது, என்றார். அமைச்சரின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் தங்களது தேவைக்காக மட்டுமே பஸ்களை பயன்படுத்துகின்றனர்.சொகுசு மற்றும் தரமாக இருப்பதால் மட்டுமே பயணிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாழ்தள சொகுசு பஸ்சில் பயணிகளுக்கென்று எந்த சொகுசு வசதியும் இல்லை. வழக்கமாக அனைத்து பஸ்களிலும் உள்ள வசதிகளே உள்ளன. டிரைவர், சொகுசாக பஸ்சை ஓட்டுவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, கண்டக்டருக்கும், டிரைவருக்கும் செய்து கொடுக்கப்பட்ட வசதியே தவிர பயணிக்கான வசதியல்ல.பஸ்சின் மேற்கூரையில் மட்டும் காற்று வருவதற்காக இரண்டு துளையிடப்பட்டு மூடி போடப்பட்டுள்ளது. எளிதாக பஸ்சில் பயணிகள் ஏறுவதற்கு தாழ்வான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வசதி, பெரும்பாலான தனியார் பஸ்களில் உள்ளன. இவை தவிர வேறெந்த வசதியும் செய்து கொடுக்கப்பட வில்லை. அவ்வசதியை எதிர்பார்த்தோ, விரும்பியோ பொதுமக்கள், தாழ்தள சொகுசு பஸ்சில் பயணிப்பதில்லை, என்றார்.
பொதுமக்கள் விழித்துக் கொள்வர்!"ரவுண்ட் ஆப்' என்ற பெயரில், சில நுகர்வோர் அமைப்புகளின் ஒப்புதலோடு, பஸ் கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகம் உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து "கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு', சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் கூறியதாவது:கடந்த 2009 ஆக., 19ல், கோவையில் இருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட புறநகர் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3.50 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 12.50, 10.50, 15.50 ரூபாயாகவும் இருந்தது. இதை "ரவுண்ட் ஆப்' என்ற பெயரில், மாவட்ட நிர்வாகம், அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் இணைந்து, சில நுகர்வோர் அமைப் புகளின் ஒப்புதலை பெற்று, கட்டணத்தை 50 காசுகள் உயர்த்தியுள்ளன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; விசாரணையும் நடந்து வருகிறது. அதேபோல், தாழ்தள சொகுசு பஸ் என்ற பெயரில் எந்தவொரு வசதியும் செய்து கொடுக்காமல், பயணிகளிடம் புதிய பஸ்களை மட்டும் அறிமுகப்படுத்தி, சாதாரண பஸ் கட்டணத்தை போல் மூன்று மடங்கு கட்டணம் அதிகரித்து வசூலிப்பது நியாயமற்ற செயல்.நெடுந்தூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில், "எக்ஸ்பிரஸ்' என பெயரிட்டு, கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளோ, தெரிந்தும் தெரியாததுபோல் காட்டிக்கொள்கின்றனர். திருவிழா சமயங்களில் சிறப்பு பஸ் என்ற பெயரில் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதற்கு மோட்டார் வாகன விதிமுறையில் எந்தவொரு பரிந்துரையோ, உத்தரவோ இல்லை.
"சிறப்பு திருவிழாக்கள் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது' என்று தமிழக அரசுச் செயலர் அதுல்யா மிஸ்ரா, கடந்த 2009 நவ., 30ல் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளார். இதை மீறி திருவிழா என்ற பெயரில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டு, அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழக கோட்ட நிர்வாக இயக்குனர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வசூல் வேட்டை இன்றும் தொடர்கிறது. 15 கி.மீ., தூரத்தில் உள்ள ஊரில் திருவிழா நடந்தாலும், சிறப்பு பஸ் இயக்கி, அதில் வருவாய் பார்ப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது அரசு போக்குவரத்து கழகம். பயணிகளுக்கான வசதி, அவர்களின் நிலை குறித்து சிறிது கூட யோசிப்பதில்லை.மறைமுகமாக மக்கள் மீது பஸ் கட்டணத்தை சுமத்துவதற்கு பதில், முறையாக அறிவிப்பு செய்து உயர்த்தலாம். மக்களிடம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து கொள்ளலாம். எத்தனையோ இலவசங்களை வாரி வழங்கிய தமிழக அரசு, பொதுமக்கள் அன்றாடம் பயணிக்கும் பஸ் கட்டணத்தில், நெறிமுறை இல்லாத நடைமுறையை பின்பற்றுவது தவறு. இதே நடைமுறையை தொடர்ந்து பின்பற்றினால், மக்கள் எளிதாக விழித்துக் கொள்வர்.இவ்வாறு, கதிர்மதியோன் கூறினார்.
----- > மிக்க நன்றி தினமலர்