-
Wednesday, December 1, 2010
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை
1957-ல் சட்டப் பேரவையில் நுழைந்தவுடன் தி.மு.க. வைத்த முதல் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு "பத்து லட்சம் பக்தவத்சலம்' என்பதுதான். காமராஜ் ஆட்சியில் அவர்களால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியவில்லை. பக்தவத்சலம் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு அவர்களது மேடைப் பேச்சுக்கு உதவியதே தவிர, அதைப் பொறுப்போடு நிரூபிக்க முடியவில்லை.
1967-ல் தி.மு.க. வின் ஊழல் தொடங்கியது. சட்டப்பேரவையில் நானே பல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தேன். அதைத் தொடர்ந்து புயல் வெள்ள நிவாரணப் பணிகள் தொடங்கி தி.மு.க.வின் உச்சகட்ட ஊழல் வெளிவந்தது. சென்னை மாநகராட்சியில் கருணாநிதியின் நெருங்கிய தோழர் மேயர் மோசஸ் தலைமையில் நடந்த மஸ்டர்ரோல் குற்றச்சாட்டு, அதற்குப் பிறகு மருத்துவக் கல்லூரி நடத்த இடம் பெற்றுத் தருவது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சென்னை நகரில் வீடு வாங்கிய ஊழலால் கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சரவை சகாக்கள் சிலர் பதவிவிலக நேர்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியோடு வீராணம் ஊழல், லஞ்ச ஊழலில் ஒரு வீரப் பரம்பரையை உருவாக்கியது. இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசு, சர்க்காரியா கமிஷனை அமைத்து விசாரித்தது. சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் இந்திரா காந்தி, ""விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை'' என்று கூறியது இன்றுவரை உண்மையாகவே தொடர்கிறது.
இந்தியாவிலேயே அரசு மின்சார உற்பத்தி நிலையத்தை விற்றது தி.மு.க. அரசுதான். இது சமயநல்லூரில் அரங்கேறியது. இங்கே அங்கே என சில லட்சங்களில் ஊழல் செய்து அடித்தளம் அமைத்தவர்கள் மத்திய அரசில் கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஊழலுக்கே இலக்கணம் வகுக்க முற்பட்டு விட்டனர்.
கடந்த காலகட்டத்தில் நிலக்கரி ஊழல், இந்தோனேஷியா போன்ற அயல்நாடுகளில் நிலக்கரிச் சுரங்கம் வாங்குவதில் தொடங்கியது. மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மாநில அரசை நடத்தியவர்கள் லட்சங்கள் என்பதிலிருந்து கோடிகோடியாக ஊழலில் ஈடுபடும் நிலை உருவானது.
சொற்ப நிலத்தை வைத்துக் கொண்டு, மிகுதியாக அரசு நிலத்தை வளைத்துப் போட்டு, கல்லூரி கட்ட அனுமதியும் வழங்கினார்கள். கட்டடமும் கட்டினார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கிரானைட் குவாரிகள் அதிகப் பணம் சம்பாதிக்க ஏற்ற இடம் என தி.மு.க.வினர் கண்டுபிடித்தனர். கிரானைட் குவாரி கொள்ளை, மணல் கொள்ளை எனப் பெருகி தி.மு.க.வில் பெரும் பணக்காரர்கள் உருவானார்கள்.
மணல் கொள்ளையோடு இரண்டறக் கலந்து, கல்விக் கொள்ளையும் தொடங்கியது. பணம் இல்லாதவர்களெல்லாம் கல்லூரி நடத்தி "கல்வித் தந்தை' ஆனார்கள். அமைச்சர்கள் தங்கள் இலாகா பணத்தைக் குறிப்பிட்ட வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து, அந்த வங்கிகளில் அமைச்சர்களின் சிபாரிசுடன் தனிநபர் கடன்களைத் தாராளமாகப் பெற்றனர். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாவதற்கு இந்த ஊழல் பலருக்கு உதவியது.
தொழிற்கல்வி வியாபாரம், மருத்துவத் துறைக்கு விரிவு அடைந்தது. மத்திய அரசின் பலவீனம் தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா என்று கணக்கிட முடியவில்லை. எந்த நேரத்திலும் மத்திய அரசை மிரட்டும் அரசாக தி.மு.க. அரசு உருவெடுத்தது.
"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்பதற்குப் பதிலாக "தெற்கு வாழ்கிறது, வடக்கு வேடிக்கை பார்க்கிறது' என்ற நிலை உருவானது.
முதலாளிகள் கட்டிவரும் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு, அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்கிற தாரக மந்திரத்தைக் கற்றார்கள். மேலே சொன்ன ஊழல்களுக்கெல்லாம் முன்மாதிரியாக - உலகம் வியக்கும் கின்னஸ் சாதனையாக 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு தி.மு.க. சாதனை படைத்தது. இந்த ஊழல் இந்திய ஜனநாயகத்தை நகைப்புக்குள்ளாக்கி உள்ளது. 13 நாள்களாக நாடாளுமன்றம் நடைபெறாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் கல்வித் தொழில் எங்களிடம், சினிமாத் தொழில் எங்களிடம், கட்டுமானத் தொழில் எங்களிடம், தொலைபேசித் தொழில் எங்களிடம், கப்பல் துறை எங்களிடம், ஆகாய விமானம் வாங்கிப் பறக்க விடுகிறோம். இனி எஞ்சியுள்ளது ரயில்வே மட்டும்தான். அதையும் நாங்கள் விரையில் வாங்கிவிடுவோம் என மார்தட்டுகின்றனர்.
விவரம் தெரியாத ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச டி.வி. கொடுத்துத் தங்கள் ஊழல்களைப் பார்த்து ரசிக்க வைத்திருக்கின்றனர். மின்சாரம் இல்லாத நிலையிலேயே மின் மோட்டார் தருகிறோம் என்று சொல்லி வாய்ப்பந்தல் இட்டு மக்களை ஏமாற்றி திசை திருப்புகிறார்கள்.
மாமன்னர் குடும்பமும் அவரைச் சுற்றி இருக்கிற குட்டி மன்னர்களும் தலைதூக்கி நிற்க, தமிழகத்தின் நடுத்தர, ஏழை மக்களோ கைகட்டி அடிமைகளாக நிற்கிறார்கள். திராவிட நாட்டின் பெயரைச் சொல்லி, போர்க் கொடி உயர்த்தி இந்தியாவில் ஆள்பவர்கள் மன்னர்கள். இல்லாதவர்கள் அடிமைகள் என்ற தத்துவத்தை தமிழகத்தில் உருவாக்கிக் காட்டி இருக்கிறது தி.மு.க.
"என்று தணியும் இந்த அடிமையின் மோகம்' என்று கவிபாடி ஆள்வதற்கு இன்னொரு பாரதி எப்பொழுது பிறப்பான் என தமிழகம் ஏங்கித் தவிக்கிறது.
Thanks
Dinamani