Thursday, July 22, 2010

செவ்வாய்க்குச் செல்ல கூண்டுக்குள் 520 நாள்



ஜூன் மாத முதல் வாரத்தில் ஆறு பேர் செவ்வாய் கிரகத்துக்குப் பயணம் கிளம்பினர். ஆனால், ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அவர்கள் இன்னும் தரையில்தான் இருக்கிறார்கள். அதுவும் ஒரு கூண்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். ஏன் என்ன ஆயிற்று?

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த ஆறு பேரும் மேற்கொண்டுள்ள பயணம் பாவனையான ஒரு பயணமே. இது ஒருவகையான ஒத்திகை. அதாவது, இவர்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கூண்டுக்குள் புகுந்துள்ளனர். இந்தக் கூண்டுக்குள் அவர்கள் 520 நாள்கள் தங்கியிருப்பர். அதென்ன 520 நாள்கள் கணக்கு?

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வருவதற்குக் குறைந்தது அவ்வளவு நாள்கள் ஆகும். ஆகவே, அவர்கள் ஆறு பேரும் அவ்வளவு நாள்கள் கூண்டுக்குள் இருப்பார்கள். அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு உண்மையில் செல்வதானால் எவ்விதமான பணிகளைச் செய்ய வேண்டுமோ அவ்விதமான பணிகளைச் செய்வர். அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்? எவ்விதம் ஒருவருடன் ஒருவர் பழகுகிறார்கள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். அந்த நோக்கில்தான் இந்த ஏற்பாடு.

ரஷியாவில் மாஸ்கோ நகருக்கு அருகே புறநகர்ப் பகுதியில் விசேஷ ஆராய்ச்சிக் கூடம் உள்ளது. அங்கு தான் இந்த செவ்வாய் பயணக் கூண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சாப்பாடு, தூக்கம், பணி, ஆராய்ச்சி என எல்லாமே இந்தக் கூண்டுக்குள்தான். ஜூன் 4-ம் தேதி இந்த ஆறு பேரும் உள்ளே நுழைந்த பின் சாத்தப்பட்ட கதவு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம்தான் திறக்கப்படும்.

மனிதன் சந்திரனுக்குச் சென்றபோது இப்படியெல்லாம் ஒத்திகை நடந்ததா? செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கு மட்டும் ஏன் இப்படி விசேஷ ஒத்திகை என்று கேட்கலாம். சந்திரன் ஒரு பங்களாவின் காம்பவுண்டுக்குள் இருக்கிற அவுட் ஹவுஸ் மாதிரி. பூமியிலிருந்து சந்திரன் சராசரியாக 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தூரம் எப்போதுமே பெரிதாக வித்தியாசப்படுவதில்லை. பூமியிலிருந்து ராக்கெட் மூலம் கிளம்பினால் நான்கு நாள்களில் சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால், செவ்வாய் கிரகம் அப்படியானது அல்ல.

1969-ம் ஆண்டில் மனிதன் சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் செவ்வாய்க்கு மனிதன் செல்வது என்பது இன்னும் ஏட்டளவில்தான் உள்ளது. நிதிப் பிரச்னை உள்பட அதற்குப் பல காரணங்கள் உண்டு.

செவ்வாய் கிரகத்தை நமது பக்கத்து வீடு என்றும் வர்ணிக்கலாம். சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகம் பூமிக்கு அடுத்த வட்டத்தில் அமைந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. பக்கத்துக் கிரகம் என்றாலும் பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் குறைந்தது 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் மூலம் போய்ச் சேர குறைந்தது 8 மாதங்கள் ஆகும். செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேர்ந்த பின் சில காரணங்களால் அங்கு கட்டாயம் சில மாதம் தங்கியாக வேண்டும். அங்கு 4 மாதங்கள் தங்குவதாக வைத்துக் கொள்வோம். பிறகு அங்கிருந்து பூமிக்குத் திரும்ப மேலும் 8 மாத காலப் பயணம். ஆக, செவ்வாய்க்குப் போய்விட்டுத் திரும்ப மொத்தம் 20 மாதங்கள் ஆகிவிடலாம்.

சந்திரனுக்குக் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போய்விட்டு வந்து விடலாம். ஆனால், செவ்வாய்க்குப் போவதானால் உணவு, காற்று, தண்ணீர் ஆகியவற்றைக் குறைந்தது எட்டு மாதகாலம் தாக்குப் பிடிக்கிற அளவுக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். எனினும், அங்கு போய் இறங்கிய பின்னர் அங்கு தங்குவதற்கான 4 மாத காலத்துக்கும், திரும்பி வருவதற்கான எட்டு மாதக் காலத்துக்கும் தேவைப்படுகிற உணவையும் இதர பொருள்களையும் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பி வைப்பதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியலாம்.

ஆனால், செவ்வாய்க்குப் போய்ச் சேருவதற்கான நான்கு மாதப் பயணத்தின் போது முக்கியமாக மூன்று பிரச்னைகளைச் சமாளித்தாக வேண்டும். முதல் பிரச்னை விண்வெளியில் உள்ள எடையற்ற நிலைமை. அதாவது, விண்வெளியில் ஈர்ப்பு சக்தி அவ்வளவாக இல்லாத நிலைமை.

செவ்வாய்க்குச் செல்லும் விண்கலத்தில் 6 பேர் செல்வதாக வைத்துக் கொண்டால் இந்த 6 பேரும் பல மாத காலம் எடையற்ற நிலைக்கு ஆளாவர். அதாவது, விண்கலத்துக்குள்ளாக அந்தரத்தில் மிதப்பர். கால்களுக்கு வேலையே இராது. இதனால் கால்கள் சூம்பிவிடும். செவ்வாயில் அவர்கள் போய் இறங்கும்போது அவர்களால் காலை ஊன்றி நிற்க முடியாது.

பூமியைச் சுற்றுகிற விண்கலத்தில் பல நாள்கள் தங்கிவிட்டு பூமிக்குத் திரும்புகிற விண்வெளி வீரர்களில் பலரை ஸ்ட்ரெட்சரில் தூக்கி வரவேண்டிய நிலைமை கடந்த காலத்தில் பல தடவை ஏற்பட்டுள்ளது. ஆனால், செவ்வாய்க்குச் செல்லும் விண்கலம் தனது பயணத்தின்போது நிமிஷத்துக்கு சில தடவை தனது அச்சில் சுழலும்படி செய்தால் ஓரளவுக்குச் செயற்கையான ஈர்ப்பு சக்தி உண்டாக்கப்படும். இதன் மூலம் இப் பிரச்னை சமாளிக்கப்படலாம்.

இரண்டாவது பிரச்னை - சூரியனிலிருந்தும் மற்றும் நட்சத்திரங்களிலிருந்தும் வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு. விண்கலத்துக்குள் இருக்கிற விண்வெளி வீரர்களை இக் கதிர்வீச்சு பாதிக்காதபடி தக்க ஏற்பாடுகளைச் செய்ய இயலும்.

மூன்றாவது பிரச்னை - மனோ நிலைமை. செவ்வாய்க்குச் செல்கிற விண்கலத்தில் 6 விண்வெளி வீரர்கள் சுமார் எட்டு மாத காலம் ஒரே இடத்தில் அடைந்து கிடக்கும்போது மன நிலைமை பாதிக்கப்படலாம்.

சந்திரனுக்குச் செல்ல சுமார் நான்கு நாள்களே ஆகியதால் சந்திரனுக்கான பயணத்தின்போது விண்வெளி வீரர்களின் மனோ நிலை பாதிக்கப்படுகிற பிரச்னை ஏற்படவில்லை. தவிர, சந்திரனுக்குச் செல்லும்போது விண்கலத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் எந்த நேரத்திலும் பூமி பெரிய உருண்டையாகத் தெரிந்தது. ஆனால், செவ்வாய்க்குப் பயணம் கிளம்பிய பின்னர் ஒரு கட்டத்தில் பூமியானது வெறும் புள்ளியாகத்தான் தெரியும்.

இரவில் வாய்ப்பான சமயத்தில் நீங்கள் செவ்வாய் கிரகத்தைப் பார்த்தால் அது சிறிய சிவந்த ஒளிப்புள்ளியாகத் தெரியும்.

அதேபோல செவ்வாயிலிருந்து பார்த்தால் பூமி வெறும் நீலநிறப் புள்ளியாகத்தான் தெரியும். இது விண்வெளி வீரர்களின் மனதில் தனிமை உணர்வையும் கிலேசத்தையும் உண்டாக்கலாம். திடீரென்று விண்கலத்தில் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டால் பூமிக்குத் திரும்ப முடியாமல் போய் விடுமோ என்ற பய உணர்வு எப்போதும் மனதில் மேலோங்கி நிற்கும்.

செவ்வாய்க்கு விண்கலத்தில் செல்லும் விண்வெளி வீரர்களின் மனோ நிலைமை எவ்விதமாக இருக்கும்? அவர்களால் ஒன்றுபட்டு பணியாற்ற இயலுமா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காணவே கூண்டுக்குள் ஆறு பேரை அடைத்து வைத்துச் சோதனை நடத்தப்படுகிறது. இவர்கள் ஆறு பேரும் தாங்களாகத்தான் இப் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளனர்.

சுமார் 6,000 பேர் விண்ணப்பித்ததில் இந்த 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனினும், இவர்களில் யாரேனும் ஒருவருக்கு உள்ளே இருக்கப் பிடிக்கவில்லை என்றால், எந்த நேரத்திலும் வெளியே வந்து விடலாம். வெற்றிகரமாக உள்ளே 520 நாள்கள் தங்கிப் பணியாற்றிவிட்டு வெளியே வந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 40 லட்சம் பணம் கிடைக்கும்.

இக் கூண்டுக்குள்ளாக ஒன்றரை ஆண்டுக்குத் தேவையான உணவு, மருந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து அவசியமானால் தண்ணீர், ஓரளவு காற்று, மின்சாரம் ஆகியவை மட்டுமே சப்ளை செய்யப்படும். கூண்டுக்குள் டிவி வசதி கிடையாது. ஆனால், உள்ளே இருப்பவர்கள் யாருடன் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பேசலாம், ஆனால், இதில் வேண்டுமென்றே ஒரு விசித்திர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளே இருப்பவரில் ஒருவர் தொலைபேசியை எடுத்து ஹலோ என்று சொன்னால் வெளியே இருப்பவர்களின் தொலைபேசியில் 20 நிமிஷம் கழித்துத்தான் மணி அடிக்கும். ஹலோ சத்தம் கேட்கும். வெளியே தொலைபேசியை எடுப்பவர் ஏதாவது பதில் கூறினால் அது உள்ளே இருப்பவருக்குப் போய்ச் சேர அதேபோல 20 நிமிஷம் ஆகும். செவ்வாய் கிரகம் பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் செவ்வாய்க்குச் செல்பவர் அங்கிருந்து பேசினால் சிக்னல்கள் வடிவில் அவரது குரல் பூமிக்கு வந்து சேர 20 நிமிஷம் ஆகும். ஆகவே தான் கூண்டுக்குள் இப்படி ஓர் ஏற்பாடு. .

இப்போது கூண்டுக்குள் இருப்பவர்கள் பின்னர் செவ்வாய்க்குச் செல்ல வாய்ப்பில்லை. எனினும், இந்த ஆறு பேரின் அனுபவம் பின்னர் செவ்வாய்க்கான விண்வெளி வீரர்களைத் தயார்படுத்த உதவும். அவ்வளவுதான். இந்த ஒத்திகையை வைத்து ஏதோ இப்போது செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப ஏற்பாடு நடப்பதாக நினைத்தால் தவறு. செவ்வாய்க்கு அமெரிக்கா ஆளில்லா விண்கலங்கள் பலவற்றை அனுப்பியுள்ளது என்றாலும், மனிதனை அனுப்ப இன்னும் நிறைய ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டியுள்ளது.

செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவிட்டு வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகளில் மனிதனை அனுப்ப முடியலாம் என்று கடந்த ஏப்ரலில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். அதற்கு சில ஆண்டுகள் கழித்து மனிதன் செவ்வாயில் இறங்க முடியலாம் என்றும் அவர் சொன்னார். ஆகவே, செவ்வாய்க்கு மனிதன் செல்வதற்கு இன்னும் இரண்டு மகாமகம் (24 ஆண்டுகள் )ஆகலாம்.