Wednesday, June 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக தொடங்கியது


கோவை:கோவையில் ஐந்து நாள் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக தொடங்கியது . முதல்வர் கருணாநிதி தலைமையில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். மாநாட்டில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கோவை நகரில் குவிந்துள்ளனர்.தமிழ் மொழியை, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்துள்ளன. ரூ.300 கோடியில் மாநகரில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட்டுள்ளன.மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்தில் 4.4 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை அமர்ந்து துவக்க விழாவை பார்க்கலாம். பல்வேறு தலைப்புகளில் நடக்கும் ஆய்வரங்கத்திற்கு 21 தனி அரங்குகள் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

துவக்க விழா, மாநாட்டு பொது அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கும் இவ்விழாவில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொண்ட மாநாட்டை துவக்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் பர்னாலா, வெளிநாட்டு தமிழறிஞர்கள் ஜார்ஜ் ஹார்ட்(அமெரிக்கா), சிவத்தம்பி(இலங்கை), கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.விழாவில், பின்லாந்து தமிழ் மொழி அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு ‘கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ பிரதிபா பாட்டீல் வழங்குகிறார். பின்னர், மாலை 4 மணிக்கு இனியவை&40 என்ற பெயரில் தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடக்கிறது. இதில் 40 அலங்கார ஊர்திகளும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இதை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.அவிநாசி ரோட்டில் அரசு மருத்துவ கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் இருந்து குடியரசு தலைவரும், முதல்வரும் பேரணியை பார்வையிடுகின்றனர். மத்திய மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊர்வலத்தை பார்ப்பதற்கு ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு அவிநாசி ரோட்டில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு மலேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சுப்ரமணியம் தலைமையில் அந்நாட்டு குழுவினர், மாலத்தீவு சுற்றுலாத் துறை இணையமைச்சர் அகமது நசீர் தலைமையில் 200 பேர் அடங்கிய குழுவினர், இலங்கையில் இருந்து 40 பேர் அடங்கிய குழுவினர் உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை வந்துள்ளனர்.இதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பை, டில்லி, கொல்கத்தாவில் இருந்து பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கோவையில் குவிந்துள்ளனர். மாநாட்டை ஒட்டி, கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஊர்வல பாதை முழுவதும் அலங்கார விளக்குகளாலும், மாநாட்டு இலச்சினை தாங்கிய கொடிகளாலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ஊர்வலப்பாதை நெடுக ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மாநாட்டு பந்தலை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை கூட துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ராட்சத பலூனில் நவீன கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தமிழக டிஜிபி லத்திகாசரண் தலைமையில் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், இரண்டு ஐ.ஜி.க்கள், 8 டிஐஜிக்கள் உட்பட பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.