Sunday, January 17, 2010

தகுதியற்றதா, தேவையற்றதா?

தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் அண்ணா கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது போன்ற தகுதியற்ற செலவுகளுக்காகத் திருப்பிவிட்டதாகக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறியிருக்கிறது.

தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.

அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.

பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.

எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.

வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.

நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?