-
Wednesday, September 22, 2010
பசிநோய் தீர்க்காத பசுமைப் புரட்சி
1950களில் அமெரிக்க உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிந்தன. நாட்டின் தேவையைவிட இரண்டு மடங்கு அதிக அளவு கோதுமை கையிருப்பு இருந்தது. அந்த உபரி கோதுமையை என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரின் மூளையில் ஒரு யோசனை பட்டுத்தெறித்தது.
÷அதன் விளைவாக 1954-ம் ஆண்டு அவர் பி.எல்.-480 என்னும் சட்டத்தை அறிமுகப்படுத்தி, உணவு தேவைப்படும் நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்து அமெரிக்க விவசாயிகளுக்குப் பாதுகாப்புத் தேடிக்கொடுத்தார்.
÷1956-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டுவரை இந்தியா பி.எல்.-480 சட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி டன் அளவு கோதுமையை இறக்குமதி செய்தது. அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் பலவற்றில் உடன்பாடு இல்லையென்றாலும், தன் நாட்டு மக்களின் பசியைத் தீர்க்க அவர் அமெரிக்க கோதுமையை இறக்குமதி செய்து விநியோகித்தார்.
÷இன்று, இந்திய அரசின் கிடங்குகள் தானியங்களால் நிரம்பி வழிகின்றன. உழவன் உயிரைப் பிசைந்தூட்டி விளைவித்த தானிய வகைகள் வைப்பதற்கு இடமின்றி தினம் பாழாகிக் கொண்டிருக்கின்றன. அன்றைய அமெரிக்கர்களின் வயிறுநிறைந்த பிறகுதான் அந்நாட்டின் கிடங்குகள் நிரம்பின. நம் நாட்டில் பலகோடி மக்கள் பசியால் முறுக்கப்படுகின்ற வயிறோடு உறக்கத்தைத் தொலைத்தவர்களாக இருக்கிறபோது, இங்கே கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதற்காகவா பதினோரு ஐந்தாண்டுத் திட்டங்களும் பசுமைப் புரட்சியும்.
÷37 சதவீத இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. பாழாகிப் போனாலும் பரவாயில்லை; அதை வறுமையால் வாடுபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க இயலாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கைவிரிக்கிறார்.
வாங்கும் சக்தி இருந்தால் பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடு, இல்லையெனில் பட்டினிகிட என்பதுதானே இதன் அர்த்தம். பாதாம் பாலை சுவைத்துக் கொண்டிருக்கிற இனிப்புக் கடைக்காரர், அடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகளை வெறித்துப் பார்க்கும் ஏழைச் சிறார்களுக்கு உதிர்ந்த இனிப்புத் துகள்களை இலவசமாக அள்ளித் தருகிறபோது நம் மனதில் உயர்ந்து நிற்கிறாரே. காசேதான் கடவுளடா என்ற கொள்கையோடு ஒன்றிப்போன அந்தக் கடைக்காரருக்கு இருக்கிற மனிதாபிமானம்கூட, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
÷ஆட்சியாளர்கள் கடமை தவறுகிறபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக இருக்கிற உச்ச நீதிமன்றம் தவறைச் சுட்டிக்காட்டவில்லையென்றால், அதன் பணிதான் என்ன? லட்சக்கணக்கான டன் தானியங்கள் நாடு முழுதும் கிடங்குகளில் வீணடிக்கப்படுவது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பாக சேமிக்கமுடிவதை மாத்திரம் கொள்முதல் செய்யுங்கள், கொள்முதல் செய்ததை வீணடிக்காதீர்கள், மலிவு விலைக்கோ அல்லது இலவசமாகவோ வறுமையில் உழல்பவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்றது.
÷இதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், உச்ச நீதிமன்றம் அரசின் கொள்கைமுடிவுகளில் தலையிடுவது சரியல்ல என்று கூறினார். எதிலும் நிதானத்தோடு பதிலளிக்கக்கூடிய பிரதமரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து அனுமன் வாலில் பற்றிய தீயாகிப்போனதை உணர்ந்த மத்திய அரசு, 25 லட்சம் டன் தானியத்தை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு விநியோகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
÷நாட்டு மக்கள் குறைந்தபட்சம் பசியின்றி இருக்க வேண்டும் என்பது ஒரு அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது என்ற கருத்து, மூளையை சம்மட்டி கொண்டு அடிப்பதாகவே இருக்கிறது.
÷ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பிரகடனத்தின் கீழ் 145 நாடுகள் கையொப்பமிட்ட பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளின் சர்வதேச ஒப்பந்தத்தின்படி, உணவுப் பாதுகாப்பு மனித உரிமை ஆக்கப்பட்டது. 1966-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தில், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் ஒப்புதலோடு இந்தியாவும் கையெழுத்திட்டது என்பது மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமகனுக்கு வழங்குகிற உயிருக்கான பாதுகாப்பு என்பதில் உணவுப் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.
÷எனவே, உச்ச நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவில்லை, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு என்னும் அடிப்படை மனித உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆணையைத்தான் பிறப்பித்தது. ஒரு வேளை உணவைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதுதான் உணவுப் பாதுகாப்பு என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. ஒரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதர்களால் ஆளப்பட வேண்டும் என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில், இந்தியாவுக்காகவே சொல்லி வைத்தார் போலும்.
÷1951-ம் ஆண்டு முதலாவது ஐந்தாண்டு திட்டத்தைத் துவக்கிவைத்துப் பேசிய நேரு, காத்திருக்க நேரமில்லை, உணவில் தன்னிறைவு அடைந்தே ஆகவேண்டும் என்றார்.
அவருக்குப்பின் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தோடு புசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் அடித்தளம் அமைத்தார். அடுத்துவந்த இந்திராகாந்தி, 1970 களில் வறுமையை ஒழிப்போம், உணவு, உடை, உறைவிடம் என்னும் முழக்கங்களோடு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினார். அவரைப்போலவே வறுமை ஒழிப்புத்திட்டங்களில் ராஜீவ் காந்தியும் மிகுந்த அக்கறை காட்டினார்.
÷கார்கால மாங்காய்போல் பிரதமராக வந்த நரசிம்ம ராவ் ஆட்சியில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு அதுவரை இல்லாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி காங்கிரஸýக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த பா.ஜ.க. வின் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் சென்றது. இப்படி பல்வேறு பிரதமர்கள் தொடர் ஓட்டம் சென்று, கையில் சிரத்தையோடு எடுத்துவந்த உணவில் தன்னிறைவு என்னும் குறுந்தடி இப்போது மன்மோகன்சிங் கையில் இருக்கிறது. அவர் சொல்கிறார், ""பண்டித நேரு தொடங்கிய இடத்திலேயே நான் இதைக் கொண்டுபோய் வைத்துவிடுகிறேன்'' என்று. காலச் சக்கரம் ஒரு முழுச்சுற்று வந்து நிற்கிறது. ஆனால், பசி என்னும் வயிற்றுத் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. உலகில் உருவான புரட்சிகள் பெரும்பாலும் வயிற்றின் வெற்றிடத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டவை என்பதைத் தெரிந்துகொள்ள ஹாவார்டு பல்கலைக் கழகத்திற்கு செல்லத் தேவையில்லை.
÷நடப்பு ஆண்டில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கும் மத்திய அரசு, இருக்கும் தானியத்தை விநியோகிக்க இயலாது என்று உரக்கச் சொல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 49 மெகா கோடீஸ்வரர்களையும் ஒரு லட்சம் கோடீஸ்வரர்களையும் உருவாக்கத்தான் இந்த வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டதா? வன்முறையின் மிகக்கொடிய வடிவம் வறுமைதான் என்று கூறிய மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பும் இணைப்பும் கொடுக்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த அடுப்பின்மீது வைக்கப் பாத்திரமும் அதில்போட்டு சமைத்திட தானியமும் அவர்களிடம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எந்தப் பொருளாதார நிபுணரும் சொல்லவில்லை என்றே தெரிகிறது.
÷வாக்கு வங்கிகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகளுக்கிடையே நடக்கின்ற தேர்தல் யுத்தத்தில் பயன்படுத்தப்படும் கணைகளில் ஒன்றாக செல்ஃபோன் உருவெடுத்திருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச செல்ஃபோன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க இப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டிய ஒரே நாடு உலக அளவில் இந்தியாவாகத்தான் இருக்கும்.
÷1994-ம் ஆண்டு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. பஞ்சத்தின் கோரக் காட்சிகளைப் பதிவு செய்த கெவின் கார்ட்டர் என்னும் நிழற்படக் கலைஞர் எடுத்த நிழற்படம் ஒன்றுக்கு மிக உயரிய விருதான புலிட்ஸர் விருது கிடைத்தது.
அந்த நிழற்படத்தில், பட்டினியின் உச்சத்தில் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடாக, நிற்கக்கூட தெம்பில்லாத நான்கு வயதுக் குழந்தை முழங்கால் பதித்துக் குப்புறக் கிடக்கிறது. அந்தக் குழந்தையைக் கொத்தித் தின்பதற்குத் தயாராக பிணந்தின்னிக் கழுகு ஒன்று அருகில் அமர்ந்திருக்கிறது.
இந்தியா சூடானைவிட பெரிய, பரந்துவிரிந்த ஒரு துணைக் கண்டம். இங்கு ஒன்றல்ல, ஆயிரமாயிரம் பணந்தின்னிக் கழுகுகள் காத்துக்கிடக்கின்றன.