இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இத்தனை நாள் இதைப்போல நடக்காதா! நமக்கு ஒரு விடிவு வராதா! யாராவது ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டத்தை துவங்க மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைப்போல ஒரு போராட்டம் தற்போது அன்னா ஹசாரே அவர்களால் துவங்கப்பட்டுள்ளது பற்றி நீங்கள் அறிவீர்கள். தற்போது இந்தியா முழுக்க இதற்கு ஆதரவு பெருகி வருகிறது ஆனால் தமிழ்நாட்டில் மெச்சும்படியான மக்கள் ஆதரவு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே இதற்கு ஆதரவு காணப்படுகிறது. இதற்கு காரணம் தமிழக ஊடகங்கள் இது பற்றிய செய்திகளை மக்களிடம் சரியாக கொண்டு செல்லாமல் புறக்கணிப்பதே ஆகும்.
அரசியல்வாதிகளுக்குத் தடை
நான் ஹசாரே அவர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கிய போதே நினைத்தேன் இந்த போராட்டத்திற்கு ஊழல் செய்த அரசியல்வாதிகளே ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை கேலி கூத்தாக மாற்றி விடுவார்களே! என்ன செய்வது என்று. நம்ம அரசியல்வாதிகள் ஜெகஜால கில்லாடிகள் அனைத்தையும் செய்து விட்டு இந்த போராட்டத்திலும் கலந்து தான் ஊழலுக்கு எதிரானவன் என்ற பிம்பத்தை மக்கள் முன் தோற்றுவித்து விடுவார்கள். இப்படி ஆனால் என்ன செய்வது என்கிற பயம் எனக்கு இருந்தது.
ஆனால் தம்பி! நீ எல்லாம் சின்ன பையன்ப்பா! இவ்வளோ பெரிய போராட்டம் நடத்துறோம் இதைக்கூடவா நாங்க யோசிக்காம இருப்போம் என்று மண்டையில் அடித்து புரிய வைத்து விட்டார்கள். அது என்னவென்றால் ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்பதே அந்தத் தீர்மானம். எப்படி! சும்மா அதிருதில்ல. ஆதரவு தெரிவிக்க வந்த உமா பாரதி மற்றும் ஓம் பிரகாஷ் போன்ற வட இந்திய அரசியல்வாதிகளை உள்ளே அனுமதிக்காமல் மறுத்து அதிரடியாக கூறி விட்டனர்.
பிரதமர் பொம்மை மோகன் சிங்
பிரதமர் என்கிற இடத்தில் அமர்ந்து இருக்கும் மன்மோகன் சிங் போராட்டத்தை கை விடுங்கள் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்!! என்று கேட்டுள்ளார் அதற்கு ஹசாரே 40 வருடமாக இதற்காக போராடிக்கொண்டு இருக்கிறோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு மேலும் காத்து இருக்க முடியாது என்று மன்மோகன் சிங் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறிய இன்னொரு விஷயம் தான் மிகப்பெரிய காமெடி. இந்த சட்டத்தை சரத் பவார் உள்ளிட்டவர்கள் தான் வரைவு செய்வார்களாம் அதாவது பாலுக்கு காவல் பூனை. சரத் பவார் கபில் சிபில் போன்றவர்கள் எல்லாம் ஊழலில் திளைத்தவர்கள். இவர்கள் சட்டத்தை வரைவு செய்தால் இதை விட கேவலம் நாட்டுக்கில்லை என்று நறுக்கு தெரித்தது போல கூறி விட்டார்.
சரத் பவார் ராஜினாமா
ஹசாரே பதிலால் மற்றும் அனைவரிடமும் இருந்து வரும் எதிர்ப்புகளால் தற்போது ஊழல் தடுப்பு பிரிவில் இருந்து சரத் பவார் ராஜினாமா செய்துள்ளார். இதனால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.
அமீர் கான் ஆதரவு
படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் தான் ஹீரோ என்பதை மீண்டும் ஒருமுறை அமிர்கான் நிரூபித்துள்ளார். ஹசாரே அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் அதே போல பிரதமருக்கும். இதனால் மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
அனைவரிடமும் (தென் மாநிலம் வட மாநிலம்) மாஸ் உள்ள ரஜினி ஏன் இன்னும் அமைதி காக்கிறார் என்று தெரியவில்லை. ரஜினி போன்றவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தால் இது பற்றி தமிழக மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். இதை நான் எதற்கு கூறுகிறேன் என்றால் ஊழல் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது நம்முடைய சிஸ்டமே மாற வேண்டும் அப்போது தான் ஒரு மாற்றம் வர முடியும் என்று கூறி இருந்தார். ரஜினி நினைக்கும் ஒரு மாற்றத்திற்கு ஹசாரே வித்திட்டு இருக்கிறார் இதற்கு ஆதரவு தர வேண்டியது ரஜினி போன்ற மாஸ் நபர்களின் கடமையாகும். பல நற்பணிகளை செய்து வரும் கமலும் இதற்கு ஆதரவு தர வேண்டும்.
புறக்கணிக்கும் தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள்
ஊடகங்கள் அரசியல்வாதிகள் கையில் இருந்தால் என்ன நடக்குமோ அது தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. ஹசாரே செய்யும் போராட்டம் திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல இருப்பதால் தங்கள் தொலைக்காட்சிகளில் இது பற்றி காட்டவே இல்லை. அப்படியே இருந்தாலும் ரொம்ப சிறு செய்தியாக காண்பித்து இருப்பார்கள். வட மாநிலத்தையே இவரது போராட்டம் உலுக்கிக்கொண்டு இருக்கிறது ஆனால் நேற்று சன் டிவி தலைப்பு செய்திகளில் இது பற்றி ஒன்றுமே இல்லை. சன் டிவி செய்திகள் ஐந்து நிமிடம் கலைஞர் பேச்சு பத்து நிமிடம் வடிவேல் பேச்சு ஐந்து நிமிடம் கேப்டன் உளறல் பற்றியது.. தினமும் இது தான் அவர்கள் செய்தி அட்டவணை. இது பற்றி கூறினால் தங்களுக்கே ஆப்பு என்பதை அறிந்து ஹசாரே போராட்டம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்கள். இப்படி இருந்தால் தமிழ்நாடு எங்கே விளங்கும்?
மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டியது ஊடகங்களின் கடமை ஆனால் தங்களுக்கு வேண்டியதை மட்டும் ஒளிபரப்பி செய்தியாக காட்டிக்கொண்டு இருப்பது தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. தினமலர் மட்டும் இதற்கு கொஞ்சம் முக்கியத்துவம் தருகிறது.
எனக்கு வட இந்திய ஊடகங்கள் சுத்தமாக பிடிக்காது குறிப்பாக TRP ரேட்டிங்கிற்காக அவர்கள் ஒன்றுமில்லாத விசயத்தைக் கூட பெரிது படுத்தி நாள் முழுவதும் கூறிக் கொண்டு இருப்பார்கள். இந்த விசயத்தில் அவர்கள் எதற்காக கூறினாலும் சரி! இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது உண்மை. தங்களது இணைய தளங்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகிறார்கள். இந்த ஒன்றிக்காகவது இவர்களை பாராட்ட வேண்டும் இவர்கள் மீது பல குறைகள் இருந்தாலும்.
ஹசாரே தெரிவிக்கும் நன்றி
இந்தபோராட்டத்திற்கு அனைவரிடமும் பலத்த ஆதரவு பெருகி வருகிறது குறிப்பாக இளைஞர்களிடையே. இதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஒருவர் இந்தப்போராட்டம் பற்றி குறிப்பிடும் போது இந்தியா உலகக்கோப்பை வெற்றி பெற்ற போது தெருக்களில் எப்படி கொண்டாடினார்களோ அது போல இதற்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஹசாரேவின் மறுப்பு
2G எல்லாம் ஊழலே இல்லை என்று கூறிய பெருமைவாய்ந்த கபில் சிபில் எங்களுக்கு இதை செயல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று வழக்கமான மொக்கை சமாதானங்களை கூறி இந்த போராட்டத்தை வாபஸ் பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதற்கு பதிலடியாக இந்த விளக்கங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
அரசு ஊழலுக்கு எதிராக நடக்க வேண்டும் என்றால் எதற்கு இதை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய வேண்டும்? என்று எதிர் கேள்வி கேட்டு இருக்கிறார். இத்தனை வருடமாக கேட்டும் செய்யாதவர்கள் இனியும் கால அவகாசம் கொடுத்தால் எப்படி செய்வார்கள் என்று கேட்டுள்ளார்.
ஹசாரே போராட்டத்தை முடக்க சதி
மத்திய அரசு ஹசாரே போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதைக்கண்டு பயந்து போய் உள்ளது. இதனால் அவர் மீது வேண்டும் என்று பொய் பிரச்சாரங்களை செய்து தாங்கள் மிகக் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இது எப்படி இருக்கு என்றால் ஒரு பெண் நம்மை விட திறமையானவராக இருக்கிறார் என்று அவரை சமாளிக்க ஒரு ஆண் அந்த பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி வேண்டுமென்றே தவறாக கூறி நடந்து கொள்வதைப்போல இருக்கிறது. நேரடியாக மோத முடியாத அரசு இதைப்போல கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுகிறது.
ஹசாரே மற்றவர்கள் சொல்லிக்கொடுத்ததை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார். இவருக்கும் RSS க்கும் தொடர்புள்ளது என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு ஹசாரே நான் ஒன்றும் சின்ன குழந்தை அல்ல மற்றவர்கள் கூறி அதை கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்னால் சுயமாக சிந்திக்க முடியும் என்று பதிலடி தந்துள்ளார்.
இந்த மசோதாவிற்கு அரசு ஒப்புதல் அளிக்குமா?
இது மிகவும் சிரமமான கேள்வி தான். இதற்கு ஒப்புதல் வழங்கினால் முதல் அடி வாங்கப்போவது காங்கிரஸ் அரசாகத் தான் இருக்கும். இதுவரை லட்சகணக்கான கோடி ஊழல் செய்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் காரணம் இந்த சட்டம் வந்தால் இதன் பிறகு கொள்ளை அடிப்பது என்பது கனவில் மட்டுமே நடக்க முடியும் அந்த அளவிற்கு கடுமையான சட்டமாக இருக்கிறது. அதுவுமில்லாமல் இதுவரை கொள்ளை அடித்த பணத்தையும் பிடுங்கி விடுவார்கள். எனவே மொள்ளமாரித்தனம் கொண்ட அரசியல்வாதிகள் இதை எப்படியாவது மொக்கை போராட்டமாக மாற்ற கண்டிப்பாக முயற்சி செய்வார்கள் அல்லது ஏதாவது சாக்குபோக்கு கூறி கிடப்பில் போட்டு விடுவார்கள். இவை அனைத்தையும் மீறி ஒருவேளை இந்த சட்டம் வந்தால் அதை நமது இரண்டாவது சுந்ததிரமாக எண்ணிக்கொண்டாட முடியும்.
இந்தப் போராட்டத்திற்கு நாம் ஏன் ஆதரவு தர வேண்டும்?
சரியான வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக்கொள்ளாதவர் முட்டாள். அது இந்த விசயத்திற்கு மிகப்பொருத்தமான ஒன்றாகும். தமிழகத்தில் இருந்து எல்லாம் இதைப்போல போராட்டம் செய்தால் வட இந்திய ஊடகங்கள் கண்டு கொள்ளாது அதே போல நம்ம அரசியல்வாதிகளே இதை ஒடுக்கி விடுவார்கள். தற்போது சக்தி வாய்ந்த ஒரு நபர் பிரதமரே பயப்படக்கூடிய ஒரு நபர் இந்தப் போராட்டத்தை துவங்கி இருக்கிறார் மறுபடியும் இதைப்போல ஒரு வாய்ப்பு நமக்கு அமையாது. பின்னர் அமையலாம் அமையாமல் போக வாய்ப்பில்லை ஆனால் அதற்கு நாம் நெடுங்காலம் காத்து இருக்க வேண்டும். எனவே இதற்கு நாம் ஆதரவு தெரிவித்து இந்தப்போராட்டத்தை மேலும் தீவிரமாக்கினால் நல்லது நடக்க வாய்ப்புண்டு.
நமக்கு தேவை ஊழல் இல்லாத இந்தியா எனவே யார் போராட்டம் செய்தாலும் இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நமது கடமை. இதில் நாம் பிரித்துப் பார்க்க வேண்டிய தருணம் இதுவல்ல. எனவே ஹசாரே குறித்து உங்கள் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து ஆதரவு திரட்டுங்கள்.
நடக்கிறதோ இல்லையோ முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லையே! அதுவும் இதைப்போல பலத்த ஆதரவு பெற்ற போராட்டத்தை. நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இதற்கு முயற்சிப்போம் இது நடக்கவில்லை என்றால் அடுத்த போராட்டத்திற்கு இதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் அவ்வளவே!
அன்னா ஹசாரே முயற்சிகளை பற்றி தெரிந்து கொள்ள – ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!