-
Friday, July 16, 2010
யாருமே இல்லையே, ஏன்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின்போது போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்ததாக 41 பேர் பிடிபட்டுள்ளனர். மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் 10 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் இணைய தளத்தில் இருப்பதால், ஒரு மாணவரின் தேர்வு பதிவு எண்ணை அழுத்தியதும், அவர் படித்த பள்ளி, பெற்ற மதிப்பெண் அனைத்தும் தெரிந்துவிடும். பல்கலைக்கழக விண்ணப்ப பரிசீலனைக் குழுவோ அல்லது எந்தவொரு தனியார் கல்லூரியின் மாணவர் சேர்க்கையைக் கவனிக்கும் சாதாரண ஊழியரோகூட இதைக் கணினி மூலம், முதல் கட்டமாக உறுதிப்படுத்துவதில் எந்தவிதத் தடையும் கிடையாது என்கிறபோது, இதையெல்லாம் தெரியாமல்தான், ஏமாந்துவிடுவார்கள் என்று நம்பித்தான் கலந்தாய்வில் இந்த மாணவர்கள் பங்கேற்றனர் என்று சொன்னால் அதைப் பாமரன்கூட நம்ப மாட்டான்.
இந்தப் போலி மதிப்பெண் சான்றுகள் சரியானபடி, கல்வித்துறையின் கணினிப் பதிவேட்டிலும் மாற்றியமைக்கப்படும் என்றும், அவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லும் வேளையில் புதிய மதிப்பெண் பட்டியல் இடம்மாறி இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவர்கள் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கண்ணை மூடிக்கொண்டு கையூட்டாகக் கொடுத்திருக்க முடியும்.
இந்த ஆண்டு ஏதோ சில காரணங்களால் இதைக் கல்வித்துறை கருப்பு ஆடுகளால் செய்ய முடியவில்லை என்பதால்தான் இந்த மாணவர்கள் பிடிபட்டுள்ளார்கள். அல்லது சில மாணவர்களது மதிப்பெண்களை மட்டுமே கணினியிலும் திருத்த முடியாமல் போனது என்பதாகவும் கருதவும் இடம் இருக்கிறது. இதில் ஏதோ, சம்பந்தமே இல்லாத கும்பல் ஒன்று கல்வித்துறை அலுவலகத்தில் உலவியது என்று சொன்னால் காவல்துறை மட்டும்தான் அதை நம்பி ஏற்றுக்கொண்டு பதிவு செய்யும்.
இப்படியாகப் பணம் கொடுத்து, மதிப்பெண் வாங்கவும், அதனை அள்ளி வழங்கவும் ஒரு கூட்டம் கல்வித்துறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் உண்மையாகவே படித்து, நன்றாகத் தேர்வு எழுதியும் மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்று அழுதுகொண்டிருக்கும் மாணவர்களுக்கும் காரணம் இதே கல்வித்துறைதான்.
இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் 63,000 மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் 22,000 அதிகம். இதற்கு முக்கியமான காரணம், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதற்கு பொறுப்பாக இருந்தவர்கள்தான். இவர்கள் இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் பற்றியது என்ற எண்ணத்துடன் விடைகளைத் திருத்தாமல், சற்று அலட்சியமாக இருப்பது அதிகரித்து வருகிறது என்பதன் அடையாளம்தான் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்.
நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், ஒவ்வொரு மதிப்பெண்ணும் கலந்தாய்வில் 2000 மாணவர்களுக்கு முன்பாக கொண்டுநிறுத்தும் என்பதால் இவ்வாறு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. காரணம், மறுமதிப்பீடு மறுகூட்டல் செய்ய வேண்டுமானால், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தால் மட்டுமே முடியும்.
இத்தனை பேரும் விண்ணப்பித்தாலும், ஆள்பற்றாக்குறை என்கிற மழுப்பலான பதிலைச்சொல்லிவிட்டு, நகல்களை அனுப்ப வேண்டுமென்றே சில வாரங்கள் காலதாமதம் செய்தது கல்வித் துறை என்பதுதான் பெற்றோரின் ஆதங்கம். 7 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்த முடிந்தவர்களுக்கு, 63,000 பேரின் விடைத்தாள்களின் நகல்களை அனுப்ப எத்தனை நாள்கள் ஆகும்? அதில் ஏன் காலதாமதம்?
இதைக் கல்வித்துறை வேண்டுமென்றே செய்தது என்கிற எண்ணம்தான் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மறுகூட்டலில் தவறு இருந்து, மதிப்பெண் அதிகரித்தால் கல்வித்துறை அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், மறுமதிப்பீடு செய்து அதில் மதிப்பெண் உயருமானால், அதற்கு இரண்டு ஆசிரியர்கள் உறுதி அளிக்க வேண்டும், தவறாகவோ அல்லது கவனக்குறைவாகவே விடைத்தாளைத் திருத்திய ஆசிரியர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
சகஆசிரியர் மீதான "இனப்பற்று' இதைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டுவதும், முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பதும், வேறுவழியின்றி மதிப்பெண் அளித்தே ஆக வேண்டும்; இல்லையானால் நீதிமன்றம் வரை செல்லக்கூடிய நியாயங்கள் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்குவது என்பதும் கல்வித்துறையில் அவர்களுக்குள்ளாகப் பேசிவைத்துக்கொண்ட சட்டமாக இருக்கிறது.
2009-ம் ஆண்டு 1179 மதிப்பெண் பெற்ற மூன்று பேர் மாநிலத்தில் முதல் மாணவர்களாகத் தேர்வு பெற்றனர். ஆனால், ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் படித்த மாணவர் பாலமுருகன் என்பவர், விடைத்தாள் நகல்வாங்கி, சில விடைகள் திருத்தப்படாமல் விடுபட்டிருப்பதைக் கண்டு, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பின்னர், 1184 மதிப்பெண் என அறிவிக்கப்பட்டு, எல்லாப் பாராட்டு விழாக்களும் முடிந்தபிறகு தனியாக முதல்வரிடம் போய் பரிசுப்பணம் வாங்கியும் வெளியுலகுக்குத் தெரியாத நிலைமை ஏற்பட்டது. போராடும் அளவுக்கு பணவலிமை இருக்கிற பெற்றோரும், பள்ளியின் பக்கத் துணை இருப்பவர்களும் களத்தில் இறங்கி, விடுபட்ட மதிப்பெண்களைப் பெற முடிகிறது. சராசரி, வறுமைக் கோட்டுக்குக் கீழே, கீழ்மத்தியதர வகுப்பு என்றால், அவர்களது நியாயம்கூட எடுபடாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, என்ன செய்ய?
விடைத்தாள் நகலில் திருத்தப்படாத ஒரு கேள்விக்கு நீல மை பேனாவால் 2 மதிப்பெண் போட்டு அனுப்புவதும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தபோது மதிப்பெண்ணில் மாற்றமில்லை எனக் கடிதம் அனுப்புவதும், நியாயம் கேட்டால், நீங்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்புவதும் கல்வித்துறையின் கல்நெஞ்சத்துக்கு சாத்தியம் என்கிறபோது, அவர்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அழுதுவிட்டு, இடம் கிடைத்த கல்லூரியில் சேர்ந்துகொள்வதைத் தவிர, பாவம் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
இந்த ஊமை ஜனங்களுக்காகப் போராட, நியாயம் கேட்க, இவர்களது குறைகளைக் களைய யாருமே இல்லையா?
Thanks : Dinamani