Monday, September 6, 2010

கோடியில் இருவர்




ஈரோடு அருகே உள்ள மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து, "ஏனுங்க... மரம் நடுவாரே...' என்று கேட்க ஆரம்பிக்கும் போதே, "அட... நாகராஜன் அண்ணனை கேக்குறீங்களா... அந்த வழியாப் போங்க...' என்று பெருமிதத்தோடு வழி காட்டுகின்றனர்.  தன்னுடைய வீட்டிலேயே, கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டி ருக்கிறார், 56 வயதான நாகராஜன். மிகச் சாதா ரணமான ஓட்டு வீடு. இவர், தன் 17வது வயதிலிருந்து, கடந்த 39 வருடங்களாக, விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை, நான் கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி, ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி, இன்று வரை வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல, இரண்டல்ல... பத்தாயிரத்திற்கும் அதிக மான மரங்கள்.

"ஆரம்பத்தில் என் செயல்களைக் கண்டு, பைத்தியக்காரன் என்று ஊரே சொன்னது...' எனச் சொல்லி சிரித்தார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில், மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள், "கீச்கீச்'சென கத்துகிறது என்று சொல்லும் போது, அவரது முகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
தினமும் காலையிலும், மாலையிலும், மரம் நடுவதையும், அதைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல...
சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணி, மின்சார பணி என அவ்வப்போது பல சில்லறை காரணங் களைச் சொல்லி, மரங் களை சர்வ சாதாரணமாக வெட்டி வீசுகின்றனர் எனக் கூறும் போது, அவருடைய மனதில் உணரும் வலி, அப்படியே முகத்தில் வந்து படிகிறது.

குறிப்பாக, மரத்தின் கிளையை, ஒருநாள் சரக்குக்கும், பரோட்டா விற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக் கின்றனர் என அறியும் போது, நமக்கே மனம் வெம்புகிறது.  ஒவ்வொரு மரத்தை யும், தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என, எட்டு திசையிலும் வகை வகை யாய் வளர்த்தெடுக்கிறார். கடும் கோடையிலும் கூட, மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி தண்ணீர் பெற்று, செடிகளை காப்பாற்றி யிருக்கிறார். காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி, விதவிதமான மரக்கன்றுகள் நடவு செய்து, அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக் கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து, அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக் கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று!

சத்தியமங்கலத்திலிருந்து பங்களா புதூர் அருகில், தூக்கநாயக்கன் பாளையம் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன்புதூர். முதலில் வரவேற் கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள் என்று தெரிந்ததுமே, தானாகவே கேட்கின்றனர், "அய்யாச்சாமி அண்ணனை தேடி வந்தீர்களா?' என்று. "மரம் வளர்க்கிறாரே...' என்று இழுக்க, "அட... அய்யாச்சாமி அண்ணன்தான்... இந்தா, அப்பிடி போங்க... அந்த ஓட்டு வீடுதான்!' ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே, காஞ்சிக்கோவில் நாகராஜனும் நம்முடன் கிளம்பி விட்டார். கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில், பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்த்தோம். இரண்டு கயிற்று கட்டில்களில், இளைத்த உடம்போடு ஒரு தம்பதி... சத்தம் கேட்டு எழுந்து, "வாங்க...' என்று வரவேற்றனார். எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் அய்யாச்சாமி, 74 வயதை தாண்டி விட்டார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை, மரங்களின் மேல் கொண்டிருந்த காதல், அய்யாச்சாமிக்கும் தொத்திக் கொண்டதாம். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில், வேப்ப மர விதைகளை ஊன்றி, நீரூற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது, ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்.


சமூக விரோதிகள் திட்டம் தீட்டி கொள்ளை யடித்தது போக, இன்று மிஞ்சியிருப்பது 3,000 மரங்கள் தான். சிறு செடி முதல், முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும்போது, உடலும், மனதும் சிலிர்க்கிறது. இவர், கடும் கோடையிலும், வீட்டிலிருந்த தண்ணீரை எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார் என்பது சுவாரசியமான தகவல். "ஊட்டுல தண்ணியில்லைனா,  சண்டை போடு வாங்க; இல்லன்னா கஞ்சி ஊத்த மாட்டாங்க. ஆனா, செடி செத்துப் போச்சுன்னா என்ன பண்றதுங்க...' என்ற போது, அருகில் எலும்பும், தோலுமாய் நின்ற அவரது மனைவி, வெட்கத்தில் சிரித்தார். இந்த தள்ளாத வயதிலும், அய்யாச்சாமி வீட்டில், பத்து, பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கிறது. பேசி, நெகிழ்ந்து, மனம் கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும்போது, "அந்த பள்ளத் தோரம் போனீங்கன்னா, மரங்களைப் பார்க்க லாம்...' என்று சொன்னார். கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம், பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க, வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் விஜயகுமார், நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டினார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன்புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில், பெரியவர் அய்யாச்சாமி நமக்காக காத்திருந்தார். விடைபெற்றுக் கிளம்பும்போது, ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணித்தார். வாகனத்தை இயக்கியபடி, அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சினேன். இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்ந்தேன்.


இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம். பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிஜனைத் தானே சுவாசிக்கிறோம். ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது அவமானமாக இருந்தது. ஒரு மரம், தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித் தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்ப்பணித்தது பல்லாயிரம் கோடிகள் என்றால் மிகையாகாது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்கவில்லை என்றால், அந்த விருதுக்குத் தான் கேவலமே ஒழிய, இந்த மாமனிதர் களுக்கில்லை. ஏனெனில், இவர்கள் எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை. இந்த மனிதர்களை, வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க, ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களின் அனுமதியோடு, எப்பாடுபட்டேயாயினும் அவர் களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து, வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை, இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம் படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று, அவர்களின் மனதில் நிரப்ப வேண்டும். எல்லாம் ஒரு சிறு புள்ளியில் தானே ஆரம்பித் திருக்கும். இதோ ஒரு சிறுபுள்ளியில், பசுமைக் கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது. நாமும் சேர்ந்து தொடரச் செய்வோம்!