-
Thursday, July 15, 2010
இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்வு: ஆய்வில் பகீர் தகவல்
சிங்கப்பூர் : இந்திய பெருங்கடலில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளும், தேசிய வானிலை மைய விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, கரியமில வாயு போன்றவை காற்றில் கலப்பதால், வளி மண்டலம் பாதிக்கப்பட்டு, சூரிய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; பூமியின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, அண்டார்டிகா பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன.இப்படி உருகுவதால், கடலிலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதாவது, ஆண்டுக்கு 3 மி.மீ., அளவுக்கு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக, இந்திய பெருங்கடலின் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் கடல் மட்டம் உயர்வதால், வங்கதேசம், இலங்கை, சுமத்ரா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.கடந்த 1960ம் ஆண்டு முதல் இந்த ஆய்வுக் குழு, கடல் நீர்மட்டம் உயர்வது தொடர்பாக நீண்ட ஆய்வை மேற்கொண்டிருந்தது. இதன் முடிவிலேயே இந்திய பெருங்கடல் உயர்வது தெரிய வந்தது. முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா, நோபல் பரிசு பெற்ற போது உரையாற்றிய அவர், பூமி வெப்பமாவது குறித்து எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.அவரின் பேச்சு எதிர்கால சந்ததியினரைப் பற்றி அக்கறைப்படுவதாக உள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்