-
Thursday, August 25, 2011
பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம்
"எங்கும் ஊழல், எதிலும் ஊழல்,' என, இந்தியராய் நாம் சந்தித்த சங்கடங்கள் ஏராளம். இழந்தால் தான் இந்தியாவில் எதையும் பெற முடியும் என்ற கருத்தை வேரறுக்க தொடங்கிய அமைதி யுத்தம் தான் ஹசாரே. நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள், நம்மை பணையம் வைத்து, சொத்து குவிப்பதற்கு கடிவாளம் போட, சரியான கயிறு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் வளர்ந்து வரும் நாடாக நாம் இருந்தோமே தவிர, வளர்ந்த நாடாக மாறவில்லை. ஊழலும், லஞ்சமும் வளர்ச்சியின் தலையை தட்டின. காக்க வேண்டியவர் கடமை தவறுவதும், கேட்பவர் கேலிகூத்தாவதும் இனி தொடரக்கூடாது. பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம் வாங்குது தான் இன்றைய லட்சணம். இந்நிலை மாற வேண்டும் என்பதற்கு தான், ஊழல் எதிர்ப்பு அலை ஆர்ப்பரித்து அடிக்கிறது. டில்லியில் தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி வரை ஒலிக்கிறது.
ஒட்டுமொத்த இந்தியனின் உரத்த குரலாக மாறியுள்ள ஜன் லோக்பால் அமலுக்கு, மதுரையிலிருந்து கிளம்பிய தொழிலதிபர்களின் ஆதரவுக்குரல்கள்:
சோமசுந்தரம்(மதுரை பேக்கேஜிங் பிரைவேட் லிட்., உரிமையாளர்): அரசியல் வாழ்க்கையில் தூய்மை வர, ஹசாரே போராட்டம் மட்டுமே தீர்வு. முழுமையான லோக்பால் மசோதா நிறைவேறினால், நாட்டில் அரசியல் ஒழுக்கம் வரும். நேர்மையான தேர்தல் நடக்கும். இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள். சிறந்த சேவையாளர்கள் கிடைப்பர். வீட்டுக்கும், நாட்டுக்கும் ஆரோக்கியம் தரும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.
வேல் சங்கர்(எஸ்.பி.எஸ்., கடலைமாவு உற்பத்தியாளர், மதுரை):தடம் மாறிச்சென்ற இந்தியாவின் பாதையை முறைப்படுத்த ஒருவர் போராடுகிறார். கோடிக்கணக்கானோர் ஆதரிக்கின்றனர். விமர்சிப்போருக்கு, பலன் இப்போது தெரியாது. வருங்கால இந்தியா வளமுடன் வாழ, "ஜன் லோக்பால்' சரியான தீர்வு. வளர்ந்த நாடாக இந்தியா மாற, இதுவே நல்ல தருணம்.
எம்.வாசுதேவன் (ஈஸ்வரி ஸ்டோர்ஸ் உரிமையாளர், திண்டுக்கல்): இந்தியாவின் ஊழல் நோய்க்கு, ஹசாரே போராட்டம் தக்க மருந்து. நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு நன்மை செய்யாமல், சொத்து சேர்க்கின்றனர். ஹசாரே லோக்பால் இதற்கு கடிவாளமாக இருக்கும். லஞ்சம், ஊழலில் இருந்து விடுபடுவதே உண்மையான சுதந்திரம்.
என்.ராஜேந்திரன்(பிரிஸ்டினோ மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர்,தேனி): சுயநலம் கருதி அரசியல் வாதிகள் மறைத்த, "லோக்பால்' சட்டம், அன்னாவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியா அரசியல் அமைப்புச்சட்டத்தில் இடம்பெற்றதாகும். இதை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும்.
கண்ணப்பன்(பாரத் அக்ரோ உரிமையாளர், பரமக்குடி): ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்துவதை எந்த குடிமகனும் எதிர்க்க மாட்டான். ஏதோ ஒருவகையில் அனைவருக்கும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது.
எம்.எம். குணசேகரன் (அண்ணாமலையார் டிரேடர்ஸ் உரிமையாளர், காரைக்குடி): நாட்டின் நலனுக்கான உண்ணாவிரதத்தை, ஒவ்வொரு குடிமகனும் ஆதரிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. மக்களுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற, அரசியல் வாதிகள் தயங்கவேண்டியதும் இல்லை.
சசி(வனிதா பயர் ஒர்க்ஸ் உரிமையாளர், சிவகாசி): ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் நபராக அன்னா ஹசாரே மாறியுள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் தொழில் நடத்த முடியும் என்ற கட்டாயம் வந்துவிட்டது. இதற்கு இந்த போராட்டம் முற்றுப்புள்ளி வைக்கும்.
- நமது சிறப்பு நிருபர் -
Thanks
Dinamalar