Monday, January 11, 2010

தலையங்கம்: கறை விரும்பாத வெள்ளைக் கார்கள்

எஸ்.ஐ., படுகொலை கிராமத்தினர் கொந்தளிப்பு




ஒரு கொலைச் சம்பவம் சரியாகக் கையாளப்படாதபோது,​​ அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி,​​ மனதை ரணமாக்கி,​​ பீதிக்குள்ளாக்கிவிடும் என்பதற்கு ஓர் உதாரணம்,​​ அண்மையில் நெல்லைச் சீமையில் ஆழ்வார்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்!

இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை.​ ஒரு மனிதர்,​​ ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு,​​ ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார்.​ ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.​ பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.​ விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன.​ தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள்,​​ படை,​​ வாகனங்களுடன் நிற்கிறார்கள்.​ ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.​ இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.​​

அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர்,​​ அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்-​ ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல!​ ​ எதற்காக இந்தக் கொலை?​ அவர் சொல்ல வரும் விஷயம் என்ன?​ அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை,​​ அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை.​ ​(சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே ​ இராமன்,​​ இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?​ சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)

அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர,​​ பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள்.​ அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும்.​ அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை?​ வலது கால் துண்டான நிலையில்,​​ ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை,​​ அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும்,​​ எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி,​​ முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும்.​ அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்?​ கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே!​ அல்லது,​​ காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா?​ எதற்காகக் கடைசிவரை காத்திருந்து,​​ 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.

"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம்.​ இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.​ கே.​ பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும்,​​ பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம்.​ இத்தகைய ஒரு பதிலை,​​ சாதாரண மனிதர்கள் சொல்லலாம்.​ ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா?​ ​ 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை.​ ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் ​ கட்டளையிட்டால்,​​ செயல்பட ஆள்,​​ படை,​​ வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது.​ ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..

காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது.​ மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர்,​​ ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது,​​ "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ்,​​ அவர்களைக் கடுமையாகத் திட்டி,​​ விரட்டி அடித்தார்.​ அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல.​ மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.

ஆனால்,​​ சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால்,​​ அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும்.​ ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை.​ அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர,​​ சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி.​ சானல்களில் ஒளிப்பரப்பாகின.​ தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி.​ சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும்,​​ எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின.​ அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும்,​​ இதைக் காண நேர்ந்த பொதுமக்கள்,​​ சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை,​​ பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது.​ ஓர் உயிரின் துடிப்பு,​​ பலரையும் துடிதுடிக்க வைத்தது.​ ​

அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை-​ தனியார் டி.வி.​ சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!