இதுவரை பூமிக்கு மேல் பைப் அமைத்து அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் மேற்கொண்டனர். இஸ்ரேல் நாட்டின் தொழில் நுட்பத்தில் பூமிக்கு அடியில் பைப் பதித்து சொட்டு நீர் பாசனம் செய்யும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அத்தகைய புதிய முறையிலான சொட்டு நீர் பாசனத்தை, முதன் முறையாக ப.வேலூர் அடுத்த கபிலர்மலை யூனியன் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி அன்பரசு தன் தரிசு நிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்.இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஒரு ஏக்கருக்கு வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்ச தேவையான நீரை, பூமிக்கு அடியில் பதித்துள்ள சொட்டு நீர் பாய்ச்சும் முறையில் 10 ஏக்கருக்கு பாய்ச்சி விடலாம். ஏக்கர் முழுவதும் 5 மணி நேரத்தில் நீரை பாய்ச்சி விடமுடியும்.
இது குறித்து விவசாயி அன்பரசு கூறியதாவது:தரிசாக கிடந்த நிலத்தில், இந்த புதிய பாசன முறை மூலம் பத்து ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். அதன் மூலம் ஆள்பற்றாக்குறை நீங்குகிறது. ஒரு ஆள் பத்து ஏக்கரில் சாகுபடி செய்துள்ள விவசாயத்தை பார்த்துவிட்டு பின் மற்ற பணிகளில் ஈடுபடமுடியும்.இந்த முறை பாசனத்தில் தண்ணீர் தேவை மிக மிக குறைவு. ஒரு கிணற்று தண்ணீரை வைத்துக்கொண்டு 5 மாதமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயத்தை பொறுத்தவரை கூலி ஆட்கள் தேவை அதிகம். இம்முறையில் அதற்கு இடமில்லை. மேலும், பத்து ஏக்கருக்கு வாய்க்கால் பாசனம் மூலம் 24 மணி நேரம் செலவாகும். ஆனால், புதிய தொழில் நுட்பத்தில் தண்ணீர் பாய்ச்ச 5 மணி நேரம் மட்டுமே போதுமானது. பூமிக்கு அடியில் தண்ணீர் சென்று கரும்பின் வேரிலேயே தண்ணீர் பாய்ச்சுவதால், மேலே களை வருவதில்லை.சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு யூரியா இரண்டு மூட்டை செலவாகும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாயும் போதே யூரியாவை கலந்து டியூப் மூலம் பாய்ச்சுவதால், பத்து கிலோ மட்டுமே போதுமானது. அதன் மூலம் உரச்செலவும் மிச்சம்.இந்த முறை பாசனத்தில் நேரத்தை மோட்டாரில் செட் செய்து விட்டால், அந்த நேரத்தில் தானாகவே மோட்டார் நின்று விடும். இத்தகைய பாசனத்துக்கு அரசு மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்கிறது.
ஒரு முறை பைப் பூமியில் பதித்து விட்டால் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு அதை பயன்படுத்தலாம். புதிய சொட்டு நீர் பாசன முறை அமைக்க 1.50 லட்சம் ரூபாய் செலவானது. அதில், 20 சதவீதம் அரசு மானியம் வழங்கியுள்ளது. சாகுபடிசெய்த கரும்பில் 100 டன் மகசூல் கிடைத்துள்ளது. இந்த முறையில் கரும்பு பயிர் மட்டும் அல்லாமல் நிலக்கடலை, மரவள்ளி போன்றவற்றையும் சாகுபடி செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.தரிசு நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்துவரும் நிலையில், மற்ற விவசாயிகளுக்கு அவர் முன்னுதாரமான திகழ்கிறார். விலை போகும் விளை நிலங்கள், மீண்டும் விளை நிலமாக மாற இவரை போல் மற்றவர்களும் முன்வர வேண்டும்.