Sunday, August 8, 2010

கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன?


நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ஆலங்கட்டி மழை என்கின்றனர். அந்த நேரத்தில் இடி, மின்னல் அதிகமாக இருக்கும். சூறை காற்று வீசும். சிறு சிறு கற்கள் அளவுக்கு தண்ணீர் உறைந்து பனிக்கட்டிகளாக தரையில் விழும். இப்படி கிளவுட் பர்ஸ்ட் ஏற்பட்டால், நீண்ட நேரம் மழை நீடிக்காது. சில நிமிடங்களே கொட்டி தீர்த்துவிடும். ஆனால், வெள்ளம் ஏற்படும் அளவுக்கு பாதிப்பு பெரிதாக இருக்கும்.

இந்தியாவை பொறுத்த வரை வங்கக் கடல் அல்லது அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டு மேற்கு நோக்கி நகரும் மழை மேகங்களால் கிளவுட் பர்ஸ்ட் ஏற்படுகின்றன. இந்த மழை மேகங்கள் இமய மலையை கடந்து செல்லும் போது வெடித்து சிதறி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.
காஷ்மீர் லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 2 மணி நேரம் கிளவுட் பர்ஸ்ட் ஏற்பட்டதால்தான், மழை கொட்டி தீர்த்தது. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் 15 கிலோ மீட்டர் உயரத்தில் நிகழும்.

கிளவுட் பர்ஸ்ட் ஏற்படும் போது ஒரு மணி நேரத்துக்குள் 100 மி.மீட்டருக்கு மேல்கூட (3.94 அங்குலம்) மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர். காஷ்மீர் லே பகுதியில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 48.26 மி.மீ. (1.9 அங்குலம்) மழை பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2005 ஜூலை 26ம் தேதி மும்பையில் கிளவுட் பர்ஸ்ட் இயற்கை சீற்றம் நிகழ்ந்தது. அப்போது 8 முதல் 10 மணி நேரத்துக்குள் 950 மி.மீ. மழை பதிவானது. இதனால் வெள்ளத்தில் மும்பை தத்தளித்தது. அதன்பிறகு இப்போதுதான் காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது.