Tuesday, July 27, 2010

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்



மாஸ்கோ: "வரும் 2050ம் ஆண்டில் ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் இருக்காது' என, ரஷ்ய வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ப்ரொலொவ், இது குறித்து கூறியதாவது: வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டி இருந்தது. தற்போது ஒரு கோடியே 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டியின் அளவு குறைந்துள்ளது. வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் அளவு கூடியதால், வெப்பம் அதிகரித்து பனிப் பாறைகள் உருகி விட்டன. இதே நிலை நீடித்தால், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் கோடை காலத்தில் இப்பகுதியில் பனிப்பாறைகளே இல்லாத நிலை ஏற்படும்.

ஆர்க்டிக் துருவப் பகுதியை கண்காணிப்பதற்காகவே 10 ஆயிரம் கோடி ரூபாயில் விண்வெளித் திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். இதன் ஒரு கட்டமாக ஆர்க்டிக் பகுதியில் சேரும் ஹைட்ரோ கார்பன் அளவை கணக்கிடுவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் விவாதித்து வருகிறோம். இவ்வாறு அலெக்சாண்டர் ப்ரொலொவ் கூறினார்.