Tuesday, July 20, 2010

இவர்கள் அவர்கள் அல்லவே..!


லால்பகதூர் சாஸ்திரி என்றொரு மாமனிதர் இந்திய அரசியலில் பல்வேறு தியாகங்களைப் புரிந்து தனக்கென இடம் பிடித்தவர். முன்னாள் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1951 முதல் 1956 வரை பணியாற்றியவர்.

1956-ல் மகபூப் நகர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பெரிய ரயில் விபத்து இதுதான். விபத்தைத் தொடர்ந்து, அந்தத் தவறுக்கும் உயிரிழப்புக்கும் தார்மிகப் பொறுப்பு ஏற்றுத் தனது பதவியைத் துறக்க முன்வந்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

அடுத்த மூன்றாவது மாதமே, 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இன்னொரு பயங்கரமான ரயில் விபத்தை இந்தியா சந்திக்க நேர்ந்தது. அரியலூர் பாலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 129 பேர் இறந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த முறை, இனியும் அமைச்சராகத் தான் தொடர்வது சரியல்ல என்று லால்பகதூர் சாஸ்திரி தீர்மானமாகச் சொன்னபோது, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சொன்ன வார்த்தைகள், இன்றைய ஆட்சியாளர்கள் அனைவருக்குமே பாடமாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

""எங்கேயோ நடந்த தவறுக்கு, அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஏன் ராஜிநாமா செய்து பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தார்மிகப் பொறுப்பேற்கும்போதுதான், அவரது தலைமையில் இயங்கும் அத்தனை பேருமே பொறுப்புடன் செயல்படுவார்கள். நாம் குடிமக்களின் நலனுக்காகப் பதவி வகிப்பவர்கள். அவர்களது நலனைப் பாதுகாக்க அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். இதை மனதில் கொண்டு, தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்கும் லால்பகதூர் சாஸ்திரியின் முடிவு, வருங்கால சுதந்திர இந்தியாவில் பதவிக்கு வரும் மக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமையும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு தந்த விளக்கத்தை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை அடைவதில் அர்த்தம் இல்லை. காரணம்,இவர்கள் அவர்கள் அல்லவே!

கடந்த மே மாதம் 28-ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் 146 உயிர்கள் பலியானபோது, அது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதிச் செயல் என்பது ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகத் தெரிந்தது. இதோ, திங்கள்கிழமை மீண்டும் கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. தூரத்திலுள்ள சைந்தியா ரயில் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்து நிச்சயமாக எந்தத் தீவிரவாதப் பின்னணியும் இல்லாதது என்பதும் தெள்ளத் தெளிவு.

சைந்தியா ரயில் நிலையத்திலிருந்து வனாஞ்சல் விரைவு ரயில் அப்போதுதான் புறப்படுகிறது. அந்தநேரத்தில், சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் அதே தண்டவாளத்தில் விரைந்து வந்து, வனாஞ்சல் விரைவு ரயிலில் மோதுகிறது.

இரவு நேரம். எல்லோரும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். நமது இந்திய அரசின் பார்வையில், வசதி இல்லாத, முன்பதிவு செய்யாத, செய்ய வழியில்லாத பராரி ஏழைகள் மனிதர்களே அல்லவே. அவர்களை நாம் இந்தியக் குடிமக்களாகக் கருதுவதே கிடையாதே. அதனால்தானே, ரயில் எஞ்சினுக்கு அருகே உள்ள முதல் மூன்று பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளாக இணைக்கப்படுகின்றன. எந்த விபத்து ஏற்பட்டாலும் முதல் பலி, இவர்களாகத்தான் இருக்கும்.

தூங்கி வழிந்து கொண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடைந்து கிடந்த சாதாரண இந்தியக் குடிமக்களை மரணம் எதிர்பாராதவிதமாகத் தாக்கியதன் பின்னணியில் இருந்தது சதியல்ல. பொறுப்பற்ற தனம்.

ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில்தான் பயணிக்க முடியும். அப்படியானால், தூக்கக் கலக்கத்தில் உத்தர் பங்கா விரைவு ரயில் வருவதை எதிர்பார்த்து முறையாக சிக்னலைப் போடாமல் விட்டு விட்டார்களா? இல்லை, சிக்னல் இருப்பதைக் கவனிக்காமல் உத்தர் பங்கா விரைவு ரயிலின் ஓட்டுநர் அதே தண்டவாளத்தில் வந்துவிட்டாரா? சிக்னல் போடப்பட்டிருந்தால் தண்டவாளம் தானாகவே இன்னொரு நடைமேடைக்கு உத்தர் பங்கா ரயிலைத் திருப்பிவிட்டிருக்க வேண்டுமே, ஏன் அப்படிச் செய்யவில்லை?

அதெல்லாம் போகட்டும். சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் மெதுவாகத்தானே நுழைந்திருக்க வேண்டும். விரைவாக வந்ததன் காரணம் ரயிலில் ஓட்டுநர் தூங்கி விட்டதாலா? இதற்குப் பதில் சொல்ல அந்த ஓட்டுநர் இப்போது உயிருடன் இல்லை.

ரயில்வே லாபத்தில் ஓடுகிறது என்று பெருமை தட்டிக் கொள்ளும் ரயில்வே நிர்வாகம், மிக அதிகமான அளவில் எல்லா ரயில்களிலும் பெட்டிகளை அதிகரித்திருக்கிறது. எல்லா தடங்களிலும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, தண்டவாளங்களின் தரமும் (க்வாலிடி), பலமும் (ஸ்ட்ரென்க்த்), சக்தியும் (பவர்) அதிகரித்திருக்கிறதா என்பது சந்தேகமே.

பழைய தண்டவாளங்களில், பழைய தொழில்நுட்பங்களுடன் கணக்கு வழக்கில்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து லாபம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதன் விளைவுதான் இத்தனை விபத்துகள் என்று ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எச்சரிப்பது கேட்கிறது.

கடந்த பத்து மாதங்களில் இதுவரை 14 ரயில் விபத்துகள் நடந்தேறிவிட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி விட்டன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேரமில்லை. அவருக்கு மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, முதல்வர் பதவியில் அமர்வது மட்டும்தான் ஒரே குறிக்கோள். இந்த ரயில் விபத்தைக்கூட மேற்குவங்க அரசின் கையாலாகாத்தனம் என்று அவர் வர்ணிக்க முற்படலாம்.

மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய இன்னொரு லால்பகதூர் சாஸ்திரியும் அல்ல; மன்மோகன் சிங் அதை ஏற்றுக்கொள்ள பண்டித ஜவாஹர்லால் நேருவும் அல்ல. இன்றைய இந்தியா, அன்றைய தலைவர்கள் கண்ட கனவும் அல்ல!