Friday, March 26, 2010

எதிரிகளை அதிர வைக்கும் 'மிளகாய் குண்டு' : இந்திய ராணுவத்தில் அறிமுகம்

சென்னை, பரங்கிமலை, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த ராணுவ ஊழியர்களுக்கான துணை தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பரத்வாஜ் கூறுகையில், 'உலகின் அதிநவீன ஆயுதங்கள் கூட தற்போது இந்திய ராணுவத்தில் உள்ளது' என்றார். இந்நிலையில், உள்நாட்டிலேயே கிடைக்கும் சாதாரண மிளகாயும் ஆயுதமாக மாறி, தற்போது இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவி செய்ய உள்ளது.


வட மாநில சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் 'பூட் ஜேலோகியா' என்றழைக்கப்படும் ஒருவகை மிளகாய், கட்டை விரல் அளவில் தான் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக விளைகிறது. இந்த வகை மிளகாய் உலகிலேயே மிகவும் காரம் அதிகம் கொண்டது. இதன் காரத்தன்மை அதிகமாக இருப்பதால், அதற்கு 'பேய் மிளகாய்' (கோஸ்ட் சில்லி) என்று பெயர் விளங்குகிறது. உலகிலேயே அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் என்று இந்த மிளகாய், 'கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு' புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. காரத்தின் அளவை அளக்கும் முறையின் கீழ் சோதனை செய்யப்பட்டதில், முதல் தர புகையிலையின் சாறு 2 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் யூனிட் காரம் கொண்டது. ஜலபினோ மிளகு 2 ஆயிரத்து 500 முதல் 8 ஆயிரம் யூனிட் காரம் உடையது. ஆனால், பூட் ஜேலோகியா

மிளகாயோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கார சுவை கொண்டது.


தற்போது, பயங்கர கார சுவை கொண்ட பூட் ஜேலோகியா மிளகாயை, ஒரு ஆயுதமாக மாற்றி, பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த வகையில், மிளகாய் கையெறி குண்டு தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 'கண்ணீர் புகையை போல கையெறி குண்டாக இந்த மிளகாயை பயன்படுத்தி எதிரிகளை செயலிழக்கச் செய்யலாம்' என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அசாமில் உள்ள ராணுவ பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் விஞ் ஞானிகளால் தற்போது மிளகாய் எறிகுண்டு தயாரித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பூட் ஜேலோகியா மிளகாயால் தயாரிக்கப்படும் கையெறி குண்டு, நஞ்சு கலக்காத ஒரு ஆயுதம் என்று உறுதியாக கூறலாம். மிளகாய் எறிகுண்டை வீசும் போது வெளிப்படும் கார நெடி, பயங்கரவாதிகளை மிகுந்த எரிச்சலடைய செய்து, அவர்களை மறைவிடத்தில் இருந்து வெளியே வரவழைத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


பெண்கள் மீது தற்போது அதிகளவில் தாக்குதல்கள் நடக்கின்றன. தங்களை தாக்குபவர்களை தடுக்கும் வகையில் பெண்கள் பயன்படுத்துவதற்கும், கும்பலை கலைக்க போலீசாருக்கு உதவும் வகையிலும், பூட் ஜேலோகியா மிளகாய் 'ஸ்பிரே'க்கள் தயாரிப்பது தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. ஆனால், சென்னை மாநகர போலீசார், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்பவர்களிடம் இருந்து தப்பிக்க மிளகாய் ஸ்பிரேயை பயன்படுத்தலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை தற்போது செயல்படுத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.