-
Monday, February 14, 2011
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினரின் போராட்டம் ஏழு நாள்கள் தொடர்ந்து நடைபெற்றும்கூட, பேசக்கூடவா மனமில்லை?
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினரின் போராட்டம் ஏழு நாள்கள் தொடர்ந்து நடைபெற்றும்கூட, அரசு இதுபற்றி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வாளாவிருக்கிறது. பால் உற்பத்தியாளர்களும் தொடர்ந்து பால் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது வழக்கம்போல பொதுமக்கள்தான்.
அண்மையில் அரசு பால் விலையை பசும்பாலுக்கு ரூ.1.10 காசும், எருமைப் பாலுக்கு ரூ. 2.20 காசும் அதிகரித்துக் கொடுத்தது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்குப் பசும்பாலுக்கு ரூ.16.14-ம், எருமைப்பாலுக்கு ரூ.24.70-ம் கிடைத்து வந்தது. இதில் எருமைப் பால் என்பது மொத்தக் கொள்முதலில் வெறும் 3 விழுக்காடுதான். ஆகவே, தற்போதைய போராட்டம் பசும்பால் குறித்தது என்றே எடுத்துக் கொள்ளலாம். இப்போது ஒரு லிட்டர் பசும்பாலுக்கு மேலும் கூடுதலாக ரூ.5 கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை.
பால் உற்பத்தியாளர்கள் கேட்பதுபோல விலையை உயர்த்தினால், அதன் எதிர்வினையாக சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.25 ஆக உயர்த்த நேரிடும். இந்த விலை உயர்வு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதும், தேநீர் விலை உள்பட பல்வேறு பால் தொடர்புடைய பொருள்களின் விலை உயர்வுடன், தேர்தல் நேரத்தில் தேவையில்லாத அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதும் அரசின் கருத்து. ஆகவேதான், இந்தப் பிரச்னையில் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.
பால் உற்பத்தியாளர்கள் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது போராட்டம் நடத்தினால் அரசின் நேரடி கவனத்தைப் பெறலாம் என்று கருதித்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர். மேலும், தேர்தல் நேரம் என்பதால், குறைந்தபட்சம் இரண்டு ரூபாய் கொள்முதல் விலையைக் கூட்டினாலும்கூடப் போதும் என்கிற நம்பிக்கையும் காரணம். ஆனால், அரசு இவர்களைப் பேச்சு வார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை.
தற்போதைய போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்களும் தமிழக அரசும் தவறான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த ஒரு வார காலச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும்போது, ஆவின் நிறுவனம் தனியாரிடம் பால் வாங்குவது தவறு என்று பால் உற்பத்தியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. ஆவின் நிறுவனம் சென்னைக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் பால் விநியோகம் செய்தாக வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்பதற்காக, ஆவின் நிறுவனம் செயல்படாமல் இருக்குமானால், நகர்ப்புறங்களில் உள்ள மக்கள், குழந்தைகளின் நிலை என்ன? ஓர் அரசு நிறுவனம் என்ற நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து பால் பெற்றாகிலும் வழங்க வேண்டிய கட்டாயம் ஆவினுக்கு இருக்கிறது. மேலும், இந்த ஒரு வாரகாலத்துக்குப் பால் வரத்து இல்லை என்று மூடிவிடுவார்களேயானால், தனியார் பால் நிறுவனங்கள் இந்த வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் இழுத்துவிடும். அதன் பிறகு இந்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ஆவின் பால் வாங்க மக்கள் முன்வர மாட்டார்கள். இதனால் பாதிக்கப்படுவது ஆவின் மட்டுமல்ல, போராட்டம் நடத்தும் பால் உற்பத்தியாளர்களும்தான் என்பது ஏன் போராட்டம் நடத்துபவர்களுக்குப் புரியவில்லை.
ஆவின் அல்லது அரசு தற்போதைய நிலையைச் சமாளிக்கத் தனியாரிடம் பால் கொள்முதல் செய்வதில் தவறில்லை என்றாலும், தனியாருக்குப் பால் உற்பத்தியாளர் கொடுத்த பால் முழுவதையும் தரம் குறைந்த பால் என்று பறிமுதல் செய்து வழக்குப் போடுவதும், பாலுக்கான விலை கிடைக்காமல் செய்துவிடுவதும், மிரட்டுவதும் நியாயமான செயல்பாடு அல்ல. மூன்றாம் தர வியாபாரிகள் கையாளும் அடாவடிப் போக்கை ஓர் அரசு நிறுவனம் மேற்கொள்வது தவறு!
பால் உற்பத்தியாளர்கள் தங்கள் பாலை வெண்ணெய் போன்ற மதிப்பூட்டிய பொருளாக மாற்ற வேண்டுமே தவிர, பாலை சாலையில் ஊற்றிப் போராட்டம் செய்வது தொலைக்காட்சி, பத்திரிகை புகைப்படத்துக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, சரியான போராட்ட முறை அல்ல. உற்பத்தியாளர்கள் மீது மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்துமே தவிர, அனுதாபத்தையோ ஆதரவையோ தேடித் தராது.
குஜராத்தில் அமுல் நிறுவனத்தில் 29 லட்சம் உறுப்பினர்கள் 90 லட்சம் லிட்டர் பால் வழங்குகிறார்கள். ஆனால் அங்கே அவர்களுக்குக் குறைந்த விலையில் சரிவிகித கலப்புத் தீவனம் அமுல் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கே, 4 லட்சம் உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் ஆவின் நிறுவனத்தால் அதைக்கூடச் செய்ய முடியவில்லை. 6 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு 3 கிலோ தீவனம் அளித்தாக வேண்டும். சரிவிகித கலப்புத் தீவனம் விலை கிலோ ரூ.13. கொள்முதல் விலையில் பெரும்பகுதி தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
குடும்பத்துக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் கோதுமை எல்லாமும் கொடுக்கும்போது மாட்டுக்கும் மானியவிலையில் தீவனம் வழங்கினால் என்ன? கடந்த நான்கு ஆண்டுகளாக இது குறித்த எந்த முயற்சியிலும் ஈடுபடாத ஆவின் நிறுவனம்தான் இன்றைய இப்போராட்டத்துக்குக் காரணம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
பிரச்னையை முன்கூட்டியே அறிந்து முடிவெடுக்கக்கூட முடியவில்லை என்றால், பால்வளத்துறைதான் எதற்கு? அதற்கு ஓர் அமைச்சர், அதிகாரிகள் என்றெல்லாம் இருந்து என்னதான் பயன்? இனியும் தாமதிக்காமல் பால் உற்பத்தியாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பிரச்னைக்கு உடனடியாக முடிவுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு