Tuesday, December 13, 2011

ஏமாறச் சொல்வது யாரோ?


புவிவெப்ப மாறுதலை நிகழ்த்த டர்பனில் நடந்து முடிந்த கூட்டத்தில், எதிர்காலத்தில் இந்த இலக்கை அடைவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பயணத் திட்டம் (ரோட் மேப்) பெரும் விவாதத்துக்கு உள்ளாகியதால், இந்தக் கூட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படியான எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.


1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தது அமெரிக்கா. இந்த முறை, வளர்ந்துவரும் நாடுகள் சார்பாக பெரும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது இந்தியா.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், இந்தியாவின் 120 கோடி மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், வெறும் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட முடியாது. பயணத் திட்டம் என்ன என்பது தெரியாமலேயே ஏற்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். இதற்காக அரங்கில் இருந்த அனைவரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.


இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள்தான் முக்கியமாக இந்த டர்பன் மாநாட்டில் எதிர்ப்புத் தெரிவித்த வளரும் நாடுகள். ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாநாட்டின் ஒப்பந்த ஷரத்துகளில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அவை வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்குக் குந்தகமாக அமையும் என்பதுதான் இவர்கள் சொல்லும் வாதம்.


இந்த மூன்று நாடுகளும்தான் தற்போது அதிக அளவு கரியமில வாயுவையும் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களையும் வெளியேற்றி வருகின்றன என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் குற்றச்சாட்டு.


கியோட்டோ மாநாட்டுக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தங்களது மாசுபடுத்தும் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. ஆனாலும், வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியா, இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேலும் மேலும் வளிமண்டல மாசுபடும் தொழில்நுட்பத்துக்கே இலக்காகி வருகின்றது. இருக்கின்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மாசு குறைந்ததாகச் செய்யவும் முழு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
இந்த நிலையில், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் நாடுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நடவடிக்கைகள் குறித்த அம்சத்துக்குத்தான் இந்தியாவும் சீனாவும் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்வி.


டர்பன் மாநாட்டில் தற்போது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், சிறிய நாடுகள் என்ற பேதமே இல்லாமல், நாம் அனைவரும் ஒன்று என்று கருத்தாக்கம் உருவாகியுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அந்த ஒப்பந்தம் அனைவருக்கும் ஒன்றாகவும், அனைவரையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் தற்போது இந்தியா, சீனா வலியுறுத்துகின்றன.


வெப்பமண்டலக் காடுகளைக் காக்கவும், மாசு இல்லாத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கும் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிதியின் அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வாறு பிரித்து அளிக்கப்படும் அல்லது வளர்ந்து வரும் நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு என்ன வரைமுறை என்பதெல்லாம் இனிதான் விவாதிப்பார்கள்.

புவிவெப்பம் 2 டிகிரி உயர்ந்துவிடாதபடி குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் வளிமண்டல மாசினைக் குறைக்க அனைத்து நாடுகளுக்கும் கடமை இருக்கிறது என்று வலியுறுத்தப்படுகிறது.


120 கோடி மக்களின் வாழ்க்கையோடு விளையாட முடியாது என்று இந்தியா சொல்லும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்திய அரசின் எந்தவொரு கொள்கையும் உலகமயமாதலைச் சார்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டில் அனுமதிப்பதாக உள்ளது. அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொழில்வளர்ச்சி என்ற போர்வையில் இந்தியாவை மாசுபடுத்தி அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயல்ஒப்பந்த அடிப்படையில் பணிகள் ஏற்று, மாசுகளை மட்டும் இங்கே ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் உலக வளிமண்டலத்தையும் மாசுபடுத்த அனுமதித்து வருவதன் மூலம் இந்த 120 கோடி மக்களில் உள்ள அதிக ஏழைகளின் நலனை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?


ஏழைகளும் விவசாயிகளுமா இந்திய நதிகளையும் நீர் நிலைகளையும் தொழில் வளர்ச்சியால் மாசுபடுத்தச் சொன்னார்கள்? இவர்களா நவீன உலகத்தின் சுகங்களையெல்லாம் எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள்? ஏழையின் பெயரைச் சொல்லி தொழில் வளர்ச்சியை, வளிமாசினை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், தொழில் வளர்ச்சியின் பயன் ஏழைக்கு மட்டும் கிடைப்பதே இல்லை என்பதுதானே நிஜம்?


சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமாக மோட்டார் வாகனத் தயாரிப்பை ஒருபுறம் ஊக்குவித்துக்கொண்டு மாசுக்கட்டுப்பாடு பற்றி நாம் கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பொதுப் போக்குவரத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தயாராக இல்லாமல், தனிநபர் கடன் வசதிகளைப் பெருக்கி அவர்களது பொருளாதாரத்தைச் சீர்குலைத்து மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் அரசு, மாசுக் கட்டுப்பாட்டை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்துவதை எப்படி அங்கீகரிப்பது?


ஒருபுறம் அதிக அளவு கரியமில வாயுவையும் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களையும் வெளியேற்றும் தொழிற்சாலைகளைத் தங்களது நாட்டில் நிறுவாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறுவி தங்களை யோக்கியர்கள் ஆக்கிக்கொண்டு, இன்னொருபுறம் கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்று நம்மை வற்புறுத்தும் நயவஞ்சகத்தை துணிந்து தோலுரித்துக்காட்ட நாம் ஏன் தயங்குகிறோம்?


நமக்கும்தான் சரி, "மீசைக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை' என்றால் எப்படி?