-
Wednesday, January 27, 2010
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.
நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட்டும் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் பாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால்,சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல்.இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும். பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும். அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன. பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது.ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா?சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.