Wednesday, January 27, 2010

உற்பத்திக்கு உதவாது

செயல்படுத்துகிறார்களோ இல்லையோ நமது ஆட்சியாளர்கள் நிறையப் பேசுகிறார்கள். அக்கறையுடனும், ஆதங்கத்துடனும் பதவியில் இருப்பவர்கள் கருத்துகளைக் கூறும்போது ஏதோ இதுபற்றிய நினைப்பாவது இவர்களுக்கு இருக்கிறதே என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளத் தோன்றுகிறது.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிகழ்த்திய குடியரசு தின உரையில், இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு வித்திட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். "உலகளாவிய உணவுப் பற்றாக்குறையும், அதன் விளைவாக உணவுப் பொருள்களின் விலை உயர்வும் கவலை அளிக்கிறது.

நாம் உணவுப் பொருள் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, பணப்பயிருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிக அளவில் நமது விவசாயிகளை உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்' என்பது அவரது குடியரசு தின உரையின் முக்கியமான அம்சம்.

புதிய தொழில்நுட்பம், தரமான விதைகள், மேம்பட்ட சாகுபடி முறைகள், கடனுதவி போன்றவை விவசாயிகளுக்கு எளிதில் கிடைப்பதற்கான வழிமுறைகளை அரசு போர்க்கால நடவடிக்கையில் செய்து தர வேண்டும் என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் மட்டுமல்ல, பொறுப்புள்ள பதவியில் இருக்கும் பலரும் இதே கருத்துகளை அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால், இதற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டியது யார்? இப்படிப் பேசுபவர்கள்தானே என்பதை நினைக்கும்போது சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

மத்திய வேளாண்துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் சரத் பவார், விலைவாசி உயர்வுக்குக் காரணம் தான் மட்டுமல்ல என்றும், மத்திய அமைச்சரவைக்கும், மாநில அரசுகளுக்கும் இதில் பங்கு உண்டு என்றும் பேசியிருக்கிறார். மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்களுக்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தமே கிடையாது என்று, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு, உணவுப் பொருள்களின் விலை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

விவசாயம் நலிந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு பிழைப்பைத் தேடி அருகிலுள்ள பட்டணங்களுக்குக் குடிபெயர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.

விவசாயம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் விவசாயிகளுக்குக் கூலி வேலை செய்ய ஆள்கள் கிடைப்பதில்லை. உடல்நோகாமல் நூறு நாள் வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது, சகதியில் இறங்கி கஷ்டப்பட்டு வேலை பார்த்து அதிக வருமானம் சம்பாதிக்க பலருக்கும் மனமில்லை. வேளாண்மை இல்லாத வறட்சியான பகுதிகளில் மட்டும்தான் கட்டாய வேலைவாய்ப்புத் திட்டம் என்று திட்டவட்டமாக முடிவெடுக்க வாக்கு வங்கி அரசியல் நமது ஆட்சியாளர்களைத் தடுக்கிறது.

தேசியக் குற்றப்புள்ளிவிவரத்துறை இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2008-ம் ஆண்டு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவித்த பிறகும் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது அந்தக் குறிப்பு. முந்தைய ஆண்டைவிட 436 பேர் குறைவாகத் தற்கொலை செய்துகொண்டனர், அவ்வளவே!

1991-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்புக்கும் இடையில் சுமார் 80 லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்தியிருக்கிறார்கள். 2011-ல் கணக்கெடுக்கும்போது கடந்த 10 ஆண்டுகளில் அதைவிட இரண்டு மடங்கு அதிகம் விவசாயிகள் ஒன்று நிலத்தை விற்றிருப்பார்கள் அல்லது விவசாயம் செய்வதை விட்டிருப்பார்கள்.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் விவசாயிகள் தற்கொலையின் விழுக்காடு எவ்வளவு என்று கணக்கெடுப்பது தவறு. மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், விவசாயிகளின் எண்ணிக்கையோ குறைந்து வருகிறது. குறைந்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலைகள் எவ்வளவு என்றல்லவா புள்ளிவிவரம் எடுக்கப்பட வேண்டும்.

பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிவாரணம் என்ற பெயரில் அரசு வழங்கியதே என்று கேட்கலாம். அரசு வழங்கியது அனைத்துமே வங்கிகளைக் கொழிக்க வைத்தனவேதவிர ஏழை விவசாயிகளை வாழ வைக்கவில்லை. வலது கை கொடுத்ததை இடது கை வாங்கிக் கொண்டது அவ்வளவே.

வங்கியில் விவசாயி வாங்கியிருந்த கடனை ரத்து செய்து அந்தப் பணத்தை அரசு வங்கிகளுக்கு அரசே அளித்தது. விவசாயி தனியாரிடம் கந்து வட்டிக்கு வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாமல் தனது நிலத்தை இழந்தான். அடுத்த சாகுபடிக்குப் பணம் இல்லாமல் ஏனைய பல விவசாயிகள், விவசாயம் செய்வதை மறந்தனர். இதுதான் நடந்தது.

குடியரசுத் தலைவர் நல்லதொரு எச்சரிக்கையையும் ஆலோசனையையும் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதுபோல போர்க்கால நடவடிக்கையில் விவசாயம் காப்பாற்றப்பட்டே தீர வேண்டும். அதற்கு, முதலில் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தேசிய அளவில் எந்தவித விலக்கும் அனுமதிக்கப்படாமல் தடை செய்யப்பட வேண்டும். கட்டாய வேலைவாய்ப்புத் திட்டம் என்பது தரிசுநிலப் பகுதிகளிலும், வறட்சியான மாவட்டங்களிலும் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

உதட்டளவு அனுதாபம் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க உதவாது!