Wednesday, November 9, 2011

வீடு தேடி மரக்கன்று வரும் நாமக்கல்லில் விரைவில் அமல்


நாமக்கல் : ஆன்லைனில் பதிவு செய்தால் வனத்துறையினர் வீடு தேடி வந்து மரக்கன்றுகளை நட்டுக்கொடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஸீ30 கோடியில் 64 லட்சம் மரக்கன்று நடப்படும் என அறிவிக்கப்பட்டது. மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டத்துக்கு பெரிய அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்று நடப்பட உள்ளன. அரசு அலுவலகங்கள், தனியார் நிலங்கள், வீடுகள், தோட்டம், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆசிஸ்குமார் ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது:

பூமி வெப்பமாவதை தடுக்கவும், தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மரக்கன்று வனத்துறையினரால் நடப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட பருவநிலைக்கு ஏற்ப 36 வகையான மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படும். மரக்கன்று பெற விரும்புபவர்கள் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

dfonamakkal@Yahoo.co.in  என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தாலும் மரக்கன்று தரப்படும். வனத்துறை அலுவலர்கள் விண்ணப்பிக்கும் நபர்கள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்த பின்னர் தேவையான மரக்கன்றுகள் நட்டு தரப்படும். மரக்கன்று பராமரிக்கும் காலங்களில் வனத்துறை ஊழியர்கள் அங்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்வார்கள்.

மரக்கன்று வேண்டுபவர்கள் வரும் 30ம் தேதிக்குள் மாவட்ட வன அலுவலர், நாமக்கல் வன கோட்டம், பழைய ஆட்சியர் பங்களா, நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு ஆசிஸ்குமார் ஸ்ரீ வஸ்தவா தெரிவித்தார்.

36 வகை கன்றுகள்

இத்திட்டத்தின் கீழ் மந்தாரை, மஞ்சன்கொன்றை, ஜகரெண்டா, செண்பகம், மகிழம், இயல்வாகை, தூங்குமூஞ்சி வாகை, புளி, தபிபியா, தங்கஅரளி, வாதுமை, ஆத்துமருது, நெல்லி, நாவல், சிசு, புங்கம், வேம்பு, கடம்பம், பொரசு, தோதகத்தி, மலைபூவரசு, கிரிவிலியா, ஸ்பெத்தோடியா, பூவரசு, தேக்கு, மேபிளவர், பேரடைஸ் மரம், தகரை, டபோபியா, கேஸியா, கேஸியா ஜவானிகா, சிசால்பினியா, அரசு, ஆலமரம், பலா ஆகிய 36 வகையான மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டு கொடுப்பார்கள்.