Monday, August 9, 2010

எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு


தமிழ்நாட்டிலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு (சம்பளம், படிகள், சலுகைகளுக்காக) என்ன தெரியுமா? ரொம்பவும் அதிகம் இல்லை, 12 கோடியே 60 ஆயிரம்தான்.

திருச்சியைச் சேர்ந்த என். மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதால் கிடைத்துள்ள விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மாத ஊதியம் - 8,000, ஈட்டுப்படி- 7,000, தொகுதிப்படி- 5,000, தொகுப்புப் படி- 2,500, தொலைபேசிப்படி- 5,000, அஞ்சல் செலவுப்படி- 2,500, வாகனப்படி- 20,000. ஆக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதத்துக்கு மொத்தம் 50,000.

இத்துடன், எம்.எல்.ஏ. விடுதியில் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு 2.50 அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு சலுகைக் கட்டணத்தில் மாதம் ஒன்றுக்கு 250 மட்டுமே. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துகள் வாங்கியதாக ரசீது கொடுத்தால், அந்தத் தொகை எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்பக் கிடைக்கும்.

நாளொன்றுக்கு படி 500. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவி, பேருந்துகளில் உதவியாளர் ஒருவருடன் இலவசப் பயணம், மேலும் பயணப்படியாக ஓராண்டுக்கு 20,000, இலவச எழுது பொருள்கள் இன்னும் என்னென்னவோ...

தமிழகத்திலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து சராசரியாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளாக ஒரு மாதத்துக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு 12 கோடியே 60 ஆயிரம்.

எப்படி வளர்ந்தது தெரியுமா? கடந்த 1964 மார்ச் 31-ம் தேதி வரை எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வெறும் |150 மட்டும்தான். வேறெந்தப் படிகளும் கிடையாது. அந்த ஆண்டு சம்பளத்தில் 100 உயர்த்தப்பட்டு, 1971 அக்டோபர் 1-ம் தேதி முதல் ஈட்டுப்படியாக |100 சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்தப் படிப்படியான இமாலய வளர்ச்சி. இப்போதைய "ஈட்டுப்படி' 7,000.

1978 முதல் தொடங்கப்பட்ட "தொலைபேசிப்படி' | 150, இப்போது | 5,000 ஆகியிருக்கிறது. 1991 முதல் தொடங்கப்பட்ட "தொகுதிப்படி' 250, இப்போது 5,000 ஆகியிருக்கிறது. 1993-ல் தொடங்கப்பட்ட "அஞ்சல்படி' 250, இப்போது 2,500 ஆகியிருக்கிறது. 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "தொகுப்புப் படி' 2,000, இப்போது | 2,500 ஆகியிருக்கிறது. 2007-ல் தொடங்கப்பட்ட "வாகனப்படி' 5,000, இப்போது 20,000 ஆகியிருக்கிறது.

மொத்தத்தில் 1964, மார்ச் 31-ம் தேதி வரை மாதம் |150 வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், 45 ஆண்டுகளில் "எல்லா வளர்ச்சியும்' பெற்று இப்போது தலா 50,000 பெறுகிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு "நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை' என்று பதில் வந்திருக்கிறது. நிதியேதும் நிலுவையில் இருந்தால், மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகத் தகவல் சொல்லி, கடிதம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எடுத்துக் கொள்வார்களாக இருக்கும்.

ஆனால், இந்தத் திருநாட்டில்தான் "எக்ஸிகியூட்டிவ்' நிலையில் பணியில் இருப்பவர்களும்கூட 10,000 ஊதியம் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளம் ஆசிரியர்களுக்கு ஊதியம் இன்னமும் ஆறாயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.

உலகப் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு மாதம்தோறும் 5,000தான் ஊதியம். "தாற்காலிகப் பயிற்சியாளர்' என்பது அவரது பதவியின் பெயர். அவரால் உருவாக்கப்பட்டுள்ள வீரர்களின் மதிப்பு? உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளருக்கு மாதம்தோறும் | 6,000.

ஓர் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி இறந்த திருச்சி செந்தில்குமாருக்கு அரசு உதவி எதுவுமில்லை!

இன்னும்கூர்ந்து கவனித்தால் இந்தப் பட்டியல் நீளும். ஆனால், அதேநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், சென்னையில் வீட்டுமனை... இத்யாதி இத்யாதிகளுடன் இன்னும் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.

இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். தொகுதி மக்களை அந்தப் பேரவையில் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான். இங்கே குறிப்பிட்ட சில பிரச்னைகளையும்கூட அவர்கள் பேரவையில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.

சொந்த வீடில்லாத, எந்தவித சொத்தோ, வருமானமோ இல்லாத மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பாளர் மனுவிலேயே பதிவு செய்திருப்பதுபோல லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் கொடுப்பானேன். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபடட்டுமே... இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுவதுபோல, அவர்களது மனசாட்சியும் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...