-
Sunday, March 13, 2011
அணுமின் உலைகள் செயல்படுவது எப்படி?
அணுமின் உலைகள் செயல்படுவது எப்படி?
* ஒவ்வொரு அணுமின் உலையிலும், அணுக்கருப் பிளப்புக்கு முக்கியமான யுரேனியம் அல்லது புளூட்டோனியம் கம்பிகள் இருக்கும். இவை "கோர்' எனப்படும்.
* உலையின் மையப் பகுதியில் உள்ள நீரில் "கோர்' வைக்கப்பட்டிருக்கும். அணுக்கருப் பிளப்பைக் கட்டுக்குள் வைப்பதற்கு, போரான் அல்லது காட்மியம் ஆகியவை ஒரு ஒழுங்கில் வைக்கப்படும். இவை கட்டுப்பாட்டுக் கம்பிகள் எனப்படும்.
* மேலும் அணுக்கருப் பிளப்பு என்பது நடக்கும் போது ஏற்படும் உஷ்ணம் அளவு கடந்து இருக்கும். அது அந்த கலன்களுக்குள் இருந்து வெளியேறா வகையில் முதல் நிலைசுற்றுச் சுவர் இருக்கும்.
* இதையடுத்து, வெளியில் இரண்டாம் நிலை கொள்கலச் சுவர் கட்டப்பட்டிருக்கும்.
* நீராவிக் கொள்கலன், கண்டன்சர், டர்பைன், ஜெனரேட்டர், குளிரூட்டும் கோபுரம் ஆகியவை பிற முக்கிய கருவிகள்.
* அணுக்கருப் பிளப்பு மூலம் வெளிப்படும் அபார வெப்பத்தில் நீரைச் சூடாக்கி நீராவியாக்கி, அந்நீராவி மூலம் டர்பைன் இயக்கப்பட்டு, அதன் மூலம் ஜெனரேட்டரில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
* மின் தயாரிப்புக்கு ஆதாரமாகவும், உலையில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும் திரவமாகவும் நீரே பயன்படுத்தப்படும்.
* புக்குஷிமா முதல் உலை வெடிவிபத்தில், உலையில் வெப்பம் அதிகரித்து, வெளியேறி இரண்டாம் நிலை கொள்கலச் சுவர் உடைந்து விழுந்தது.
* உலையில் வெப்பம் அதிகரிக்குமானால், "கோர்' கம்பிகள் உருகி, அடிப்புறம் வழியாக பூமியில் பரவும்.
* இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் விதத்தில் தான், ஜப்பானில் அணு மின் உலைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* அணுஉலை இயக்கம் உடனடியாக நின்றுவிட்டாலும், அதன் உஷ்ண அளவைக் குறைப்பது அவ்வளவு சுலபமல்ல.
கதிர்வீச்சினால் என்ன அபாயம்?
* காற்றில் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதை குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அறிய முடியும்.
* அளவு, அபாய கட்டத்தை தாண்டும் போது, உடனடியாக மரணம் நிகழும்.
* நீண்ட கால அபாயமாக புற்றுநோய் உருவாகும்.
* உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்.
* குறிப்பாக, குழந்தைகளை கதிர்வீச்சு மிக அதிகளவில் பாதிக்கும்.