உலக மீனவர் நாள்' நவம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்கள் அப்படி ஒருநாள் இருப்பதைக்கூட நினைத்துப் பார்க்க நேரம் இல்லாமல் கவலைக்கடலில் கிடந்து தத்தளிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் தென்பகுதி மீனவர்கள் நாள்தோறும் சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவு காணும்படி தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கைகளைக் கொடுத்து காத்திருந்து பார்த்துவிட்டனர். இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மத்திய அரசு தம் குடிமக்கள் நலனைவிட இலங்கை அரசின் நலனையே பெரிதாக நினைக்கிறது.
இதற்கொரு முடிவு காணாத நிலையில் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையையும் ஏவி, மிச்சம் மீதியிருக்கும் அவர்களது வாழ்வாதாரங்களைப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது.
இந்த ஆணை கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அது வெளியான 60 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் கருத்துகளை யார் மதிக்கின்றனர். அது ஒரு நாடகம்; அவ்வளவுதான்.
இந்த அறிவிப்பாணைக்கு மீனவ மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
மேலும், கடலோரச் சுற்றுச்சூழலும், கடல்சார் வளமும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த அறிவிப்பாணையில் சில புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கடலோர மேலாண்மைத் திட்டங்களில் மாற்றம் செய்வது என்பதுபோன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஒருசில தரப்பினரின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.
கடலோர மேலாண்மை விஷயத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்யப்படுமானால் அது மீனவ மக்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக்கும். இதைப் பயன்படுத்திச் சிலர் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு ஏற்படும்.
எனவே, மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில்கொண்டு அறிவிப்பாணையைத் தள்ளிவைக்க வேண்டும். மீனவ மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே இந்த மசோதா பற்றி எழுந்துள்ள ஐயங்களை நீக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து மக்களுக்கான தொழிலாக இருந்து வருவன உழவுத்தொழிலும், மீன்பிடித் தொழிலும்தான். பசித்த வயிற்றுக்குச் சோறும், மீனும் இயற்கை கொடுத்த இனிய உணவுகள். ஆனால், இந்த இரண்டு பழங்குடி மக்களும் இன்று கடுமையான சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
இவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு, புதிய சட்டங்களைப் போட்டு, உள்நாட்டிலேயே அவர்களை அகதிகளாக மாற்றத் துடிக்கிறது. இப்போது வந்துள்ள கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை - 2010 மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்தும், மரபுவழித் தொழிலிலிருந்தும் துரத்துகிறது.
கடற்கரையையும், கடற்கரையின் உயர் அலை தொடும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்கள் வசிப்பதற்கு இதுவரை பாதுகாப்பு வழங்கிவந்த கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை நீக்கிவிட்டு அவ்விடத்தில் புதிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த அறிவிப்பாணையைப் பரிசீலித்து பலப்படுத்துவதற்காக எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த அறிவிப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவ மக்கள் கடலோரமாக வாழ்வதற்கும், தொடர்ந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக கடலோரப் பகுதிகளில் பல்வேறு தொழில்திட்டங்கள் கொண்டு வரப்படும்.
பெரிய தொழிற்சாலைகளால் கடல் மிகுந்த மாசுபாடு அடையும்; கடல் அரிப்பு ஏற்படும். கடல்வளங்களும், கடல்வாழ் அரியவகை உயிரினங்களும் அழிந்துவிடும்; இப்போதுள்ள மீன்பிடித் தளங்களும் அழிக்கப்படும்.
கடந்த 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிவிப்பாணை பற்றி மக்களின் கருத்துரை பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், முறையாக அவை பின்பற்றப்படவில்லை. மீனவ மக்களின் மையங்களாகச் செயல்படும் பஞ்சாயத்துகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. அத்துடன் மீனவ மக்களிடம் எவ்விதப் பொதுக் கருத்துக்கணிப்பும், விவாதங்களும் நடைபெறவில்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மீனவ அமைப்புகள் கொடுத்த திருத்தங்களும் பரிசீலிக்கப்படவில்லை.
இதன் விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரும் தண்டனைகளும் கடுமையானவை. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால் படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். படகிலிருந்த மீனவர்க்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சோதிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம்வரை அபராதம்.
இதுதவிர, 12 கடல் மைல் தாண்டினால் ரூ. 9 லட்சம் அபராதம்; படகின் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உண்டு; மீன்களும் பறிமுதல் செய்யப்படும். கரையோரப் பகுதியில் மீன்வளம் குறைந்துவருவதால் 12 கடல்மைல் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் தரப்பு வாதமாக இருக்கிறது.
விதிமுறைகளை மீறும் மீனவர்களைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றுக்கு இழப்பீடும் கோர முடியாது. ஐயப்பாட்டின் காரணமாக தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றுக்காக கடலோரக் காவல்படையைக் குற்றம்சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக் காவல்படைக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.
இதற்கு இந்திய அரசு என்ன காரணம் கூறுகிறது தெரியுமா? ""ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிறநாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும், மீன்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டும் என்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கு இணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை'' என்று கூறுகிறது.
ஆனால், இந்திய வேளாண்மைத்துறை கூறுவதோ வேறு. ""பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள்போல இனிமேல் நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல்பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம்'' என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறுகிறது.
இந்தியா மூன்றுபக்கமும் கடல்சூழ்ந்த தீபகற்ப நாடாகும். இந்தியக் கடற்கரையின் நீளம் 5,560 கி.மீ. ஆகும். தீவுகளையும் சேர்த்தால் சுமார் 8,500 கி.மீ. நீளமாகும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்குச் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இன்னும் நாம் வளரவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.
இந்தியாவின் நீண்ட கடற்கரையில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இங்கு வாழும் 600 மீனவக் கிராமங்களில் சுமார் 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைதான் இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
1984 முதல் 2010 வரை கச்சத்தீவு மீதான நமது உரிமை ஒப்பந்தம் இலங்கையால் மீறப்பட்டே வந்திருக்கிறது. ராமேஸ்வரம், பாம்பன், ஜெகதாப்பட்டினம், நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அடித்து விரட்டியதோடு அல்லாமல் பெட்ரோல் குண்டுகளையும் வீசி படகோடு எரித்துக் கொல்லவும் முயற்சி நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர், காயம்பட்டவர், படகுகளை இழந்தவர், உறுப்புகளை இழந்தவர் தொகை நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றித் தமிழக அரசு கடிதம் எழுதும்; எனினும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீனவர்களின் வாழ்வுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்துக்கு இல்லையா?
""இலங்கைக் கடற்பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது...'' என்று மத்திய வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். இப்படி கூறுவதற்கு ஓர் அமைச்சர் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், "இந்திய அரசாங்கம் யாருக்காக?' என்ற கேள்வியும் எழுகிறது.
Thanks
Dinamani