லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் நிலைக்குழுவின் தலைவரான அபிஷேக் சிங்வியின் தந்தை தான், லோக்பால் என்ற வார்த்தையை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.
எல்.எம்.சிங்வி என்பவர் தான், 1960ம் ஆண்டுகளில் லோக்பால் என்ற வார்த்தையை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். இவர், 1962ல், லோக்சபாவில் சுயேச்சை எம்.பி.,யாக இருந்தார். "ஊழல் செய்வோரை தண்டிக்கும் வகையிலான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என, இவர், அடிக்கடி லோக்சபாவில் வலியுறுத்தி வந்தார்.ஆனால், இவர் கூறிய வார்த்தை, அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு சரியாக புரியவில்லை. "இந்த விலங்கு, எந்த மிருகக் காட்சி சாலையைச் சேர்ந்தது' என்பதை, நீங்கள் தான் கூற வேண்டும்' என வேடிக்கையாக, சிங்வியிடம் நேரு கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான அமைப்பு என்பதற்கு, சமஸ்கிருதத்தில் இருந்து, வார்த்தையை கண்டறிந்து, இதன் பின், லோக்பால் என்ற இந்தி வார்த்தையை, முதல் முதலில் சிங்வி அறிமுகப்படுத்தினார்."லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்த இவர், சுயேச்சை எம்.பி.,யாகவும் இருந்தார். தற்போது இவரது மகனும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அபிஷேக் மனு சிங்வி தான், நிலைக்குழு தலைவராக இருந்து, லோக்பால் மசோதாவை ஆய்வு செய்து வருகிறார்.
இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் பேசுகையில், "லோக்பால் மசோதாவுக்கு, இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வியின் தந்தை தான், லோக்பால் என்ற வார்த்தையை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர். இது, அபிஷேக் சிங்விக்கு பெருமை அளிக்கும் விஷயம். எனவே, அபிஷேக் சிங்வி, லோக்பால் மசோதா விவகாரத்தில், இந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மனதில் வைத்து, செயலாற்ற வேண்டும்' என்றார்.
Thanks
Dinamalar.
-